×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

ஆடி மாதத்தின் சிறப்புகள்


Aadi Month Special in Tamil

ஆடி மாதத்தின் சிறப்புகள்

1. ஆடி மாதம் (Aadi Masam / Aadi Matham) பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாதமாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன் னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா (Aadi Perukku) ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

Aadi Month Fasting Benefits in Tamil

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகிவிடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் (Aadi Velli) மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதா சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்?

ஆடி மாதத்தில் ஆன்மிக ரீதியாக விசேஷங்கள் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால் அதே சமயம் ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. ஏன் இந்த முரண்பாடு? அதற்கான காரணங்களை சாஸ்திர ரீதியாக பார்க்கலாம்.

பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள் துவங்குகிறது என்பதை நாம் கணக்கில் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாளிலேயே “உஷக்காலம்” என்று கூறப்படும் காலைப் பொழுது ஆரம்பம். அதாவது சூரிய உதயம் முதல் பகல் 12 மணி வரை “பூர்வாங்கம்” எனப்படும். பன்னிரண்டு மணிக்கு மேல் (உச்சிப் பொழுது முதல்) சூரியன் மறையும் கணக்கு.

“பூர்வாங்கம்” என்பது ஏற்றத்தைக் குறிக்கும். “அபராணம்” என்பது இறக்கத்தைக் குறிக்கும். இதேபோலத்தான், ஒரு வருடத்தில், தை மாதப் பிறப்பு முதல் ஆனி மாத முடிவு வரை “உத்தராயணம்” என்றும், ஆடிமாதப் பிறப்பு முதல் மார்கழி மாத முடிவு வரை “தட்சிணாயனம்” என்றும் கூறப்படுகிறது. சூரியனின் சக்தியானது உத்தராயணத்தில் “பாசிடிவ் சார்ஜ்ஜினைத்” தருகிறது. தாமதகுணமான “நெகடிவ் சார்ஜினை” தட்சிணாயனத்தில் கொடுக்கிறது.

இது ஆடி மாதப் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. ஆடி மாதம் அந்தக் காலத்தில் மிக முக்கியமான மாதமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அந்நாட்களில் விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம் நடந்து கொண்டிருந்தது. “ஆடிப்பட்டம் தேடி விதை” என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள்.

ஆடியில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் ஒருவருக்கு, பயிர் அறுவடை கார்த்திகை மற்றும் தை மாதத்தில் உண்டாகும். அந்தச் சமயத்தில்தான் கையில் பணமும் வர வாய்ப்பு இருக்கும். அதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது.

அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை  போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர். போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள காலம்.

யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை. போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய காலம். யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம்.

ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது. ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார்.

அந்த சொந்த க்ஷேத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது, அதற்கு விசேஷம் அதிகம் உண்டு. இந்த ஆடி மாதத்தில் பகவத் தியானம் மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் முழுவதும் ஒரு பொழுது விரதம் இருந்து பகவானை பூஜித்து தியானித்து வந்தால் சகல சம்பத்துகளும் சேரும்.

Read, also: Aadi Krithigai Story in Tamil



2 thoughts on "ஆடி மாதத்தின் சிறப்புகள்"

  1. Praveen kumar says:

    Arumai pathivu
    Adi month Lord Murugan special solunga it will useful for Murugan devotees

  2. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 23, 2024
சுடர் டிரஸ்ட், திருச்சேறை
  • August 20, 2024
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி [கோகுலாஷ்டமி]
  • August 11, 2024
சிரிப்பு நம் நோய்களை குணப்படுத்துகிறது