- August 8, 2024
உள்ளடக்கம்
வர்த்தகர்களோடு வந்த ஒருவன், பாலைவனத்தில் சிக்கிக் கொண்டான். அங்கே கடும் வெப்பம். அவனால் தாங்க முடியவில்லை. தன்னிடமிருந்த தண்ணீர் குவளையில் இருந்து, சொட்டு நீரையும் நக்கிக் குடித்துவிட்டான். இனி அவனிடம் தண்ணீர் இல்லை. மணற்புயலை தாங்கமுடியாமல், தன்னுடைய இறப்பின் நேரம் நெருங்கி வருவதைக் கண்டான். இதே போன்ற வெப்பக்காற்று, இன்னும் சிலவினாடிகள் அடித்தால் போதும். அவன் செத்துவிழுவோம் என்று தெரியும். கடும் மணற்புயல் வீசிக்கொண்டே தான் இருந்தது. அவனின் முடிவு, அவனுக்கே தெரிந்தது. இதோ கீழே விழுகிறான். அப்போது ஈனக்குரலில், “ஐயோ, ஆண்டவா, என்னைக் காப்பாற்ற மாட்டாயா” என்று, உரக்கச் சொல்வதாக நினைத்து, முனகிக் கொண்டே கீழே விழுந்தான்.
கொஞ்ச நேரத்தில் உணர்வு தட்டுப்பட, மெதுவாக கண்விழித்தான். தான் இன்னும் சாகாமல் இருக்கிறோமே, என்று ஆனந்தப்பட்டு ஆண்டவனுக்கு நன்றி சொல்லி, நிமிர்ந்து பார்க்க, அதுவொரு நிழல்தரும் மரம். அவன், “ஆகா. ரொம்ப குளுமையாய், இருக்கே, கொஞ்சம் தாகத்திற்கு தண்ணீர் கிடைத்தால், நன்றாக இருக்குமே” என்று நினைத்து முடிக்குமுன், அவன் முன்னே, தங்கக்குடத்தினில் நீர் இருந்தது. உடனே அருந்தினான். இப்போதுதான் போன உயிர் திரும்பி வந்தது. நிழலும் கிடைத்து விட்டது. நீரும் கிடைத்து விட்டது. இதோடு, வயிற்றுக்கு உணவும் கிடைத்துவிட்டால், ஆண்டவனுக்கு கோடானுகோடி நன்றி செலுத்துவேனே என்று எண்ணினான்.
அவன் முன்னே அறுசுவை உணவும் இருந்தது. ஆனந்தப்பட்ட அவன், உடனே தின்றுமுடித்தான். இப்போது உண்ட மயக்கத்தின் ஆயாசத்தில் கண்கள் சொருகியது. மணற்பரப்பில் படுத்தான். புரண்டான். தூக்கம் வரவில்லை. அதற்கு காரணம், தரைவிரிப்பும், தலையணையும் இல்லாததே என்பதை உணர்ந்து, “ஆண்டவா, நிழலும், நீரும் தந்தாய், விரும்பிக் கேட்டதும் அறுசுவை உணவும் தந்தாய். உறங்கிக் களைப்புப் போக்க, மஞ்சனை தந்தால் நன்றாக இருக்குமே” என்று எண்ணினான். உடனே “அம்சதூளிகா” பஞ்சனையும் அவன் முன் கிடந்தது.
மெத்தையில் ஏறிப்படுத்தான். கண்ணயர்ந்தான். ஆனாலும், இன்னும் ஏதோவொன்று குறையாகப்பட்டது. நடந்து அலைந்த களைப்பு, , “விண், விண்”னென காலெல்லாம் வலி குத்தல் எடுக்க, அதை அமுக்கிவிட, கன்னியர் இருவர் வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினான். அவன் படுத்திருந்த மஞ்சனையின் இரு பக்கமும், இரண்டு கன்னியர் அமர்ந்து, அவன் கால்களை அமுக்கிக் கொண்டிருந்தனர். ரொம்ப சுகமாகப் படுத்துக் கொண்டே, கண்கள் சொருக, கனாக் கண்டு கொண்டிருந்தான். அவன் களைப்பு பறந்தே போனது. அவனுக்கு நினைவு வந்தது.
“ஆமா, கொஞ்ச நேரத்துக்கு முன்பு வரை, சாகப்பிழைக்கக் கிடந்தோம். அதன்பின் நினைக்க நினைக்க எல்லாம் கிடைத்த்து. அப்படியானால், இத்தனையும் தருவது யார்? இப்போது இந்த பெண்கள் நமக்கு சிரமப்பரிகாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களே, இப்போது, ஒருத்தி பேயாகவும், இன்னொருத்தி பிசாசாகவும் மாறி, நம்மை இரண்டு கூறாகப் பிய்த்து தின்றுவிட்டால்? நம்ப கதி என்னாவது என்று நினைத்து முடிக்கு முன் தான். ஒருத்தி பேயாகவும், இம்மொருத்தி பிசாசாகவும் மாறி, அவனை இரண்டு கூறாக கிழித்து பிய்த்து தின்று கொண்டிருந்தார்கள். கேட்டதை எல்லாம் தரும் “கற்பக தரு” மரத்தின் கீழே தான் இதுவெல்லாம் நடந்தது.
துன்பப்படும் போது, கடவுள் காப்பாற்ற மாட்டாரா? என்கிற எண்ணம், ஏதோவொரு வழியில் காப்பாற்றிவிட்டால், தன் முயற்சியே என்று எண்ணத் தோன்றுகிறது, அல்லது, குதர்க்கமாக எண்ணத் தோன்றுகிறது. அதனால் “போதும் என்கிற மனமே, பொன் செய்யும் மருந்து” என்பதனை புரிந்திருப்பீர்கள்!
Also, read
நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்றிற்கேற்ப நம் மனம் எப்பொழுதும் நல்லதையே நினக்க நல்லது மட்டுமே நடக்கும் என்பதற்கு இக்கதை ஒரு நல்ல உதாரணம். ஒன்று, போதுமென்ற உணர்வு நமக்கு வேண்டும். மற்றொன்று எப்போதும் நேர்மறை எண்ணங்களை மட்டுமே நம் மனத்தில் சிந்திக்க வேண்டும். ஒரு நல்ல சிந்தனையைத் தூண்டக்கூடிய கதையைப் பகிர்ப்து கொண்டமைக்கு மிக்க நன்றி.