- July 6, 2022
உள்ளடக்கம்
🛕 திருச்சிராப்பள்ளி மாநகரில் அமைந்துள்ள திருவானைக்கா திருக்கோவிலின் கீழ் திசையில் கட்டப்பட்டுள்ள சுந்தரபாண்டியன் திருக்கோபுரத்தின் முதலாம் நிலைக்கால் படியின் வலதுபுறத்தில் 16- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓரு கோட்டுருவக் குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோட்டுருவ குறியீடு தற்போது மண் மூடி மறைந்துள்ளது வருந்தத்தக்கதொரு செய்தியாகும்.
🛕 மண் மூடி மறைந்துள்ள அக்குறியீட்டின் நடுவே ஒரு வட்டவடிவ புள்ளியுடன் ஓர் ஆடுபுலி விளையாட்டின் வரைப்படமும், அதனைச் சுற்றி ஐந்து வட்ட வடிவ மறைப்புக்கள் என்ற கோசங்களும், பத்து சோதிச் சுடர்களும் காட்சியளிக்கின்றன. நான்காவது, ஐந்தாவது கோசங்கள் இரண்டும் கீழ்பகுதியில் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. இக்குறியீட்டைப்பற்றி சக்திமஹிம்ன ஸ்தோத்திரம் 24-ஆவது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவானது,
🛕 “தாயே! அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் ஆகிய கோசங்களையும்; தலை, இரண்டு இறக்கைகள், வால், உடல் என்ற பிரகடனத்துடன், சீரிய உபநிடத வாக்கியங்களால் பிரசித்தம் செய்யப்பட்டனவையுமான இந்த ஐந்து கோசங்களால் மறைக்கப்பட்டிருக்கும் உம்மையே! இந்த பிரகாசமாய் மின்னல் கொடி போல ஜ்வாலிக்கும் “ஆத்மசோதி” என்று எவன் அறிந்தானோ! அவனே பரம்ம ஞானியாவான்.” (பரம்ம ஞானியாவான் என்பது மேலானது என்னும் பரம் என்பதைப் பற்றி தன்னுணர்ந்தவன் என்பதைக் குறிப்பதாகும்.)
🛕 இப்பாடலின் வாயிலாக ஐந்து கோசங்களால் மறைக்கப்பட்டு நடுவே உள்ள ஆடுபுலி விளையாட்டிற்கான வரைப்படம் தலை, இரண்டு இறக்கைகள், வால், உடல் உடைய ஒரு பறவையின் வடிவம் என்பதும் அந்தப் பறவையின் வடிவம் தாயாகிய ஆதிபராசக்தியைக் குறிப்பிடுகிறது என்பதும் தெரியவருகிறது. மேலும் பத்து சோதி சுடர்கள், தசமகாவித்யா என்னும் ஆதிபராசக்தியின் பத்து அவதாரங்களாகிய காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, திரிபுரபைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதாங்கி, கமலாத்மிகா ஆகியோரைக் குறிப்பிடுகின்றன என்பதும் தெரியவருகிறது.
🛕 எனவே ஆடுபுலி விளையாட்டிற்கான வரைப்படம் ஆதிபராசக்தியின் பறவை வடிவம் என்பதால் அந்த வரைப்படத்தில் பல தத்துவங்கள் (உண்மைகள்) உள்ளடங்கி உள்ளன என்பதும் தெரியவருகின்றன.
🛕 ஆடுபுலி விளையாட்டிற்கான வரைப்படம் இரண்டு செங்குத்துக் கோடுகள், நான்கு படுக்கைக் கோடுகள், நான்கு சற்று சாய்ந்தக் கோடுகள் என பத்துக் கோடுகளால் உருவாகும் பதினாறு கட்டங்களைக் கொண்டது.
பத்துக்கோடுகள்: பத்துக் கோடுகள் மனித உடலை இயக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய பத்து பிராணன்களாகிய பிராணன் (மேல் நோக்கிய இயக்கம்), அபானன் (கீழ் நோக்கிய இயக்கம்), வியானன் (எல்லாப் பக்க இயக்கம்), உதானன் (மரண வேளையில் உயிர் வெளியேற உதவுதல்), சமானன் (உணவு செரிமானம் மற்றும் உணவை இரத்தம் போன்றவையாக மாற்றுதல்), நாகன் (வாந்தி, ஏப்பம்), கூருமன் (கண்ணிமை இயக்கம்), ககுகலன் (பசி), தேவதத்தன் (கொட்டாவி), தனஞ்சயன் (உடம்புக்கு ஆரோக்கியம் அளித்தல்) ஆகியயோறைக் குறிப்பதாகும்.
பதினாறு கட்டங்கள்: பதினாறு கட்டங்கள் ஆதிபராசக்தியின் பதினாறு நித்யா சக்திகளான காமேஸ்வரி, பகாமாலினி, நித்தியகல்யாணி, பிருந்தா, வக்னிவைசினி, மகாவஜ்ரேஸ்வரி, துதி, திவிர்த்த, குலசுந்தரி, நித்திய, நீலபதக்க, விஜய, சர்வமங்கள, ஜ்வலமாலினி, சித்ரா, அதய ஆகியோரை குறிப்பதாகும்.
🛕 மேற்கண்டவற்றின் வாயிலாக ஆடுபுலி விளையாட்டிற்கான வரைப்படம், மனித உடலில் உயிராகக் குடிகொண்டுள்ள ஆதிபராசக்தியின் உருவம் ஒரு பறவை என்பதும், அது மனித உடலை இயக்குகின்ற பத்து பிராணசக்திகளும் ஆதிபராசக்தியே என்பதும், பதினாறு கட்டங்களும் ஆதிபராசக்தியின் நித்யா சக்தியைக் குறிப்பிடுகின்றன என்பதும் தெரியவருகிறது.
🛕 மேலும் இந்தப் வரைப்படம் ஆடுபுலி விளையாட்டிற்கு பயன்படுத்தப்படுதற்கு பல தத்துவங்களும்; (உண்மைகளும்) உள்ளடங்கி உள்ளன என்பது தெரியவருகிறது.
ஆடுபுலி விளையாட்டு: ஆடுபுலி விளையாட்டு என்பது தமிழகத்தில் “ஈபுலி அல்லது பதினைந்தாம் புலி” என்றும், அண்டை மாநிலங்களான கேரளாவில் “நாயும் புலியும்” என்றும், கர்நாடகாவில் “சிங்கமும் புலியும்” என்றும், ஆந்திராவில் “புலி பேக்கா” என்றும் பல்வேறு பெயர்களால் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை வயது வரம்பு ஏதுமின்றி விளையாடப்படும் ஒரு பழமையான விளையாட்டாகும்.
🛕 இந்த விளையாட்டில் ஒருவர் மூன்று (பெரிய) காய்களை மூன்று புலிகளாகவும், மற்றொருவர் பதினைந்து (சிறிய) காய்களை ஆடுகளாகவும் வைத்து விளையாடுவார்கள். இவ்விருவரும் தத்தம் காய்களை மாறி மாறி வைத்தும், மேலாகவோ – கீழாகவோ – வடப்புறமாகவோ – இடப்புறமாகவோ நகர்த்துவர். புலியாக விளையாடுவர் ஆடுகளை தாவித் தாவி வெட்டித்தள்ள முயற்சிப்பார். ஆடாக விளையாடுபவர் மூன்று புலிகளை எங்கும் நகர விடாமல் செய்ய முயற்சிப்பார்.
மூன்று புலிகள்: சத்துவகுணம், இரசோகுணம், தபோகுணம்; ஆகிய மூல முக்குணங்களைக் குறிப்பதாகும்.
பதினைந்து ஆடுகள்: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள், மூக்கு, வாய், கண், தோல், காது ஆகிய ஐந்து ஞான இந்திரியங்கள், கை, கால், வாய், மலவாய், இனவிருத்தி செய்யும் குறி ஆகிய ஐந்து கர்ம இந்திரியங்கள் என பதினைந்தைக் குறிப்பதாகும்.
🛕 (சத்துவகுணம், இரசோகுணம், தபோகுணம்; ஆகிய மூல முக்குணங்களும் அடக்கி ஒடுக்கப்பட வேண்டிவை. கன்மம், மாயை, அகங்காரம் ஆகிய மூன்றும் மும்மலங்களாகும். அவை அகற்றப்பட அல்லது நீக்கப்பட வேண்டியவையே அன்றி அடக்கக் கூடியவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.)
🛕 இருவரில் எவர் ஒருவர் தனது மனதை ஒருநிலைப்படுத்தி, புத்தியின் துணையுடன் ஆழ்ந்து சிந்தித்து காய்களை நகர்த்தினாரோ அவரே ஆடுபுலி விளையாட்டில் வெற்றி பெற்றவராவார். வாழ்நாளில் ஒவ்வொருவரும் மனதை ஒருநிலைப்படுத்தி, புத்தியின் துணையுடன் ஆழ்ந்து சிந்தித்து வாழ்ந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதை உணர்த்துவதே ஆடுபுலி விளையாட்டின் உட்பொருளாகும்.
🛕 மனிதர்களின் வாழ்நாட்களில் மனதை ஒருநிலைப்படுத்தி, புத்தியின் துணையுடன் ஆழ்ந்து சிந்தித்து வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுதற்கான ஞானத்தை அருளக் கூடியவர் ஆதிபராசக்தி என்பதை உணர்த்துவதே ஆடுபுலி விளையாட்டின் வரைப்படமும், விளையாட்டுமாகும். அந்த ஆதிபராசக்தியே திருவானக்கா திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி (அகிலாண்ட நாயகி) என்பதை அனைவரும் தன்னுணரும்படியாக கீழ்த்திசை சுந்தரபாண்டியன் கோபுரத்தின் நுழைவாயிலின் முதலாம் நிலைக்கால் படியில் ஆத்மசோதி குறியீடாக நம்முன்னோர்கள் பொறித்து வைத்துள்ளனர் என்பது தெரியவருவதாகக் கருதலாம் எனத் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ், தமிழ்ச் செம்மல் மேட்டூர் அணை மா.பாண்டுரங்கன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.