×
Wednesday 7th of June 2023

Nuga Best Products Wholesale

கரோனாவிடமிருந்து விடுதலை பெற ஆன்மீக வழிமுறைகள்


Spiritual Instructions for Deliverance from Coronavirus

கரோனாவிடமிருந்து விடுதலை பெற ஆன்மீக வழிமுறைகள்

? நன்றி திரு. வெ. நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)

கண்ணுக்கும் எண்ணத்துக்கும் புலப்படாத, உணரமுடியாத ஒரு அற்பக்ருமி இந்த உலகையே கதிகலங்க வைத்துள்ளது. விக்ஞானிகளும், மருத்துவர்களும், அரசாங்கங்களும் இந்த நிலமையை சமாளிப்பதற்கு போராடி வந்தாலும், மரண பயத்தால் மக்கள் உறைந்து நிற்கிறார்கள். எதிர்காலத்தை எண்ணி ஏக்கத்தோடும், ஆதங்கத்தோடும், சோகங்களை சுமந்து தனிமையில் தத்தளித்து வருகிறார்கள்.

இதுவரை எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்த தங்கள் அதிவேக வாழ்க்கை திடீரென்று என்னவாயிற்று? என்று சிலர் யோசிக்கிறார்கள். தாங்கள் இதுநாள் வரை அனுபவித்த, தங்கள் கண் முன்னே தெரிந்த, பழக்கப்பட்ட இந்த உலகம் எங்கே மறைந்தது? சற்று முன்னால் தங்கள் கண் முன் வலம் வந்த மனிதர்கள் கூட்டம், நெரிசலான தெருக்கள், வாகனங்கள், , மிருகங்கள், சத்தம், புகை மண்டலம், அலுவலகம், தொழில் இத்யாதிகள் திடீரென்று என்னவாயிற்று? எல்லாம் நிஜமா அல்லது கனவா? என்று குழம்பி நிற்கிறார்கள். இந்த எதிர்பாராத மாற்றத்தை, அதன் தாக்கத்தை ஏற்க முடியாமல் பலர் தவிக்கிறார்கள்.

தங்களுக்கு வெளியே தெரியும் உலகம் முழுதும் குழப்பம், தங்களுக்குள்ளும் குழப்பம். எப்படி சமாளிப்பது? இந்த வைரஸ் பிரச்சனையிலிருந்து மீண்டு, முன்பிருந்த ‘இயல்பு’ நிலைக்கு வெகு விரைவில் இந்த உலகம் திரும்பும். அப்போது நம் பழைய வாழ்க்கை நிலை தலை தூக்கும். அந்த நேரத்தில், இப்போது சந்திக்கும் தனிமை, மன உளச்சல், பயம், என்ன ஆகுமோ என்கிற ஆதங்கம் இவையெல்லாம் ஒரு நொடியில் மறைந்து நமக்குள்ளே ஒரு நினைவாகி, கனவாகி கரைந்து விடும். உண்மையிலேயே இந்த கிருமியால் இவ்வளவு தொல்லைகளை சந்தித்தோமா? நாம் இருந்த தனிமை வாழ்க்கை எங்கே போனது? என்கிற கேள்வி நம்மைத் துளைக்கும் . யோசித்துப் பார்த்தால் நாம் இப்போது பார்க்கும், உணரும் இந்த நிலை உண்மையா, கனவா? என்றும் நம்மில் பெரும்பாலோர் யோசிக்கப் போகிறோம்.

உலகம் வைரஸ் என்கிற ஒரு பயங்கரமான ரோகக்கணையை நம் மேல் தொடுத்துள்ளது. இதன் வெளிப்பாடாக நம்மை சுற்றி பரவலாக வலி, பயம், இயல்பு சீர்கேடு, சமுதாய பொருளாதார மாற்றங்கள், சோகங்கள், சங்கடங்கள், குழப்பங்கள் போன்றவைகளைக் காண்கிறோம். நமக்குள்ளேயும் இந்தக் கணையின் தாக்கம் அதீதமாக பிரதிபலிக்கிறது. பயம், குழப்பம், எதிர்காலம் பற்றிய தெளிவின்மை, கேள்விக்குறியாகி நிற்கும் ஆரோக்யம், வாழ்க்கையை சமாளிக்கமுடியுமா என்கிற ஆதங்கம் போன்றவை நம்மை ஸ்தம்பிக்கச் செய்கின்றன. வெளித்தாக்கத்தை  சமாளிக்க அரசு இயந்திரம் முயல்கிறது. ஆனால் நம் உள்தாக்கத்தை சரி செய்ய விடை தேடி அலையும் அன்பர்களுக்கு  ஆன்மீகம்தான் ஒரே மருந்து.

இது போன்ற தெளிவற்ற நிலைமைகளை திறமையாக, தைரியமாக சமாளிப்பதற்காகவே நம் முன்னோர்கள் பல நல்ல ஆன்மீக சிந்தனைகளை  விதைத்துச் சென்றுள்ளனர். இந்த நவீன யுகத்தில் பயத்தை போக்க ஆன்மீகம் தீர்வாகுமா? இது எப்படி சாத்தியம்? நிச்சயமாக.

மனித குலம் தங்கள் அறியாமையிலிருந்து தெளிவடையவே, கணக்கீட்டு சொல்லமுடியாத காலம் தொட்டு,  வேத சாஸ்த்ரங்களும், உபநிஷத்தங்களும் ஒரு பெரிய வழிகாட்டியாக, ஞானப் பொக்கிஷமாக, பாதுகாப்பு அரணாக நமக்கு கிடைத்துள்ளன. மக்கள் நலம் பேணிய பல குருமார்களும், ஞானிகளும், ஸித்தாந்திகளும் இந்தக் கருத்துகளை எளிமைபடுத்தி பல வகை ஆன்மிக பாதைகளை உருவாக்கி சென்றுள்ளனர். தீமைகளிருந்து பாதுகாக்கும் கவசங்களாக, காலம் கடந்து அவைகள் இன்றும் வழிகாட்டியாக திகழ்கின்றன. அமைதியாக இருக்கும்போது அறிவுரை தருவது ஆன்மிகம் அல்ல, ஆபத்து நேரங்களிலிருந்து பாதுகாப்பதே ஆன்மீகம்.

பகவத் கீதையை எடுத்துக்கொள்வோம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய உபதேசங்களை அர்ஜுனனுக்கு எங்கே எப்படி போதித்தார்? வீட்டிலா, வகுப்பறையிலா, கோவிலிலா, ஆசிரமத்திலா அல்லது ஒரு அமைதியான சூழலிலா? ஒரு பெரிய, கொடூர யுத்த களத்தில் அல்லவா இந்த உபதேசம் நடந்தது? வேத சாரம்ஸங்களையும், உலகின் மிகப் பெரிய ஆன்மிகத் தத்துவங்களையும் மனித குலமே உணரும் வண்ணம் ஸ்ரீ கிருஷ்ணர் அளித்த போதனைகள், வாழ்க்கை ரகசியங்கள், அவர் அளித்த விதம் அனைத்தும் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த கொடிய யுத்ததத்துக்கும் பொருந்தும்.

தடுமாறும் சமயங்களில்தான் நமக்கு தீர்வு தேவை. நாம் எப்போது நெருப்பை தேடுகிறோம்?  குளிரை போக்கிற்கொள்வதற்கு. உஷ்ணம் தேவைப்படும்போது. உஷ்ணமாகவே இருக்கும்போது நெருப்பின் தேவை எதற்கு? அது போலத்தான், நமக்கு பிரச்சனை வரும்போது, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ரோகம் நம்மை ஆட்கொள்ளும்போது, ஆன்மிகம் என்கிற வைத்யம் தேவைப்படுகிறது. இது போன்ற சமயங்களிலேயே ஆன்மிக கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலை பக்குவம் நமக்கு கிடைக்கும். ஆன்மீகம் ஒன்றுதான் நம் பயத்தை போக்கி, தைரியம் தந்து ஆறுதல் அளிக்கும் அருமருந்தாகவும் அமையும்.

இது போன்ற தருணங்களில் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேதங்கள் நமக்கு நான்கு அருமையான வழிகளை சொல்கின்றன. உண்மையில் நாம் யார்?நம்மை சுற்றி உள்ள இந்த உலகம் எப்படிப்பட்டது? வாழ்க்கை (சம்சாரம்) என்றால் என்ன? மரணம் என்றால் என்ன? போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் அறியாமையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இந்த அறியாமையிலிருந்து விடுதலை பெற்று  வாழ்க்கை ரகசியங்களை அறிந்து கொள்வதே நம் வாழ்வின் நோக்கம் என்கிறது வேத சாஸ்த்ரம். அது சரி, இவைகளை ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்? இதற்கும்  இந்த வைரஸ் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?

நம்முடைய உண்மையான இயல்பு நிலையையும், நாம் தினமும் இந்த உலக அனுபவங்களை எப்படி உணருகிறோம் என்ற ரகசியத்தை அழகாக விவரிக்கிறது மாண்டூக்யா உபநிஷத் (ரிக் வேத சாராம்சம்). தினமும் நம்முடைய விழித்திருக்கும் நிலையில் நம் கண் முன்னே தெரியும் உலகை காண்கிறோம். நம் ஐந்து புலன்கள் வழியாக இந்த உலகம் தரும் பல அனுபவங்களை உணருகிறோம். சிலவற்றை  நம் புத்தியால் அனுமானிக்கிறோம். நாம் தூங்கும்போது, ஐந்து புலன்களும் அடங்கிவிடுகின்றன. நம் மனத்திரையில்  கனவு காண்கிறோம். அங்கேயும் ஒரு உலகைக் காண்கிறோம். விழித்திருக்குபோது அனுபவிப்பது போல பல நிகழ்வுகளைக் காண்கிறோம். நிஜ உலக அனுபவங்கள் போலவே உணர்கின்றோம்.

அதை அடுத்து ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்கிறோம். அங்கே வெளிப் புலன்களோ, மனமோ, புத்தியோ, நினைவுகளோ அனைத்தும் அடங்கி விடுகின்றன. மறு நாள் விழித்து பார்க்கிறோம். மீண்டும் நம் கண் எதிரே இந்த உலகம் தெரிகிறது. புலன் வழி அனுபவங்கள் தொடங்குகின்றன. ஆனாலும் முதல் நாள் கண்ட கனவு காணாமல் போகிறது, சில சமயம் நினைவுகளாக தெரிகிறது. ஆழ்ந்த உறக்கத்தை பற்றிய  அனுபவத்தையும் விவரிக்க முடிகிறது. ஆக, இந்த மூன்று அனுபவ நிலைகளையும், இவை தொடர்ந்து மாறினாலும், நமக்குள் இருக்கும் ‘உள்உணர்வு’ மாறாமல் தொடர்ந்து உணர்கிறது.

இதில் ஒரு அடிப்படை விஷயத்தை கவனிக்கவேண்டும். நம் அனுபவம் என்பது இரண்டு அம்சங்களை கொண்டது. அனுபவிக்கபடும் பொருள், ‘அனுபவிப்பவர்’. இவை இரண்டும் இல்லாமல் எந்த அனுபவமும் இல்லை. பொருள் வேறு, அனுபவிப்பவர் வேறு. நாம் அன்றாட வாழ்க்கையில் பொருள்கள் நாம் பார்வையில் தொடர்ந்து மாறுகின்றன, நம் உடல், மனம், புத்தி உள்பட. ஆனால் ‘அனுபவிப்பவர்’ மாறுவதில்லை. நம் ‘உள்உணர்வு’தான் இங்கே அனுபவிப்பவர். இதைதான் உபநிஷத்துக்கள் ‘ஆத்மன்’ என்று வருணிக்கின்றன. நம் உண்மையான இயல்பே ஆத்மன். நாம் காணும் இந்த உலகம் அனைத்தும் நம் உணர்வில் (ஆத்மனில்) தோன்றும் தோற்றங்கள். அவை வெறும்  அனுபவங்களே. ஆத்மன் ஒன்றே நிஜம் மற்றவை எல்லாம் தோற்றங்களே. ஆனால் இந்த உண்மையை, ரகசியத்தை அறியாத நாமோ, ஆத்மனை உணர முயற்சி செய்யாமல், ‘இந்த உடலும், மனமும், எண்ணங்களும் சேர்ந்த கலவையே நாம்’ என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.  புலன்கள், மனம், எண்ணங்கள், புத்தி, நினைவுகள் வழியாக நாம் சந்திக்கும் அனைத்து சிக்கல்களும் ‘நம்முடையது’ என்று ஏற்றுக்கொண்டு அவதியுறுகிறோம்.

இந்த உடலை ஒரு ரதமாகவும், ஆத்மனை அதில் பயணிக்கும் பயணியாகவும் வருணிக்கிறது கட உபநிஷத். உடல், மனம், எண்ணம், புத்தி அனைத்தும் நாம் பயன்படுத்தும் கருவிகள். அவை எப்படி நாமாக முடியும்? அப்படியானால் இந்த உடலைப் பாதுகாக்க, பராமரிக்க வேண்டாமா? ஒரு காரில் பயணம் செய்கிறோம். நாமே கார் என்று சொல்வதில்லையே. கார் சீராக செயல்பட பாராமரிப்பு தேவை, பாதுகாப்பு நிச்சயமாகத் தேவை. நமக்கும் காருக்கும் என்ன தொடர்பு என்கிற புரிதல் தேவை. நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் ‘நம்முடையது’ என்று சொல்கிறோம், ஆனால் நாம் பயன்படுத்தும் நம் உடலை மட்டுமே  ‘நாம்’ என்று அடையாளம் காட்டிக்கொள்கிறோம். உடல், மனம் ரீதியாக நமக்கு ஏற்படும் தொல்லைகளை நம்முடையது என்று ஏற்றுக்கொண்டு அல்லல் பாடுகிறோம்.

அநித்ய அஷுசி துக்க அனாத்மசு நித்ய ஷூசி சுக ஆத்மன் கியதி அவித்யா

‘நிலையில்லாத, அழுக்கான துக்கங்கள் நிறைந்த இந்த மாமிச உடலை, நிலையான பவித்ரமான ஆத்மன் என்று நினைப்பது அறியாமை’ என்பது இந்த சாஸ்த்ரத்தின் அர்த்தம்.

மாற்றங்களைக் கடந்த, அழிவில்லாத, எல்லையில்லாத, சத் சித் ஆனந்த நிலையில் சஞ்சரிக்கும் ஆத்மனை சாதாரண மானுட உருவில் கற்பனை செய்துகொண்டு நம்மை சிறுமை படுத்திக்கொள்கிறோம். ‘ஆத்ம சத்யம் ஜகத் மித்யம் (ஆத்மன் ஒன்றே உண்மை, நிஜம், இந்த உலகம் நமக்கு தோன்றும் தோற்றம்) என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். அத்வைத சித்தாந்த ஆசார்யர் கௌடபாத ஆச்சாரியார் ஒரு படி மேலே சென்று, நாம் ஆத்மனாகக் காணும் அனைத்து அனுபவங்களும் (விழித்திருக்கும் போதும், தூக்க நிலையிலும்) கனவுகளாகத் தெரியும் தோற்றங்களே என்று ஆணித்தரமாக விளக்கியுள்ளார். இந்த தவறை தொடர்ந்து செய்வதால்,  சதா பயத்திலும் பாதுகாப்பற்ற நிலையை எப்போதும் உணர்கிறோம்.

நாம் செய்யும் இந்த பெரும் தவறை வேதங்கள் அழகாக சுட்டிக்காட்டி நம்மை பற்றிய உண்மையான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த உடல் அழியக்கூடிய பொருள். ஆத்மன் அழியாதது. ஆத்மனுக்கு மரணமில்லை. இந்த தெய்வீக சக்தியை உணருவதே ஆன்மிகம். இதுவே மனித குலம் கற்றுத் தெளியவேண்டிய மிக உயர்நிலை கல்வி (ஞானம்) என்றும் உபநிஷத் ஆணித்தரமாக கூறுகிறது. அறியாமையைக் களைந்து உண்மையை அறிந்து கொள்வதே ஆன்மீகம். இந்த ஞானத்தை உணரும் அனைவரும் இந்த உலக அனுபவங்கள் தரும் அனைத்து விதமான பந்தங்கள், தொல்லைகள், சங்கடங்கள், சோதனைகள், துயரங்களிலிருந்து உடனடியாக விடுதலை பெறுகின்றனர். இதுவே உண்மையான ‘மோக்க்ஷம்’.

இந்தத் தத்துவம் இங்கே எப்படி பொருந்துகிறது? முதலில் மேலே விவரித்த நிலைகளை சிறிது கூர்ந்து கவனிப்போம். நமக்குப் பழக்கபட்ட  இயல்பாக இருந்த வாழ்க்கை நிலை திடீரென்று மாறுகிறது. நம் கண் முன்னே நாம் பார்த்த பல விஷயங்கள் மாறுகின்றன. அன்றாடம் நாம் தூங்கும் போது காணும் கனவிலிருந்து திடீரென்று விழித்தெழுந்தது போல உணருகிறோம். கிருமி உருவாக்கிய இன்னொரு புதிய நிலைமைக்கு மாறுகிறோம். வீடு, தனிமை, பயம், இயலாமை, தெளிவின்மை போன்றைவைகளால் உந்தப்பட்டு சோகம் கொள்கிறோம்.

சிறிது காலம் கழித்து நிலைமை சீரானதும், நம்முடைய பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம். அப்போது இப்போது வாழும் நிலை மறைந்து,  கனவில் நடந்தது போல் அல்லவா உணருவோம்? தற்போதைய சங்கடங்கள், பயம் எல்லாம் ஒரு நினவாக, கனவாக காணாமல் போய்விடும் அல்லவா? நேற்று நடந்த நிகழ்வுகள் இன்று வெறும் நினைவுதானே நமக்கு?  நினைவுகளையும் கனவுகளையும் கற்பனைகளையும் வேடிக்கை பார்க்கும் ஆத்மாதான் நம் உண்மை சொரூபம் என்பதை உணரும்போது, நம்மை சுற்றி நடக்கும் எதை பற்றியும் நாம் கவலை கொள்ளப் போவதில்லை. அவைகள் நமக்கு சொந்தம் என்று நினைக்கப் போவதில்லை. அவை வழியாக நாம் காணும் அனைத்து துன்பங்களும் நம் அனுபவத்தோற்றங்கள் என்று தெளிவு ஏற்படும்போது அவைகளிலிருந்து விலகி நிற்கிறோம். பயம் விலகுகிறது.

பிரம்மகுரு ஸ்ரீ கோடிதாத்தாஸ்வாமிகள்  ‘காண்பது பொருள், காணாதது இமை’ என்று அழகாக எடுத்து கூறுவார். பொருள்களின் உண்மை சொரூபம் விளங்கும்போது மட்டுமே நம்மால் உண்மையை உணரமுடியும். உண்மைகளை உணர முடியாதபோது அனைத்தும் நம் கண்களை மூடும் இமைகளாக நம்மை இருட்டில் தடுமாற வைக்கும்.

இந்த உயர்நிலை ஞானம் அடைவது சாத்தியமா? முயன்றால் சாத்தியம். வேதங்களில் இதற்கு பல வழிகள் போதிக்கபட்டுள்ளன. இதையெல்லாம் குறுகிய காலத்தில் கற்றுத் தெளிவு பெறுவது நம்மில் பலருக்கு எட்டாத கனி. சொல்லித்தரவும் தகுந்த குரு வேண்டும். நமக்கு கற்றுக்கொள்ள ஓரளவு தெளிவும், முனைப்பும் வேண்டும். அப்படிப்பட்ட குருவை எங்கே தேடுவது? எப்போது, எப்படி கற்றுக்கொள்வது? இது கொஞ்சம் கஷ்டமான வழியாகத் தெரிகிறது. அடுத்த வழி?

இது நம்மில் பல பேருக்கு தெரிந்த வழி. நம்பிக்கை வழி. நம்மையும் இந்த உலகையும் இயக்குவதாக நாம் நம்பும் ஆதிசக்தியாக விளங்கும் தெய்வ வழிபாடு. பக்தி ஆராதனை வழி. ஆதிசக்தியிடம் முழுமையாக சரணடைவது. மனம், எண்ணம், புத்தி ஆகியவைகளை ஒருங்கிணைத்து ஆராதிப்பது. நம்மை சுற்றி நடக்கும் உலக சிந்தனைகளிருந்து விலகி நின்று துதி பாடுவது. நல்ல எண்ணங்கள் நேர்மறை விளவுகளை நமக்கும், நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கும் உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவது.

ஸர்வத ஸர்வ பாவேன நிஸ்சிந்தைர் பகவான் ஏவ பஜநீயா என்கிறது நாரத பக்தி சூத்திரம். எந்த நேரமும், எந்த நிலையிலும், ஒரே சிந்தனையுடன் நம்மை படைத்தவனை துதிபாடி, அவன் அருள் வேண்டுவது. நாம் காணும் அனைத்து அனுபவங்களிலும், நிலை மாறாமல்  படைத்தவனை மட்டுமே காண்பது. உணர்வது. பரவசம் கொள்வது. பூஜைகள், பஜனைகள், பிரார்தனைகள் போன்றவை நம்மை இந்த உலக சிந்தனைகளிலிருந்து விலகிக்கொள்ள வழி செய்யும். இந்த பக்தி மார்கம், நம்மை பீடிக்கும் ரோக  சிந்தனைகளிலிருந்து மீள பெரிதும் உதவி செய்யும்.

‘பக்தி, பஜனை, பாடல், துதி எல்லாம் சிறிது நேரம்தான் செய்ய முடிகிறது. மறுபடியும் இந்த உலக பிரச்சனை தலை தூக்குகிறதே’ என்று சிலர் முணுமுணுப்பதை கேட்கமுடிகிறது. அவர்கள் அடுத்த கட்டமாக பதஞ்சலி யோக சூத்ர வழிமுறைகளை முயற்சி செய்யலாம். நம் மனதைப் பற்றியும், எண்ணங்களைப் பற்றியும் ஒரு ரகசியம் யோக சூத்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நாம் எப்போதும் சிறிய விஷயங்களை கூட, தேவை இல்லாமல் பெரிது படுத்தி பார்க்கும் கற்பனை வளம் கொண்டவர்கள். நல்ல விஷயங்களை விட தீங்கான விஷயங்களை அசை போடுவது, அதனால் மனதளவில் எப்போதும் ஒரு பய நிலையில் சஞ்சரிப்பது நமக்கு கைவந்த கலை.  நம்மால் பல எண்ணங்களை உணர முடிந்தாலும், மனம் எப்போதும் ஒரு நேரத்தில் ஒரு எண்ணத்தை மட்டுமே பிரதிபலிக்கும் என்ற இந்த ரகசியத்தை புரிந்து கொள்வதால், ஒரு எண்ணத்தை மட்டும் நிலை நிறுத்தும் பயிற்சியை மேற்கொள்ளமுடியும்.

தேச பந்தஹ சித்தஸ்ய தாரண’. இது பதஞ்சலி முனி எடுத்துக்காட்டும் உண்மை. இதில் நமக்கு இதம் அளிக்கும் ஒரு நல்ல சிந்தனையை (ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு நிலையைப் பற்றியோ, ஒரு சொல்லோ, ஒரு மந்த்ரமோ) மாத்திரமே தேர்வு செய்து அதை மட்டும் திரும்ப திரும்ப பிரதிபலிக்க செய்யும்போது நம் மனத்தை அந்தச் சிந்தனையிலேயே லயிக்கச்‌ செய்யமுடியும். இதுவும் பெரிய சவால். ஆனால் பயிற்சி மற்றும் முயற்சி செய்தால் சாதிக்க முடியும். நல்ல சிந்தனைகள் நமக்கு பாதுகாப்பை தரும். நம்பிக்கையைத் தரும்.

இந்த வழியிலும் கஷ்டங்களைக் காணும் அன்பர்கள் அடுத்த வழியை முயற்சி செய்யலாம். ‘கண்ணை மூடிக்கொண்டால் பேரமைதி, திறந்தால் இந்த உலகத்துக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியும் என்கிற ஒரே சிந்தனை’. இது கர்ம யோகம். நம்மைப் போலவே மற்றவர்களையும் உணர்வது. அவர்கள் வழியாக நம்மை உணர்வது. நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்வது. அவ்ர்களை அவர்கள் சிக்கல்களிலிருந்து விடுதலை பெற உதவுவது. மனிதர்களில் தெய்வீகத்தையும், தெய்வத்தை மனித உருவில் பார்த்து ஆராதிப்பது. இதற்கு தகுந்த மனநிலை மாற்றம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது அனைவராலும் சாதிக்கக் கூடியது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நிலைகுலைந்து நின்ற அர்ஜுனனுக்கு அளித்த போதனைகளான ஞான யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் மற்றும் கர்ம யோகத்தையே இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் பொருத்தி விளக்கியுள்ளேன். இவை காலத்தால் அழியாத கருத்துக்கள். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் ஆணித்தரமான தத்துவங்கள். இந்த உண்மைகளை உணர்ந்துகொண்டால், நம்மை எந்தவிதமான பிரச்சனைகளிலிருந்தும், எந்த விதமான ரோகக் கணைகளின் தாக்கங்களிருந்தும், எப்போதும் விலக்கிக்கொள்ளும், சுலபமாக எதிர்கொள்ளும் மன மாற்றத்தை, ஒரு புதிய  அணுகுமுறையை அடைய நம்மைத் தயார் படுத்திக்கொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பு இப்போது உருவாகிவுள்ளது. இது நம்மைப் பற்றியும் நாம் பிரச்சனைகளை புரிந்துகொள்ளும் விதம் பற்றி சிந்திக்கவும், அறியாமையிலிருந்து விலகி  நம்மை பண்படுத்திக்கொள்ளவும் கிடைத்துள்ள ஒரு நல்ல ஆரம்பம். இதன் வழியாக மற்றவர்களுக்கும் நம்மால் நிச்சயமாக உதவ முடியும்.

Read, also


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • March 27, 2023
ஜோதிடம்: கோள்களும் அவற்றின் தன்மைகளும்
  • March 11, 2023
ரஜ்ஜு பொருத்தம் - திருமண வாழ்க்கை சிறக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  • January 31, 2023
ஆறுகால பூஜை