×
Sunday 13th of October 2024

Nuga Best Products Wholesale

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா?


Can We take Coins from Homa Kundam in Tamil?

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா?

🛕 கோயில்களில் யாகம் வளர்க்கும் குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா? அப்படி எடுத்துக்கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?

🛕 முதலில் ஹோமத்தின்போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன. வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது. இந்தவகை ஹோமங்களில் இறைவனை அக்னியில் ஆவாஹனம் செய்வதில்லை.

🛕 அக்னிம் தூதம் வ்ருணீமஹே என்கிறது வேதம். அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார். இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.

🛕 பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப்படுகின்றன. ஒரு சில இடங்களில் விசேஷமாக அறுகம்புல், வெள்ளை எள், நெல் முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள். இந்த முறையில் பூர்ணாஹுதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி ஹோமத்திற்குள் இடுவது இல்லை.

🛕 அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும், சக்தி வழிபாடு ஆன சாக்த முறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்வார்கள். இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்வார்கள்.

🛕 இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில் கொப்பரை முதலானவற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச் செய்வார்கள். இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்று சொல்லும்போது நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலான எளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம். மாறாக எளிதில் உருகாத இரும்பு, நிக்கல் முதலான உலோகங்களை இடுவது கூடாது.

🛕 பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்த இந்த சில்லரை காசுகளைப் போடுவது என்பது தவறு. நாம் எந்த ஒரு பொருளை யாகத்தில் செலுத்தினாலும் அது நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும். அந்த ஹோம பஸ்மத்தினையே நாம் இறைவனின் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக் கொள்வது என்பது தவறு. ஆக, இவ்வாறு ஹோமத்திற்குள் காசு போடுவது என்பது சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றி சாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.

🛕 ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும், அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது தரையினில் பள்ளம் வெட்டி அதற்குள் புதைத்து வைப்பது போன்ற செய்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே. ஒருமுறை இறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாது என்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்னமும் ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிக மிக நல்லது.

🛕 அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இறைவனுக்கு ஆஹுதியாக அக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும் நம் செயல். ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்து நாம் இட்டுக்கொள்ளும் ரக்ஷையும், அந்த சாம்பலுமே ஆகும். ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அதனையே வாயிற்படியில் மஞ்சள்துணியில் கட்டியும் வைக்கலாம்.

Also, read



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 23, 2024
சுடர் டிரஸ்ட், திருச்சேறை
  • August 11, 2024
சிரிப்பு நம் நோய்களை குணப்படுத்துகிறது
  • August 7, 2024
நாம் எங்கே இருக்கின்றோம்?