- July 6, 2022
உள்ளடக்கம்
அண்மையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ அமைப்பின் நிறுவனர் குமாரவேல் மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், ஐய்யனார் குளத்தின் மலைப்பகுதியில் மேற்கொண்ட பரப்பாய்வின் போது வெள்ளை நிறத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்களை கண்டுபிடித்துள்ளனர். அவற்றைப் பற்றி அவர்கள் இருவரும் கூட்டாக தெரிவித்துள்ள செய்தியாவது,
அந்தப் பாறை ஓவியங்களில் குறிப்பாக கோலம் போன்ற அமைப்புடைய பாறை ஓவியம் ஒன்று மதுரை மாவட்டம் கொங்கர் புளியங்குளம் பாறையிலும், குஜராத் இராட்டிரகுத்தா செப்பேட்டில் ஒரு குறியீடாகவும், 5500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி முத்திரை எண் எம்-507 எ,பி-யின் ‘பி’ புறத்தில் ஒரு குறியீடாகவும் பொறிக்கப்பட்டுள்ளன.
கோலம் என்னும் சொல் புள்ளிகளை வைத்து அதனைச் சுற்றிலும், நேர்க்கோடுகள், வளைவுக்கோடுகள், சுழல்கள் என அழகாக வரைதல் என்பது அதன் பொருளாகும். தமிழகத்தின் இல்லத்தரசிகள் தத்தம் குடியிருக்கும் வீட்டு வாசல்களில் அத்தகைய கோலங்களை வரைந்து இறைவனையும், விருந்தினரையும், உற்றார் உறவினரையும் வரவேற்பது பழந்தமிழர் மரபுகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பாறை ஓவியத்தை ஆய்வு செய்த ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ அமைப்பின் ஆலோசகரும் தொன்மைக் குறியீட்டாய்வாளருமான தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் கூறுவதாவது-
ஐய்யனார் குளத்தின் மலையின் மேல்புறத்தில் வரையப்பட்டுள்ள கோலம் போன்ற பாறை ஓவியத்தின் கோடுகள் ஒரு புள்ளியில் இருந்து துவங்கி சுழன்றுச் சுழன்று அந்தப் புள்ளியிலேயே முற்றுப் பெறுகிறது. அதனை கொங்கர் புளியங்குளம் பாறை ஓவியம் உறுதி செய்கிறது. அதில் ஒரு ரகசியம் சூட்சுமமாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. அதுவானது-
எந்த ஒரு மூலப்பொருளில் இருந்து அனைத்தும் வெளிப்பட்டதோ அந்த மூலப்பொருளிலேயே மீண்டும் திரும்பி வந்து ஒடுங்க வேண்டும் என்னும் பிரபஞ்ச விதியும், ரகசியமுமாகும். இந்த பிரபஞ்ச ரகசியத்தை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளது மட்டுமின்றி தாங்கள் அறிந்த அந்த ரகசியத்தை வருங்கால சந்ததியினர் அறியும் வகையில் பாறை ஓவியங்களாக 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவித்துள்ளனர் என்பது ஒரு சிறப்புச் செய்தியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.