- September 24, 2024
சிவம் என்ற சொல் ஒரு மகா மந்திரம். இதற்குள் அனைத்தும் அடங்கும். சிவனே முழுமுதல் கடவுள். ஆதி அந்தம் இல்லாதவர் என்பதால் பரமேஸ்வரன் என்றும், எந்த காலத்திலும் நிலையாக உள்ளதால் சதாசிவன் என்றும் நடனத்தின் இருப்பிடம் என்பதால் நடராஜன் என்றும், தெய்வங்கள் அனைத்திற்கும் தலைவன் என்பதால்
மகாதேவன் என்றும், கங்கையை தலையில் சுமந்ததால் கங்காதீஸ்வரன் என்றும், ஜகத்திற்கே ஈஸ்வரன் என்பதால் ஜெகதீஸ்வரன் என்றும் எத்தனையோ நாமங்கள்.
ஓம் என்ற பிரணவமந்திரத்தை அடிப்படையாக கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து விதமான அருளை அளிக்கிறார். சிவம் என்றால் முழுமை, இன்பம் என்று பொருள்.
சிவம் என்பதில் –
“சி” என்பது சிகாரம் (அறிவு),
“வ” என்பது வகாரம் (மனது),
“ம்” என்பது மகாரம் (மாயை).
அறிவைக் கொண்டு மனதில் இருக்கும் மாயயை விலக்கினால் நமக்குள் இருக்கும் சிவமாகிய ஆற்றல் வெளிப்படும் என்பது இதன் பொருள்.
பக்தியின் அடிப்படை நோக்கம் இறைவனை அடைவது கிடையாது. நமக்குள் இருக்கும் இறை சக்தியை உணர்ந்து நாமே சிவமாக மாறுவது தான். அன்பே சிவம்.
“சி” என்ற எழுத்து சிவலிங்க வடிவில் உள்ளது. இதுவே சிவசக்தியின் ஐக்கியமான வடிவமாகும். “ச” என்பது சிவனையும் மேலே அதோடு இணைந்த வடிவம் சக்தியாகவும் கருதப்படுகிறது. இதில் சக்தியாகிய அந்த வடிவத்தை நீக்கிவிட்டு படித்தால் அந்த வார்த்தை சவமாகிவிடும். சிவனை விட்டு சக்தி நீங்கினால் உயிரற்ற உடலுக்கு சமம் என்பதாகும்.
எழுதியவர்: உமா