- July 6, 2022
உள்ளடக்கம்
🛕 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட செப்பு நாணயம் ஒன்றில் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் அமைந்துள்ள கோழியூர் என்னும் உறையூரின் வரலாறு பற்றியச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நாணயம் தஞ்சையைச் சார்ந்தவரும், பழங்காசுகள் சேகரிப்பாளரும், தொல்பொருள் அறிஞருமான ஆறுமுகம் சீத்தாராமன் அவர்களிடம் உள்ளது என்ற செய்தியை அவர் 2004-ஆம் ஆண்டு தொல்லியல் சான்றுகள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.
🛕 இந்த நாணயத்தை மறுஆய்வு செய்த தொன்மைக் குறியீடுகள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் வெளியிட்டுள்ள செய்தியாவது,
🛕 சதுர வடிவிலான இந்த நாணயத்தின் மேல் பகுதியில் 2100 ஆண்டுகளுக்கும் முற்பட்ட நான்கு தமிழ் பிராமி என்னும் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது, நான்காவது ஆகிய இரண்டு எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்துள்ளன. கீழ் பகுதியில் கோழி ஒன்று யானையின் தலையைக் கொத்தி சண்டையிடுவது போல் காட்சியளிக்கிறது. இதே போன்ற காட்சி ஒரு புடைப்புச் சிற்பமாகத் திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் உறையூரில் அமைந்துள்ள அருள்மிகு பஞ்சவர்ணசுவாமி கோவிலிலும் காட்சியளிக்கிறது. இதே போன்ற மற்றொரு சிற்பம் இலந்தக்கரையில் உள்ள ஒரு சூலக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளதை இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
🛕 இந்தப் புடைப்புச் சிற்பத்தைப் பற்றி அருள்மிகு பஞ்சவர்ணசுவாமி கோவில் தல வரலாறு கூறுவதாவது –
🛕 முன்னொரு காலத்தில் கரிகால் சோழன் தனது பெரும் படையுடன் இந்த சைவத் திருத்தலத்தைக் கடந்து சென்றான். அப்போது கோழி ஒன்று அவனது யானை ஒன்றை தாக்கி வெற்றி பெற்றது. அவ்வாறு ஒரு கோழி தன் யானையுடன் சண்டையிட்டு வெற்றி பெற்றதை கண்டு ஆச்சரியம் அடைந்த கரிகால் சோழன் இந்த நிலப்பகுதிக்கு ஏதேனும் ஓர் அதீத சக்தி இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து இப்பகுதியில் புதிய மாநகரம் ஒன்றை உருவாக்கி, அந்த மாநகருக்கு ‘கோழியூர்’ என்று பெயரிட்டதாகத் தல வரலாறு கூறுகிறது.
🛕 அவ்வாறு பெயர் பெற்றுள்ளதை இக்காசின் மேல் பகுதியில் காணப்படும் நான்கு (தமிழி) எழுத்துக்கள் உறுதி செய்கின்றன. அதுவானது –
🛕 அந்நான்கு எழுத்துக்கள் “ஆகுபேர்” என வலமிருந்து இடமாகப் படிக்கப்படுகின்றன. எனவே பேர் என்பது “பெயர்” என்பதையும் குறிப்பதாகும். “ஆகுபேர் என்னும் ஆகுபெயர்” என்பதற்கு ‘ஒன்றன் பெயரிலிருந்து அதனோடு தொடர்புடைய மற்றொன்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர்’ எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. பிற்காலத்தில் பல்வேறு காரணங்களால் கோழியூர் என்பது உறையூர் எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
🛕 எனவே உறையூர் (பெருமையுடைய ஊர்) என்ற பெயர் 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டக் காலத்தில் கோழியூர் என்று அழைக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது. மேலும் இக்காசில் ‘ஆகுபேர்’ என்பது வலமிருந்து இடமாகப் பொறிக்கப்பட்டுள்ளதால், இது ஒரு முத்திரை காசாகக் (Punch mark coin) கருதலாம்.
🛕 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்ததும், முற்காலத்தில் சோழ வள நாட்டின் தலைநகரமாகவும் விளங்கிய கோழியூர் என்னும் உறையூர் மாநகரின் வரலாற்றை குறிப்பிடுவதுமான இந்த செப்பு நாணயத்தை பாதுகாத்து வரும் திருவாளர் ஆறுமுகம் சீத்தாராமன் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.