- July 6, 2022
எம்-2113எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹஞ்சொ-தரோ–வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. முத்திரையைப் பற்றியும், இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரித்துள்ளச் செய்தியாவது,
இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 3.1, பக்கம்-126லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம்-422லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செவ்வக வடிவிலான இந்த முத்திரையில்; சீ என்னும் 3-ஆவது உயிர்மெய் எழுத்தைக் குறிக்கும் சீப்பு வடிவிலான ஒரு குறியீடும், 5 எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகை எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரையை துணி அல்லது மரப்பட்டை போன்ற மிருதுவானவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக, சீ + ப + ரு + ரூ + ப + உ. பருரூப உ எனப் படிக்கப்படுகின்றன.
இவற்றில் ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரூ’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘உ’ என்பது 5-ஆவது உயிர் எழுத்து ஆகியவையாகும்.
சீ என்பதற்கு திரு, திருமகள் எனவும், ‘பருரூப’ என்பதற்கு மலைபோன்ற உருவ எனவும், ‘உ’ என்பதற்கு சிவபிரான், நான்முகன், உமையவள் எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
மேற்கண்டதன் அடிப்படையில் இந்த முத்திரை “திருமலை போன்ற உருவ சிவபிரான்” என்பதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பு: திருமலை என்பது தூய்மையான மலை, கைலாய மலை என்னும் இமயமலையைக் குறிக்கும் ஒரு தமிழ்ச் சொல்லாகும். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் திருமலை என்னும் ஊரிலுள்ள ஒரு மலையில் சிவசக்தியின் திருநடனக் காட்சி 8000 ஆண்டுகளுக்கு முன் ஒரு பாறை ஓவியமாக வரையப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.