- July 6, 2022
(பழந்தமிழகக் கல்வெட்டு எழுத்துக்களின் மேலிடும் அரிய வகை குறியீடுகள் கூறுகின்றன)
🛕 மனித மனம் சலனமடையும் தன்மை உடையது. சலனம் என்பதற்கு சஞ்சலம், நிலையில்லாமை, விரைந்து அசைகை, நடுக்கம், மனக்கவலை, துன்பம் எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
🛕 அத்தகைய சலனமடைந்த மனநிலையும், சலனமடையாத மனநிலையும் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி நமது தமிழ்த் திருநாட்டின் தவப்புதல்வர்களான யோகிகள் ஆராய்ந்து அறிந்துள்ளனர். தாங்கள் அறிந்த அவ்விரு மனநிலையை எரியும் தீபத்துடன் ஒப்பிட்டுள்ளனர். அவற்றை நம் முன்னோர்கள் பழங்காலக் கல்வெட்டுக்களில் குறியீடுகளாக அதாவது புள்ளிகளாகப் பதிவு செய்துள்ளனர்.
🛕 அதைப்பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர், அறிவியல் ஆன்மிக விஞ்ஞானி தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது,
🛕 பொதுவாகத் தமிழகத்தில் காணக்கிடக்கும் பழங்காலக் கல்வெட்டுக்களில் புள்ளி வைத்த எழுத்துக்கள் மிகக் குறைவு. அவற்றில் புதுக்கோட்டை மாவட்டம், பூலாங்குறிச்சி மதகுமலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் ‘மூலம் என்னும் ஆதி அல்லது முதன்மை’ என்பதைக் குறிக்கும் வட்டவடிவ புள்ளிகளையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெள்ளறை சுவஸ்திக் கிணற்றில் பொறிக்கப்பட்டுள்ள இரண்டு கல்வெட்டுகளில் ‘நிதானம் இல்லாமல் எரியும் தீபம் போன்ற புள்ளிகளையும்’, திருச்சி – தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் வலது புறம் அமைந்துள்ள புதுக்குடி சிவாலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் ‘நிதானமாக எரியும் தீபம் போன்ற புள்ளிகளையும்’, தஞ்சை மாவட்டம், செந்தலை தூண் கல்வெட்டுக்களில் புனிதமானவன் என்பதைக் குறிக்கும் ‘புனித எண் ஏழு போன்ற புள்ளிகளையும்’ காணலாம். இந்நான்கு கல்வெட்டுக்களின் காலம் 5 ஆம் நூற்றாண்டு முதல் 8 ஆம் நூற்றாண்டு வரையிலானவை.
🛕 மேற்கண்ட நான்கு விதமான புள்ளிகளில் (திருவெள்ளறை) நிதானம் இல்லாமல் எரியும் தீபம் போன்ற புள்ளியும், (புதுக்குடி) நிதானமாக எரியும் தீபம் போன்ற புள்ளியும் குறிப்பிடத்தக்கவை.
🛕 குறிப்பாக யோகமார்க்கத்தில் யோகிகள் மனதை எரியும் தீபத்துடன் ஒப்பிடுவர். அதாவது சலனமடைந்த மனநிலையை ‘சலனன்’ என்னும் காற்றால் நின்று நிதானமில்லாமல் எரியும் தீபம் எனவும், சலனமற்ற மனநிலையை காற்றில்லாத இடத்தில் நின்று நிதானமாக எரியும் தீபம் எனவும் இரண்டு வகையான தீபங்களுடன் ஒப்பிடுவர். சலனமற்ற மனநிலையைப் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் மாண்டூக்கியோப உபநிடதம் காரிகை-10 கூறுவதாவது,
🛕 விவேகம் என்னும் புத்திக்கூர்மையால் உலகப்பற்று இல்லாதவனாக வாழ வேண்டும். அசையாத தன்மையுடைய மனம் மீண்டும் உலகப்பற்றை நாடினால், அதனை நல்ல முயற்சியால் ஆன்மாவிடம் ஒன்றுபடுத்தப்பட வேண்டும். அதனால் மனம் அசையாத தன்மையை அடையும். எப்போது மனம் காற்றில்லாத இடத்தில் நின்று நிதானமாக எரியும் தீபம் போல் அசைவற்று நிற்கிறதோ! வெளிப் பொருள்களைப் பிரதிபலிக்காமல் இருக்கிறதோ! அப்போதே மனம் முழுமுதற்பொருளாகிய ‘பிரம்ம ரூபமாகிறது’, அதாவது திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-1472 கூறும் “ஒண்சுடர் ஆகுமே” (ஒளிச்சுடர் ஆகுமே) என்னும் பிரம்மஞானியாகிறது எனக் கூறுகிறது. (பிரம்மஞானி – பிரம்மத்தை அறிந்தவன்)
🛕 மேற்கண்டவற்றின் வாயிலாக புறப்பற்றிலிருந்து விடுபட்டு அகப்பற்றால் ஆன்மாவிடம் ஒன்றுபடுத்தப்பட்ட மனித மனம் நின்று நிதானமாக எரியும் தீபமான “பிரம்மத்தின் ரூபத்திற்கு” ஒப்பானது என்பதை பழந்தமிழர்கள் தமிழகக் கல்வெட்டுக்களின் புள்ளியாக அடையாளப்படுத்தியுள்ளனர் என்பதும், இது பழந்தமிழர் வாழ்வியல் கோட்பாடுகளில் மிகவும் முக்கியமானதாகவும் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.