Idols made by Athi Tree – அத்தி மரத்தால் ஆன தெய்வச் சிலைகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் அம்மன் முழு உருவச்சிலை அத்தி மரத்தால் ஆனது.
உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது.
சேலம் சின்னகடை வீதியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் (பட்டை கோயில்), அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதர்.
செங்கழுநீர் அம்மன் கோவில் – இந்த பழமையான அத்தி மர செங்கழுநீர் அம்மன் கோவில்: வீராம்பட்டினம் கிராமம், புதுச்சேரியில் உள்ளது. இவற்றிற்கும் ஒரு கதை உள்ளது வீரராகவர் என்ற மீனவர் செங்கழுநீர் ஓடைக்குச் சென்று மீன் பிடிப்பதற்காக வலையை வீசினார். அப்பொழுது உருண்டையான மரக்கட்டை கிட்டியது. அவற்றை வெட்டும் பொழுது ரத்தம் வந்ததாகவும் கூறப்படுகிறது. அன்றே அவர் கனவில் அம்மன் தோன்றி அவரிடம் “பக்தனே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெய்வீகம் பெற்ற பராசக்தியின் அம்சம் நான் இந்த பகுதி மக்கள் செய்த தவத்தின் பயனாக இங்குக் கோயில் கொண்டு அருள் வழங்க வந்துள்ளேன். என் வருகையின் அடையாளமே, உன்னிடம் உள்ள அத்தி மரத்துண்டு. எனவே நான் குறிப்பிடும் இடத்தில் அந்த மரத்துண்டைப் பீடமாக ஸ்தாபித்து, அதன்மேல் என் திருவுருவை விக்கிரகமாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, மேலும் என்னைச் செங்கழுநீர் அம்மன் என்று அழையுங்கள்” என்று கூறிவிட்டு அன்னை மறைந்தாள். பிறகு அந்த கோவில் சிறப்புற விழாக்கள் நடைபெறுகிறது. இங்கு ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் முதலே கவர்னர் தேர் திருவிழாவில் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தார் என்று கூறப்படுகிறது. கடலில் பெற்றதால் சுக்கிரன், சந்திரன் தோஷம் உள்ளவர்கள் இந்த கடவுளை வணங்கலாம். இந்த அம்மன் எல்லாவளமும் தருபவளாக அத்தியில் அமர்ந்து இருக்கிறாள்.
திருமலை (திருப்பதி) தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளி உள்ளார்.
வானமுட்டிப் பெருமாள் ஆலயம், மயிலாடுதுறை கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாள். 15 அடி அழகான உயரமான பெருமாள் கைகளில் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஏந்தி மார்பில் மகாலட்சுமி விளங்கச் சேவை சாதிக்கிறார். பெருமாள் விஸ்வரூபமாக இருந்தார். குடகுமலை அரசன் தன் பாவங்களால் ஏற்பட்ட குட்ட நோயினை இந்த ஆலயத்தில் உள்ள மகரிஷி தீர்த்தத்தில் குளித்து வானமுட்டிப் அத்தி பெருமாளைத் தரிசித்து, பாவ விமோசனம் பெற்றார். கோடி பாவம் தொலைந்த காரணத்தால் இவ்வூர் கோடி ஹத்தி என்று பெயர் பெற்றது. அதுவே இன்று கோழிகுத்தி பெருமாள் என்று மறுவியது. தன் நோயும், வினையும் நீங்கிய மன்னன் மனமகிழ்ந்தார். அத்தி மரத்தால் செய்யப்பட்ட ஸ்ரீனிவாசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இன்னும் பல பாவ விமோசன கதைகள் இங்குக் கூறப்படுகிறது.
புதனால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் இங்கு நீராடினால் சரும நோய்கள் விலகும், தடைகள் தொலையும் என்பது நம்பிக்கை. சுகாதிபதி சுக்கிரனால் மற்றும் கர்ம காரகன் சனீஸ்வரனால் பீடிக்கப்பட்டவர்கள் இங்கு விமோசனம் அடைந்துவிடுவார்கள் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தின் மூலவர் அத்திபெருமாள் விஸ்வரூபமாக இருந்ததால் ‘வானமுட்டிப் பெருமாள்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். இக்கிராமத்தின் இயற்பெயர் ‘பாப விமோசனபுரம்’ என்பதாகும்.
அத்தி, ஆறாவது கிரகமான சுக்ரனின் அம்சமாகக் கருதப்படுகிறது. வேலூரை அடுத்த பொன்னை, விநாயகபுரத்தில் நவக்கிரகங்களுக்கு ஒன்பது வகையான கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன. இது ஸ்ரீ நவக்கிரக கோட்டை ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுக்ரனை வணங்குவதற்காக அத்தி மரமும் நடப்பட்டுள்ளது. அசுர குரு சுக்ராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம்.
தமிழ்நாட்டின் பழைமையான இந்துக் கோயில்களில் அத்தி சிலைகள் ஒரு மாசு மருவில்லாத புனிதமான மரமாகக் விளங்குகிறது. அத்தி மரத்தில் கடவுள் சிலை வடிப்பதை சைவ, மற்றும் வைணவ ஆகமங்கள் அனுமதிக்கின்றன.
அத்தி மர அற்புத சக்தி அதர்வண வேதத்தில் ஒரு பகுதியில் கூறப்பட்டுள்ளது. அரிச்சந்திரன் தனக்குக் கிரீடமும் மற்றும் சிம்மாசனமும் அத்தி மரத்தில் செய்ததாகக் கூறப்படுகிறது. பழம்பெரும் காலங்களில் நம் முன்னோர்கள் அத்தி மரத்தில் தாயத்து செய்து கழுத்தில் போட்டுக்கொண்டனர். இவை அனைத்தும் ஒரு சுகபோகம் பெற என்பது ஒரு சூட்சமம். அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாது என்பது போல சுக்ராச்சாரி மறைந்து நின்று தாக்கக்கூடியவர்.
மும்மூர்த்திகளின் ஒரே வடிவமாக பார்க்கப்படும் தத்தாத்ரேயர், அத்தி மரத்திலே வாசம் செய்வதாக குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு இன்றி வாழவும், கடைசி வரை பிரியாமல் இருப்பதற்கும், வீட்டில் அத்தி மரம் நட்டு வைத்து பராமரித்து வருவது நல்லது என்பது ஐதீகம்.
அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. எனவே அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தவம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல், எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமோ, அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்..