×
Saturday 23rd of October 2021

மஹாசிவராத்திரி மஹத்துவம் – 13வது ஜோதிர்லிங்கம்


Maha Shivaratri Greatness in Tamil

13th Jyotirlinga

முக்தி வரம் தரும் பொன்முடி ஸூர்யநந்தீஸ்வர ஜோதிர்லிங்கம்

🛕 மஹாசிவராத்திரி ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒரு அற்புத, தெய்வீக நிகழ்வு. தன்னை அன்புருக வழிபடும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜென்ம சாப விமோசனம் அருள பரமேஸ்வரனே மனிதவுருவில் பக்தர்களுடன் கலந்து அவர்களை ஆசீர்வதிக்கும் புண்ணிய நாள் மஹாசிவராத்திரி. ‘தன்னைப் படைத்தவனை பவித்திரமாக நினைப்பவன் இந்த ஒரு நாளில் அவனை அடையலாம்’ என்பது சாஸ்திரம். சகல தோஷ நிவர்த்தியும் ஜென்ம ஸாபல்யமும் அன்று அனைவரும் பெறலாம். மஹாசிவாராத்திரி அன்று ஒரு நாள் ‘எதைக்கண்டு எதை நாம் கேட்கிறோமோ’ அதையே நமக்குக் குறையின்றிக் கிடைக்கச் செய்கிறான்’ நம்மைப் படைத்தவன். இது காலம் காலமாக நம் கலாசாரத்தில் வேரூன்றி நிற்கும் நம்பிக்கை.

🛕 எண்ணங்களைச் செம்மைபடுத்த, ஜீவ காருண்யத்தை பறைசாற்ற, வாழ்க்கை ரகசியத்தை அறியச் செய்ய, பரம்பொருளால் நிர்மாணிக்கப்பட்ட தெய்வீக அமைப்பு இது என்பது புராணங்களின் கூற்று.

🛕 ‘அறிதலையும், புரிதலையும், உணர்தலையும்’ அன்று பரமேஸ்வரன் அனைவருக்கும் வாரி வழங்கும் தருணம். ‘வேகம், விவேகம்’ என்ற இருதுருவமும் ஒன்றாகி நம் எண்ணங்கள் பவித்திரமாகும் புண்ணிய காலம். அப்போது இந்த ஆதிகுருவின் அருளே பொருளாகும் என்பது சாஸ்திரம்!

🛕 மஹாசிவராத்திரி வைபவத்துக்கு மேலும் மெருகூட்டும் வகையில் உருவானவவை ஜோதிர்லிங்கங்கள். அன்றுதான் இந்த உலகில் உள்ள 13 ஜோதிர்லிங்கங்களும் உத்பவமாகி உள்ளன என்று புராணங்கள் கூறுகின்றன. மனமுருகி பவித்திரமாக ஜோதிர்லிங்கங்களை வழிபடும் அனைத்து ஜீவராசிகளும் பரமனை அடைந்து முக்தி பெற பரமனே நமக்கு உருவாக்கித் தந்துள்ள ஒரு அற்புதப் படைப்பு இது.

🛕 சிக்கல்களிலும், சங்கடங்களிலும் உழன்றுத் துன்பப்படும் பெரும்பாலோர் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் நல்லது நடக்க பரம்பொருளிடம் வரம் கேட்பார்கள். யாரோ ஒரு சிலரே தன்னைப் படைத்தவனையும், தன்னையும் அறிந்துகொள்ள வரம் கேட்பார்கள்! மஹாசிவராத்திரி அன்று அத்தகைய அசாதாரண ஞானமார்க்க மானிடர்களுக்கு விடை கிடைக்கும் அற்புத நாள். அப்படி விடை தெரிந்துக் கொள்பவர்கள் மஹான்களாவர்கள் என்பது மஹாசிவராத்திரிக்குள்ள மற்றுமொரு சிறப்பு.

🛕 அன்று தேடிப்போனால், பரமனே தென்றலாய், காற்றாகி நமக்குள்ளேயே சுவாசிப்பான். நீராகி, நிலமாகி, வானாகி, வளியாகி, ஒளியாகி, அண்டசராசரமாகி, ஜீவஜோதியாக நமக்குள்ளே ஐக்கியமாகி நமக்கு கிடைக்கரிய ஆத்ம ஞானம் கிடைக்கச் செய்வான்! நாம் யார் என்று உணர்ந்துகொள்ள, நம் உண்மை சொரூபத்தை தெரிந்துகொள்ள, நம்மைப் படைத்தவன் அருளிய எளிமையான வழி இது.

🛕 அன்றுதான் மெய்ஞானம் என்கிற சித்தாந்தத்தை நம் ஆன்மாவில் பரிபூரணமாகப் பதிப்பான். இது இல்லாமல் இந்த ஜீவாத்மாவுக்கு ஜென்ம ஸாபல்யம் கிடைக்காது. படைத்தவன் மட்டுமே செய்யும் விந்தை இது.

paarkadal kadaithal

🛕 இந்த நம்பிக்கையை, தெய்வீக ரகசியத்தை இந்த உலகிற்கு எடுத்தியம்பவே அமையப் பெற்றவை ஜோதிர்லிங்கமும் மஹாசிவாத்திரி வைபவமும். மஹாசிவராத்திரி தொடர்பாக பல புராணங்கள் இருந்தாலும், பிராதானமாக சொல்லப்படும் புராணம் ஜோதிர்லிங்கங்களைப் பற்றியது. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் வாசுகி சர்ப்பத்தை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தபோது வெளிவந்த அமிர்தத்தை அசுரர்கள் பறித்துச் சென்றார்கள். அப்படி செல்லும்போது பூமியில் சிதறிய அமிர்தத் துகள்களே பின்னர் ஜோதிர்லிங்கங்களாக வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கால கட்டங்களில் உத்பவித்தன என்று புராணங்கள் கூறுகின்றன.

🛕 அமிர்தம் உண்டால் பிறப்பு இறப்பு இல்லாத முக்தி நிலை கிடைக்கும். இதை அடைவதற்கே தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் போட்டி நடந்தது. பூலோகத்தில் இந்த அரிய வரத்தை மானுடர்களுக்கும் மற்ற உயிரனங்களுக்கும் கிடைக்கச் செய்து அவர்களும் இன்புற்று இறைப்பயன் அடையவே அம்ருத வடிவாக ஜோதிர்லிங்கங்கள் உருவாகின்றன.

🛕 நாடி வந்தோருக்கு கோடி நலம் வழங்கும் அற்புத அமைப்பு இவை. வணங்குபவர்களுக்கு துக்க நிவர்த்தி, பூஜிப்பவர்களுக்கு சாபவிமோசனம், உணர்பவர்களுக்கு ஜென்ம சாபல்யம் அளிப்பவை. முயல்வோருக்கு முக்தி வரம் தருபவை. அனைத்து உயிரினங்களுக்குமே ஜென்ம ஸாபல்யம் அளிக்கவல்ல ஒரு இயற்கையான சூட்சும அமைப்பு. சிந்தனைகளை தூய்மைபடுத்தி, தெய்வீக அனுபவங்களை சூட்சுமத்தில் உணரச் செய்யும் தேவாம்ருதம் இது.

ஜோதிர்லிங்கானி சாயம் பிராதா படேன்நரஹ
சப்த ஜென்ம க்ருதம் பாபம் ஸ்மறனேன வினாஸ்யதி

🛕 என்று ஜோதிர்லிங்க பெருமைகளை ஷிவபுராணம் அழகாக உணர்த்துகிறது. இதன் பொருள், ஜோதிர்லிங்கத்தை அதிகாலையிலும், மாலையிலும் பூஜிப்பவர்களுக்கு ஏழு ஜென்ம சாப, பாப விமோசனம் கிடைக்கும். ஜோதிர்லிங்கங்கள் வித்யாசமானவை. இயற்கையாகவே தோன்றுபவை. தேவாம்ஸம் கொண்டவை. மெய்ஞானத்தை சூட்சுமமாக போதிப்பவை. மஹாசிவராத்திரி அன்று மட்டுமே அவை தோன்றுகின்றன. மனிதனால் உருவாக்கப்படுபவை அல்ல அவை. இப்படித் தானாக, இயற்கையாகத் தோன்றுவதை, உதயமாவதை ‘உத்பவம்’ என்கிறோம்.

🛕 ஏற்கனவே நிர்மாணம் செய்யப்பட்ட இடத்தில், உலகமே வழிபடும் மஹாசிவராத்திரி அன்று ஏற்கனவே கணிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட புண்ணிய திதியில், இயற்கையாக, பஞ்சபூதத் தத்துவங்களின் அடிப்படையில், தானாக, தன்னிச்சையாக, சர்வ வேதநியமங்களோடு, யாகங்களும், ஹோமங்களும், மந்திரங்களும் முழங்க, முப்பத்துமுக்கோடி தேவர்கள் வணங்க உத்பவமாகும் ஆற்றல்மிக்க அம்ஸங்கங்கள் கொண்டவை ஜோதிர்லிங்கங்கள். அப்போது பரம்பொருளே சித்தனாகி, சித்தனே சிவமாகி, அருவமே உருமாகி, குருவாகி, பூமியையும் விண்ணையும் ஜோதியாக இணைத்து, நீரோட்டம் கொண்ட கல்லுக்கு உயிரோட்டம் தந்து, அந்த அதிசயக்கல் பூமியிலிருந்து தன்னிச்சையாக ஜோதிர்லிங்கமாக வெளிவருவதை லிங்கோத்பவம் என்கிறோம். ஜோதியாக வெளிப்பட்ட இந்த இயற்கை லிங்கத்தை ‘ஜோதிர்லிங்கம்’ என்கிறோம்.

🛕 ஜோதிர்லிங்கங்கள் உயிரினங்களில் ஒளிந்து இருக்கும் இறைநிலையை பிரகடனப்படுத்துபவை.. ஆத்மபோதனை அளிப்பவை. வேதாந்த பிரம்ம தத்துவத்தை உணர்த்துபவை. விஞ்ஞான மெய்ஞான ரகசியங்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கும் எளிய பக்தி சாதனங்கள்.

🛕 தோற்றத்தில் சாதாரண லிங்கத்தைப்போல உருவ ஒற்றுமை கொண்டிருந்தாலும், ஜோதிர்லிங்கங்கள் வெவ்வேறு வடிவங்களில் உத்பவம் கொள்பவை. இந்தியாவில் தோன்றியுள்ள ஒவ்வொரு ஜோதிர்லிங்கங்களும் வெவ்வேறு வடிவங்களில் வித்யாசமாக உத்பவித்துள்ளன. அந்தந்த ஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்தால் புரியும். உதாரணமாக, கேதார்நாத் ஜோதிர்லிங்கம் ஒரு குட்டி இமய மலையைப்ப போலவேத் தெரிகிறது. நமக்கு பழக்கப்பட்ட கூம்பு வடிவமோ, ஆவுடையோ இல்லை. அதே போல நாசிக்கில் உத்பவித்துள்ள திரியம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம் ஆவுடைக்கு கீழ்புறத்தில், தன் கூம்பு வடிவத்தை பூமிக்குள் உட்புறமாக கொண்டுள்ளது!

🛕 ஜோதிர்லிங்கங்கள் தொடர் உயிரோட்டம் கொண்டவை. ஜீவகாந்த சக்தி கொண்டவை. பஞ்சபூதங்களை தன்னுள் அடக்கி, சூட்சுமத்தில் ஆதிரூபமாக, அருவமாக, ஆத்ம ஜோதியாக காட்சி தந்து, வழிபடும் பக்தர்களுக்கு சிந்தனைகளை செம்மை படுத்தி, ஆசியாக பிரதிபலிக்கும் அற்புத சக்தி கொண்டவை. பஞ்சபூத பரிமாண சக்தியுடன் அண்டசராசரங்களிலும் வியாப்பித்து இருப்பவை.

🛕 நினைத்தாலே நிம்மதி தருபவை, பார்த்தாலே பரவசம் தருபவை.

🛕 பூமிக்குள் மறைந்திருக்கும் அம்ருதம் நீரோட்டம் கொண்ட அதிசய கல் வடிவம் கொண்டு உயிரோட்டம் கொண்டு மேலெழுந்து ஆத்ம ஜோதியாகக் காட்சி தர பரமனே ஜோதிர்லிங்கங்களில் நிரந்தரமாக குடியிருப்பதாக நம்பிக்கைப் பிரகடனப் படுத்துபவை. ஸ்தலபுராணங்கள் இவைகளின் பெருமைகளை ஓரளவு பறைசாட்டினாலும் உத்பவ ரகசியங்கள் பல மறைந்துள்ளன. ஆனாலும் தலைமுறை தலைமுறையாக சொல்லபட்ட தகவல்களை சுமந்து ஜோதிர்லிங்கங்கள் இப்போதும் மனித குலத்துக்கு வழிகாட்டியாக, ஆன்மிகக் கோலோச்சி வருகின்றன.

🛕 உத்பவம் என்ற சொல்லே அசாதாரணமானது. இயற்கையாகவே, இயல்புக்கு எதிராகச் செயல்படும் அபார சக்தி இது! உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு சிசு உருவாக எவ்வளவு உத்வேகம் தேவைப்படுகிறது? இதில் எவ்வளவு அதிசயங்கள் புதைந்துள்ளது என்பதை தீர்க்கமாக யோசித்தால் புரியும்.

🛕 எப்படி ஆண் விந்து உயிர்பெற்று பெண் கருவறையில் உத்பவித்து,வளர்ந்து, இதுநாள் வரையில் தன் ஜீவகாந்த பிணைப்பில் இருந்த கருவை, காலம் கனிந்ததும் எவ்விதம் ஓர் தாய், தன் உடல் காந்த சக்திக்கு எதிராக வெளியேற்றி, அந்த சிசுவை பிரசவிக்கிறாளோ அதுபோல இந்த தேவாம்ஸம் கொண்ட கல் உயிர் பெற்று, ஜீவகாந்த சக்தி பெற்று, பிரபஞ்ச சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமிக்கருவையை விட்டு அகன்று, அருவம் உருவம் கொண்டு, பஞ்சபூதங்களை உள்ளடக்கிய ஆத்மஜோதியாக, ஜோதிர்லிங்கம் உத்பவிக்கிறது.

🛕 நம் உடலுக்குள் நடக்கும் இது போன்ற பல இயற்கையான அதிசயங்கள்தான் நம்மை சுற்றிலும் நடக்கின்றன. நம்மைச் சுற்றி நடக்கும் இயற்கை தத்துவங்கள்தான் நம் உடலுக்குள்ளும் நடக்கின்றன. அந்த வகையில் ஜோதிர்லிங்கங்களும் உத்பவங்களும் நமக்கு கிடைத்துள்ள மாபெரும் வாழ்க்கைத் தத்துவங்களை போதிக்கும் இயற்கை ரகசியங்கள்!

🛕 நவீன விஞ்ஞானமும் இந்த அசாதாரண நிகழ்வுகளுக்கு ஓரளவு விளக்கம் அளிக்கத்தான் செய்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட வேளையில், பூமி தன் புவிஈர்ப்பு விசையை இழந்து கற்களை மிதக்கசெய்யும் தன்மையைப் பெறுகிறது. அத்தகையத் தருணங்களில்தான் பூமிக்குள் மறைந்திருந்த அமிர்தத் துகள்கள் ஜோதிர்லிங்கங்களாக உத்பவிக்கின்றன. புவிஈர்ப்பு விசை இழக்கும் தத்துவ அடிப்படையில்தான் அக்காலத்தில் பிரம்மாண்ட கற்கோவில் கோபுரங்களும் மண்டபங்களும் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்ற விளக்கமும் நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில்தானே உள்ளது!

🛕 இந்தத் தத்துவங்களை விளக்கும் வகையில் தேவாம்ஸம் வாய்ந்த, நீரோட்டம் கொண்ட கல் உயிரோட்டம் பெற்று, ஜீவகாந்த பிரபஞ்ச சக்தியால் ஈர்க்கப்பட்டு, ஜோதிர்லிங்கமாக உத்பவம் ஆகிறது. இது ஒரு விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்த ஒரு இயற்கையான நிகழ்வு என்று நமக்கு புரிகிறது அல்லவா?

🛕 இந்தியாவில் காணப்படும் ஜோதிர்லிங்கங்களின் பின்னணியும் அவை தோன்றிய விதங்களும் இடங்களும், காலங்களும், யுகங்களும் வேறு. உண்மையில் ஒவ்வொரு ஜோதிர்லிங்க உத்பவத்துக்கும் பின் பல தெய்வீக சரித்திரங்களும் ரகசியங்களும் புதைந்துள்ளன. இதன் பின்னனியில் ஒரு ஜகத்குரு முன்னின்று நடத்திக் காட்டியிருக்க வேண்டும். இந்த வரலாற்று உண்மையின் சங்கிலித் தொடராகவே, பதினேழு ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள சென்னப்பமலையில் நடந்தேறிய இந்த ஜோதிர்லிங்க உத்பவம் இந்த உண்மைகளை இந்த உலகிற்கு மீண்டும் உணர்த்தியுள்ளது. இந்த அற்புத வைபவம், ஜோதிர்லிங்கங்களின் வரிசையில் பதின்மூன்றாவதாகவும், பல புராண, சரித்திர நிகழ்வுகளின் ஒரு தொடர்ச்சியாகவே நிகழ்ந்துள்ளது.

🛕 புராண இயற்கைத் தத்துவங்களையும் மெய்ஞான விஞ்ஞான விளக்கங்களையும் இக்காலச் சந்ததியினர் புரிந்துகொள்ளவும், அவர்கள் தாங்களே நேரடியாக கண்டு பரவசப்படும் வகையில் மீண்டும் இந்த உலக அரங்கில், ஆயிரக்கணக்கான வருடங்கள் கழித்து நடத்தப்பட்ட ஒரு தெய்வீக நிகழ்ச்சி இது.

🛕 பல யுகங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமனால் ராமலிங்கேஸ்வரர் ஜோதிர்லிங்கம் உருவாகியது. இங்கே 2002 ஆம் ஆண்டு ஸ்ரீ பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர்ஜோதிர்லிங்கம் தொடர்ந்து வரும் உத்பவ வரிசையில் 13 வது ஜோதிர்லிங்கமாக உத்பவித்தது. இது தமிழ்நாட்டின் இரண்டாவது ஜோதிர்லிங்கம்.

🛕 அகில உலகமே வியக்கும் வகையில் இந்தத் திருத்தலத்தில் ஐக்கியம் கொண்டுள்ள, பலயுகங்கள் கண்ட மஹாசித்தர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கோடிதாத்தாஸ்வாமிகள் இங்கே பிரம்மகுருவாக முன்னின்று இந்த உத்பவ நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார். இந்த நிகழ்வு திடீரென்று நடந்தது அல்ல. சென்னப்பமலையில் நிகழப்போகும் ஜோதிர்லிங்க உத்பவத்துக்கு பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே பலவிதமான தெய்வ காரியங்களும் முன்னேற்பாடுகளும் இங்கே நடந்துவந்துள்ளன.

🛕 சென்னப்பமலை ஸ்தலபுராணங்களின் படி, முன்னொரு காலத்தில் பரமேஸ்வரனின் உடலில் அங்கம் வகிக்கும் அகிலாண்டேஸ்வரி(அம்பிகை), ‘தென் கைலாயம்’ என்று போற்றப்படும் பனங்காட்டுப் பிரதேசமாக விளங்கிய இந்த சென்னப்பமலைத் திருத்தலத்தில் கடும் தவமிருந்தாள். இந்தப் பூவுலகில் உள்ள 84 லட்சம் ஜீவராசிகளுக்கு மட்டுமல்லாமல், சூரியன், சந்திரன், தேவேந்திரன், குபேரன் ஆகிய தேவர்களுக்கும் சாப விமோசனம் அளிக்கும் வகையில் சென்னப்பமலைத் திருத்தலத்தில் அருள் பாலிக்க பரமேஸ்வரனிடம் வேண்டினாள்.

🛕 தவத்தை மெச்சிய பரமேஸ்வரன், இதே ஸ்தலத்தில் பின்னொரு காலத்தில் பிரம்மகுரு ஒருவரால் மஹாசிவராத்திரி அன்று ‘தானே ஜோதிர்லிங்கமாக இங்கே உத்பவமாகி, தன்னை வழிபடும் அனைத்து ஜீவராசிகளும் ஜென்ம சாப விமோசனம் பெறலாம்’ என்று வரம் அருளினார். இந்த அதிசய நிகழ்வை நடத்திக்காட்ட தெய்வ அம்சங்கள் பொருந்திய ஒரு மானிடன் தேவை என்று எண்ணிய அம்பிகை, இதே பனங்காடு பிரதேசமான, தற்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாட்டூர் கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீ ராமநாதன் என்கிற, ஒரு சாமானியாராகப் புலப்படும் ஆனால் தேவாம்ஸங்கள் பொருந்திய ஒரு இளைஞனைத் தேர்வு செய்தாள். இந்த இளைஞனுக்கு தீட்சை அளிக்க ஒரு மஹா குரு தேவை அல்லவா? 1994 ஆம் ஆண்டு வரை கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே புரவிப்பாளயம் ஜமீன் அரண்மனையில் ஐக்கியம் கொண்டிருந்த, அருவ நிலையிலேயே சஞ்சரிக்கும், பலயுகங்கள் கண்ட, முக்காலமும் உணர்ந்த, ‘கோடிதாத்தா’ (கோடிசாமி) என்கிற ஞானகுருதான் இந்த பணிக்கு ஏற்ற குரு என்று முடிவு செய்து, அவரை நாடி, தான் தேர்வு செய்துள்ள சீடனுக்கு குருவாகி ஆட்கொண்டு தீட்க்ஷை அளிக்க முன்மொழிந்துப் பணித்தாள். ‘கூடுவிட்டு கூடு பாயும்’ (பரக்காயபிரவேசம்) தெய்வ சித்தாந்த அடிப்படையில், தன் சீடன் உடலுக்குள் ஐக்கியம் ஆகி, பிரம்ம தீட்சை அளித்து, அருவம் உருவம் பெற்று, சீடனே குருவாகி, இந்த ஜெகத்குரு இங்கே ‘கோடி தாத்தாஸ்வாமி’யாக, முன்னின்று சென்னப்பமலைத் திருத்தலத்தில் ஜோதிர்லிங்க உத்பவ நிகழ்வை நடத்திக்காட்டினார். அன்று குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் மாவட்ட உயர் அதிகாரிகளும் இந்த அற்புத நிகழ்வை கண்டு பரவசம் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு பரவசம் பெற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் இந்தக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன்.

🛕 பரமேஸ்வரன் விண்ணிலும் மண்ணிலும் ஜோதியாகத் தோன்றி, தெய்வீகக் கல்லில் ஐக்கியம் கொண்டு, ஜோதிர்லிங்கமாக தோற்றமெடுத்து, அனைத்து உயிரினங்களுக்கும் சாப விமோசனம் அளிக்க இத்திருத்தலம் உருவானது. அம்பிகையின் தவத்துக்கும் அன்று விடை கிடைத்தது. சகல உயிரினங்களோடு தேவர்களையும், தேவகணங்களையும் இங்கே பாகுபாடின்றி இணைத்துச் சாப விமோசனம் அளிப்பது இந்த ஸ்தலத்துக்கு மேலும் சிறப்பு.

🛕 சித்தர்களும், ஞானிகளும் இங்கே தங்கி இங்கே ஒரு திருத்தலம் உருவாக வழிமுறைகளை செய்துவிட்டுச் சென்றுள்ளனர். ஒரு யுகத்தில் பாதரோம ரிஷி குதம்பை முனியாக இங்கே பசுக்களை மேய்த்து வந்தாராம். பின்னர் அவரே பாம்பாட்டி சித்தராக ஒரு காலத்தில் இங்கே தங்கி இருந்ததாகவும் பின்னொரு காலத்தில் பிரம்மகுரு கோடிதாத்தாஸ்வாமி நடக்கவிருக்கும் ஜோதிர்லிங்கோத்பவத்துக்கு வழிகாட்டுவார் என்பதும் ஸ்தல வரலாறு.

🛕 சுமார் 1600 வருடங்களுக்கு முன், அத்வைத சித்தாந்த சிற்பி ஆதிசங்கராச்சாரியார் ஒரு முறை கைலாயம் செல்லும் வழியில், இந்த சென்னப்பமலைத் திருத்தலத்தில் ஏழு நாட்கள் தங்கி, பரமனே படுத்து மோனத்தவத்தில் இருப்பது போல காட்சி தரும் இந்த மலையின் மேல் உள்ள பன்னீர் தீர்த்தம் குளத்திலிருந்து தீர்த்தம் கொணர்ந்து பூஜித்ததாகவும் ஸ்தலவரலாறு கூறுகிறது.

🛕 800 வருடங்களுக்கு முன் வாழ்ந்த சைவக்குரவர்களான சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் திருஞானசம்பந்தர் இந்த திருத்தலத்தை பற்றிப் பல பாடல்களில் விவரித்து உள்ளனர்:

காட்டூர் கடலே, கடம்பூர் மலையே,
கானப்பேரூராய், கோட்டூர் கொழுந்தே,
அழுந்தூர் அரசே, கொழுநல்கொல்லேரே,
பாட்டூர் பலரும் பரவப்படுவாய், பனங்காடு ஊரானே,
மாட்டூர் அரவா மறவாது உன்னை பாட பணியாயே!”

இன்னொரு பாடலில்,

செங்கயலோடு சேல்சேறுச்செய, சீரியாழ் முரல்
தேனினத்தோடு பங்கயம் மலரும் புறவார்
பனங்காட்டூர் கங்கையும் மதியும் கமழ்சடை
கேண்மையாலோடு கூடிமான் மறி அங்கையாடலனே அடியார்க்கு அருளாயே!”

இன்னுமொரு பாடலில்,

விடையின் மேல் வருவானை, வேதத்தின் பொருளானை,
அடையில் அன்புடையானை யாவர்க்கும் அறிவொண்ணா
மடையில் வாலைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்
சடையில் கங்கை தரித்தானை சாராதார் சார்வென்னே”

🛕 இந்த இடம் கடம்பூர் மலைக்கு அருகில் பாட்டூர் என்ற இதே பெயரில் ஒரு காலத்தில் பனங்காடு நிறைந்த கானக க்ஷேத்ரமாக இருந்துள்ளது. கடம்பூர் (தற்போது கடாம்பூர்) மலையும் இந்த இடத்துக்கு மிக அருகாமையிலேயே உள்ளது.

🛕 அப்போதே கங்கையையும் மதியையும் சுமந்த பரமேஸ்வரன் குடிகொண்ட க்ஷேத்ரமாக இந்த ஸ்தலம் திகழ்துள்ளதாக இந்த பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ‘வேத சாஸ்திரங்களுக்கு பொருள் தரவும், அனைத்து ரகசியங்களுக்கான விடை தரவல்லது இத்திருத்தலம்’ என்று அப்போதே வர்ணித்துள்ளார் சுந்தரர்.

🛕 இந்தத் திருத்தலம் தென்கயிலாயமாக போற்றப்பட்டு வந்துள்ளதும், அன்றும் இன்றும் தெய்வீக மணத்துடன் காலங்காலமாக திகழ்ந்து வந்துள்ளது என்பதும் தெரிகிறது. கயிலையில் குடிகொண்டிருக்கும் பார்வதி பரமேஸ்வரன், இங்கே ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பொன்முடிசூர்ய நந்தீஸ்வரன் என்ற ஜோதிர்லிங்க வடிவில் போற்றி அழைக்கப் படுகிறார்கள். உலகத்துக்கெல்லாம் ஒளிதந்து, உருவம் தரும் சூரியபகவானே இங்கே தன் சாபம் நீங்க நந்தி வடிவில் ஒவ்வொரு நாளும் வழிபட்டு செல்வதாக ஐதீகம்.

🛕 இந்த ஸ்தலத்தில் உருவாகியுள்ள லிங்கத்துக்கு ‘பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர்’ என்ற புராணப் பெயர் நம்மை யோசிக்க வைக்கிறது. இந்த வையகத்தைக் காக்கும் பரமேஸ்வரன் பொன்முடி தரித்தவர். சூரியரும் நந்தியும் சேர்த்த பெயர் காரணத்தையும் அறிந்துகொள்வது அவசியம்.

🛕 வழிபாட்டுக்கு ஒரு சிறந்த உதாரணம் நந்தி. ஒரு காலத்தில் ஷிலதமுனி புத்ரவரம் வேண்டி பரமேஸ்வரனைத் தொழுதார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடும்தவம் புரிந்தார். அவரது பக்தியை மெச்சி, பரமேஸ்வரன் தோன்றி முனிக்கு புத்ரபாக்கியம் தந்தார். பிறந்த குழந்தைக்கு ‘நந்தி’ என்று பெயர் சூட்டி அவனுக்கு அத்துணை ஞானத்தையும் போதித்தார். ஒரு முறை இவர்கள் குடிலுக்கு விஜயம் செய்த இரு முனிவர்கள், நந்திக்கு ஆயுள் பலம் குறைவாக இருப்பதாகக் கணித்துச்சென்றனர்.

🛕 கவலையுற்ற தந்தைக்கு தைரியம் தந்து, நம்பிக்கையூட்டி பரமேஸ்வரனை நோக்கி கடும் தவம் புரிந்தான் சிறுவன் நந்தி. மெச்சிய ஐயன் தன் முன்னே தோன்றிய போது, ‘பரம்பொருளுடன் நித்யமும் இருக்கும் பாக்கியம் தர’ வேண்டினான். ஈசனும் மகிழ்ந்து வரம் தந்து, தன்னுடனேயே தன் குடும்பத்தில் ஒருவனாக வைத்துக்கொண்டார். நந்தியை ஒரு காளைமாடு வடிவமாக்கித் தன் வாகனமாகவும் வைத்துக்கொண்டார்.

🛕 ஆலயங்களில் கருவறையில் உள்ள லிங்கத்துக்கு எதிரில் நந்தி பணிவுடன் அமர்ந்து ‘மோன’ தவத்தில் இருக்கிறார். இந்தத் தவநிலையோடு விழிப்பு, பணிவு, பொறுமை, பக்தி, அமைதி, சாந்தம், எதையும் எதிர்பார்க்காமல் தன் ஐயன் கட்டளைக்காகக் காத்திருப்பு போன்ற அரிய குணாதிசயங்களையும் கூடவே வெளிப்படுத்துகிறார்.

🛕 வழிபாட்டு முறைகளை நாம் நந்தியிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்பதே இதன் தத்துவம். சமஸ்க்ருத மொழியில் நந்தி என்றால் ‘ஆனந்தம்’ என்று பொருள். தமிழில் ‘நீக்குவது’, பெருக்குவது’ என்றும் பொருள்படும். பலம், ஆக்ரோஷம், வேகம், திறமை போன்றவை கலந்த காளைமாடு உருவமாக தோன்றினாலும், அமைதியும், பொறுமையும், ஆனந்தமுமே சக்தி என்பதை இந்த உலகத்துக்கு எடுத்துக் காட்டுகிறார் நந்தி. காளைமாடு உருவத்தில் இருந்தாலும் நந்தி அருவமாக தன் ஐயனை எப்போதும் தியானித்து வழிபட்டு வருகிறார்.

🛕 பிரார்த்தனைக்கும் தியானத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றியும் நாம் இங்கே தெரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு நந்தியைப் பற்றி நன்குத் தெரிந்துக் கொள்ளவேண்டும். பிரார்த்தனை வழியாக கோரிக்கைகளுடன் பரம்பொருளுடன் நாம் மனஸால் பேசுகிறோம். தியானநிலையில் நாம் பரம்பொருளின் பதிலை கேட்பதற்காக அமைதியுடனும் பொறுமையுடனும் காத்திருக்கவேண்டும்.

🛕 அமைதியோடும், பொறுமையோடும் எப்படிக் காத்திருப்பது என்ற குணத்தை நந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் திருவாலயங்களில் நந்தி அருகில் அமர்ந்து, தியான நிலையில் பரமனின் பதிலுக்காக பொறுமையுடன் காத்திருக்க பழகிக்கொள்ளும் நடை முறையை கொண்டு வந்துள்ளனர்.

🛕 ஞானத்தின் வடிவாகவும், நம்பிக்கைச் சின்னமாகவும், வழிபாட்டு வழிமுறைகளுக்கு முன்உதாரணமாகவும் விளங்கும் நந்தியை இந்த உலகத்துக்கு மீண்டும் பிரதானப்படுத்தும் வகையில்தான் சென்னப்பமலையில் உத்பவமாகி உள்ள பரமேஸ்வரன் ‘ஸூர்யநந்தீஸ்வரர்’ என்று அழைக்கப் படுகிறார். எந்த கோவிலிலும் இல்லாத ஒரு தனி சிறப்பு இங்கே நந்திபகவானுக்கு.

🛕 தினமும் சூரியனே நந்தி வடிவில் இங்கே வந்து ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெறுவதாகவும், தனக்கே சக்தியை பெற்றுக்கொள்வதாகவும் கூறுகிறது ஸ்தலபுராணம். அப்படிபட்ட சூரியனுக்கு அப்படி என்ன சாபம் இருக்கக்கூடும்?

🛕 உயிரினங்கள் நச்சு நீங்கி பூத்துக் குலுங்க உயிர் சக்தி தருகிறார் சூரிய பகவான். சந்திரன் மனதுக்கு இதம் தந்து தூக்கம் தருகிறான். சூரியன் காலையில் உயிரினங்களைத் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்புகிறான். அவர் தரும் ஒளி உயிரினங்களுக்கு உயிர்சக்தி தருகிறது. ஆனால் சிலவற்றை சுட்டெரிக்கவும் அல்லவா செய்கிறது. அப்படி பாதிக்கப்படும் உயிரினங்கள் சூரியனுக்கு சாபம் இடுகின்றன. நல்லது செய்வதில் சில கெடுதலும் சேர்ந்துவிடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்த சாபங்களை ஒவ்வொரு நாளும் களைந்து புத்துயிர் பெறவே அவர் இங்கே தினமும் வழிபாடு செய்கிறார்.

அன்றாடம் ஆதவனைத் தொழுதால் சர்வ மங்களம் கிடைக்கும், அனைத்து பாபங்களும் விலகும், சோக சிந்தனைகளை அகற்றி செம்மைபடுத்தப்டும், ஆயுள் பெருகும் என்பது இங்கே பிரதானம்.

‘சர்வமங்களம் மாங்கல்யம், சர்வபாபவிநாசனம்,
சிந்தா சோகப்ரசமனம், ஆயுர்வர்தனமுத்தமம்’

🛕 என்கிறது அகஸ்தியர் அருளிய ‘ஆதித்ய ஹ்ருதயம்’.

🛕 சூரியனும், நந்தியும் இந்த உண்மையைதான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றனர். அதுமட்டுமல்லாமல், சாபம் நீங்கப் பெற்ற இந்திரன், குபேரன், சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய நான்கு தேவர்களும், தாங்கள் பெற்ற இன்பம் இந்த வையகமே பெற்று மகிழ, இந்தத் திருவாலயத்தை நாடி வரும் பக்தர்களையும் ஆசீர்வதிக்கிறார்கள். இந்திரன் ஆனந்தமும், சந்திரன் மன அமைதியையும், குபேரன் தனம் பெறவும், சூரியன் சிந்தனைகள் செயல்வடிவம் பெறவும் ஆசீர்வதிக்கின்றனர். ஆத்மஜோதியை உணர, பிறவிப்பயன் பெற, ஜென்ம சாப விமோசனம் அளிக்கிறான் இங்குக் ஐக்கியம் கொண்டுள்ள பரம்பொருள். ஒரு வழிபாடு, கோடி ஆசீர்வாதம்!

🛕 தேவ வழிபாட்டுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுமே வழிபட, சாப விமோசனம் பெற, தோஷங்கள் நிவார்தி பெற, சங்கடங்கள் தீர, தீமைகள் அகல, சந்தோஷமும் சந்ததியும் பெருகவும் சத்குருவின் ஆசி பெற இந்த அரிய வாய்ப்பை, எளியவகையில் சென்னப்பமலை நமக்குத் தந்துள்ளது.

🛕 சென்னப்பமலையில் உள்ள ஜோதிர்லிங்கமும், நந்தியும், ‘அருவமும் உருவமும்’ கலந்த உன்னத நிலையை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. உருவங்களுக்குள் புதைந்துள்ள அருவ தத்துவத்தை உணரும் மனப் பக்குவத்தை நமக்கு அளிக்கிறது இந்தத் திருத்தலம். இங்கு ஐக்கியம் கொண்டுள்ள, அருவநிலையிலே சஞ்சரிக்கும் ஜகத்குரு கோடிதாத்தாஸ்வாமி அவர்களும் அவரது சீடர் ஸ்ரீ ராமநாதஸ்வாமிகளும் ‘அருவமே உருவமாகி’ சீடனும் குருவும் ஓருடலில் கலந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகின்றனர். உருவமோடு அருவமும் சேர்ந்த உன்னத நிலையை வழிபட்டுப் பிறவிப்பயன் அடைதலே இங்கே பிரதானம். இதுவே சென்னப்பமலையின் சிறப்பு. உலகில் எங்குமே காணமுடியாத தனிச் சிறப்பு!

🛕 ஒவ்வொரு ஜோதிர்லிங்கத் திருவாலயமும் அந்த ஸ்தலத்துக்கு ஏற்றவகையில் ஒரு சிறப்பு வழிபாட்டு முறைகளையும், நியதிகளையும் கொண்டவை. அந்தவகையில் சென்னப்பமலை ஜோதிர்லிங்க வழிபாட்டு வழிமுறைகளும் எங்கும் இல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவை.

🛕 இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரன், கற்றவன், கல்லாதவன், ஆண், பெண், குழந்தைகள், வயோதிகர்கள், ஜாதி, மதம் போன்ற எந்த பேதமும் இல்லாமல், அனைத்து உயிரினங்களும் ‘நாளும்,பொழுதும்’ வளமும் பெற பரமனே அமைத்துக்கொடுத்துள்ள வரம்தரும் ஸ்தலம் இது.

🛕 இங்கே இருவிழி மூடி, மன விழி திறந்து பரமனை நினைத்து வழிபட்டாலே போதும், நல்ல எண்ணங்கள் பிரதிபலித்து, செம்மை பெற்று செயல்வடிவம் பெற பரிபூர்ண ஆசீர்வாதம் பெறலாம். நினைத்த காரியம் கைகூடும். தமையன் (ஈசன்) நமக்குள் வந்து காதோடு ரகசியங்கள் சொல்வான்.

🛕 எண்ணங்கள் ஜீவகாந்த சக்தி கொண்டவை. இந்த பூமி ஒரு பெரிய காந்த சக்தி. ஜோதிர்லிங்கமும் ஒரு பிரம்மாண்ட ஜீவகாந்த சக்தி. இந்தத் திருவாலயத்தில் நாம் மனஸால் வணங்கும்போது, நம் எண்ண அலைகள் தூய்மைபடுத்தப்பட்டு, அவை உயிரோட்டம் கொண்ட ஜோதிர்லிங்கத்தின் மேல் விழும்போது, மீண்டும் நம்மில் பிரதிபலிக்கபட்டு நம்மை செம்மை படுத்துகிறது. ஜென்ம ஸாபல்யம் பெறுகிறோம். இந்த ஜோதிர்லிங்கத்தை ஒரு முறைத் தொட்டு வணங்கினாலே நம் அங்கமும், சிந்தனைகளும் செம்மை படும். அமைதியும் ஆனந்தமும் அரவணைக்கும்.

🛕 எந்தத் திருவாலயத்திலுமே இல்லாத இன்னொரு சிறப்பு இங்கே உண்டு. சென்னப்பமலையில் பக்தர்கள் தாங்களே கருவறைக்குள் சென்று இந்த ஜோதிர்லிங்கத்தைத் தொட்டு வணங்கலாம். ஏழுமுறை தொட்டு வழிபடுவோருக்கு ஜென்ம சாப விமோசனம் அப்போதே கிடைக்கும். சகல தோஷமும் நிவார்தியாகும். சங்கடங்கள் தீரும்.

🛕 ஆடை சுத்தமாக வந்து இங்கே வழிபடுபவர்களுக்கு, அங்கமும் ஆன்மாவும் சுத்தியாகும். சத்குருவின் ஆசியும் கிடைக்கும் என்பது இங்கே சாஸ்திரம். பொருள் எட்டும் போதனைகள் கிடைக்கும். சிவம் எட்டும் சிந்தனைக்குள் வந்து, நல்ல எண்ணங்களை தந்து அவைகளை செயலாக்கி, நம்பிக்கை பாதையில் தைரியத்துடன் செல்ல ‘உத்வேகம்’ கிடைக்கும்.

🛕 இந்த வளாகத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ பொன்முடி சூரியநந்தீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகையைத் தொழுபவர்களுக்கு, சந்தான பாக்கியம், சரஸ்வதி பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். முயல்வோருக்கு முக்தியும் கிடைக்கும்.

🛕 ஒன்பது பொழுதை மூன்றாய் பிரித்து பத்மாசனத்தில் அமர்ந்து இந்த ஜோதிர்லிங்கத் திருக்கோவில் வளாகத்தில் தியானமிருக்கும்போது, தன்னை மறந்த நிலையில் தமையன் நமக்குள் வந்து ஜென்ம சாப விமோசனம் தருவான் என்ற நம்பிக்கைக் கல்வியை இந்த உலகத்துக்கு பறை சாட்டும் ஸ்தலம் சென்னப்பமலை. வழிபாடு முடிந்து எதிரில் உள்ள மண்டபத்தில் இடப்புறம் தலைசாய்த்து உட்கார்ந்து நல்ல சகுனங்கள் தெரிவதை உணரலாம்.

🛕 இந்த திருவாலயத்துக்கு மற்றுமொரு தனி சிறப்பும் உள்ளது. நாட்டில் உள்ள எந்த கோவிலிலும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு. மஹாசிவராத்திரி அன்று ஜோதிர்லிங்கத்துக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பசும்பால் மற்றும் வில்வபத்ரம் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். தொட்டு பூஜிக்கலாம். அன்று நடக்கும் ஹோம, யாக வழிபாடுகளிலும் அன்னப் பிரசாத நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளலாம். மஹாசிவராத்திரி அன்று சென்னப்பமலையில் நிகழவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் குடும்பத்தோடும், நண்பர்களோடும் கலந்துகொண்டு இந்த ஆன்மிக அதிசயத்தை உணரலாம்.

Also, read: Sri Akshayapureeswarar Temple History in Tamil

நன்றி
திரு. வெ. நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)

One thought on "மஹாசிவராத்திரி மஹத்துவம் – 13வது ஜோதிர்லிங்கம்"

  1. THULASIRAMSINGH says:

    Om Namasivaya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • October 19, 2021
திருக்கோபுரங்களிலுள்ள கீர்த்தி முகத்தின் வரலாறு
  • October 19, 2021
பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்
  • October 17, 2021
சிந்து சமவெளி முத்திரை கூறும் M-1390A யானையின் சிறப்பு