- July 6, 2022
உலக நாகரிகங்களில் எல்லாம் மூத்த நாகரிகமும், 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதுமான சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஒரு சான்றாகத் திகழ்பவை குறியீடுகளும் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ள 5300-க்கும் மேற்பட்ட முத்திரைகளாகும். அத்தகைய முத்திரைகளில் எச்-1734எ என்ற அடையாள எண்ணுடைய முத்திரை அரப்பாவில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது-
நீள் செவ்வக வடிவிலான இந்த முத்திரையில் 4 எழுத்துக்கள் வலமிருந்து இடமாக பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்களை துணி, மரப்பட்டை போன்ற மிருதுவானவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக ஈ + சா + ன + ன். ஈசானன் எனப் படிக்கப்படுகின்றன. இந்த எழுத்துக்களில் ‘ஈ’ என்பது 4-ஆவது உயிரெழுத்து, ‘சா’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன்’ என்பது 18-ஆவது மெய்யெழுத்து ஆகியவையாகும்.
‘ஈசானன்’ என்பதற்கு சிவபெருமான், வடகிழக்குத் திசை பாலன் (சதாசிவம்) எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. ‘ஈசானன்’ என்னும் சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்த காளை வாகனன், முக்கண்களை உடையவர், பளிங்கு (கண்ணாடி போன்ற) நிறத்தவர், சூலாயுதபாணி, உலகுக்கு அனைத்து நன்மைகளை அளிப்பவர் என மயமதம் என்னும் சிற்பசாத்திர நூல் கூறுகிறது.
அத்தகைய சிவபெருமானை ‘தமிழ் அறியும் பெருமானே’ என திருவிளையாடல் புராணம் சுட்டிக்காட்டுகிறது. சக்திசிவமான சதாசிவத்திற்கு ஐந்து நிறங்கள் (தன்மைகள்) என்பதை “நீலவுரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும்பளிங்கு என்று அறிவரிய நிறத்தர்” – என அப்பரின் தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது. வடகிழக்குத் திசையின் நாயகரான ஈசானன் மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தி கொடுப்பவர் எனவும் அவரை வணங்கி வழிபட்டால் ஞானமும், யோகமும் பெறலாம் என்பது சைவ சமயத்தாரின் நம்பிக்கையாகும்.
மேற்கண்டவற்றின் வாயிலாக சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் வாழ்ந்த மக்கள் பழந்தமிழர்கள் என்பதும், சோதிகளின் திசைகளில் குறிப்பாக வடக்கு, கிழக்குத் திசைகள் சேரும் வடகிழக்குத் திசையின் பாலனான ஈசானனின் சிறப்பை நன்கு அறிந்தவர்கள் என்பது தெரியவருவதாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளார்.