×
Tuesday 8th of October 2024

Nuga Best Products Wholesale

பரசு என்னும் கோடாரியின் சிறப்பு


உள்ளடக்கம்

Parasu (Battle-axe) Meaning in Tamil

🛕 தமிழகத் திருக்கோவில்களில் எழுந்தருளியுள்ள தெய்வத் திருமேனிகளின் திருக்கரங்கள் காண்போரை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவாறு காட்சியளிப்பதைக் காணலாம். அவற்றில் ஒன்றே அடித்துத் தாக்கும் ஆயுத வகையைச் சார்ந்த ‘பரசு’.

🛕 அதனைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ், சிற்பக் கலாநிதி ஸ்தபதி வே.இராமன் ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தியாவது,

🛕 திருக்கோவிலில் எழுந்தருயுள்ள தெய்வத் திருமேனிகளின் திருக்கரங்களில் காண்போரை அச்சுறுத்தும் ஆயுதங்கள், உண்மையில் தீயசக்திகளிடமிருந்து அனைத்து சீவராசிகளையும் பாதுகாத்து, உலகப்பற்றை அறுத்து, அறியாமை என்னும் இருளை அகற்றி, அறிவொளியைக் காட்டி, முக்தி அடைவதற்கான உய்யநெறியைக் காட்டுபவையாகும். அத்தகைய ஆயுதங்களில் ஒன்றே ‘பரசு’.

🛕 பரசு என்பதற்கு மழுவாயுதம், கோடாரி அல்லது கோடாலி (மரம் வெட்டும் கருவி), மூங்கில், பண்வகை எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. ஆதிமனிதன் பயன்படுத்திய ஆயுதத்தை (பரசை) கற்கோடாரி என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

“மருமலர்க் கொன்றையார்க்கு வாகனமிடப மாகும்,
பரசொடுகடிய சூலம்பினாகவில் படைகளாமே” – என ஈசனுடைய வாகனம் இடபம், ஆயுதங்கள் “பரசு”, சூலம், பினாகவில் ஆகியவை என சூடாமணி நிகண்டு கூறுகிறது.

🛕 ஈசன் தனது 16 வெளிப்பாடுகளில் ஒன்றான அருள்மிகு சண்டேசன் கோடாரியைத் தன் முன்கரங்களால் மார்பில் அனைத்து தாங்கியிருப்பார் என மயமதம் என்னும் சிற்பசாத்திர நூல் (36.92-03எ) கூறுகிறது.

🛕 அருள்மிகு சண்டேசன் (சண்டேசுவரர் அல்லது சண்டிகேசுவரர்) வலது திருக்கரத்தில் பரசு என்னும் கோடாரியைக் ஏந்தியவாறு தமிழகச் சிற்பிகள் வடிவமைத்து சுட்டிக் காட்டுவர்.

🛕 அருள்மிகு சண்டேசனின் பிரமாண்டமானத் திருவுருவம் ஒன்றை கங்கை கொண்ட சோழபுரத்தில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்ட ஈசனின் திருக்கோவிலில் காணலாம். பரசு என்னும் கோடாரிக்குத் தனிச்சிறப்புண்டு. அதுவானது-

🛕 திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி தாலுகா, இலால்குடியில் (திருத்தவத்துறையில்) அமைந்துள்ள சப்தரிஷீஸ்வரர் திருக்கோவிலின் தென்புறத்திலுள்ள மண்டபத்தின் கற்தரையில் ஒரு பிரபஞ்சக் குறியீடும், (சங்கிலியால் பிணைக்கப்பட்டு) உயர்த்திய இரு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஒரு மனித உருவமும், அச்சுடன் இரண்டு சக்கரங்களும், கோடாரியும் குறியீடுகளாக பொறிக்கப்பட்டிருந்தன. அக்குறியீடுகள் திருக்கோவில் திருப்பணியின் போது சலவைக் கற்களால் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வருந்தத் தக்கதொரு செய்தியாகும். அக்குறியீடுகளின் வாயிலாக நம்முன்னோர்கள் வருங்கால சந்ததியருக்கு அறிவித்துள்ள செய்தியாவது-

🛕 இதயக்குகையில் உள்ளதும், தூய்மையானதும், முழுமையானதும், அழிவற்றதும், மிகவும் பிரகாசமுடையதுமான ஆன்மாவாகிய உயிர் ஒரு சக்கரம், உடலுடன் கூடிய மனம் மற்றொரு சக்கரம். இவ்விருச் சக்கரங்களையும் கர்மவினைகள் என்னும் ஓர் அச்சு பிணைத்து பிறப்பு – இறப்பு என்ற மாயச்சுழற்சியில் தொடர்ச்சியாகச் சுழலச் செய்கிறது.

🛕 கர்மவினை என்னும் அச்சை ஞானமாகிய பரசு என்னும் கோடாரியால் துண்டித்தால் ஆன்மாவாகிய ஒரு சக்கரம் அந்த மாயச் சுழற்சியிலிருந்து விடுபட்டு உடனடியாக நின்றுவிடும். ஆனால் உடலுடன் கூடிய மனம் என்னும் மற்றொரு சக்கரமோ கர்ம வினையின் எதிர்ச் செயல் தீரும் வரை சுழன்ற பின்னரே நிற்கும். அதுவும் நின்றவுடன் உடலோடு சங்கிலியால் (உலகப் பற்றால்) பிணைக்கப்பட்ட மனம் வீழ்ந்து விடும். அதாவது ஆன்மா என்னும் உயிரானது பிறப்பு – இறப்பு என்ற மாயச்சுழற்சியில் இருந்து விடுதலையடைந்து முக்தி (இறைநிலை) அடையும் என வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் தமது ஞானயோகம் (பக். 373-374) என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

🛕 மேற்கண்ட தத்துவத்தை உணர்த்தும் வகையில் “பரசு”, மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய பரசுராமன், போர்க் கடவுளாகிய ஸ்கந்தன், மகாகணபதி ஆகியோருக்கு உரிய ஆயுதங்களாகக் குறிப்பிடப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டேசவர நாயனார் தனது வலது கரத்தில் பரசை ஏந்தியவாறு காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது.

🛕 பௌத்த சமயத்தில் திரிரத்னாவுடன் பரசின் வடிவத்தையும் இணைத்து சுட்டிக் காட்டுவர். அதற்கு கண்களால் காண இயலாத அமோகச் சக்தி (பெருகும் தன்மை) என்னும் புனிதத் தன்மைகள் நிறைந்துள்ளாதாகப் பொருள் கூறுவர்.

triratna-battle-axe-in-poolankurichi-narthamalai-temples

🛕 பௌத்த சமயத்தைச் சார்ந்த திரிரத்னாவுடன் கூடிய கோடாரியின் வடிவத்தை புதுக்கோட்டை மாவட்டம், பூலாங்குறிச்சி மதகுமலை, நார்த்தாமலை ஆகிய மலைகளின் மேற்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Also, read

நன்றி:

T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose
வே. இராமன்
வே. இராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • July 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • May 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • May 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்