- July 6, 2022
உள்ளடக்கம்
🛕 அண்மையில் சேலம் மாநகரத்தின் வடதிசையில் உள்ள பெருமலையில் கொங்கண சித்தர் குகையில் பழங்கால பாறை ஓவியங்கள் இருப்பதை தொல்லியல் ஆய்வாளர்கள் அருண் பிரசாத் நடராஜன், கர்ணா, குமரன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். அப்பாறை ஓவியங்களைப் பற்றி அருண் பிரசாத் நடராஜன் தெரிவித்துள்ள செய்தியாவது,
🛕 கொங்கண சித்தர் குகையில், கறுஞ்சிவப்பு நிறத்தில் நான்கு பாறை ஓவியங்கள் ஒரு குழுவாக வரையப்பட்டுள்ளன. அவற்றில் இடதுபுறத்தில் உள்ளது ‘பை’ என்ற தமிழி எழுத்து என்பதும், நடுவே உள்ளது படம் எடுத்த நாகப்பாம்பின் உருவம் என்பதும், வலது புறத்தில் உள்ளவை இரண்டும் பிளவுபட்டுள்ள நுணி நாக்குடைய உடும்பின் உருவங்கள் என்பதும் தெரியவருகின்றன. ‘பை’ என்ற தமிழி எழுத்து 2700-யில் வரையப்பட்டிருக்கலாம்.
🛕 ‘பை’ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘பாம்பு படம்’ எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. மேலும் இச்சொல் ‘பைந்நாகம்’ என்பதையும் குறிப்பதாகும். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வார், மணிவண்ணன் என்னும் திருமாலைப் பற்றி புகழ்ந்து பாடிய பாசுரங்களில் ‘பைந்நாகம்’ என்றச் சொல் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவானது-
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டாம்-துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும்-துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்.
🛕 நாகப் பாம்பும், உடும்பும் ஊர்வன இனத்தைச் சார்ந்வை, பிளவுப்பட்டுள்ள நுனி நாக்குடையவை, முட்டையிட்டு இனம்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் எனத் தமிழ் அகராதி கூறுகிறது. உயிரியல் வகைப்பாட்டில் புலால் உண்ணும் உடும்புக்கு வரானசு, என்றும் பாம்புக்கு வராளம் என்றப் பெயர்கள் உண்டு என்பதும் தெரியவருகிறது.
🛕 நாகப் பாம்பு, உடும்பு ஆகிய இரண்டுக்கும் நுகரும் அவயவமான மூக்கு கிடையாது. இருப்பினும் அந்த நுகரும் தன்மை அவற்றின் பிளவுப்பட்டுள்ள நாக்கின் நுனியில் உள்ளதனால் அவை அடிக்கடி நாக்கை நீட்டி அவற்றிற்கு உணவுக்குத் தேவையான பிராணிகளின் வாசனையும் அவற்றின் இருப்பிடத்தையும் துல்லியமாக அறிகின்றன.
🛕 மேற்கண்ட நாகப் பாம்பு, உடும்பு ஆகிய இரண்டுக்கும் நுகரும் தன்மை அவற்றின் பிளவுப்பட்டுள்ள நாக்கின் நுனியில் உள்ளது என்பதை பல்லாண்டுகளுக்கு முன்பாகவே ஆராய்ந்து அறிந்த நம்முன்னோர்கள் தாங்கள் அறிந்தவற்றை வருங்கால சந்ததியர் அறிவும் படியாகப் பாறை ஓவியங்களாக அறிவித்துள்ளனர் என்பது இந்த ஓவியங்களின் சிறப்பாகும்.
🛕 மேலும் கொங்கண சித்தர் குகையை சுற்றியுள்ள மலைப்பகுதியை தொல்லியல் ரீதியில் ஆய்வுகள் செய்தால் பலச் செய்திகள் அறியப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு எனத் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் குறிப்பிட்டுள்ளார்.
Our Sincere Thanks to: