- September 23, 2024
உள்ளடக்கம்
தர்மத்தை நிலை நாட்டுவதற்காக ஸ்ரீபரமேஸ்வரனே சங்கரராக அவதாரம் செய்தார் என்று சொல்வர். ஜகத் குரு ஸ்ரீ ஆதிசங்கரரின் அவதார காலத்தை பரம புண்ணிய காலம் எனப் போற்றுவார் மகாபெரியவா!
சங்கரரின் அவதாரம் மிக மிக அத்தியாவசியமான ஒரு காலகட்டத்தில் நம் நாட்டில் நிகழ்ந்தது. மக்கள் அஞ்ஞானத்தில் உழன்று வேத நெறிகளிலிருந்து விலகி புதுப்புது தெய்வங்களை கண்டுபிடித்து அவற்றை கொண்டாடி வந்த காலகட்டம்.
யாகங்களின் பெயரில் பல இடங்களில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டு எங்கும் அமைதியின்மையும் வன்முறையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. ஆதிசங்கரர் காலத்தில் பாரதம் முழுவதிலும் 72 சமயங்கள் இருந்தன, அவற்றினால் சனாதன மதம் தொய்வுற்றிருந்தது, அதனை மீட்க அவர் பஞ்சாயத பூஜை முறையும் ஷண்மதங்களையும் ஸ்தாபித்து தர்மம் தழைத்தோங்க வழிசெய்த மகான் ஸ்ரீ ஆதி சங்கரர்.
ஆறு சமய வழிபாடுகளையும் செய்தார். ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனைப் பாமாலைகளால் அர்ச்சித்தார். பயங்கரமான வழிபாடுகளையும், இந்திரிய வேகத்தையும் மக்கள் மனதிலிருந்து அகற்றி, அன்புருவான ஆண்டவனை அன்பாலே போற்றி, அனைவருடனும் அன்பு பூணும் பாங்கினை உணர்த்தி, ஈசன், அம்பிகை, நாராயணன், விநாயகர், முருகன், ஆதித்யன் மீதான ஆறுவித சாத்வீக சண்மத வழிபாட்டு முறைகளை வகுத்தார்.
நாடு முழுதும் பயணம் செய்து பல ஆலயங்களுக்கு சென்று புனருத்தாரனங்களுக்கு உதவி, சைவ வைணவ பேதங்களை களைந்து ஹரியும் சிவனும் ஒன்றே என்பதை நிரூபித்தார் ஆதி சங்கரர்.
சிவனை நினைத்து ஸ்தோத்திரம் செய்யும் அதே நேரம் சங்கரர் ‘பஜ கோவிந்த பஜ கோவிந்தம்’ என்று கோவிந்தனை நினைத்து உருகுவார்.
நர்மதை நதிக்கரையில் குரு கோவிந்த பகவத்பாதரைக் கண்டவுடன் குருவையும் கோவிந்தனையும் இணைத்து “பஜகோவிந்தம்” என்ற துதியைப்பாடி, கோவிந்தனின் அருளைப் பெறும்படி செய்த அன்புக்கடல் சங்கரர்..! சங்கரருக்கு வாழ்வில் பல காலகட்டங்களில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து உதவியிருக்கிறார் நரசிம்மர்.
ஜயந்திகளையெல்லாம் ரக்ஷித்துக்கொடுத்த ஜயந்தியாக இருப்பது ஸ்ரீ சங்கர ஜயந்தியே. கேரள மாநிலம் காலடியில் அந்த யுகபுருஷரின் அவதாரம் மட்டும் நிகழாமல் போயிருந்தால்…?
சிவராத்திரி, ஸ்ரீ ராமநவமி, கோகுலாஷ்டமி போன்ற எந்த ஜயந்தியுமே இல்லாமல் போயிருக்கும். எத்தனையோ தலங்களில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டையும் ஜன ஆகர்ஷண பிரதிஷ்டையும் நிகழாமல் போயிருக்கும்.
பன்னிரு ஜோதிர்லிங்கங்கள், ஐம்பத்தோரு சக்தி பீடங்களைத் தரிசித்து, பல திருத்தலங்களில் ஸ்ரீ சக்கரத்தை ஸ்தாபித்தார்.
குறிப்பாக திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருவானைக்கா திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, ஆரம்ப காலத்தில் மிகவும் உக்கிரமாகக் காட்சி தந்தாள். அந்த ஈஸ்வரியை அர்ச்சகர் கூட எட்டியிருந்தே பூஜை செய்ததை அறிந்தார் ஆதிசங்கரர்.
உடனே இரண்டு சக்கரங்களை மந்திர உச்சாடனம் செய்து தாடங்கங்களாக (தோடுகள்) ஈஸ்வரியின் இரண்டு காதுகளிலும் அணிவித்தார். அதற்குப்பின் தான் ஈஸ்வரி சாந்த மடைந்து கருணை முகத்துடன் திகழ்ந்தாள். இன்றும் அந்தச் சக்கர தாடங்கம் அன்னை அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் ஜொலிக்கிறது.
கைலாயத்திலிருந்து சங்கரர் கொண்டு வந்த பஞ்ச லிங்கங்களை பசுபதிநாத், பூரி, சிருங்கேரி, காஞ்சி, காசி ஆகிய ஐந்து திருத்தலங்களுக்கு அளித்தார். ஸ்ரீ சௌந்தர்யலஹரி, ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம் முதலான அரும்பெரும் பொக்கிஷங்களும் நமக்குக் கிடைக்கச்செய்தவர் சங்கரர்.
ஸ்ரீ ஆதிசங்கரர் காசியில் இருந்தபோது பிரம்ம சூத்ரம், உபநிடதங்கள், பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் முதலானவற்றுக்கு அற்புதமான பேருரை கண்டார்.
வேதவியாசரே வயோதிகராக வந்து, சங்கரர் இயற்றிய பிரம்மசூத்ர பாஷ்யத்தைக் கேட்டு அங்கீகரித்தாராம்.
ஆதிசங்கரரால் அருளப்பட்ட அருள் பெருகும் கனகதாரா ஸ்தோத்திரம். பாராயணம் செய்து, திருமகள் கடாட்சத்தால் வாழ்விலும் வளம்பெருக வழி காணலாம்..!
ஸ்ரீசைல க்ஷேத்ரத்தில் கோவில் கொண்டுள்ள மல்லிகார்ஜுனரைக் கண்ட மாத்திரத்தில் அன்பு பொங்க, பக்தி வெள்ளம் கரை புரண்டோட நூறு பாடல்களைப் பாடி மகிழ்ந்தார்.
“மனம் மகேஸ்வரனின் திருவடிகளை நாடி அங்கேயே நிலை பெற்று விடுவதே பக்தி” என்று அன்பில் செய்த உபதேசமே அது!
தன்னை வெட்ட வந்த காபாலிகனிடமும், அன்புடனே உரையாற்றிய அற்புதம். அனைத்தையும் துறந்த அற்புதத் துறவி, அன்பின் உருவமாகவே இருந்தார்.
அந்திமக் காலத்தில் வருவதாக அன்னைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது.
அன்னை ஆர்யாம்பாளின் ஆயுள் முடியும் தருணத்தை ஞான திருஷ்டியினால் அறிந்த சங்கரர் காலடி சென்று தாயின் அருகில் அமர்ந்து அன்னையை மடியில் கிடத்திக்கொண்டு, “மாத்ருகா பஞ்சகம்” பாடினார்.
தாயின் வயிற்றில் பிள்ளை கருவாகி, பிறந்து வளரும் எல்லா நிலைகளிலும் தாயின் ஒவ்வொரு தியாகத்தையும், அனுபவித்த ஒவ்வொரு இன்னல்களையும் சொல்லிப் பாடுகிறார். அன்பின் மொழியிலேயே பாடுகிறார். ஒவ்வொரு தாயின் வயிற்றில் பிறந்த மகனும் ஆச்சார்யாளின் அடி பற்றி, அன்னைக்கு அன்பைக் கொடுத்து அருளையும் ஆசியையும் பெற வேண்டும்.
உலகத்திற்கே குருவாக இருந்தாலும் தாய்க்கு மகன்தானே!
தாய் அன்பிற்கு இணையே இல்லை. வயிற்றில் சுமந்த தெய்வத்தைத் தன் தோளில் சுமந்து ஈமச் சடங்குகளை செய்தார் சங்கரர்!
ஆதிசங்கரர் அகிலம் எங்கும் அத்வைதத்தை நிலை நாட்டினார். அறிவால் சிலரையும், அன்பினால் பலரையும் ஆட்கொண்டார். அம்பிகையின் சௌந்தர்யத்தை அழகின் அலைகளாகப் பாடி ஆனந்தம் அடைந்தார். அனைத்து தெய்வங்கள் மீதும் பேதம் இல்லாமல் பாடி அருளினார்.
அத்தனை உபநிஷதங்களுக்கும் உரை எழுதினார். வருங்கால மக்கள் மீது உள்ள அன்பினால் பக்தி, கர்மம், ஞானம் என்ற எல்லா மார்க்கங்களையும் உணர்த்தினார்.
ஞான சிம்மமாக, அன்பின் வடிவமாக அருள் அரசு செலுத்தினார் ஸ்ரீ ஆதிசங்கரர். எல்லா மதங்களும் அன்பை ஏற்றுக்கொள்ளும். அன்பிற்கு அழிவே இல்லை.
“கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஆதிசங்கரரின் பாதங்கள் படாத இடங்களே இல்லை” என்று வரலாறு சொல்கிறது.
காஞ்சி மகாபெரியவர் 1962-ல் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் (கடல்) அருகில் சங்கரமடம் மூன்றினை நிறுவினார். உயர்ந்த கட்டிடம். அடுக்கு மாடிபோல் காட்சி தரும் தோற்றம் ஒரு கோவில் என்றே திகழ்கிறது.
Adi Shankara composed many hymns on Shiva, Vishnu, Devi, Ganesha and Muruga:
Super, Great compilation
Super