- August 20, 2024
உள்ளடக்கம்
கார்த்திகை என்பது, “கிருத்தி” என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது. அத்திரி, காசிபர், கெளதமர், பரத்துவாசர், விசுவாமித்திரர், ஜமதக்னி என்னும் மாமுனிவர்களது தேவியரைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயராகவும், கிருத்தி என்பதனைக் குறிப்பிடுகின்றனர் ஆன்றோர்கள்.
ஒரு சமயம் இந்த ஆறு முனிவர்களும் தங்கள் மனைவியருடன், ஒரு திருவிளையாடல் போல ஊடல் கொண்டனர். அப்போது அந்தத் தேவியர் அனைவரும் நட்சத்திரங்களாகி விரதம் மேற்கொண்டனர். அவர்களே கார்த்திகைப் பெண்கள் எனப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட விரதத்தின் பலனாகவே முருகப் பெருமானுக்கு பாலூட்டும் பேறு பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. முருகப் பெருமானை வளர்க்கும் பேற்றினை தங்கள் மனைவியர் பெற வேண்டும் என்பதற்காகவே அந்த ஆறு முனிவர்களும் ஆடிய நாடகம், அகிலத்துக்குத் தெரிய வந்தது.
முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக பரணி தீபம் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை என்பது மேஷத்தில் 1/4 பகுதியும், ரிஷபத்தில் 3/4 பகுதியும் அமைந்துள்ள 6 நட்சத்திரங்கள் கொண்ட ஓர் மண்டலம். இது, ஒரு விளக்குபோல் காட்சி அளிக்கும் ஒரு நட்சத்திரக் கூட்டம். மாதமொருமுறை சந்திரன் இந்த நட்சத்திரக் கூட்டத்திற்குப் பக்கத்தில் வரும் நாள் “கார்த்திகை” எனக் குறிப்பிடப்படுகிறது.
“கார்த்திகை தீபக் காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள்” என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக குறிப்பிடுகிறார்.
மாணிக்கவாசகர், ஜோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார்.
குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள்.
அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது விளக்கு என்று அழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன. இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.
கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடபாகத்தில் அமர்ந்ததாகவும், சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக தீபத்திருநாளன்று இறைவன் இருக்கிறான்.
இன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக் கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்றவுடன் வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும். அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் முருகப் பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.
கார்த்திகை விரதமிருந்து உமாதேவி சிவபெருமானின் இடபாகத்தை பெற்றதும், திருமால் துளசியை மணந்து தன் திருமார்பில் அணிந்து கொண்டதும் கார்த்திகை மாதத்தில் தான். கார்த்திகையன்று தீபமேற்றி நெல், பொரி, அப்பம், பொரி உருண்டை ஆகியவற்றை நிவேதனம் செய்கிறோம். “கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.
“அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்” என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
ஆணவம், சுயநலம், மயக்கம், ஆசை போன்ற மாசுகளை, “விவேகம்” என்னும் தீயில் பொசுக்கி, மெய்ஞானம் பெற்று, அண்டம் அனைத்தையும் ஒளிர்விக்கும் பரஞ்ஜோதியை தரிசனம் செய்வதே கார்த்திகை தீபவிழாவின் அடிப்படை நோக்கம்.
Also read,