- May 18, 2022
உள்ளடக்கம்
அவல் அல்வா செய்ய தேவையான பொருட்கள்
அவல் : 1 கப்
துருவிய தேங்காய் : 1 கப்
பால் : 1 கப்
சர்க்கரை : 2 கப்
முந்திரிப்பருப்பு : 10
ஏலக்காய் : 4
கேசரி பவுடர் : தேவையான அளவு
நெய் : 100 கிராம்
ஒரு அடி கனமான பாத்திரத்தில் அடுப்பை இளந்தீயில் வைத்து அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வறுத்த அவலை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவேண்டும். ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே பாத்திரத்தில் துருவிய தேங்காய், பொடித்த அவல், சர்க்கரை இவற்றைக் கலந்து, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலந்து கிளறவும். இந்தக் கலவை நன்கு வெந்ததும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். ஊற்றிய நெய் வெளியே வரும். அப்போது ஒரு ஸ்பூன் பாலில் தேவையான அளவு கேசரி பொடியைக் கலந்து ஊற்றவும். இவ்வாறு பாலில் கலந்து ஊற்றும்போது கேசரிப்பொடி எல்லா இடத்திலும் ஒரே விதத்தில் இனிப்பு முழுவதும் கலந்து விடும்.
இதன் மேல் ஏலக்காய் பொடி தூவி, வறுத்த முந்திரிப் பருப்பைக் கலந்தால் அவல் அல்வா தயார்.
அவல் எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் கிடைக்கக் கூடிய பொருள். விலை மலிவாகவும் கிடைக்கும்.
அவல் விரைவில் செரிக்கக் கூடிய உணவு. தற்காலத்தில் உடல் இளைக்க வேண்டும் என்று பலரும் சாப்பிடாமல் இருந்து உடலைக் கெடுத்துக் கொள்வதுண்டு. அவ்வாறு செய்யாமல் அவலில் செய்த உணவினை உண்ணும் போது வயிறு நிரம்பவும் உண்ணலாம், உடலுக்குத் தேவையான சத்தும் இதன் மூலம் கிடைக்கிறது.
அதே நேரத்தில் உடல் எடையும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனேயே குறையும்.
இந்த அவலினால் செய்த உணவை சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை உண்ணலாம். இட்லியைப் போல உடலுக்கு எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத உணவு அவல்.
Also, read: கேரட், கடலை மாவு, பீட்ரூட், சோள மாவு, பிரட் அல்வா வகைகள்