- July 6, 2022
உள்ளடக்கம்
🛕 1300 ஆண்டுகளுக்கு முன்னர் சேர நாட்டில் பிறந்தவர் ‘அய்யனாரிதனார்’ என்னும் ஒரு தமிழ்ப்பெரும் புலவர். அப்பெரும் புலவர் அருளியது ‘புறப்பொருள் வெண்பாமாலை’. அதில் குடி நிலை-13, வெண்பா-35 – ல் பழந்தமிழர்களின் வீரமும், புகழும் பற்றி பதிவு செய்துள்ளார். அதுவானது –
மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டு பிறர் அறியும் குடிவர வுரைத்தன்று
பொருள்: மண் செறிவுள்ள இவ்வுலகத்தின் தொன்மையையும், இம்மண்ணில் வாழ்ந்த தமிழ் மறவர்களின் (எதிரியைக் கண்டு அஞ்சாத வீரத்) தன்மையையும் குறித்து பிறர் அறியும் படியாக என்றென்றும் புகழுடனே விளங்க (தமிழ்) குடியின் வரலாற்றை உரைப்பது அந்நாள் மரபு.
பொய்யகல நாளும் புகழ்வினைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் –
கையகலக் கற்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முற்றோன்றிய மூத்த குடி.
பொருள்: பொய்மை அகல எப்போதும் புகழ் பற்றி கூறுதல் எனது வியப்பணியாகும். இப்பூமியின் மீது படிந்திருந்த பனிப்படலம் நீங்கி, நீரும் நிலமுமாக மாறி, மாமலைகள் வெளிப்பட்டு அவை கற்கோடாரியாகவும், மண்ணாகவும் தோன்றாத காலத்திலேயே வீரத்தன்மையோடும், புகழோடும் முன் தோன்றிய மூத்த குடி. (கையகலக் கல் – கற்கோடாரி, வாளோடு – புகழோடு)
🛕 பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் (இரும்பு காலத்திற்கும்) முன்பாகவே “ஏர் கலப்பைகளில் கற்கோடாரியை பொருத்தி வயலை உழுது நெல் பயிரிட்டவன் பழந்தமிழன்” என்பதற்கு ஒரு சான்றாக மதுரை மாநகரில் உள்ள திருமலை நாயக்கர் மஹால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் கல்லில் “தறிகய் ஏராளராரிதை கல்” என 2700 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள கற்கோடாரி ஒன்றைக் குறிப்பிடலாம்.
🛕 மேலும், தாய்லாந்தின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் “பெரும் பாதன்” என 2700 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள கற்கோடாரி ஒன்றையும், செம்பியன் கண்டியூரில் கண்டுபிடிக்கப்பட்ட கோடாரி கல்லில் “ஐந்து புள்ளி, ரு, பஞ்ச” என 5500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம்.
(நன்றி: தி.லெ.சுபாஸ் சந்திர போஸ்)