×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை


Sivalingam Saatchi Sonna Kathai

அந்தக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன். அவன் பெயர் அரதன குப்தன். மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்.

காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த அவன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் இரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.

எதிர்பாராமல் ஒரு நாள், அரதன குப்தனின் தங்கையும், அவள் கணவரும் இறந்து விட்டதாக காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து தகவல் வர, உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிப்பூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும்போது, தாய் தகப்பனை இழந்து நின்ற இரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்.

வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே, ஒரு புன்னைவனம் – அதில் ஒரு வன்னிமரம். அருகில் ஒரு சிவலிங்கம். சற்றுத் தள்ளி ஒரு கிணறு.

கட்டுச்சோறை பிரித்து சாப்பிட்டு விட்டு, அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும். காலையில் கண் விழித்த இரத்னாவளி பதறிப்போனாள். கதறி அழுதாள் காரணம். அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன். நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது. தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர். நடந்ததை அறிந்து அவர் ஈசனிடம் முறையிட, உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்.

சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் இரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர். அப்புறம் சொன்னாராம்: “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி, இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ.”

மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன். இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள், அங்கே இருந்த ஒரு வன்னி மரமும், கிணறும், சிவலிங்கமும்தான்.

இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள். கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி, கொதித்துப் போனாளாம். இரத்னாவளி நடந்த விஷயங்களை, உள்ளது உள்ளபடியே சொல்ல, அதைக் கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி.

வழக்கு சபைக்கு வந்தது. திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள். “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி” என்று கூறினாள் இரத்னாவளி.

முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி:

“ஓகோ! அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”

கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். கூனிக்குறுகிப் போன இரத்னாவளி, கைகூப்பி அழுதாள், தொழுதாள். கண்களில் கண்ணீர் வடியக் கதறினாளாம் இரத்னாவளி.

“ஈசனே!இது என்ன சோதனை? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்? சொல் இறைவா சொல்.”

இரத்னாவளி பெரும் குரல் எடுத்துக் கதறி அழ, அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல்:

“நாங்கள் சாட்சி.”

குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க. ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்!

“ஆம். இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான். இரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக, கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த கிணறும், வன்னிமரமும், இலிங்கமும், இன்று முதல், இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்”

என்று சொல்லி மறைந்தாராம் ஈசன். பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்.

இப்போதும், மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளிப்பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில், வன்னி மரம், கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறது.

கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் உள்ளது திரும்புறம்பயம். கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “சாட்சிநாதசுவாமி” என்றும் பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு.

திருஞானசம்பந்தப் பெருமான் விஷம் தீண்டிய வணிகனை மீட்க பாடிய பதிகம்

(இழந்ததை திரும்பப் பெற, நாக தோஷம் நீங்க, தடைபட்ட திருமணம் இனிதே நடைபெற ஓத வேண்டிய பதிகம்!)

சடையாய்! எனுமால்; “சரண் நீ!” எனுமால்;
“விடையாய்!” எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?

சிந்தாய்! எனுமால்; “சிவனே!” எனுமால்;
“முந்தாய்!” எனுமால்; “முதல்வா!” எனுமால்;
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?

அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,
பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?

ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?

துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?

பலரும் பரவப்படுவாய்! சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!
புலரும்தனையும் துயிலாள், புடை போந்து
அலரும் படுமோ, அடியாள் இவளே

வழுவாள்; “பெருமான்கழல் வாழ்க!” எனா
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?

இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?

எரி ஆர் சடையும், அடியும், இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?

அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?

வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே!

Also, read



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
  • August 14, 2024
பக்தி
  • August 8, 2024
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்