- July 6, 2022
சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் ஒன்றான இறந்தவர் மேடு என்னும் மொஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட அகழாய்வின் போது முத்திரை எண்: எம்-831எ கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முத்திரை பாகிஸ்தானில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது
இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 2, பக்கம் எண்: 74 – லும், மற்ற குறிப்புக்கள் பக்கம் எண்: 436 – லும்; குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் அறிவித்துள்ள செய்தியாவது,
சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் ‘சீ’ என்பதைக் குறிக்கும் ஒரு சீப்பு வடிவிலான குறியீடு, ‘அன்’ என்பதைக் குறிக்கும் மனித கோட்டுருவக் குறியீடு ஆகிய இரண்டு புடைப்புக் குறியீடுகளும், இரண்டு புடைப்பு எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கீழ் பகுதியில் எருது வகையைச் சேர்ந்த ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவம் ஒன்றும், பரம்மஞானம் (பரத்தை அறிந்தவன்) என்பதைக் குறிக்கும் குறியீடு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டு புடைப்புக் குறியீடுகள் ஒன்றோடு ஒன்றாக இணைந்துள்ளன. அவ்வாறே இரண்டு புடைப்பு எழுத்துக்களும் ஒன்றோடு ஒன்றாக இணைந்துள்ளன.
இந்த முத்திரை மிருதுவான துணி அல்லது மரப்பட்டை மீது அச்சிட்டு படித்தறியக் கூடிய அச்சு முத்திரையாகும்.
இந்த முத்திரை சீ + அன் + உ + ள், ‘சீ அன் உள்’ என படிக்கப்படுகிறது. ‘உள்’ என்னும் சொல்லில் உள்ள ‘உ’ என்பது 5-ஆவது உயிர் எழுத்து, ‘ள்’ என்பது 16-வது மெய் எழுத்து.
சீ என்பதற்கு திரு என்னும் திருமகள் எனவும், அன் என்பதற்கு அவன் எனவும், உள் என்பதற்கு உள்ளிடம், உள்ளம், மனம், இடம், உள்ளான் என்னும் பறவை எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. அதனடிப்படையில் ‘சீ அன் உள்’ என்பதற்கு ‘திருமகள் அவன் மனம்’ எனப் பொருளாகும்.
‘திருமகள் அவன் மனம்’ என்பதற்கு ஓர் உதாரணமாக, அருள்மிகு மகாவிஷ்ணு, திருமகள் என்னும் இலக்குமி தேவியை தன் மனதில் கொண்டுள்ளதாக விஷ்ணு புராணம் கூறுகிறது. அதற்குச் சான்றாக ஓராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மகாவிஷ்ணுவின் திருவுருவச் சிற்பங்களில் அவரது இடது புற மார்பின் காம்புக்கு (ஸ்தன வட்டத்திற்கு) மேலாகவும், வேறுபடாமலும் (அபின்னமாகவும்), பிரிக்க முடியாதவளாகவும் இருப்பதைக் குறிக்கும் ஒரு முக்கோண வடிவக் குறியீடு ஒன்றைக் காணலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.