- August 8, 2024
உள்ளடக்கம்
🙏 இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, “தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது” என்ற அரிய வரத்தினை பெற்றான்.
🙏 தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதெனக் கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான்.
🙏 எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனை கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி “எங்கெ உன் நாராயணன்” எனக் கேட்க, பிரகலாதணோ “என் நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்று கூறினான்.
🙏 கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.
🙏 அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.
🙏 இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.
🙏 இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.
🙏 இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங் கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.
🙏 காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.
🙏 லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
🙏 “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகிறது.
🙏 இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலில் நாம் பார்த்ததும் தனிச் சன்னதி தான். ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
🙏 ஸ்ரீ சரபேஸ்வரர் பூசை செய்வதற்கு உகந்த நேரம் ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான ராகு கால நேரமாகும். இந்த ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுபவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் நோய்கள் நீங்கும். செயல்களில் வெற்றி பெறுவார்கள்.
🙏 எத்தகைய விதியையும் மாற்றும் வல்லமை சரபேசுவரருக்கு மட்டுமே உண்டு. இந்தக் கலி யுகத்தில் மனிதன் தன்னுடைய அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஏற்படுத்திக் கொடுக்கும் எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் தப்புவதற்குச் சரணடைய வேண்டிய ஒரே தெய்வம் சரபேசரே.
இவரை வேதங்கள் அழிக்கும் கடவுளான அக்கினி தத்துவத்திற்கு உரியவராகக் குறிப்பிட்டாலும் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளையும் அழித்து நம்முடைய துன்பங்களைத் தீர்த்து, தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு அபளமளிக்கும் தெய்வம் சரபேஸ்வரராகும்.
🙏 இயற்கையின் சீற்றங்களான நிலநடுக்கம், இடி, புயல், மழை, சூறாவளி, ஆழிப்பேரழிவும், தீவிபத்து, விஷக்கடிகள், மருத்துவத்தால் கைவிடப்பட்ட மாறாத உடல் உபாதைகள் மற்றும் மனோ வியாதிகள், தொடர்ந்து வந்து உறுத்தும் ஊழ்வினையின் காரணமாக பரிகாரமே காணமுடியாது என்று தீராத துன்பம் தர முயலும் கொடிய தரித்திரங்களும் சரபரை வழிபடும் பக்தனைத் தாக்காமல் விட்டு ஓடிவிடும்.
🙏 இப்படி விதியையே புரட்டிப்போட்டு நல்லதை செய்யும் சக்தி சரபேசுவரருக்கு மட்டுமே உண்டு. எதிரிகள் குலநாசம், பில்லி, சூனிய ஒழிப்பு, மரண பயம் அகலுதல், நீடித்த ஆயுள், எந்த வியாதியும் நெருங்காத சூழ்நிலை என்று பாதுகாப்பு வளையங்களாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது.
🙏 சரபரின் சக்திகளான பிரத்தியங்கராவும், சூலினியும் பில்லி சூனியம், ஏவல், பூதப்பிரேத, பிசாச பயங்களை அழித்தொழிக்கும் வல்லமை பெற்றவை. சரபரை வழிபடுபவர் மீது மேற்சொன்ன அபிசார கர்மாக்களை செய்பவன் எவனோ அவனையே திருப்பித் தாக்கி அழிப்பாள்.
🙏 கால பைரவ சக்தியான அதர்வணப் பிரத்தியங்கிரா தேவி. இவள் சிவ துவேஷங்களில் ஈடுபடுகிறவர்களை அழிக்கும் சக்தியாக விளங்குவதால் இவளைத் தியானிக்கும் எவரையும் யாருடைய துவேஷமும் ஒன்றும் செய்ய முடியாது என்பது கண்கூடு.