- August 8, 2024
உள்ளடக்கம்
உலகத்திலேயே அதிசய ஸ்தலம் ஒன்று உண்டென்றால் அது வேலூர் மாவட்டம் (தற்போது திருப்பத்தூர் மாவட்டம்) ஆம்பூர் அடுத்த சென்னப்பமலையாகத்தான் இருக்க வேண்டும். இது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு முன், அதிசயம் என்று எதைச் சொல்கிறோம்? ஆச்சர்யப்பட வைக்கும், பிரமிக்க வைக்கும், அல்லது புரிந்து கொள்ள முடியாத எதுவும் அதிசயம். உலகில் சில இடங்களை, கட்டிடங்களை ஏழு அதிசயங்கள் என்று ஏற்றுக்கொண்டுள்ளோம். இவைகள் அனைத்தையும் காட்டிலும் நம்மை அதிக அளவில் பிரமிக்கவைக்கும் ஸ்தலம் சென்னப்பமலை. இதற்குக் காரணம் இருக்கிறது.
சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்னரே நிர்மாணம் செய்யப்பட்டு தென்கயிலாயம் என்று தெய்வீக மணத்தோடு போற்றபட்டு வந்த இந்தப் புண்ணியஸ்தலத்தில் தற்போது நாம் காணும் மூன்று விஷயங்கள் இதுவரை நாம் பார்த்திராதவை, கேள்விப் படாதவை. வேத சாஸ்த்ரங்களிலும் புராணங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ள ‘கூடு விட்டு கூடு பாயும்’ தெய்வீகக் கலையை பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் எங்கும், யாரும் இந்தக் கலையயை நிகழ்த்திக்காட்டி பார்த்ததில்லை. இந்த அதிசயத்தை இங்கே நேரிலேயே பார்க்கலாம். இத் திருத்தலத்தில் ஐக்கியம் கொண்டுள்ள அருவ ரூபத்தில் சஞ்சரிக்கும் அதிசய குருவும், தன் உடலையே தன் குருவுக்கு தியாகம் செய்யும் அதிசய சீடனும் இதை நடத்திக் காட்டுகின்றனர்.
இதுவரை நாம் இத்தகைய ஒரு குருவை சந்திருக்க முடியாது. இவருக்கு உருவம் இல்லை, பெயரில்லை, வயதில்லை, பசி, உறக்கம், இரவு பகல் எதுவும் இல்லை. பஞ்சபூதங்களை தன் கட்டுக்குள் இருத்தி, கூடு விட்டு கூடு பாயும் தெய்வீகக் கலையைப் பயன்படுத்தி, சித்தனே சிவமாகி, குருவாகி தன் சீடன் ஸ்ரீ ராமாநாத ஸ்வாமிகள் உடலில் ஐக்கியம் கொண்டு, கோடிகுருவாக, பிரம்மகுருவாக உருவம் பெற்று தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு கோடி நலம் தரும் ஆசீர்வாத தீட்சை அளித்துவருகிறார். இந்த ஆசீர்வாதம் நம் குறைகளைத் தீர்க்கிறது. நம் உடலையும், உள்ளத்தையும் எண்ணத்தையும் தூய்மைப் படுத்திப் பாதுகாக்கிறது. பயத்தைப் போக்குகிறது. நம்பிக்கையும் தைர்யத்தையும் தருகிறது. சீரான வாழ்க்கைக்கு துணையாக வருகிறது. நாடி வருவோற்கு கோடி நலம் குவிக்கிறது. புதிய சக்திபலம் கிடைக்கிறது.
தமிழ் வரலாற்றில் கூடு விட்டு கூடு பாயும் தெய்வீகக் கலையை பற்றி பெரும்பாலான ஆன்மிக நூல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ‘திருத்தொண்டர் புராணசாரமும்’, ‘திருத்தொண்டர் திருவந்தாதியும்’, அகஸ்தியரின் ‘செளமிய சாஹரம்’ போன்ற நூல்கள் சித்தர் திருமூலர் எவ்வாறு இந்தக் கலையைப் பயன்படுத்தி இறந்து போன மூலன் என்கிற மாடு மேய்ப்பவன் உடலில் ஐக்யம் கொண்டு, அவன் மேய்த்து வந்த பசுக்களை பாத்திரமாக கொண்டு சேர்த்தார் என்பதைப்பற்றி எடுத்துக்கூறுகின்றன. அகஸ்தியரின் சீடராகக் கருத்தபடும் காகபுஜங்கர் தன் உடலை ஒரு மர போந்தில் மறைத்துவைத்து ஒரு காக்கை வடிவில் சஞ்சரித்ததாகவும் பல நன்மைகள் செய்ததாகவும் இன்னொரு வரலாறு கூறுகிறது.
இதுபோல கூடு விட்டு கூடு பாயும் பல சித்தர்களை நம் முன்னோர்கள் நேரில் கண்டுள்ளனர். அவர்களைப் பற்றிய தங்களின் நேரடி அனுபவங்களை சரித்திரத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த காலத்தில் இது போல தெய்வீக நிகழ்வுகள் சாத்தியமா? என்று மலைத்து நிற்கும் அன்பர்களுக்கு, இந்த தெய்வீகக் கலையை மீண்டும் அறிமுகப்படுத்தி, நிகழ்த்திக்காட்டி, அதன் பலனை மனிதகுலமும், இந்த வையாகமும் பெற்றுய்ய சென்னப்பமலை திருத்தலத்தில் அவதரித்துள்ளார் மஹாசித்தர் ஸ்ரீ கோடிதாத்தா ஸ்வாமி அவர்கள். இது மக்களாக சூட்டிய பெயர். கோடி என்பது எண்ணிக்கை அல்ல. கோடி என்பது அனந்தம். அளவற்றது, எல்லைகளற்றது, முடிவில்லாதது. தேச, கால, வஸ்து வரம்புகள் இல்லாதது.
இந்த குரு இந்த மூன்று வரம்பு நியதிகளைக் கடந்தவர். அனந்தமானவர். எங்கும் வியாபித்து இருப்பவர். நிரந்தரமானவர், பரம்பொருளானவர். இவரை போல இந்த உலகில் இன்னொருவர் இல்லை. இந்தத் தத்வத்தை உணர்த்த வந்த குரு இவர். அதனால் இவர் கோடி குரு.
‘தா’, ‘அதா’ என்கிற இரண்டு சொல்களின் சங்கமமே ‘தாத்தா’ என்கிற வார்த்தை. சம்ஸ்க்ருத மொழியில் ‘தா’ என்றால் ‘இங்கே’ இப்போதே’ என்று அர்த்தம். அதா என்றால் மங்களம், புனிதம், பவித்ரம் என்று அர்த்தம். அதாவது, இங்கே இப்போதே மங்களத்தையும், புனிதத்தையும் பவித்ரத்தைதும் அள்ளி வழங்குபவர். இதனால் இவரால் எதுவும், எங்கும், எப்போதும் நல்லதாக மாறும். அவரை தரிசிப்பதே நல்ல காலம். பார்த்தாலே பரவசம், நினைத்தாலே நிம்மதி. ஆசீர்வாதம் பெறுவதே ஜென்ம ஸாபல்யம். ஆக, அனைத்தையும் கடந்து, பரம்பொருளாக, நிரந்தரமாகவும், ஞானத்துவமாக நிலைகொண்டு, நாடி வரும் அனைவருக்கும், எப்போதும் மங்களத்தையும் புனிதத்தையும் பவித்ரத்தையும் அள்ளி வழங்கும் அதிசய குரு இவர். சத்யம், ஞானம் அனந்தம் பரப்பிரம்மம் இவர். வேதங்கள் சொல்லும் ரகசியமும் இவரே, அவைகளின் விடையும் இவரே.
மஹாசித்தர் ஸ்ரீ கோடி ஸ்வாமிகள், சென்னப்பமலையில் ஐக்கியம் கொள்வதற்கு முன்னர் இன்னொரு உடலில் கோயம்புத்தூர் அருகில் உள்ள புரவிப்பாளயம் ஜாமீன் மாளிகையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை நாடி வந்த அன்பர்களுக்கு தன் ஆசீர்வாததால் மட்டுமே அவர்களின் குறை நீக்கி அருள் புரிந்து வந்தார். அதற்கு முன்னர் இன்னொரு உடலில் ஸ்ரீலங்காவில் கடைக்கோடி ஸ்வாமி என்ற பெயரில் வலம் வந்துக்கொண்டிருந்தார். அதற்கும் முன்னர் இவர் ஐரோப்பிய நாடுகளில் இருந்ததாக சில சரித்திரப் பதிவுகள் அடையாளம் காணுகின்றன. தற்போது உலகில் வேறு எங்கும் காண முடியாத இந்த தெய்வீக சங்கிலித் தொடர் நிகழ்வு பற்றிய முழு விவரங்களை தேடும் வகையிலும், இவரின் முழுப் பரிமாணத்தை புரிந்து கொள்ளும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இப்போது இங்கே கோடிதாத்தா ஸ்வாமிகளாக உருவம் பெற்று ஆன்மிகக்கோலோச்சி வருகிறார்.
வேத சாஸ்த்ர ரகஸ்யங்கங்களுக்கு விடை அளிக்கவும் மக்களை நல்லொழுக்க பாதையில் இட்டுசெல்லும் இறைப்பணியை, தன்னலமின்றி, இலவசமாக, ஜாதி மத பேதமின்றி தன்னை நாடி வரும் அனைத்து தரப்பு அன்பர்களும் ஆனந்தம், ஆரோக்யம் ஐஸ்வர்ய பிராப்தி பெற ஆசீர்வதிக்கிறார். இவரின் ஆசீர்வாதமே இங்கு பிரதானம். அதுவே அனைத்து இன்னல்களுக்கும் இறுதி தீர்வு. எங்குமே காண முடியாத இந்த அதிசயம் இங்கு மட்டுமே நிகழ்கிறது. இந்த அனுபவங்களை பெற்ற ஆயிரக்கணக்கான அன்பர்கள் இந்த உண்மையை உறுதிபடுத்துகிறார்கள்.
புரவிப்பாளயத்தில் இவரின் அருள் வெள்ளத்தில் பலன் அடைந்த பலர், 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் இந்த குருவின் தேஹசித்திக்குப் பின் இவரை தரிசிக்க முடியாது என்று தோய்ந்து போயிருக்கும் நிலையில், இவரின் ஆன்மீகப் பயணம் இன்னொரு அவதாரமாக புதியதொரு சரித்திரம் படைக்க இங்கே சென்னப்பமலையில் தொடர்கிறது என்கிற நல்ல செய்தி அறிந்து கொள்ள இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.
புராண, இதிஹாச காலங்களில் இருந்த ரிஷிகளும், ஞானிகளும் தங்களை உணர்ந்ததாலும், தங்கள் தவ வலிமையாலும் பரமன் அளித்த வேதசாஸ்திரங்களை கிரகித்து சூத்திரங்களாகப் பதிவுசெய்தனர். காலங்கள் கடந்து அவர்களது வழியில் வந்த சீடர்கள் சிலர் இந்த சூத்திரங்களுக்கு தங்களுக்குப் புலப்படும் வகையில் விளக்கம் அளித்தனர். இந்த வேதாந்த சித்தாந்தங்கள் உபநிஷத்துக்களாக வெளி உலகிற்கு அறிமுகம் ஆனது. இந்த சித்தாந்தங்களை ஓரளவு உணர்ந்தவர்கள் குருகுலங்கள் வழியாக மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் கற்றுத் தந்தனர்.
வழிவழியாக ஞானப்பெருக்கு நடந்தேறிவந்தபோதிலும், இந்தத் தத்துவங்களை உணரும் பாக்கியசாலிகள் என்னவோ மிகக் குறைவு. சித்தத்தை உணர்ந்த சில ஆச்சார்யார்கள் தாங்கள் உணர்ந்ததை எழுத்து வடிவில் விளக்க நூல்களாக எழுதி மனித சமுதாயத்துக்கு ஒரு பெரிய சேவை செய்து சென்றனர். மற்றும் சிலர் இந்த நூல்களின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல மடங்களையும் குரு குலங்களையும் நிறுவிச் சென்றனர். பெரும்பாலோர் அனைத்தையும் துறந்து மறைந்தும் விட்டவர்கள்.
தான் உணர்ந்த சித்தத்தை, பிரம்மஞானத்தை நேரடியாக மற்றவர்களுக்கு நேரடியாக அளித்து ஷிவக்யான ஜீவ சேவையில் முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பிரம்மகுருவை இதுவரை மனித சமுதாயம் சந்தித்ததில்லை. மனித சரித்திரத்திலே இதுவரை நடந்திராத ஒரு அதிசய நிகழ்வு இங்கே நடக்கிறது. முன் காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி, இந்த குருவைப் போல யாரும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை. அத்தகைய ஒரு மஹானை, பாமரர்களானான நாம் நம் வாழ்க்கையில் சந்திருப்போமா? இத்தகைய ஒரு அதிசயத்தைத்தான் இங்கே நாம் கடந்த 26 ஆண்டுகளாக சென்னப்பமலையில் காண்கிறோம்.
இரண்டாவது அதிசயம் இங்கே உருவாகியுள்ள புதிய குரு-சிஷ்ய பாரம்பர்யம். புராண காலங்களிலும், சமீபத்ய சரித்திரங்களிலும் சொல்லபட்டுள்ள குரு- சிஷ்யன் கதைகள் பல கேள்விபட்டு வியந்துள்ளோம். ஆனால் கடந்த 26 ஆண்டுகளாக சென்னப்பமலையில் நடந்தேறிவரும் இந்த குரு-சிஷ்ய காவியம் விசித்திரமானது, வித்தியாசமானது, விந்தையானது, புதுமையானது. இதுவரை இந்தப் பூவுலகமே கண்டிராத ஒரு பேரதிசயம். இங்கே சிஷ்யன் ஸ்ரீ ராமநாதஸ்வாமி அவர்கள் தன் குரு ஸ்ரீ கோடிதாத்தாஸ்வாமிகள் அவர்களுக்காக தன்னையே, தன் வாழ்க்கையையே, தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தானம் தந்து ஒரு புதிய குரு-சிஷ்ய சகாப்தத்தை உருவாக்கி வருகிறார்.
இந்த சிஷ்யனுக்கோ பாரம்பரியமுறைக் வேதகல்வியை அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லை. சாதாரண ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான ஸ்ரீ ராமநாதஸ்வாமிக்கு ஆன்மீகப் பயிற்சியும் இல்லை. ஏட்டு கல்வியும் இல்லை, வாழ்க்கை கல்வி மட்டுமே. ஆனால் ஒரு மஹாகுரு அவருக்குக் குருவானார். இது கிடைக்கரிய தெய்வசங்கல்பம். யாருக்குமே கிடக்காத ஒரு வாய்ப்பு. தன் குருவிடமிருந்து நேரடியாக பெற்றதோ பிரம்மஞான, பிரம்மதீட்க்ஷையும் உபதேசமும்.
இதற்கு குரு காணிக்கை என்ன தெரியுமா? தன் உடல் பொருள் ஆவி, வாழ்க்கை அனைத்தையுமே இந்த சிஷ்யன் தன் குருவுக்கு காணிக்கையாக்கும் பெரிய அதிசயம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் எங்கயுமே சொல்லப்படாத, பதிவுசெய்யப்படாத ஒரு மிகப் பெரிய தெய்வீக நிகழ்வு சென்னப்பமலைத் திருத்தலத்தில் நடந்தேறி ஒரு புதிய சரித்திரத்தை, ஒரு புதிய புராணத்தை உருவாக்கிவருகிறது.
மூன்றாவது அதிசயம் இங்கே உத்பவித்துள்ள ஜோதிர்லிங்கம். இந்த யுகத்தின் மிகப் பெரிய அதிசயம் இது. ஜோதிர்லிங்கங்கள் உயிரினங்களில் ஒளிந்து இருக்கும் இறைநிலையை பிரகடனப்படுத்துபவை. ஆத்மபோதனை அளிப்பவை. வேதாந்த பிரம்ம தத்துவத்தை உணர்த்துபவை. விஞ்ஞான மெய்ஞான ரகசியங்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கும் எளிய பக்தி சாதனங்கள். நாடி வந்தோருக்கு கோடி நலம் வழங்கும் அற்புத அமைப்பு இவை. வணங்குபவர்களுக்கு துக்க நிவர்த்தி, பூஜிப்பவர்களுக்கு சாபவிமோசனம், உணர்பவர்களுக்கு ஜென்ம சாபல்யம் அளிப்பவை.
பல யுகங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமனால் ராமலிங்கேஸ்வரர் ஜோதிர்லிங்கம் உருவாகியது. இங்கே சென்னப்பமலையில் பிரம்ம குரு கோடி தாத்தா சுவாமிகளால் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீ பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர்ஜோதிர்லிங்கம் உத்பவித்தது. பல்வேறு யுகங்களில் இந்தியாவில் இதுவரை 12 ஜோதிர்லிங்கங்கள் உத்பவித்துள்ளன. தொடர்ந்து வரும் உத்பவ வரிசையில் ஸ்ரீ சூர்யநந்தீஸ்வரர் ஜோதிர்லிங்கம் பதின்மூன்றாவது. இது தமிழ்நாட்டின் இரண்டாவது ஜோதிர்லிங்கம் ஆகும்.
குறைகளை மட்டும் களைய நினைப்பவர்களுக்கு பிரம்மகுரு ஸ்ரீ கோடிதாத்தா ஸ்வாமிகளின் ஆசீர்வாதமே போதும். இது அவர்களுக்கு புதிய சக்திபலம் கிடைக்கச் செய்கிறது. பக்தி மார்கத்தில் விடை தேடும் அன்பர்களுக்கு பிரம்மகுருவே ஜோதிர்லிங்க ரூபமாக ஆசீர்வதிக்கிறார். உண்மையை அறியவும் தன்னைப் படைத்தவனை தேடி வரும் அன்பர்களுக்கு தன் ஞானத் தழல் கொண்டு முக்தி பிராப்தம் அளிக்கிறார் இந்த குரு. ஆக, ஒரே இடத்தில் சக்தியை தேடுவோருக்கு சக்தியையும், பக்தியைத் தேடுவோருக்கு பக்திபலனையும் முக்தியைத் தேடுவோருக்கு முக்தியையும் அளிக்கும் அதிசய குருவை வேறு எங்கும் காணமுடியாது.
இப்போது புரிகிறதா, சென்னப்பமலையைக் காட்டிலும் அதிசயமான ஸ்தலம் இந்த உலகில் வேறு எங்கு இருக்கமுடியும்? இத்தகைய அதிசய குரு சென்னப்பமலைத் திருத்தலத்தில் ஐக்கியம் கொண்ட திருநாளாக அக்டோபர் மாதம் 11ஆம் நாள் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படுகிறது. பக்தர்களும், சென்னப்பமலை சுற்றுவட்டார கிராம மக்களும் தங்களை காத்துவரும் குருவுக்கு நன்றிகடனை செலுத்தும் நிகழ்வாக இதை குருபூஜை வைபவமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
Also, read: Karana Vinayagar Temple History in Tamil – காரண விநாயகர் திருக்கோவில், மத்தம்பாளையம்
நல்ல ஆன்மீக பதிவு
Excellent