- September 24, 2024
உள்ளடக்கம்
🛕 அண்மையில்; திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு அருகாமையில் உள்ள காடையூரில் 3 அடி உயரம், 3.5 அடி உடைய பலகைக் கல்லில் செதுக்கப்பட்ட அரிய புடைப்புச் சிற்பம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர் அருண் பிரசாத் நடராஜன் கண்டுபிடித்துள்ளார்.
🛕 இப்புடைப்புச் சிற்பத்தில் நடுவே பீடத்துடன் கூடிய ஒரு சூலம் உள்ளது. சூலத்தின் ஒரு புறத்தில் தலையில் பிறையைச் சூடி, இடது கரத்தில் உடுக்கையை ஏந்தி, வலது கரம் சூலத்தை பிடித்தவாறு இடையில் ஒரு குறுவாளும், ஆடை ஆபரணங்களும் அணிந்த ஓர் ஆண் உருவம் ஒரு பீடத்தின் மீது நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது.
🛕 சூலத்தின் மறுபுறத்தில் மகுடம் சூடிய தலையும், இடது கரத்தில் சுருக்குவலையும், வலது கரத்தில் அபயமுத்திரையும், இடையில் முன்கொசுவத்துடன் கூடிய ஆடை ஆபரணங்கள் அணிந்த ஓர் அழகிய பெண் உருவம் பீடத்தின் மீது நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது.
🛕 இச்சிற்பத்தை ஆய்வு செய்த திருச்சிராப்பள்ளியை சார்ந்த தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் வெளியிட்டுள்ள செய்தியாவது, வேதாரணியம் எனப்படும் திருமறைகாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் மிகுந்த சிவபக்தராகிய பரஞ்சோதி முனிவர். அவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தங்கி இருந்தபோது அருள்மிகு மீனாட்சியம்மன் அவர் கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல்களை தொகுத்து பாடச்சொன்னார். அவர் தொகுத்து பாடிய 64 திருவிளையாடல் புராணங்களில் 57 ஆவது புராணம் “வலைவீசின படலம்”. அப்படலத்தின் இறுதி காட்சியே புடைப்புச் சிற்பமாக வடிவமைத்துக் காட்டப்பட்டுள்ளது.
🛕 ஒரு சமயம் திருக்கைலாயத்தில் உமையம்மை தனது பதியாகிய சிவபெருமானிடம் நான்கு மறைகளைப் பற்றி தமக்கு போதிக்க வேண்டும் என வேண்டினார். உமையம்மையின் விருப்பத்தின் படி சிவபெருமானும் அவற்றை அவருக்கு போதித்தார். அவர் போதிப்பதைக் காது கொடுத்து கேட்காமல் உமையம்மை உறக்கத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட சிவபெருமான், சினமடைந்து உமையம்மையை ஒரு மீனவப் பெண்ணாக பூமியில் வாழக் கடவதாக எனச் சபித்தார்.
🛕 அச்சாபத்தார் உமையம்மை பூலோகத்தில் உள்ள பாண்டிய நாட்டில் ஒரு புன்னை மரத்தின் நிழலில் ஒரு பெண் குழந்தையாகக் கிடந்தார். புத்திரபாக்கியம் எதுவும் இல்லாத ஒரு மீனவக்குலத்தின் தலைவன் அக்குழந்தையை எடுத்து, இக்குழந்தை இறைவன் அருளியதாகத் தன் மனைவியிடம் கொடுத்தார். அக்குழந்தைக்கு பார்வதி எனப்பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். நிறைந்த அழகும் மிகுந்த ஆற்றலும் உடைய ஒரு இளம் பெண்ணாக வளர்ந்த பார்வதி கடலுக்கு சென்று வலைவீசி மீன் பிடிப்பதில் ஒரு ஆண்களை விட சிறந்தவளாகப் பல அற்புதங்களை செய்து வந்தார்.
🛕 திருக்கைலாயத்திற்கு வந்த பிள்ளையாரும், முருகப்பெருமானும் தங்களது தாயார் சபிக்கப்பட்டதற்கு மூலக்காரணமாக இருந்த அந்நான்கு மறைகளை கடலில் வீசி எரிந்தனர். அவர்களின் அச்செயலை நந்தித்தேவர் தடுத்து நிறுத்தாமல் இருப்பதைக் கண்ட சிவபெருமான் நந்தித்தேவரை ஒரு சுறாமீனாக கடலில் வாழக் கடவாதாக என சபித்தார். அச்சாபத்தின் படி நந்தி தேவர் அந்நான்கு மறைளை மீட்டெடுக்க எண்ணி ஒரு சுறாமீனாக கடலில் தேடி அலைந்து கொண்டிருந்தார். தமது தேடலுக்கு இடையூறாகவும், தம்மை பிடிப்பதற்காகவும் வந்த மீனவர்களின் கட்டுமரங்களை நாசப்படுத்தியும் அவர்களை துன்புருத்தியும் விரட்டியடித்தார்.
🛕 ஒரு கொடிய சுறாமீன் கடலில் சுற்றி வருதையும், அது தங்களது கட்டுமரங்களை நாசப்படுத்தியதையும் தங்களை துன்புருத்தி வருவதையும் மீனவர்கள் தங்களது மீனவத்தலைவனிடம் முறையிட்டனர். அந்த சுறாமீனை பிடிப்பவருக்கு தன் மகளாகிய பார்வதியை மனமுடித்து தருவதாகவும் அத்தலைவன் அறிவித்தார். அந்த அறிவிப்பை அறிந்த மீனவகுல இளைஞர்கள் பலர் அந்த சுறா மீனை பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தனர்.
🛕 திருக்கைலாயத்தில் உமையம்மையை பிரிந்து தன்னந்தனியாக வாழ்ந்த சிவபெருமான் மனம் வருந்தி உமையம்மையை அடைய எண்ணி இடையில் ஒரு குறுவாளுடன் ஒரு மீனவ இளைஞனாக பாண்டியநாட்டு கடல் கரையை வந்தடைந்தார். யாராலும் பிடிக்க முடியாத அந்த சுறாமீனை வலைவீசி அவர் பிடித்துவிடுவதாக மீனவத் தலைவனிடம சூளுரைத்து கடலுக்குச் சென்று அந்த சுறாமீனை வலை வீசிப்பிடித்தார். சிவபெருமான் இட்ட சாபம் சிவபெருமானாலேயே நீங்கபெற்று நான்கு மறைகளுடன் நந்திதேவராக உருமாறினார்.
🛕 மீனவத்தலவன் தான் அறிவித்த அறிவிப்பின் படி தமது மகளாகிய பார்வதியை மனமுடித்து கொடுத்தார். “பார்வதி தேவிவை கரம்பிடித்த போது அந்த மீனவ இளைஞனான சிவபெருமான் தனது தலையில் ஒரு பிறையை சூடி, வலதுகரத்தில் உடுக்கையும், இடதுகரத்தில் சூலாயுத்தையும், இடுப்பில் சொருகிய ஒரு குறுவாளையும் தரித்தவராய் தனது உண்மையான திருவுருவத்தை பார்வதிக்கு காட்டினார். தனது கரம் பிடித்தவர் தனது பதியாகிய சிவபெருமானே என்பதை அறிந்த உமையம்மை மனம் மகிழ்ந்தார்.” சிவபெருமானும், உமையம்மையும், நந்தித்தேவர் நான்கு மறைகளுடன் மதுரை மாநகரை சென்றடைந்து அங்கிருந்து திருக்கயிலாயம் சென்றடைந்தனர்.
🛕 காடையூரில் காணக்கிடக்கும் ஒருப்பலகைக் கல் புடைப்புச்சிற்பம் திருவிளையாடல் புராணங்களில் ஒன்றான வலை வீசிய புராணத்தில் சிவபெருமான் உமையம்மைக்கு அளித்த அற்புதமான அந்தத் திருக்காட்சியை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்படியாக ஒரு தமிழகச் சிற்பியால் வடிவமைக்கப்பட்டக் காலம் கி.பி.1600 நூற்றாண்டாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Also, read
Our Sincere Thanks to: 🙏 T.L.Subash Chandira Bose 🙏
மிக்க மகிழ்ச்சி அருண் அண்ணா தங்களின் தேடலுக்கு அங்கிகாரம் கிடைத்தது உங்கள் குடும்பத்தில் ஒருவனாக எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது .உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்ததுகிறேன்😊😊🤝🤝💐💐
Arun u are precious stone us…