×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

ரஜ்ஜு பொருத்தம் – திருமண வாழ்க்கை சிறக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்


Rajju Porutham Meaning in Tamil

பொதுவாக திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு, பாரம்பரிய முறைப்படி நட்சத்திர பொருத்தம் காணும் பொழுது 10 பொருத்தங்களில் குறைந்த பட்சம் 6 பொருத்தம் வேண்டும் என்பதும், அதில் குறிப்பாக கயிற்று பொருத்தம் எனும் ரஜ்ஜு பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்யலாம், இல்லை எனில் திருமணம் செய்வது, தம்பதியர் ஒற்றுமைக்கும், திருமண வாழ்க்கைக்கும் பங்கம் வரும் என்றும், அதிக பட்சமாக தம்பதியர் இருவரில் ஒருவருக்கு உயிர் சேதம் கூட ஏற்படலாம் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் குறிப்பிடுவது உண்டு, இதை பற்றிய உண்மை விளக்கம் என்ன? என்பதை இந்த பதிவில் காண்போம்:

ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன?

திருமண வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய, மணமகன் மற்றும் மணமகளின் சுய ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைவதை விட (ரஜ்ஜு பொருத்தம் உட்பட) ஜாதக பொருத்தம் எனும் 12 பாவக அமைப்புகள் மிக வலிமையுடன் அமைவதே சிறந்தது, காரணம் ஒருவரின் திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது, நட்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் அல்ல, சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே என்றால் அது மிகையல்ல, ஒருவரின் திருமண வாழ்க்கையில் நட்சத்திர பொருத்தத்தின் பங்கு என்பது வெறும் 5% சதவிகிதமே, மீதி 95% சதவிகிதம் ஜாதகத்தின் பாவக அமைப்பே திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும்.

கடந்த 25 வருட காலங்களுக்கு முன்பு, திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வதற்கு, பெயர் பொருத்தம் மற்றும் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் வரும், நட்சத்திரத்தை கொண்டு நட்சத்திர பொருத்தம் பார்த்து திருமணம் செய்தனர், இதற்க்கு காரணம் அந்த காலகட்டங்களில் அனைவருக்கும் ஜாதக இருந்ததா என்றால்? நிச்சயம் இல்லை என்பதே அதன் பதில், மேலும் பிறந்த நேரம் என்பது சரியாக குறித்து வைத்து ஜாதகம் எழுதினார்களா என்றால் அதுவுமே ஒரு கேள்வி குறியே!

ஆக திருமணம் செய்ய அவர்களுக்கு இருந்த ஒரே வழி நட்சத்திர பொருத்தம், மற்றும் நாம நட்சத்திர பொருத்தம், இதன் வழியில் பாரம்பரியமாக நட்சத்திர பொருத்தம் கண்டு திருமணம் செய்து வந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது, இந்த நவீன உலகத்தில் பிறந்த நேரத்தை மருத்துவரகள் தெளிவாக குறித்து கொடுத்து விடுகின்றனர், மேலும் முறையாக ஜோதிடம் பயின்றவர்கள் இறை அருளின் கருணையினால், ஜோதிட கணிதம் கொண்டு பிறந்த நேரத்தை சரியாக கணிதம் செய்துவிட முடியும்.

இங்கே ஜோதிடம் குறிப்பிட விரும்புவது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையுடன் அமரும்பொழுது, ரஜ்ஜு பொருத்தம் எனும் ஒரு விஷயம் எதுவும் செய்வதில்லை, இதற்கு உதாரணம் நிறைய உண்டு, திருமணம் செய்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் ஒன்றையே காரணம் காட்டி திருமணத்தை தடை செய்வது, உண்மையில் ஜோதிடம் கணிதம் பற்றி ஒன்றும் தெரியாத கத்து குட்டிகள் செய்யும் ஒரு வேலை என்பதே ஆகும், ஏனெனில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தும் சிலரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விடுவதற்கு காரணம் சுய ஜாதகத்தில், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் பாதிக்கபட்டு இருப்பதே என்றால் அது மிகையில்லை.

அடிப்படையில் நட்சத்திர பொருத்தம் மட்டும் நன்றாக அமைந்த இருவரின் ஜாதகத்தில், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும், பாதக ஸ்தானத்துடனோ அல்லது 6, 8, 12ம் பாவகங்களுடனோ தொடர்பு பெற்று இருக்குமாயின், இருவரின் திருமண வாழ்க்கை என்பது நெடுநாள் நீடிக்காது, குறுகிய காலத்தில் மணமுறிவுக்கு அழைத்து சென்று விடும், தற்பொழுது விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றம் முன்பு நிற்கும் தம்பதியர் அனைவரின் ஜாதகத்திலும், இந்த நிலையை இருப்பதை, அவர்களின் சுய ஜாதகத்தை பார்க்கும் பொழுது நாம் தெள்ள தெளிவாக காணலாம்.

மேலும் தாமத திருமணம் என்ற ஒரு விஷயம் தற்பொழுது அதிகரித்து வருவதற்கு காரணம் சுய ஜாதகத்தில் மேற்கண்ட இரண்டு பாவகங்கள் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் என்பதே முற்றிலும் உண்மை, ஆக திருமணம் சிறப்பாக அமைய மணமகன் மற்றும் மணமகள் இருவரின் ஜாதகத்திலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களை பின்வரும் வரிகளில் ஜோதிடம் தங்களுக்கு விளக்கமாக தெரிவிக்கிறது, இதை பின்பற்றி திருமண வாழ்க்கையை அமைத்துகொள்ளும் பொழுது, தம்பதியர் இருவரும் இல்லற வாழ்கையை மகிழ்ச்சியுடன், வாழையடி வாழையாக 16 வகை செல்வமும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.

rama sita marriage

Astrological Facts to follow for a Successful Married Life in Tamil

திருமண வாழ்க்கை சிறக்க ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1) அடிப்படையில் இருவரின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் மிகவும் சிறப்பாக இருப்பது, தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அமைத்து தரும், குடும்பத்தில் இனிமை நிலவ இருவரின் சம்பாசனை எனும் பேச்சே அடிப்படையாக அமைகிறது, ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் தன்மையும், அதனை சரியாகவும் உண்மையாகவும் புரிந்துகொள்ளும் தன்மையை தரும், தேவையின்றிய வீண் பேச்சுகளை தவிர்த்து, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உண்டான விஷயங்களை மட்டுமே பேசி, குடும்பத்தை சிறப்பாக நடத்த இந்த பாவகம் வலிமையுடன் அமைவது நல்லது.

மேலும் குடும்பம் நடத்துவதற்கு அவசிய தேவையான தன்னிறைவான, வருமானத்தை தருவது குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமே! சிலரின் வாழ்க்கையில் திருமணதிற்கு பிறகு மிகப்பெரிய பொருளாதார ரீதியான வெற்றியை பெறுவதற்கு காரணமாக அமைவது இதுவே என்றால், அது மிகையில்லை, மேலும் தனது குடும்பத்திற்காக சேமிக்கும் அமைப்பை தருவதும் இந்த இரண்டாம் பாவகமே, இந்த பாவகம் நல்ல நிலையில் அமையவில்லை எனில், நட்சத்திர பொருத்தம் எனும் ஒருவிஷயம் இதில் எந்த ஒரு மாற்றத்தையும் தந்து விடாது.

2) அடுத்து இருவரின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் சிறப்பாக இருப்பது, தம்பதியர் இருவரின் எண்ணம் மற்றும் உடல் மொழிகள் , செயல்பாடுகளை சிறப்பாக புரிந்து கொள்ள முடியும், இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருக்கும் அமைப்பை தரும், களத்திர பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் ஒற்றுமையையும், ஒருமித்த இல்லற வாழ்க்கையின் வெற்றியையும் உறுதிபடுத்தும். தம்பதியரின் உடல் அமைப்பையும், மன அமைப்பையும் ஒருங்கிணைப்பது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, மேலும் ஒருவரை ஒருவர் சிறப்பாக புரிந்து கொண்டு, ஒருவருக்காக ஒருவர் விட்டுகொடுத்து வாழும் இனிமை நிறைந்த வாழ்க்கையை தருவது இந்த களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெற்று அமைந்தால் மட்டுமே சாத்திய படும்.

தம்பதியர் இருவரின் உடல் அமைப்பில் நல்ல தேஷஸ் மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்தை தருவதும், இந்த அமைப்பே இருவரின் வாழ்க்கையிலும் உடல் ரீதியான எந்த ஒரு பிரச்சனையும் தராமல், சிறந்த உடல் நலம், அறிவு திறன், சிறந்த சிந்தனை ஆற்றல், சரியான முடிவெடுக்கும் அறிவாற்றல் என்ற அமைப்பில் நன்மையான பலன்களை வாரி வழங்குவது, இந்த களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, மேலும் சமுதாயத்தில் நல்ல மதிப்பு அந்தஸ்து கௌரவம் போன்ற விஷயங்களை அதிகரிக்க செய்வதும், கூட்டு முயற்ச்சி, பொதுமக்கள் ஆதரவு அரசியல், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிறந்த நன்மைகளை வாரி வழங்குவது களத்திர பாவகத்தின் தன்மையும், தனக்கு அமையும் வாழ்க்கை துணையின் களத்திர பாவகத்தின் வலிமையுமே, இந்த களத்திர பாவகம் நல்ல நிலையில் அமையாத பொழுது, ரஜ்ஜு பொருத்தம் சிறப்பாக அமைந்தாலும் எந்த ஒரு நன்மையையும் வழங்காது, ரஜ்ஜு பொறுத்ததினால் எந்த ஒரு பயனும் இல்லை.

3) மேலும் தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது, தனது சந்ததிக்கு ஒரு சிறந்த ஆண் வாரிசை பெற்று தரும், தனது சந்ததிகள் வழியில் வந்த அறிவாற்றலையும், புத்திசாலிதனத்தையும் மேம்படுத்தி வாழ்க்கையில் சிறந்த வெற்றி வாய்ப்பினை பெற்று தரும்.

4) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெறுவது, இருவரின் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும், உடல் ரீதியான தொடர்புகளால் பெரும் மகிழ்ச்சி மற்றும் இணக்கமான அன்பையும் உறுதிபடுத்தும், மேலும் ஆண்கள் ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெறுவது தனக்கு வரும் வாழ்க்கை துணையை சிறப்பாக வைத்திருக்கும் தன்மையை தரும் மேலும் இறுதி வரை தம்பதியர் ஒற்றுமையாக வாழும் யோகத்தை தங்கு தடையின்றி தரும்.

5) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெறுவது, பூரண ஆயுளையும், கணவன் வழியில் இருந்து மனைவி பெரும் அதிர்ஷ்டம் மற்றும் வருமான யோகத்தையும், மனைவி வழியில் இருந்து கணவன் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் வருமான யோகத்தையும் அறிந்துகொள்ள இயலும், இருவரின் ஜீவன வருமான வாய்ப்புகள் பற்றியும், பொருளாதார முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் பற்றியும் தெளிவாக தெறிந்து கொள்ள இயலும்.

6) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெறுவது, இருவரின் அந்தரங்க வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியையும், மன நிம்மதியான வாழ்க்கையையும், போராட்டம் இல்லாத திருப்தியான
அமைதியான வாழ்க்கையை அமைத்து தரும், இருவருக்கும் உறவுகளில் கிடைக்கும் அந்தஸ்து கௌரவம் மற்றும் சிறப்பு மரியாதை போன்ற விஷயங்களை 12ம் பாவக வழியில் இருந்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

மேற்கண்ட விஷயங்களே திருமண வாழ்க்கைக்கு அவசியமாக சுய ஜாதக ரீதியாக நாம் கவனிக்க வேண்டும்.

successful marriage

Astrological Facts to not to follow for a Successful Married Life in Tamil

திருமண வாழ்க்கை சிறக்க ஜாதக ரீதியாக தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

1) சுய ஜாதக ரீதியாக நட்சத்திர பொருத்தத்திற்கு முக்கியத்துவம் தந்து, ஜாதக பொருத்தத்தை உதாசீனம் செய்வது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தர வாய்ப்பில்லை. ஏனெனில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நிறைய பேர் பிறந்திருக்க வாய்ப்புண்டு, பிறந்த நேரப்படி ஜாதக பாவக அமைப்புகள் ஒருவருக்கு இருப்பதை போன்று மற்றவருக்கு இருக்க வாய்ப்பு இல்லை.

2) செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், தார தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் என்று வகைக்கு 5 அல்லது 6 தோஷங்களை பிரித்து வைத்து கொண்டு மக்களை குழப்புவது, சம்பந்தபட்ட ஜோதிடருக்கே பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து விடும்.

3) குறிப்பாக விரும்பி திருமணம் செய்துகொள்ளும் அன்பர்கள் மேற்கண்ட விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் திருமணம் செய்துகொள்வது நல்லது, திருமணம் செய்துகொண்ட பிறகு தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களது திருமண வாழ்க்கைக்கு தாங்கள் கொடுக்கும் மதிப்பு.

4) ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

5) ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, மூலம் மாமனாருக்கு ஆகாது என்று நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு வந்த வாய்வழி செய்திகளை நம்பி திருமண வாழ்க்கையை தள்ளி போடுவதும், தவிர்ப்பதும் சுத்தமான மூட நம்பிக்கையே அன்றி வேறு எதுவும் அல்ல.

உண்மையான ஜாதக பலனை, சுய ஜாதக ரீதியாக தெரிந்துகொண்டு வாழ்கையில் சகல நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ ஜோதிடம் அறிவுறுத்துகிறது , வாழ்த்துகிறது.

உங்களுடைய அன்பு மிகவும் ஆழமாக இருப்பின் ஜோதிடம் பார்க்காமல் திருமணம் செய்யலாம். காரணம், ஜோதிடசஸ்திரமே காந்தர்வ திருமணம், குரு நிச்சித்த திருமணம், சகுன நிச்சித்த திருமணம், கர்ப்பம் நிச்சித்த திருமணம் இவைகளுக்கு ஜோதிடம் பார்க்க கூடாது என்றும், இவைகள் இறைவனால் நிச்சயிக்கப்பட்ட செயல் என்றும் கூறுகிறது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 23, 2024
சுடர் டிரஸ்ட், திருச்சேறை
  • August 11, 2024
சிரிப்பு நம் நோய்களை குணப்படுத்துகிறது
  • August 7, 2024
நாம் எங்கே இருக்கின்றோம்?