- July 6, 2022
எம்-1177எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹஞ்சொ-தரோ –வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முத்திரை பாகிஸ்தானில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும், இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரித்துள்ளச் செய்தியாவது,
இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா (அக்க அசோகன்) அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் 137 லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 438லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் 7 எழுத்துக்களும் ஒன்று என்பதைக் குறிக்கும் ஒரு குறியும், பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது, 3-ஆவது, 4-ஆவது ஆகிய 3 எழுத்துக்கள் இணைந்துள்ளன. கீழ் பகுதியில் புருடாமிருகத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரையை துணி அல்லது மரப்பட்டை போன்ற மிருதுவானவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக, ப + ரு + ரூ + ப + ஒன்று + (இ)ட் + ட + ஆ. ‘பருரூப ஒன்று (இ)ட்ட ஆ’ எனப் படிக்கப்படுகின்றன.
இவற்றில் ப என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ரு என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ரூ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ப என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, (இ)ட் என்பது 5-ஆவது மெய் எழுத்து, ட என்பது 5-ஆவது உயிர்மெய் எழுத்து, ஆ என்பது 2-ஆவது உயிர் எழுத்து ஆகியவையாகும்.
‘பருரூப’ என்பதற்கு மலைபோன்ற உருவமுடைய எனவும், ‘ஒன்று’ என்பதற்கு ஒன்று, ஒப்பற்ற எனவும், ‘(இ)ட்ட’ என்பதற்கு வைத்த, கொடுத்த, படைத்த எனவும் ‘ஆ’ என்பதற்கு இடபம், ஆன்மா, ஆகுக, ஆகுகை எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
பொருள்: மலைபோன்ற உருவமுடைய ஒப்பற்றது படைத்ததாகுக.
குறிப்பு: புருடாமிருகம் என்பது மனித முகம், யானையின் துதிக்கை, காளையின் கொம்பு மற்றும் உடல், புலியின் கால்கள், தேளின் கொடுக்கு போன்ற வால் நுணியுடைய அதிபயங்கரமான மிருகம். இம்மிருகம் சலேந்திரன் என்னும் அசுரன் அனுப்பிய இராகுவை கொல்லுவதற்காக சிவபெருமானால் படைக்கப்பட்ட மிருகம் என ஸ்கந்த புராணம் கூறுகிறது. சிவபெருமானின் அருள் பெற்ற இந்த மிருகத்தின் முகத்தை அனைவரும் வணங்கும் படி கீர்த்தி முகமாக திருக்கோயில்களின் திருக்கோபுரங்களில் காணலாம். இதன் முகத்தை நாசித்தலை எனச் தமிழகத்து சிற்பிகள் சுட்டிக்காட்டுவர்.