×
Friday 11th of October 2024

Nuga Best Products Wholesale

எனது ஆன்மிக பயண அனுபவங்கள்


பயணம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மகிழ்ச்சியைத் தருகிறது, சிறந்த ஆற்றலை அளிக்கிறது, நம் மனம் தொடர்பான நோய்களை குணப்படுத்துகிறது, புத்துணர்ச்சி அளிக்கிறது, நம்மை ஊக்குவிக்கிறது, மொத்தத்தில், பயணம் நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

பல்வேறு கோவில்கள், மலைப் பகுதிகளுக்குச் செல்வது, நீர்வீழ்ச்சிகள் காண்பது என தங்கள் பயண அனுபவங்களைப் பற்றி ஆசிரியர்களால் எழுதப்பட்ட பல புத்தகங்கள் உள்ளன. நான் விரிவான பயணங்களை மேற்கொள்ளவில்லை என்றாலும், எனது தனிப்பட்ட பயண அனுபவங்களில் சிலவற்றையாவது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன், மேலும், இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம் அவர்கள் ரசிப்பார்கள் என்றும்  நான் நம்புகிறேன்! இந்த கட்டுரையுடன் இணைக்கப்பட்ட புகைப்படம் 1970 களின் பிற்பகுதியில் சென்னையில் நடந்த ஒரு பொருட்காட்சியில்(Exhibition), புகழ்பெற்ற தாஜ்மஹால் பின்னணியில் எடுக்கப்பட்டது.

எனக்கு 6 வயதாக இருக்கும்போது, நான், என் குடும்பத்தாருடன் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தோம், சென்னையில் இருந்து, பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை விநாயகர் கோவிலுக்கு செல்வதற்காக ரயிலில் ஏறினோம். அந்த நேரத்தில், 7 1/2 ஆண்டுகள் (ஏழரை  நாட்டு சனி) சனி பகவானின் தாக்கத்தால், நான் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன், அதன் காரணமாக, ரயிலிலேயே, என் தாயார் எனக்கு இட்லியை மிளகாய்ப் பொடியுடன்  ஊட்டி, ராமாயணத்தின் கதைகளையும் கூறினார், அதன் காரணமாக, என் உடம்பின் வெப்பநிலை சற்றே  குறைந்து, சில மாத்திரைகளுடன் சூடான காபியை உட்கொண்டேன். அதன் காரணமாக நான் சற்று சௌகர்யமாக உணர்ந்தேன்.

ரெயிலில் இருந்து இறங்கி, லாட்ஜில் தங்கி, விநாயகரை தரிசித்தோம். அக்காலத்தில் திருச்சியில் “மாப்பிள்ளை விநாயகர் சோடா” என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான சோடா இருந்தது. என் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல், அந்த அற்புதமான சோடாவின் சில பாட்டில்களைக் குடித்து என் தாகத்தைத் தணித்தேன்!

அந்தப் பயணத்திற்குப் பிறகு, குலதெய்வக் கோவில் (அங்காளபரமேஸ்வரி, ஈரோடு), நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி, மாயவரம்(மயிலாடுதுறை) கோவில்கள், பெங்களூர் கோவில்கள், மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்கள் என பல்வேறு இடங்களுக்குச் சென்றோம். ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது, என் தந்தை எங்களை திருமலை திருப்பதிக்கு அழைத்துச் செல்வது வழக்கம், அவர் இறக்கும் வரை அந்த நடைமுறை தொடர்ந்தது.

நான் திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளியில் படித்தேன், நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது (1984), பள்ளி நிர்வாகத்தால் ஐந்து நாள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஊட்டி மற்றும் அதன் அருகிலுள்ள இடங்களுக்குச் சென்றோம். அந்த நேரத்தில் பயணத்தின் மொத்த செலவு ரூ.150/- (உணவு செலவுகள் நீங்கலாக).

1987-ம் ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்ததும் என் தந்தை எங்களை மந்த்ராலயத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு நாங்கள் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். நாங்கள் முதல் முறையாக சென்றதால், அருகிலுள்ள வெங்கடேஸ்வரா கோவில், பஞ்சமுகி மற்றும் பிக்ஷாலயா போன்ற இடங்களுக்கு நாங்கள் செல்லவில்லை, எனவே எங்கள் பெரும்பாலான நேரத்தை மந்த்ராலயம் கோவிலில் மட்டுமே கழித்தோம். அங்கே ஒரு ஹோட்டலில் மசாலா ஊத்தப்பம் சாப்பிட்டோம், அதை  சிரித்த முகத்துடன் கூடிய ஒரு சர்வர் பரிமாறினார், அந்த நாட்களில் மிகவும் பிரபலமாக இருந்த எலக்ட்ரானிக் கைக்கடிகாரத்தை அவர் கட்டியிருந்தார்!

மந்த்ராலயம் செல்வதற்கு முன்பு, நான் சில செரிமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன், ஆனால், மந்த்ராலயத்தில் புனித உணவை உட்கொண்ட பிறகு, எனது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் என் உடலில் இருந்து விலகின. அப்போது ஒரு சிறிய டம்ளர் காபியின் விலை ரூ.1/- ஆகவும், காமதேனு காட்டேஜில் வழங்கப்படும் உணவின் விலை ரூ.5/- ஆகவும் இருந்தது.

இந்த குடும்பப் பயணங்களைத் தவிர, என் டீன் ஏஜ் பருவத்தில் மாங்காடு, திருவேற்காடு, காளிகாம்பாள் போன்ற அம்மன் கோவில்களுக்கும், பெசன்ட் நகர் ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கும் பலமுறை சென்று வந்துள்ளேன். டிகிரி முடித்ததும் அயனாவரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர், பரசுராமர், பரசுராம லிங்கேஸ்வரர் கோவில்களுக்கு தினமும் சென்று வந்தேன். பாதாள பொன்னியம்மன் கோவில், சீனிவாச பெருமாள் கோவில், புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோவில் ஆகியவை பிரசித்தி பெற்றவை.சில ஆண்டுகளுக்கு முன், ஞாயிற்றுக் கிழமைகளில், அந்த கோவில்களுக்கு சென்று, தரிசனம் முடிந்ததும், புரசைவாக்கம், ராஜ்பவன் ஓட்டலில் காலை உணவு சாப்பிடுவேன்.

கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள கே.எஸ்.டி.சி மருத்துவமனையில் தணிக்கைப்(Auditing) பணியில் ஈடுபட்டிருந்தபோது, 41 நாட்கள் அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நவக்கிரக கோவில்கள், திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தேன். கடந்த ஆண்டு (2022) பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவில், திருபுவனம் சரபேஸ்வரர் கோவில், சுவாமிமலை முருகன் கோவில், கற்பவிருஷாம்பிகை அம்மன் கோவில், திருப்பாம்பரநாதர் கோவில், வாஞ்சிநாதர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், முத்து சட்டைநாதர் கோவில், தஞ்சை பெரிய கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்றுள்ளேன்.  இன்னும் எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன, ஆனால், வாசகர்களின் வசதிக்காக, எனது சில தனிப்பட்ட பயண அனுபவங்களுடன் கூடிய  இந்த கட்டுரையை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளேன்!

வாழ்க்கை மிகவும் குறுகியது, எனவே நமது பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படாமல், நம் சுமைகளை எல்லாம் வல்ல இறைவனின் தோளில் சுமத்தி, நம் வாழ்நாளிலேயே முடிந்தவரை மகிழ்ச்சியுடன் பல கோவில்களுக்குச் செல்வோம்!

“ஓம் நமசிவாய”

எழுதியவர்: ரா. ஹரிசங்கர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 23, 2024
சுடர் டிரஸ்ட், திருச்சேறை
  • August 11, 2024
சிரிப்பு நம் நோய்களை குணப்படுத்துகிறது
  • August 7, 2024
நாம் எங்கே இருக்கின்றோம்?