×
Monday 29th of May 2023

Nuga Best Products Wholesale

எதைத் தேடுகிறோம்? சந்தோஷமா? ஆனந்தமா?


வாழ்வில் நாம் எதைத் தேடுகிறோம்? சந்தோஷமா? ஆனந்தமா?

? நன்றி திரு. வெ. நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)

? நாம் வாழ்நாள் முழுதும் எதைத்தேடி அலைகிறோம்? யோசித்துப் பாருங்கள், எது நமது அடிப்படை, அத்தியாவசியத் தேவை என்று நினைக்கிறோம்? நல்ல வசதியான வாழ்க்கை, நல்ல குடும்பம், அமைதி, கை நிறையப் பணம், நல்ல ஆரோக்யம், நல்ல உறவுகள், வளமான சமுதாயம், உலக அமைதி இத்யாதி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது . இவற்றில் சில பொதுநலத் தேவை, சில தனிமனிதத் தேவைகள். ஆனால் நம் தேவைகளை உற்று நோக்கும்போது அடிப்படையில் நாம் தேடி அலைவதெல்லாம் நிலையான சந்தோஷம். திருப்தி. மன நிறைவு. பட்டியலில் கண்ட கனவுகளை அடைந்தால் நமக்கு நிரந்தர சந்தோஷம் கிடக்கும் என்ற நப்பாசை. சந்தோஷத்தை அடைவதற்காக பல விதமான தடங்கல்களை, கஷ்டங்களை, சோகங்களைச் சந்தித்தாலும் சந்தோஷத்தை தேடுவதை நிறுத்துவதில்லை. ஏன் சந்தோஷத்தை தேடி அலைகிறோம்? ஏனென்றால் துக்கங்களை நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதற்கு மாற்று மருந்தாக, நிவர்த்தியாக சந்தோஷத்தைத் தேடுகிறோம். இதுதான் நம் பிறப்பின் அடிப்படை இயல்பு.

? ஆனால் இந்த சந்தோஷத் தேடலில் எவ்வளவு பேர் வெற்றி அடைய முடிகிறது? உலகிலேயே அதிகமாக உழைத்து பணம் சம்பாதித்த செல்வந்தர்களாலோ, அதீத கல்வி, அதி உயர்ந்த பதவி, புகழ் பெற்றவர்களோ, அதிக மனைவிகள் குழந்தைகளைக் கொண்டவர்கள் கூட அவர்கள் சந்தோஷமாக இருப்பதாகவோ அல்லது தங்கள் சந்தோஷத் தேடல் முடிந்து விட்டதாகவோ உறுதியாக சொல்லமுடியவில்லையே? விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் வளர்ந்தாலும் காலங்காலமாக மனிதன் தான் அனுபவிக்கும் துக்கங்களைக் களையவும் முடியவில்லை, நிலையான சந்தோஷத்தையும் அடைய முடியவில்லை. ஆனாலும் இந்தத் தேடலை ஏன் விடவும்முடிவதில்லை?

? நாம் சந்தோஷத்தை எப்போதுமே வெளிஉலகில் தேடிக் கொண்டிருக்கிறோம். அது வெளியில் இல்லை, நமக்குள் இருக்கிறது. நாமேதான் அது. நிரந்தரமற்ற அற்ப சந்தோஷம் அல்ல, நிரந்தரமான பேரானந்தம் என்கிறது வேதாந்தம். நாம் சந்தோஷம் என்று எதை உண்மையில் நாடுகிறோம்? ‘விஷய இந்த்ரீய சங் யோகா’ என்று விளக்கம் அளிக்கிறது யோக சாஸ்த்ரம். நம் புலன்களும் நாம் இச்சைபடும் பொருள்களும் இணையும் போது உணரும் சுகம். இத்தகைய சுகத்தை ‘காம காஞ்சன’ என்ற இரண்டு பாதைகளில் தேடுகிறோம் என்று நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ‘காம’ என்பது இச்சை, பிரேமை, சுகம், கேளிக்கை, மோகம், ஆசை. ‘காஞ்சன’ என்பது செல்வம், குடும்பம், பதவி, அந்தஸ்து, புகழ், மரியாதை இத்யாதிகள். காம காஞ்சன பாதையில் மிக எளிதில் நமக்கு சந்தோஷம் கிடைப்பதாக எண்ணி, தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். இந்த வேட்கை போதையாக மாறுகிறது. இந்த இரண்டு பாதைகளும் நிச்சயமாக நம்மைத் தவறான இடத்துக்கு அழைத்து செல்வதோடு மட்டுமல்லாது மேலும் பல இச்சைகளைத் தூண்டுகின்றன. தாகம் அதிகமாகிறது. நம் வாழ்க்கை அனுபவங்களே இதற்கு ஆதாரம்.

? நம் எதிர்பார்ப்பு நிறைவேறுவதாகத் தெரிவதில்லை என்பதை வெகுவிரைவில் உணர்கிறோம். நாம் சேர்த்த அத்தனை செல்வங்களும், அனுபவித்த சுகங்களும் நிலையற்றவை, சந்தோஷ தாகத்தை தீர்க்கமுடியாதவை, நமக்கு பயன்படாதவை என்பதை காலம் கடந்தாவது புரிந்துகொள்கிறோம். மிஞ்சி நிற்பது என்னவோ ஏமாற்றம், சோகம், துக்கம், ரோகம், அமைதியின்மை, ஆதங்கம், பயம், பாதுகாப்பின்மை. இவைகளிலிருந்து விடுதலை பெற மீண்டும் விடை தேடி அலைகிறோம். அதில் மேலும் தவறுகளை செய்கிறோம், இன்னும் பெரிய பிரச்சனைகளில் சிக்குகிறோம். இந்தச் சக்கரம் சுழன்றுக்கொண்டே இருக்கிறது.

? சரி, சந்தோஷமோ, ஆனந்தமோ எவ்வளவு இருந்தால் திருப்தி? தங்கள் அறியாமையால் மனிதர்கள் தேடி அலையும் உலக சந்தோஷத்துக்கும், தேடி உணரவேண்டிய உண்மையான ஆனந்தத்துக்கும் உள்ள வித்யாசத்தை தைத்ரீய உபநிஷத்து அழகாக படம் பிடித்து காட்டுகிறது. இளம் வயது, அழகான தோற்றம், பலம் பொருந்திய உடல்வாகு, அளவுக்கு மீறிய கல்வி ஞானம், சர்வகலா ஞானம், ஆசையான குடும்பம், அளவுக்கு மீறிய செல்வம், மிகப் பெரிய பதவி, அதிகாரம், சமுதாய அந்தஸ்து, புகழ் ஆகியவை கொண்டு ஒரு இளைஞன் அனுபவிக்கும் சந்தோஷத்தை எண்ணிப்பாருங்கள். இதை நமக்குத் தெரியாத, இதுவரை உணராத ஆனந்தத்தின் ஒரு அளவீடு என்று வைத்துக்கொள்வோம்.

? இதைப் போல நூறு மடங்கு சந்தோஷத்தை மனுஷகந்தர்வ லோகத்தில் (சில மானுடர்கள் தங்களின் நல்ல கர்ம உபாசனைகளின் பலன்களை அனுபவிக்க கந்தர்வளாகி இந்த லோகத்துக்கு செல்கின்றனர்) வாழ்பவர்களால் அனுபவிக்கமுடியும். அதைவிட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவ கந்தர்வ லோகத்தில் வாழ்பவர்கள் அனுபவிக்கமுடியும். இதைவிட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை பித்ரு லோகத்தில் (நம் முன்னோர்கள் வாழும் லோகம்) வாழ்பவர்கள் அனுபவிக்கமுடியும். இதைவிட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை கர்ம தேவ லோகத்தில் (வேததர்ம கர்மங்களில் சிறந்தவர்கள் இங்கே செல்கின்றனர்) வாழ்பவர்கள் அனுபவிக்கமுடியும். இதைவிட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவர்களின் மந்த்ரிகளால் (வசுக்கள், ருத்ரர்கள், அதித்யர்கள்) அனுபவிக்கமுடியும். இதை விட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவர்களின் தலைவன் இந்த்ரனால் அனுபவிக்கமுடியும். அதைவிட நூறு மடங்கு சந்தோஷத்தை தேவகுருவான ப்ருஹஸ்பதியால் அனுபவிக்கமுடியும். இதைவிட நூறுமடங்கு சந்தோஷத்தை ஸ்ருஷ்டிகளின் தலைவனான ப்ரஜாபதியால் அனுபவிக்கமுடியும். அதைவிட நூறு மடங்கு சந்தோஷத்தை சிருஷ்டி செய்யும் பிரம்மதேவனால் அனுபவிக்கமுடியும்.

? ஆக, அனைத்து வகையான, மிக உயர்ந்த ஆனந்தங்களின் அளவிடக்கூடிய அளவீடு இது. ஆனால், இவையெல்லாவற்றையும் காட்டிலும், பல மடங்காக அளவிடமுடியாத பிரம்மானந்தமே, பேரானந்தமேதான் நாம். இதுவே நம் உண்மை சொரூபமான ஆத்மன் என்று நமக்கு இன்ப அதிர்ச்சியைத் தருகிறது வேதங்கள். இந்தப் பேரானந்த கடலே நாமாக இருக்கும்போது, இதை உணராமல் ஒரு சிறு துளி அளவுக்கு நம் உடல், மனம், எண்ணம் அணுகும் உலக சந்தோஷத்தைப் பெரிதாக நினைத்து அதில் நாட்டம் கொண்டு, அவைகளை அடைவதிலேயே நம் வாழ்க்கையை வீணடித்து வருகிறோம் என்றும் நம்மை பார்த்து வேதனைப்படுகிறது வேதங்கள். இரவில் ஓடும் நீரில் காணும் சந்திர பிம்பத்தை நிஜவிளக்கு என்று எண்ணி அதைத் துரத்தி விளையாடும் மீன்கள்போல, நாமும் சந்தோஷங்களை நிஜம் என்று கற்பனைசெய்துக் கொண்டு துரத்துகிறோம்.

? வேதாந்தம் நம் தவறை சுட்டிக்காட்டுவதோடு நிற்கவில்லை. இதற்கான தீர்வையும், வழிமுறைகளையும் சொல்கிறது. அடிப்படையில் நாம் மிகப் பெரிய தவறை தொடர்ந்து செய்து வருகிறோம். இது நம் உண்மை இயல்பைப் பற்றி நாம் தவறாக எண்ணிக்கொண்டிருப்பது. இது என்னுடையது, அது என்னுடையது, இந்த உடல் என்னுடையது என்று நம் இளம் வயதிலிருந்தே நம் மனதில் இந்த நிலைப்பாடு ஆரம்பிக்கிறது. இந்த உடல், உள்ளம், எண்ணம், புத்தி சேர்ந்த சிறிய மனித உருவமே ‘நாம்’ என்று நினைத்துக்கொண்டு இந்த உலகை அணுகுகிறோம். இதற்கு முக்கிய காரணம் நம் புலன்கள் அனைத்தும் வெளி உலகை நோக்கிப் பாயும் தன்மை கொண்டவை. அதனால் நம் உலகம் வெளியே என்று நம்மை நம்ப வைக்கின்றன. நமக்குள்ளே இன்னொரு உலகம், நம் உண்மையான உலகம் இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் யோசிப்பதில்லை. பழகியப் போக்கை விட்டு, நம் உண்மையான இயல்பு என்ன என்பதை ஆராய முயல்வதில்லை. நாம் உண்மையில் யார்? நமக்கும் நாம் பார்க்கும் இந்த உலகிற்கும் என்ன தொடர்பு? இந்த அடிப்படையான, உண்மையான இயல்பை உணர்வதற்கான உள்நோக்கிப் பயணித்து நம்மைப் பற்றிய உண்மையை உணருவதே ‘ஆத்மஞானம்’. இந்த உயர்நிலை ஞானத்தைப் பெற நமக்கு துணை புரிகிறது வேதாந்தம்.

? இது மிகப் பெரிய ரகசியம், நம் உண்மை இயல்பைப் பற்றி நமக்கே தெரியாமல் புதைந்து கிடக்கும் தேவரகசியம். உண்மையில் இந்த ரகசியத்தின் விடையைத் தேடித்தான், இதைதான் தேடுகிறோம் என்றுகூட தெரியாமல், சந்தோஷம் என்றோ அல்லது துக்கத்துக்கான நிவாரணமாகவோத் தேடிக்கொண்டிருக்கிறோம். தெரிந்துகொண்டு விடை தேடுவது வேதாந்தம். தெரியாமல் தேடிக்கொண்டிருப்பது சம்சாரம். கரடுமுரடான நம் வாழ்க்கைப்பயணம். ஒரு சிலரால் மட்டுமே இந்த ரகசியத்துக்கான விடையை அறிய முடிகிறது. அவர்கள் ஞானிகளாகி பெரும்பாலும் மனித சமுதாயத்தை விட்டு விலகிச் சென்றுவிடுகின்றனர்.

? நம் அடிப்படை இயல்பே ஆனந்த ஸ்வரூபம்தான் என்று வேதாந்தம் ஆணித்தரமாகக் கூறுகிறது. அளவிடமுடியாத, எல்லையேயில்லாத, உணர்வுகளுக்கெல்லாம் உணர்வான, நிலையான, அனைத்தையும் கடந்த பேரானந்த ஸ்வரூபம்தான் உண்மையான ‘நாம்’. அருவமான ஆத்மன். சத் சித் ஆனந்தம். தெய்வீகம். இது ஒன்றே இந்த உலகில் உண்மையானது, நிலையானது. நம் உடல் புலன்கள் வழியாக நாம் அனுபவிக்கும் இந்த உலகம் (நம் உடலும் சேர்த்து) அவ்வப்போது தோன்றி மறையும் வெறும் தோற்றமே. கண்களால் பார்க்கும் இந்த உலகம் கண்களை மூடிக்கொண்டால் காணாமல் போகிறது.

? ஒரு சினிமா பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். திரையில் நாம் பார்க்கும் உருவங்கள் அனைத்தும் நிஜமாகவேத் தோன்றுகிறது. அவைகளை வெறும் ஒளிபிம்பங்கள் என்று எண்ணுவதில்லை. பிம்பங்களே உண்மையான மனிதர்கள் என்று அவர்களை நாமாகவே பார்க்கிறோம். அவர்கள் சிரித்தால் சிரிக்கிறோம், அழுதால் அழுகிறோம், அடித்தால் கைதட்டுகிறோம். காட்சி முடிந்ததும் எல்லாம் மறைந்துபோகிறது. திரை ஒன்றே நிஜமாக நிற்கிறது. காட்சி தெரியும்போது திரை தெரிவதில்லை, திரையை உணரும்போது காட்சி வெறும் பிம்பங்களே என்ற உண்மை புரிகிறது. பிம்பங்கள் திரையைச் சார்ந்தே உள்ளன. ஆனால் பிம்பங்களால் திரைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது போல நாம் காணும் இந்த உலகம் நம் மனத்திரையில் தெரியும் அனுபவ பிம்பங்கள். ஆனால் நம் புலன்கள் இந்த அனுபவத் தோற்றங்களை நிஜம் என்று தவறாக நினைத்து, அவைகளிலேயே நாட்டம் கொள்கிறது.

? தூக்கத்தில் நம் மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் எப்படி விழிப்பு ஏற்பட்டதும் காணாமல் போகிறதோ அதுபோல விழித்திருக்கும் நிலையிலும் நாம் காணும் தோற்றங்கள், தூங்கும்போது காணாமல் போகிறது. நம் அனுபவங்களில் மறைந்துள்ள உண்மையை உணரும் தன்மையை, வளர்த்துக்கொள்வதே ஆன்மீகம். ஒரு அன்னப்பட்சி எப்படி பாலையும் நீரையும் பிரித்து பாலைமட்டும் பருகிறதோ அதுபோல நாம் நம் புலன்கள் வழியாகப் பெரும் அனைத்து அனுபவங்களையும் பகுத்து, திரை வேறு, பிம்பங்கள் வேறு என்ற உண்மையை உணருவதே வேதாந்தம் சொல்லும் வழி. இது உலகைத் துறப்பதல்ல. உலகம் நம் திரையில் நாம் காணும் காட்சி. நமக்கும் காட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. காட்சி பிம்பங்களோடு ஒன்றிப்போகாமல், வெறுமனே கேளிக்கை தரும் காட்சியாகவே ரசிக்கப்படும்போது அவை நம்மை பாதிப்பதில்லை.

? இதனால் என்ன பலன்? தற்போது நம்முடைய அறியாமையால், கற்பனையால், தோற்றங்களை நிஜம் என்று தவறாக நினத்துக்கொண்டு, புலன்கள் வழியாக இந்த உடல் அனுபவிக்கும் அனைத்து சுக துக்கங்களையும் ‘நம்முடையது’ என்று ஏற்றுக்கொண்டு அவதியுறுகிறோம். கடோபநிஷத்து இந்த உடலை ஒரு ரதமாகவும், உண்மையான நாம் (ஆத்மன்) அதில் பயணிக்கும் ஒரு பயணி என்றும் வருணிக்கிறது. ஆத்மனை உணராதபோது பயணியும் ரதமும் ஒன்றே என்று எண்ணி, ரதம் சந்திக்கும் சுக, துக்க அனுபவங்கள் அனைத்தும் பயணியுடையது என்று ஏற்றுக்கொண்டு கலங்குகிறோம். ரதம் வேறு, பயணிக்கும் உண்மையான நாம் வேறு என்று உணரும்போது, ஒரு பெரிய பாரம் நம்மை விட்டு விலகுகிறது.

? சுகங்களும் துக்கங்களும் இந்த உலகப் பாதையில் ரதம் சந்திக்கும் பிரச்சனைகள். அவைகளைப் பற்றிக் கவலை கொள்ளக்கூடாது என்று சொல்ல வரவில்லை. நாம் பயன்படுத்தும் வாகனங்கள் பழுது அடைந்துவிட்டால் அதை சரி செய்கிறோம். எதற்காக? அவை நமக்கு உதவி செய்யும் கருவிகள். பாராமரிப்பு, சீர் செய்யாவிட்டால் நமக்கு தேவையான சமயத்தில் உபயோகப்படாமல் போகலாம். அதற்காக இந்த கருவிகளே நாம்தான் என்று எப்போதாவது நாம் யோசிக்கிறோமா? ஆனால் நாம் பயன்படுத்தும் உடல், உள்ளம், எண்ணக் கலவையான இந்தக் கருவியை மாத்திரம்தான் குழப்பத்துடன் அணுகுகிறோம். சில நேரங்களில் என்னுடைய உடல் என்கிறோம், சில நேரங்களில் இந்த உடலே நாம்தான் என்கிறோம். இந்த அடிப்படைக் குழப்பம் தீரும்போது, கருவி எது, எஜமானன் யார் வித்யாசம் தெரியும். கருவியின் பிரச்சனைகளை எஜமானன் ஏன் ஏற்றுக்கொண்டு அவதியுறவேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.

? இந்தத் தெளிவே அனைத்து துக்கங்களிலிருந்தும், சந்தோஷங்களிலிருந்தும் நம்மை விலகி நிற்கச் செய்யும். இந்த அறியாமையிலிருந்து விடுதலை அடையும்போது, பரப்ரம்ம ஸ்வரூபமான, சதா பிரம்மானந்த நிலையில் சஞ்சரிக்கும் தெய்வப் பிறவி நாம் என்பதை உணரமுடியும். பிறப்பு, இறப்பை அனுபவிப்பது உடல். ஆனால் ஆத்மனுக்கு அழிவே இல்லை. இந்த நிலையை வேதாந்தம் ‘மோட்சம்’, ‘ஜீவன் முக்தி’ என்கிறது. வாழும்போதே புலன் அனுபங்களிலிருந்து விடுதலை. ஜென்ம ஸாபல்யம். அடிப்படையில் மனித உருவில், அருவமாக சஞ்சரிக்கும் தெய்வீகப் பிறவிகள் நாம். ஆனால் நாமோ சாதாரண மனிதர்களாக நம்மை கற்பனை செய்துகொண்டு, தெய்வீகத்தை தேடி அலைகிறோம் என்கிற நம் தவறு புரியும்.

? இந்த தெய்வீக நிலையை சதா உணர்வதே ஆனந்தம். பேரானந்தம். முடிவு இல்லாதது (அனந்தம்). பரந்து விரிந்தது. எல்லையில்லாதது. இந்த பேரானந்தத்தை சதா உணர்ந்து அதிலேயே திளைக்கும் திவ்யநிலையே, சத் சித் ஆனந்த நிலை. இதுவே அனந்த நிலை, ‘கோடி’ நிலை. ‘தத் த்வம் அஸி’ என்ற வேத உண்மையை பிரகடணப்படுத்தும் நிலை. அற்ப சந்தோஷங்களை தேடி அல்லல்படுவதை விடுத்து உண்மையான எல்லையில்லாத ஆனந்தத்தை உணர்ந்து இறப்பை வெல்வதே நம் பிறப்பின் காரணமாக இருக்கவேண்டும்.

? இந்த கோடி தத்துவங்களை ஓரளவுக்குப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் இவை நம் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் எப்படி சாத்தியம் என்று பலர் கேட்கலாம். வேதாந்தம் பல வழிமுறைகளை சொல்கிறது. முதலில் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, முனைப்புடன் கடுமையான பயிற்சியில் இறங்கவேண்டும். வெற்றி கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். முன் காலத்தில் இதற்காக குருகுலங்கள் இருந்தன. காலப்போக்கில் அவை மறந்துவிட்டன. தற்போது சொல்லிதரவும் சரியான குருமார்கள் இல்லை. கற்றுக்கொள்ளவும் நமக்கு ஆர்வமோ நேரமோ இல்லை.

? இந்தக் குறையை நீக்கவே, மிக எளிமையாக வகையில் மக்களுக்கு வேதாந்த தத்துவங்களை நேரடியாக உணர்த்தும் வகையில் உருவாகியுள்ள புண்ணியத் தலமே வேலூர் மாவட்டம் (தற்போது திருப்பத்தூர் மாவட்டம்) ஆம்பூர் அருகில் உள்ள சென்னப்பமலை. 1600 ஆண்டுகளாக தக்ஷிண கைலாயமாக போற்றப்பட்டு வரும் இந்த திவ்யப்ரதேசத்தில் உலகின் 13வது ஜோதிர்லிங்கம் உத்பவித்துள்ளது. இங்கே ஐக்கியம் கொண்டு இருக்கிறார் அருவநிலையில் சஞ்சரிக்கும் பிரம்மகுரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கோடிதாத்தாஸ்வாமிகள். ஆதி அந்தம் இல்லாதவர், காலத்தைக் கடந்தவர். காணற்கரிய குரு. அருவநிலையில் இருக்கும் இந்த குரு, கூடுவிட்டு கூடு பாயும் சித்தாந்தக் கலை வழியாக தன் சீடன் உடலில் உருவம் கொண்டு, சீடனே குருவாகிறார். தன்னையே உதாரணமாக்கி (அவர் உண்மை ஸ்வரூபம் வேறு, அவர் பயன்படுத்தும் உடல் வெறு) என்ற உண்மையை புரியவைத்து தன்னை நாடி வரும் அன்பர்கள் கோடி நலம் பெற ஆசீர்வதிக்கிறார். இந்தக் கோடி ஆசீர்வாதமே நாம் தேடி அடையத் துடிக்கும் பரமானந்த பிராப்தி, அனைத்து துக்க நிவர்த்தி. இதுவே ஜென்ம ஸாபல்யம். நாம் கேட்டிராத, அனுபவித்திராத அதிசயம். இந்த ரகசியத்தை உணர்ந்த அன்பர்கள் பலர் தங்கள் இன்னல்கள் தீர்ந்த விதம் தெரியாது திகைத்து நிற்பதும், சிலர் அமைதியும், ஆனந்தமும் பொங்க தங்கள் புதிய ஆன்மிக அனுபவங்களை விவரித்து வியப்பதும் இந்தப் புண்ணியத் தலத்தில், அன்றாடம் நாம் காணும் சாதாரண நிகழ்வு.

Also, read


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • March 27, 2023
ஜோதிடம்: கோள்களும் அவற்றின் தன்மைகளும்
  • March 11, 2023
ரஜ்ஜு பொருத்தம் - திருமண வாழ்க்கை சிறக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  • January 31, 2023
ஆறுகால பூஜை