- January 26, 2023
உள்ளடக்கம்
சித்தரத்தை என்ற அழகான பெயரை கொண்ட இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. கிழக்காசிய நாடுகளில் இதனை ‘சீன இஞ்சி’ என்று அழைக்கிறார்கள். சித்தரத்தை எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. செம்மண்கலந்த சரளையில் நன்கு வளரும்.
சித்தரத்தை சுமார் 5 அடி உயரம் வளரக் குடியது. இதன் இலைகள் நீண்டு பச்சையாக மஞ்சள் இலைபோன்று இருக்கும். குத்தாக பக்கக்கிளைகள் விட்டு வளரும். இதன் வேர் பாகத்தில் கிழங்குகள் பரவிக்கொண்டே இருக்கும். அதனால் செடி பக்க வாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும். இதன் வேரில் உண்டாகும் கிழக்கு தான் மருத்துவ குணம் உடையது. இந்தக் கிழங்கு மிகவும் கடினமாக இருக்கும். குருமிளகு வாசனையுடையது. இதன் பழம் சிவப்பாக இருக்கும். பூக்கள் அழகாக இருக்கும். இதன் பக்கக் கிழங்குகள் மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.
வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு சித்தரத்தை நல்ல மருந்து. சித்தரத்தை எந்த முறையில் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஆஸ்துமா குணப்படுத்த: சிலர், இரைப்பு இருமல் எனும் ஆஸ்துமா பாதிப்பால், மூச்சடைக்கும் வேதனையை அடைவார்கள். அவர்கள், சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர, பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும். இதையே, அடிக்கடி சளித்தொல்லையால் பாதிக்கும் குழந்தைகளுக்கும் அளித்து வர, விரைவில் குணமடைவர்.
இடுப்பு வலி போக்கும் சித்தரத்தை நீர் மருந்து: இடுப்பில் தண்டுவட எலும்புகள் முடியுமிடத்தில், சிலருக்கு கடும் வலி தோன்றி, இயல்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருவர். அவர்கள், அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை அதில் வைத்து தேய்க்க, சித்தரத்தையின் நார்ப்பகுதி தனியே வரும், அதை எடுத்துக் கொண்டு, சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த கலவையை இளஞ்சூட்டில், இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவி வர, விரைவில் இடுப்பு வலி விலகிவிடும்.
மூட்டு வலி தீர, எலும்புகள் பலம் பெற: முதுமையின் பாதிப்பால், உடலில் வியாதிகள் எதிர்ப்பு சக்தி குறைந்து, கை கால் மூட்டுகளில், எலும்புகளின் இணைப்பில் வலிகள் தோன்றும், இதனால் வயது முதிர்ந்தவர்கள், உட்கார நடக்க முடியாமல் சிரமப்படுவர். இந்த பாதிப்புகள் யாவும் நீங்க, நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு, இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில் சாப்பிட்டு வர, வெகுநாட்களாக துன்பமளித்த வலிகளின் பாதிப்பு குறையும். எலும்புகளின் ஆற்றல் மேம்படும், உடலுக்கு சிறந்த சக்தியளிக்கும் மருந்தாகும், இந்த மூலிகை மருந்து.
இருமல் தணிக்க: இருமல் ஏற்படும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இருமல் நின்றுவிடும். உடல் சூடு காரணமாகவும் இருமல் தோன்றும். அப்போது சித்தரத்தையுடன், சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து சுவைக்கவேண்டும். இது இருமலை போக்கும் சிறந்த மருந்து.
குழந்தைகளுக்கு: குழந்தைகளின் மாந்தம் எனும் பால் செரியாமை, இளைப்பு சளி போன்ற பாதிப்புகள் விலக. உலர்ந்த சித்தரத்தை துண்டை விளக்கெண்ணையில் தோய்த்து நெருப்பில் இட்டு கரியாக்கி, அதை தேனில் தேய்க்க உண்டாகும் தேன் கலந்த தூளை, கைக்குழந்தைகளுக்கு நாக்கில் தடவ, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஜீரணத்தை தூண்டும்.
தொண்டை புண் குணமடைய: தொண்டைப்புண் பாதிப்பை போக்கும் சித்தரத்தை சூரணம். சித்தரத்தை தூளை, தேனில் கலந்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர, சரியாக பேச விடாமல் துன்பங்கள் தந்துவந்த தொண்டைப்புண் பாதிப்புகள் குணமாகிவிடும்.
வாந்தியை தடுக்க: சிலருக்கு வாகனங்களில் பயணம் செய்யும்போது, வாந்தி ஏற்படும். அந்த தொந்தரவு இருப்பவர்கள் பயணம் செய்யும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு சுவைத்துக்கொண்டிருந்தால் வாந்தி வராது. வயிற்றை புரட்டுவது போன்ற அவஸ்தைகளும் ஏற்படாது.
வாய் நாற்றம் நீங்க: சித்தரத்தை சிறந்த மணமூட்டி. சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால், வாய் நாற்றம் நீங்கும். ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றும் சீராகும்.
மூச்சுத்திணறல் போக்க: சிலருக்கு ஜலதோசத்தினால் மூக்கடைப்பு ஏற்பட்டு, மூக்கின் வழியே மூச்சு விடமுடியாமல், வாய் வழியே மூச்சை விட்டு வருவர், சிலருக்கு தீவிரமான வறட்டு இருமலின்போது, கடுமையான நெஞ்சு வலி தோன்றும். இந்த பாதிப்புகள் யாவும் அகல, சித்தரத்தை, ஓமம், கடுக்காய் தோல் அல்லது பொடி, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி போன்ற மூலிகைகளை ஒரே அளவில் எடுத்து, பொடியாக்கி, அதை எடுத்து, அரை தம்ளர் நீரில், தேன் கலந்து பருகி வர, மூக்கடைப்பு சளித் தொல்லை, மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டது, ஜுரம் மற்றும் வறட்டு இருமல் பாதிப்புகள் நீங்கும்.
முக்கிய குறிப்பு: மேலே கூறிய விளக்கங்களைக் கண்டு நீங்களாக உட்கொள்ளக்கூடாது. மருத்துவரின் அறிவுரை படி உபயோகிப்பது நல்லது.