×
Saturday 12th of October 2024

Nuga Best Products Wholesale

திருவரங்கம் ஐந்து புள்ளி மூன்று வாசல் சிற்பத்தின் ரகசியம்


The Secret of Five Point and Three Gates Sculpture in Thiruvarangam (Srirangam)

🛕 திருச்சிராப்பள்ளி,  ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரு அரங்கநாதர் ஆலயத்தில், “ஐந்து புள்ளி மூன்று வாசல்”  என்னும் ஒரு புடைப்புச் சிற்பத்தைக் காணலாம்.

🛕 அச்சிற்பத்தில் ஸ்ரீ ரங்கநாதரின் திருவருளைக் குறிப்பிடும் திருப்பாதங்களும், அவர் எழுந்தருளியுள்ள இடம் இது என்பதைக் குறிக்கும் சதுரமும், நிகழ்காலம் என்பதைக் குறிக்கும் வட்டமும், அவரே எட்டு மூர்த்தி என்பதைக் குறிக்கும் எட்டுத் (வட்டத்) தாமரை இதழ்களும், அவற்றின் நடுவே ஐந்து (குழிகளை) புள்ளிகளைக் காணலாம்.

🛕 குறிப்பாக அந்த ஐந்து (குழிகளில்) புள்ளிகளில் பக்தர்கள் தங்களது வலது கை ஐந்து விரல்களை பதித்து, உடலை ஒடுக்கி, தலை குனிந்து, திரு அரங்கநாதரின் சந்நிதியை நோக்கி வணங்கி வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கதொரு செய்தியாகும். அச்சிற்பத்தைப் பற்றியும் அவ்வாறு வணங்கி வழிபடுவதன் உட்பொருள் பற்றியும் தொன்மைக் குறியீட்டாளர், தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,

🛕 பொதுவாக பக்தர்கள் தங்களது இரு கரங்களை குவித்து தலைக்கு மேலே உயர்த்தியும், மார்பில் அமர்த்தியும், நின்ற கோலத்திலோ அல்லது மண்டியிட்டோ அல்லது அமர்ந்தோ அல்லது நிலத்தில் சாஷ்டாங்கமாக கிடந்தோ இறைவனை வணங்கி வழிபடுவர். அவ்வாறு வழிபடும் போது ஐம்புலன்களை அடக்கி, மனதை ஒருநிலைப்படுத்தி அகப்பற்றுடன் இறைவனை வணங்கி வழிபட வேண்டும் என்பது ஒரு நியதி. அந்நியதியானது – நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களுடன் தொடர்புடைய தோல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐம்பொறிகளாகும். அவை தோல் – தொடு உணர்வு – முதலாவது அறிவு, நாக்கு – சுவை – இரண்டாவது அறிவு, மூக்கு – வாசனை – மூன்றாவது அறிவு, கண் – பார்வை – நான்காவது அறிவு, காது – கேட்டல் – ஐந்தாவது அறிவு ஆகியவை ஐந்து அறிவுகள். அவையே ஐந்து (குழிகள்) புள்ளிகள். மனம் என்பது ஆறாவது அறிவு.

🛕 அந்த ஐந்து புலன்களால், ஆறாவது அறிவான மனம் பெரும் இன்பங்களே மிகச் சிறந்தவை என்று எண்ணி அவற்றோடு பற்றுக் கொள்வது புறப்பற்று. அப்புறப்பற்றால் பெரும் இன்பங்களை விட துன்பங்களே மிக அதிகம். மானுடர் மறுபிறவி எடுப்பதற்கு மூலக்காரணம் புறப்பற்றே ஆகும்.

🛕 மறுபிறவி எடுத்து இன்ப துன்பங்களை மாறி மாறி அனுபவித்து வாழ, மானுடர் எவரும் விரும்புவதில்லை. அனைவரும் விரும்புவது இன்பமான வாழ்க்கையும், வீடுபேறு என்னும் சுவர்க்கமும் மட்டுமே.

🛕 அதற்கு, ஐம்புலங்களை அடக்கியும், மனதை ஒருநிலைப்படுத்தியும், கன்மம், மாயை, ஆணவம் என்னும் மும்மலங்களை நீக்கியும், காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்களைப் புரியாமலும், அகப்பற்றுடன், தன்னுண்மையை அதாவது பரப்பிரம்மத்தின் உண்மை அறிவை அறிந்து திறந்த மூன்று வாசல்களின் வாயிலாக எம்பெருமானே! என காப்புக் கடவுள் என்னும் திருவரங்கனை வணங்கி வழிபட வேண்டும் எனவும், அவ்வாறு வழிபட்டால் மட்டுமே இன்பமான வாழ்க்கையும், வீடுபேறு என்னும் சுவர்க்கத்தையும் அடைய முடியும் என்பதை நம் முன்னோர்கள் ஆராய்ந்தறிந்தும், அறிவித்தும் உள்ளனர்.

🛕 அவ்வாறு நம் முன்னோர்களால் அறிவிக்கப்பட்டதையே தமிழகச் சிற்பிகள் ‘ஐந்து புள்ளிகள் மூன்று வாசல்’ என்ற ஒரு புடைப்புச் சிற்பமாக திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலில் வடிவமைத்துள்ளதாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • July 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • May 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • May 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்