- July 6, 2022
உள்ளடக்கம்
எச்-1936எ,பி, எச்-1937எ,பி என்கின்ற அடையாள எண்களுடைய இரண்டு சிந்து சமவெளி முத்திரைகள் அரப்பாவில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு முத்திரைகளின் நிழல்படங்கள் சர் அஸ்கோ பர்போலா படைப்புகளில் ஒன்றான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 3.1, பக்கம் 265-லும், மேலும் இவற்றைப் பற்றிய குறிப்புக்கள் பக்கம் 434-லும் பதிவிடப்பட்டுள்ளன.
செவ்வக வடிவிலான இந்த இரண்டு முத்திரைகளின் இரண்டு புறங்களில் ஒரே மாதிரியான எழுத்துக்களும், குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன. ‘எ’ என்னும் முன்புறத்தில் மூன்று எழுத்துக்களும், சோகம் என்னும் சொல்லைக் குறிக்கும் ஒரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆது எழுத்தும், 3-ஆவது எழுத்தும் இணைந்துள்ளன. 3-ஆவது எழுத்துக்கும் குறியீடுக்கும் இடையே துணை எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. அதனால் 3-ஆவது எழுத்தும், துணை எழுத்தும் இணைந்த ஒரே எழுத்தாகப் படித்து அறியும் படியாக உள்ளது. பி என்னும் பின்புறத்தில் இரண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த முத்திரைகளின் இரண்டு புறங்களில் உள்ள ஒரே மாதிரியான எழுத்துக்களும் குறியீடும் இடமிருந்து வலமாக: ப + தி + தா + சோகம் + ப + ன். பதி தாசோகம் பன் எனப் படிக்கப்படுகிறது.
இவற்றில் உள்ள ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘தி’ என்பது 7-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘தா’ என்பது 7-ஆவது உயிர்மெய் எழுத்து, குறியீடு ‘சோகம்’ என்பது கடவுளும் ஆன்மாவும் ஒன்று என பாவிக்கை என்பதைக் குறிக்கும், ப என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ன் என்பது 18-ஆவது மெய் எழுத்து.
பதி: கடவுள், தலைவன், கணவன், அரசன், உறைவிடம், வீடு, கோயில், ஊர். தாசோகம்: நான் அடியேன் என்று பொருள்படும் வணக்கச்சொல் (வீர சைவர்களின் மாகேசுர பூசை). பன்: அரிவாட்பல் – சிவபெருமானை நாணல் செடி போல வணங்குவது ஒழுங்கானதும் சிறந்ததுமாகும் எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
பொருள்: நான் அடியேன் என நாணல் செடி போல கடவுளை வளைந்து வணங்குதல் ஒழுங்கானதும் சிறந்ததுமாகும்.
இந்த இரண்டு முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடும், சொற்கோவையும் கடவுள், தலைவன், கணவன், அரசன் ஆகியோரை நாணல் செடி போல வளைந்து வணங்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதாகக் கருதலாம்.