- July 6, 2022
உள்ளடக்கம்
இறைவன் மங்களநாதராகவும் இறைவியார் மங்களேசுவரியாகவும் எழுந்தருளியுள்ளது இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை என்னும் திருக்கோவில். இத்திருக்கோவிலில் இறைவன் இறைவியாருக்கு வேத ஆகமங்களின் ரகசியத்தை உபதேசித்தமையால் இத்திருத்தலத்திற்கு உத்திரகோசமங்கை என்றப் பெயர் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திருக்கோவிலில் மாணிக்கவாசகர், வேதவியாசர், காகபுஜ முனிவர் வாணாசுரன் ஆகியோர் இறைவன், இறைவியை வணங்கி வழிபட்டுள்ளதாக இக்கோவிலின் தலபுராணம் கூறுகிறது.
இத்திருத்தலத்தின் தலமரம் இலந்தை மரமாகும். மேலும் இத்திருத்தலத்தின் உள்ளே அக்கினி தீர்த்தமும், மங்கள தீர்த்தமும் உள்ளன. இத்திருத்தலத்திற்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், மொய்யார்தடம் பொய்கை தீர்த்தமும், வியாச தீர்த்தமும், சீதள தீர்த்தமும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தீர்த்தங்களில் குறிப்பாக வியாச தீர்த்தம் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுவதும் 87 செ.மீ. உயரம், 45 செ.மீ அகலம் 14 செ.மீ. கனம் ஆகிய அளவுகளுடையதும், ஒரு கல்தூணில் 6 வரிகள் கொண்ட 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததுமான கல்வெட்டு ஒன்றை கீழச்சீத்தை என்னும் ஊரில் உள்ளதொரு ஊரணி கரையில் நிறுவப்பட்டுள்ளதை அரியகுடியைச் சேர்ந்த இளம் தொல்லியல் ஆய்வாளரும், கல்லூரி மாணவரும், வரலாற்றின் தூதர்கள் குழுவின் தலைவருமான எஸ். அபிசேக் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இக்கல்வெட்டுச் செய்தியைப் பற்றி அவர் தெரிவித்துள்ளச் செய்தியாவது,
இக்கல்வெட்டில் ‘உ. திருவுத்திரகோசமங்கை தலபுராணத்தில் வேதவியாசர் தீர்த்தம் அருளித்ததூ பிரபலியம்’ என்றச் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. இதில் ‘தூ’ என்பது தூயது, தூய்மை என்பதையும், ‘பிரப(ல்)லியம்’ என்பது புகழ் (போற்றுதல்), வலிமை, வல்லமை, என்பதையும் குறிப்பிடுவதால் இந்த ஊரணியின் பெயர் வேதவியாசர் தீர்த்தம் என்பதையும், இது தூய்மையானதும் புகழுடையதும் ஆகும் என்பதையும் குறிப்பிடுவதாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளார்.