- July 6, 2022
உள்ளடக்கம்
எச்-2120எ,பி என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி நாகரிக முத்திரை ஒன்று இந்தியத் தொல்பொருள் துறையினர் அரப்பாவில் மேற்கொண்டதொரு தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,
எச்-2120எ,பி என்ற முத்திரையின் நிழல்படம் சி.ஐ.எஸ்.ஐ. தொகுப்பு 3.1, பக்கம் 286-லும், இதனைப் பற்றிய மற்றக் குறிப்புக்கள் பக்கம் 436-லும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஒரு பக்கம் சேதமடைந்துள்ளதும் செவ்வக வடிவம் உடையதுமான இந்த முத்திரையின் ‘எ’ புறத்தில் 3 உயிர் எழுத்துக்களும், ‘பி’ புறத்தில் 1 உயிர் எழுத்தும் கீறப்பட்டுள்ளன. அவற்றை இடமிருந்து வலமாக, (ஐ + ஐ) + உ + ஆ. ‘ஐஐ உ ஆ’ எனப் படிக்கப்படுகின்றன. இவற்றில் ‘ஐ’இ ‘ஐ’ என்பவை 9-ஆவது உயிர் எழுத்துக்கள், ‘உ’ என்பது 5-ஆவது உயிர் எழுத்து, ‘ஆ’ என்பது 2-ஆவது உயிர் எழுத்து ஆகியவையாகும்.
‘ஐஐ’ என்பதை தமிழ் இலக்கண முறைப்படி ‘ஐயை’ எனப் படிக்கப்படுகிறது. ‘ஐயை’ என்பதற்கு சக்தி என்னும் பார்வதி எனவும், ‘உ’ என்பதற்கு சிவம் என்னும் சிவபெருமான், உமையவள், நான்முகன், இரண்டு என்னும் எண் எனவும் ‘ஆ’ என்பதற்கு ஆன்மா, ஆவது, ஆகுகை எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
பொருள்: சக்திசிவமாவது.
சக்தி சிவமாவது என்பதற்கு ஒரு சான்றாக திருமூலர் அருளிய திருமந்திரம் கூறுவதாவது-
சக்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சக்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சக்தி சிவமாம் இலிங்கமே சதாசிவம்
சக்தி சிவமாம் இலிங்கமே தாபரம் தானே – திருமந்திரம்-1755
பொருள்: திருக்கோயில்களில் நிலையாக நிறுவப் பெற்றுள்ள இலிங்கம் சக்தியும் சிவமும் ஆகும். ஊனுடம்பு சக்தியும் சிவமுமான இலிங்கங்களே. சக்தி சிவமான சதாசிவம், சக்தி சிவன் சேர்க்கையே கோயில் ஆகும். (தாபரம் – இடம், உடம்பு, பூமி, கோயில், இலிங்கம், உறுதி. சதாசிவம் – உயிர்களின் பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தம்).
மேலும், சக்தியிற் பிரியாத சிவம் என்பதைக் குறிக்கும் வகையில் ‘உமாமகேசுவரன்’ என்றப் பெயர்ச் சொல்லில் சக்தியை முன்னிருத்தி சிவத்தை பின்னிருத்தி ‘உமா உடனுறை மகேசுவரன்’ எனக் குறிப்பிடுவதும், ‘சீதாராமன்’ என்ற பெயர்ச் சொல்லில் சீதையை முன்னிருத்தி ராமரை பின்னிருத்தி ‘சீதை உடனுறை ராமன்’ எனக் குறிப்பிடுவதும் சைவ, வைணவ சமய மரபாகும்.
இந்த முத்திரையை எழுத்து, சொல், பொருள், கட்டு, அணி என்னும் தமிழ் மொழிக்கே உரித்தான ஐந்தியல் முறைப்படி படித்துப் பொருள் அறியப்படுவதால் 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளும் எழுத்துக்களும் பழந்தமிழ் மொழியைச் சார்ந்தவை எனவும், அவற்றைப் படித்துத் தமிழ் அகராதியின் வாயிலாக பொருள் அறியக் கூடியவை எனவும், அவற்றில் சைவ சமயம் மற்றும் மனிதகுலத்தின் வாழ்வியல் தத்துவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.