- July 6, 2022
இந்த நிலவுலகின் மூத்த நாகரிகம் 7500 ஆண்டுகள் முற்பட்டதான சிந்து சமவெளி நாகரிகமாகும். கடந்த ஒரு நூறு ஆண்டுகளாக அந்நாகரிக நிலப்பகுதியில் இந்தியத் தொல்பொருள் துறையினர் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வுகளின் போது ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் சிறப்புடையதாகக் கூறப்படுபவை குறியீடுகளும், எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகளாகும். அச்சிறப்புடைய முத்திரைகளை படித்துப் பொருள் அறிய முடியாதவை எனவும் அவற்றில் ரகசியக் குறிப்புக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றன.f
அவ்வாறு கூறப்படும் முத்திரைகளைப் பற்றி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வரும் திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது,
சதுர வடிவம் உடைய, எம்-134எ என்னும் அடையாள எண்ணுடைய முத்திரையின் நிழல்படம் சி.ஐ.எஸ்.ஐ, தொகுப்பு 1, பக்கம் 44-லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 367-லும் பதிவிடப்பட்டுள்ளன. அதன் மேல் பகுதியில் வலமிருந்து இடமாக (ஆ + ன + ந் + தி) ‘ஆனந்தி’ என்ற ஒரு பெண்பால் பெயர்ச் சொல்லும், கீழ் பகுதியில் ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனந்தி என்றப் பெயர்ச் சொல்லிலுள்ள ‘ஆ’ என்பது 2-ஆவது உயிர் எழுத்து, ‘ன’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ந் என்பது 8-ஆவது மெய் எழுத்து, ‘தி’ என்பது 7-ஆவது உயிர்மெய் எழுத்து.
சதுர வடிவம் உடைய எச்-2151எ,பி என்னும் அடையாள எண்ணுடைய முத்திரையின்; நிழல்படம் சி.ஐ.எஸ்.ஐ, தொகுப்பு 3.1, பக்கம் 287-லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 436-லும் பதிவிடப்பட்டுள்ளன. அதன் இருபுறங்களில் வலமிருந்து இடமாக (வா + ன + தி) ‘வானதி’ என்ற ஒரு பெண்பால் பெயர்ச் சொல்; பொறிக்கப்பட்டுள்ளது. வானதி என்றப் பெயர்ச் சொல்லிலுள்ள ‘வா’ என்பது 14-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘தி’ என்பது 7-ஆவது உயிர்மெய் எழுத்து ஆகியவையாகும்
ஆனந்தி என்பதற்கு பார்வதி எனவும், வானதி என்பதற்கு மந்தாகினி (வானகங்கை, கங்கையாறு), கங்கை (சிவபெருமான் மனைவி) எனவும், கங்காதரன் என்பதற்கு கங்கையைத் தலையிலே தாங்கியிருக்கும் சிவபெருமான் எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
மேற்கண்ட இரண்டு முத்திரைகளை எழுத்து, சொல், பொருள், கட்டு, அணி என்னும் தமிழ் மொழிக்கே உரித்தான ஐந்தியல் முறைப்படி படித்துப் பொருள் அறியப்படுவதால் 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளும் எழுத்துக்களும் பழந்தமிழ் மொழியைச் சார்ந்தவை எனவும், அவற்றைப் படித்துத் தமிழ் அகராதியின் வாயிலாக பொருள் அறியக் கூடியவை எனவும் தெரிவித்துள்ளார்.