- August 20, 2024
உள்ளடக்கம்
சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீ ராமன் அவதரித்தார். சில இடங்களில் சித்திரை வளர்பிறை தொடங்கி நவமி திதி வரை சித்திரை நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
பகவான் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானதாக மக்களால் கொண்டாடப்படக்கூடியவராக விளங்குவது இராம அவதாரம். கோசலை நாட்டை ஆண்ட தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகன் இராமன். இந்த தெய்வீக தன்மை பொருந்திய இராமனின் பிறந்த நாளை ஏப்ரல் 21ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்துக்களின் மிக முக்கிய விரத நாளகா கடைப்பிடிக்கப்படுகின்றது.
ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு ‘கர்ப்போஸ்தவம்’ என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை.
இதற்கு ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.
இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.
ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்று ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும்.
ராம நவமிக்கு முன் தினம் வீடு, பூஜை அறையை நன்றாக சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். ராம நவமி அன்று காலையில் எழுந்ததும், குளித்து உங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, ராமனை வழிபட்டு உங்களின் விரதத்தை தொடங்கலாம்.
ராமனுக்கு சூட்ட மாலை, பூக்களும், பூஜிக்க வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பழங்கள், வெற்றிலை பாக்கு, இனிப்புகள் ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ராமனின் திரு உருவம் இருந்தால் அதற்கு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டவும்.
துளசி இலை, துளசி மாலை அல்லது தாமரை மலர் பூஜைக்கு இருப்பது அவசியம்.
இராம நவமி அன்று இறைவனுக்கு பிரசாதமாக மோர், பானகம் படைக்கலாம். அதோடு உங்களால் முடிந்தளவு இனிப்பு பதார்த்தங்களைத் தயார் செய்து பூஜைக்கு வைக்கலாம். பூஜை செய்ய ஏதேனும் ஒரு பதார்த்தம், பிரசாதம் வைத்து தொடங்கலாம்.
குறைந்தபட்சம் இறைவனுக்கு பொரிகடலை, சர்க்கரை கலந்து வைப்பதும், சிறிது சக்கரை கலந்த பால் வைப்பது நல்லது.
ஷோதாஷோபச்சார பூஜை செய்து வழிபடுதல் மிகவும் நல்லது. உங்களுக்கு தெரிந்த ராம மந்திரங்கள் ஸ்லோகங்களைச் சொல்லி போற்றி வழிபடலாம்.
இறைவனுக்கு அலங்காரம் செய்து தீப தூப ஆராதனைகள் செய்து வழிபடுங்கள்.
பூஜைகள் முடிந்த பின்னர் ராம பூஜைக்கு வைக்கப்பட்ட சந்தனம், குங்குமத்தை நீங்கள் வைத்துக் கொண்டு, மற்றவர்களும் கொடுங்கள். அதே போல பூஜைக்கு பயன்படுத்திய பிரசாதங்கள், பதார்த்தங்கள் அன்புடன் அனைவருக்கும் அளித்துடுங்கள்.
தத்துவார்த்த ஞானம் பெற
ஓம் தஸரதாய வித்மஹே
சீதாவல்லபாய தீமஹி
தன்னோ ராமஹ் ப்ரசோதயாத்
ஓம் தஸரதாய வித்மஹே
சீதாநாதாய தீமஹி
தன்னோ ராமஹ் ப்ரசோதயாத்
ஓம் பீதாம்பராய வித்மஹே
ஜகன்நாதாய தீமஹி
தன்னோ ராமஹ் ப்ரசோதயாத்
ஓம் தர்மரூபாய வித்மஹே
சத்யவிரதாய தீமஹி
தன்னோ ராமஹ் ப்ரசோதயாத்
Also, read