- September 14, 2024
உள்ளடக்கம்
நாச்சியார் கோவில் என்ற தலத்தில் ஸ்ரீவஞ்சுளவல்லி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவிலில் கருடசேவை மிகவும் சிறப்பானது.
கும்பகோணத்திற்கு அருகில் ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ள நாச்சியார் கோவில் என்ற தலத்தில் ஸ்ரீவஞ்சுளவல்லி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் கொண்டுள்ளார். இங்கு கம்பீரமாக கல்கருடன் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இப்படி கருடாழ்வாருக்கு தனி சன்னதி நாச்சியார் கோவிலில் மட்டுமே உள்ளது.
இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருக்கும் கருடன் திருக்கல்யாணம் செய்து வைத்தார் என்பது தல வரலாறு. அதற்காகவே பெருமாள் தனக்குச் சமமாக கருடனுக்கு தனியாக சன்னிதானம் அமையச் செய்து கருடாழ்வாராக பெருமைப்படுத்தியுள்ளார். பட்சிராஜன் என்ற பெயரோடு இங்குள்ள கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக காட்சி கொடுக்கிறார். மற்ற கருடனுக்கு இல்லாத ஒன்பது நாமங்களுடன் காட்சி கொடுக்கிறார்.
இவர் பெரிய வரப்ரசாதி. ஏழு வாரங்கள் தொடர்ந்து இவரை வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழக்கிழமை தோறும் அமுதக் கலசம் என்ற பிரத்யேக நைவேத்யம் செய்யப்படுகிறது. பயத்தம் பருப்புடன் வெல்லம், ஏலக்காய் கலந்து செய்யப்படும் இனிப்பு நைவேத்யம் அது.
இங்கு கருடசேவை மிகவும் சிறப்பானது. ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திர நாளில் கல் கருடனுக்கு சிறப்பாக விழா நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவக்காலத்தில் நான்காம் நாளன்று கல்கருடன் வீதி உலாவருகிறார்.
பங்குனி மாதத்தில் நடை பெறும் பெருவிழாவில் சன்னதியிலிருந்து கருடனை நாலுபேர் பாதம் தாங்கி தூக்கி வருவார்கள். படிக்கட்டுகளிலிருந்து தூக்கி வரப்படும் கருடாழ்வாரை நீண்ட உருட்டு மரங்களில் கம்பி வளையத்திற்குள் செருகப்பட்டு பதினாறுபேர் சுமந்து வருவார்கள். இப்படி 32, பிறகு 64 பேர் கருடனைச் சுமந்து வருவார்கள். கோவிலுக்குத் திரும்பும்பொழுது இதே வரிசையில் சுமப்பவர்கள் குறைந்து கடைசியாக நான்குபேர் சுமந்து சன்னதியை அடைவார்கள்.
விழாக் காலங்களில கல்கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகு போன்ற வாசனை திரவியங்களை அபிஷேகம் செய்கிறார்கள். இங்கு வெகுகாலம் இருந்த இரண்டு கருடப் பறவைகள் ஒரே நேரத்தில் உயிர்துறந்து முக்தி அடைந்தன. இவற்றுக்கு அதிஷ்டானம் ஒன்று அமைத்து வழிபடுகின்றனர்.
Also, Read