- September 23, 2024
உள்ளடக்கம்
🙏 கர்ம வினைகள் நீங்க முருகன் வழிபாடு: அறுபடை வீடுகளிலும் ஆடி கிருத்திகை கொண்டாட்டம். “ஆடி வந்தால் நல்லவை யாவும் தேடி வரும்” என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
🙏 வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு இந்த ஒரு மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன.
🙏 அதில் ஒன்று தான் முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய “ஆடி கிருத்திகை”. அற்புதமான அந்த ஆடி கிருத்திகை சிறப்பு குறித்தும், அந்நாளில் முருகனின் அருளை பெறும் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் இருக்கும் முறை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
Aadi Karthigai in 2022 is on July 23, Saturday
🙏 தடைகள், தோஷங்கள், கவலைகள் நீங்கி தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது. அந்த வகையில் ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.
🙏 ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது. ஏன்? முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும்.
🙏 அம்பிகையின் அம்சமே வேல் எனவும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது.
🙏 பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.
அருளொடு சரவணத்தின்
வெறி கமழ் கமலப்போதில்
வீற்றிருந்து அருளினானே
– என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுகிறது
🙏 வாரம், திதி, நட்சத்திரம் என்று இந்த மூன்றிலும் முருகனுக்கு விரதங்கள் உண்டு. வாரம் என்பது வாரத்தின் நாட்களை குறிக்கும்.
🙏 இதில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள்.
🙏 திதிகளில் “சஷ்டி திதி” முக்கிய விரதமாகும்.
🙏 நட்சத்திரத்தில் ‘”கார்த்திகை” அல்லது “கிருத்திகை” முருகனின் நட்சத்திரம் ஆகும்.
🙏 மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.
🙏 சிவபெருமானின் அருளால் தோன்றியவர் முருகன். ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார் முருகப்பெருமான்.
🙏 அந்த கார்த்திகை பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் வழிபடப்படும் வழக்கம் ஏற்பட்டது.
🙏 வருடத்தில் “தை கிருத்திகை”, “ஆடி கிருத்திகை” என்ற இரு கிருத்திகைகள் சிறப்பானதாகும்.
🙏 சூரபத்மனை அழித்து தேவர்களையும், மக்களையும் காப்பதற்காக அவதாரம் எடுத்த ஆறுமுகனை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். அவர்களை போற்றும் வகையிலேயே கிருத்திகை விரத திருநாள் கொண்டாடப்படுகிறது.
🙏 உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். ”
🙏 எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைபெறும்.
🙏 பொதுவாக ஆடிக் கிருத்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டாலும் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான திருத்தணி கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழாவாக இருக்கிறது.
🙏 அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றிப் புகழ்கிறது.
🙏 இந்த தினத்தில் முருக பக்தர்கள் காவடி சுமந்து, திருத்தணி மலை மீது ஏறி தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர்.
🙏 காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும், சிறப்பு பூஜைகள், பிராத்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.
🙏 இந்த ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும்.
🙏 பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் “கந்த சஷ்டி கவசம்” அல்லது “சண்முக கவசத்தை” மனமொன்றி படிக்க வேண்டும்.
🙏 முடிந்தவர்கள் இந்த தினம் முழுவதும் உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி உண்ணா விரதம் இருப்பது சிறந்தது. சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் உங்களுக்கு அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
🙏 இந்த ஆடி கிருத்திகை விரதத்தால் உங்களின் கர்ம வினைகள் நீங்கும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுதலான திசை நடப்பவர்களுக்கு தீமையான பலன்கள் ஏற்படாமல் காக்கும்.
🙏 திருமண தடைகள் அகலும். சொந்த வீடு கனவு நிறைவேறும். மொத்தத்தில் முருகனின் முழுமையான அருள் கிட்டும்.
🙏 ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் தடங்கல்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
🙏 ஆடிக் கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானின் திருவருள் பெறுவோம்.
முருகனுக்கு அரோகரா !
கார்த்திகேயனுக்கு அரோகரா!
Also read,