×
Friday 28th of January 2022

Nuga Best Products Wholesale

தமிழகத்திலுள்ள மச்சமுனி சிற்பங்கள் பற்றிய அரிய செய்திகள்


Machamuni Siddhar History in Tamil

🛕 தமிழகத்திலுள்ள திருக்கோவில்களில் ஒரு மீன் மீது அமர்ந்துள்ள மனித உருவச் சிற்பங்களைக் காணலாம். அச்சிற்பங்கள்; பெரும்பாலும் திருக்கோவில் கருங்கல் சுவர்களிலும், திருமண்டபத் தூண்களிலும்; புடைப்புச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன.

🛕 இச்சிற்பங்களை பற்றி ஆய்வு செய்த இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகாமையில் உள்ள அரியக்குடியைச் சேர்ந்த அபிஷேக், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் ஆகியோர் தெரிவித்துள்ள செய்தியாவது,

🛕 இச்சிற்பங்கள், 18 சித்தர்களின் ஒருவரான மச்சமுனி, மச்சநாதர், மச்சேந்திர நாதர் என்றப் பெயர்களுடைய ஒரு சித்தரின் புராணத்தைக் குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளனர். அப்புராணமானது,

மச்சநாதர் பிறந்த வரலாறு

🛕 ஒரு சமயம் கோடியக்கரையில் ஆலவாய் சித்தரான சிவபெருமான் உமையம்மைக்கு காலஞானம் பற்றி போதித்தார். அப்போது கடலில் நீந்திக் கொண்டிருந்த கருவுற்ற மீனின் கருவும் அந்தக் காலஞானத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை கேட்டது. மேலும் பல ஞானத்தை அறிய அக்கரு மனிதக் குழந்தையாக பூமியில் பிறந்தது. அந்த மனிதக் குழந்தைக்கு சிவபெருமான் மச்சநாதர் என்றப் பெயரிட்டார். மேலும் நான் உமையம்மைக்கு உபதேசித்த காலஞான தத்துவத்தை கருவிலேயே முழுமையாக கேட்டறிந்த “நீ கருவிலேயே திருவுற்றவன்” என்றுரைத்தார். மேலும் பல ஞானங்களை விரைவாக கற்றுணர்ந்து மச்சநாத சித்தனாக உலகம் முழுவதும் பயன்புறும் வகையில் பல செயல்களைப் புரிந்து பல்லாண்டு ஆண்டு காலம் இப்பூமியிலே நீ வலம் வருவாயாக என வாழ்த்தி, குமரன் கோவில் கொண்டுள்ள குன்றம் ஒன்றில் நீ சித்தி அடைவாயாக எனவும் அருளாசி வழங்கினார்.

🛕 18 சித்தர்களில் ஒருவரான மச்சநாதர் காகபுசுண்டரின் சீடர் என்றும், அகத்திய முனிவரிடம் உபதேசம் பெற்றவர் என்றும், அபிதான சிந்தாமணி இவரை போகரின் மாணவர் எனவும் குறிப்பிடுகிறது. வாதநிகண்டு, மச்சமுனி வைப்பு போன்ற பல நூல்களை இயற்றியவர் என புலவர் சரித்திர தீபகம் கூறுகிறது. மச்சநாதரின் தவ வலிமையைப் பற்றி மற்றொரு புராணம் உண்டு. அதுவானது

மச்சநாதரின் தவவலிமையைப் பற்றிய புராணம்

🛕 ஒரு சமயம் மச்சநாதர் இராமேஸ்வரத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதை ஸ்ரீஅனுமன் கண்டார். தன்னை கவனிக்காது தொடர்ந்து தவம் செய்து கொண்டிருக்கும் மச்சநாதரின் தவத்தை கலைத்து அவர் கவனத்தைத் தன்னிடம் திருப்ப வேண்டும் என எண்ணிய ஸ்ரீஅனுமன் கர ஓசை எழுப்பினார், அவர் தொடந்து தவத்தில் இருப்பதை கண்ட ஸ்ரீஅனுமான், பெருமழையை பொழியச் செய்தார். அப்போதும் அவர் தவத்திலிருந்து கலையாதைக் கண்ட ஸ்ரீஅனுமன் மலைகளை இடித்து குகை ஒன்றை உருவாக்க முயன்றார். தவம் கலைந்து கண்விழித்து மச்சநாதர் ஸ்ரீஅனுமனை நோக்கி ஏன் இந்தத் தவறான காரியத்தைச் செய்கிறாய் எனக் கேட்டார். மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பான இடைத்திற்கு செல்லவேண்டுமே தவிர உமது சக்தியால் இதுபோன்ற காரியத்தைச் செய்வது தவறு. “தாகம் ஏற்படும் போது மட்டும் யாரும் கிணறு ஒன்றை தோண்டுவதில்லை” என்பதை உதாரணமாக எடுத்துரைத்தார்.

🛕 அதனை கேட்ட ஸ்ரீஅனுமன் நான் வாயுபுத்திரன் அதிக சக்தி உடையவன், ஸ்ரீஇராமபிரானிடம் அருளாசிப் பெற்றவன். நீ யார்? உன்னிடம் என்ன சக்தியிருக்கிறது எனக் கேட்டார். அதற்கு தாம் மந்திரங்களை அறிந்த ஒரு சித்தன் என்றார் மச்சநாதர்.

🛕 அவரது மந்திர சக்தியை சோதிக்க எண்ணிய ஸ்ரீஅனுமன் மூன்று மலைகளை தோண்டி எடுத்து தூக்கி வந்தார். மச்சநாதர் தம் மந்திர சக்தியால் அம்மூன்று மலைகளையும் மீட்டு அவை இருந்த இடத்திலே வைத்தார். அவரின் மந்திர சக்தியை கண்ட ஸ்ரீஅனுமன் அம்மூன்று மலைகளை விட பெரியமலை ஒன்றை தூக்கி வந்தார். மச்சநாதர் தம் மந்திர சக்தியால் அந்த பெரியமலையையும் மழைநீரால் கரையைச் செய்தார். மச்சநாதரிடம் தோல்வி அடைந்த ஸ்ரீஅனுமன் தனது சக்திகள் அனைத்தையும் இழந்தார்.

🛕 தனது புத்திரனான ஸ்ரீஅனுமன் அனைத்து சக்தியையும் இழந்ததைக் கண்ட வாயு பகவான் அங்கு தோன்றி ஸ்ரீஅனுமனுடைய சக்தி அனைத்தையும் மீண்டும் பெற அருளுமாறு மச்சநாதரிடம் வேண்டினார். மச்சநாதர் ஸ்ரீஅனுமனுக்கு அவரது அனைத்து சக்திகளும் திரும்பப் பெறும்படி அருளினார். தமது அனைத்து சக்திகளைத் திரும்பப் பெற்ற அனுமான் மச்சநாதரை இருகரம் குவித்து வணங்கினார்.

🛕 இராமநாதபுரம், உத்திரகோசமங்கையில் ஸ்ரீஅனுமன், மச்சநாதர் ஆகிய இருவருடைய திருவுருங்கள் புடைப்புச்சிற்பங்களாக சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மச்ச நாதரைப் பற்றி அகத்தியர் 1200 கூறுவதாவது.

சித்தான சித்து முனி மச்சனப்பா
சீருலகில் நெடுங்காலம் மிகுந்த சித்து
சத்தான திரேகமதை நம்பாமல் தான்
தாரனியிலிருந்த தொரு தனத்தை எல்லாம்
நித்தியமும் அகதிகட்கு அன்னந் தந்து
நிட்களங்க நிடேத வழி தெரிந்துமே தான்
பக்தியுடன் னம்பாளின் தரிசனத்தால்
பாருலுகை மறந்ததொரு சித்தனாமே.

மச்ச நாதர் சிற்பங்கள் மற்றும் நூல் குறிப்புக்கள்

🛕 மச்சநாதரின் திருவுருவங்கள் புதுச்சேரி வில்லனூர் அருள்மிகு திருகாமேசுவரர் திருக்கோவில், சேலம், பேளூர் அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோவில் போன்ற தமிழகத்திலுள்ள சில சிவாலயங்களில் காணக்கிடப்பதாகவும், மச்சநாதர் அருளிய “மச்சமுனி 800” என்ற நூலின் பிரதி ஒன்று தஞ்சை சரஸ்வதி நூலகத்தில் உள்ளதாகவும், தென்தேசத்திலிருந்து வடதேசம் சென்று, மச்சநாதர், மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்றப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு, சிவபெருமனை வழிப்பட்டு தமது தவ வலிமையால் பல சாதனைகள் புரிந்து, இறுதியில் திருப்பரங்குன்றத்தில் சீவசமாதி அடைந்தார் எனவும் மச்சமுனி சித்தர் பற்றிய வரலாறு கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Our Sincere Thanks to:

அபிஷேக்
அபிஷேக்
T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose

2 thoughts on "தமிழகத்திலுள்ள மச்சமுனி சிற்பங்கள் பற்றிய அரிய செய்திகள்"

  1. Kasturi G says:

    All Articles published in this portal on various Temple details are very good and highly informative for laymen readers like me.
    God Bless in all your endeavours
    Thanks

Leave a Reply

Your email address will not be published.

you may also like

  • March 1, 2021
அகத்தியரின் மகிமைகள் & சுவாரஸ்யமான தகவல்கள்
  • February 23, 2021
அருணகிரிநாதர் வரலாறு
  • July 15, 2020
அகத்தியரின் முருகன் மந்திரம்