- September 13, 2024
உள்ளடக்கம்
நன்றி: VASANTHA Amma http://krishvasa.blogspot.com/
நந்தஸுதாவதாரம்
முனிவர்களில் சிறந்தவர் என்று போற்றப் படுபவரும், ப்ரம்மஞானியுமான நாரதர் கம்ஸனிடம் ஏன் எல்லா குழந்தைகளையும் கொல்லும்படிச் சொன்னார்? பாபம் செய்பவர்களும், அதைச் செய்யத் தூண்டுபவர்களும் பாபம் செய்பவர்கள் தானே? எந்த கர்ம பலத்தால் இந்தக் குழந்தைகள் இறந்தன? ஜனமேஜயன் இந்தச் சந்தேகத்தை வ்யாஸரிடம் கேட்கிறான். வ்யாஸர் அதற்குப் பதில் சொல்கிறார்.
1. ஸர்வேSபி ஜீவா, நிஜகர்மபத்தா:
ஏதே ஷடாஸன் த்ருஹிணஸ்ய பௌத்ராஹா
தந்நிந்தயா தைத்யகுலே ப்ரஜாதாஹா
புனச்ச சப்தா, ஜனகேன தைவாலு
தேவியைத் தவிர இந்த உலகில் எல்லோரும் கர்மவினைகளை அனுபவிக்கத் தான் வேண்டும். குழந்தைகள் இறந்ததன் காரணம் அவர்களின் கர்ம பலன். ஸ்ருஷ்டியின் ஆரம்ப காலத்தில் ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில், மரீசி ரிஷிக்கும், ஊர்ணைக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தனர். ப்ரம்மா தான் சிருஷ்டித்த, சரஸ்வதியிடம் ஆசை கொள்வதைக் கண்ட, இவர்கள் கேலியாகச் சிரித்தனர். ப்ரம்மா அவர்களை, அஸுரர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறக்கச் சாபம் தந்தார். அவர்கள் கால நேமிக்குப் புத்திரர்களாகப் பிறந்தனர். அடுத்த பிறவியில் ஹிரண்யகசிபுவிற்குப் பிள்ளைகளாகப் பிறந்தனர். இனிமேலும் நாம் இப்படி ஜன்மம் எடுக்க வேண்டாம் என்று நினைத்தனர். மனதை அடக்கி தவமும் செய்தனர். ப்ரம்மாவைத் துதித்ததால், ஹிரண்யகசிபு கோபம் கொண்டு, அவர்களைப் பாதாளம் செல்லும்படிச் சபித்தான். மேலும் நீங்கள் தேவகியின் கர்பத்தில் தோன்றி, முற்பிறவித் தந்தையான காலநேமியான கம்ஸனால், கருணையின்றி கொல்லப் படுவீர்கள் என்று சபித்தான்.
2. தேநைவ தே சௌரி,சுதத்வமாப்த்தா
ஹதாச்ச கம்ஸேன,து ஜாதமாத்ராஹா
ஸ்ரீ நாரதே,நர்ஷிவரேணே தேவி!
ஞாதம் புராவ்ருத், தமிதம் ஸமஸ்தம்
இந்த காலநேமிதான் கம்ஸனாகப் பிறந்திருக்கிறான். இந்தக் கதை எல்லாம் நாரதருக்குத் தெரியும். நாரதர் பொய் பேசாதவர். கலகத்தில் ப்ரியம் உடையவர் போல் காணப் படுபவர். தேவ காரியத்தைச் சாதிப்பதற்காக இப்படிச் செய்கிறார். 6 குழந்தைகளுக்கும் மோட்க்ஷம் கிடைப்பதற்காக இப்படி ஒரு யோஜனையை கம்ஸனுக்குச் சொன்னார். ஸ்ருஷ்டி முதல் ப்ரளயம் வரை தேவி நடத்தும் நாடகத்திற்கு, நாரதர் இப்படி நன்மையில் முடியும் கலகத்தைச் செய்கிறார். தேவ காரியங்கள் நினைத்தபடி முடிய வேண்டுமல்லவா? அதனால் தான் இப்படி கலகத்தைச் செய்கிறார். கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வது வழக்கம். மஹாவிஷ்ணுவையேக் குழந்தையாகப் பெற்ற தேவகீ, வஸுதேவருக்கு, ஏன் இப்படிக் கஷ்டம் வந்தது? இது எல்லோருக்கும் வரும் சந்தேகந்தான். இதற்கும் காரணம் இருக்கிறது. ராமாவதாரத்தில் வானரங்களாகப் பிறந்து ஸ்ரீராமனுக்கு உதவி செய்த தேவர்கள், கிருஷ்ணாவதாரத்தில் யாதவர்களாகப் பிறந்தனர். வஸுதேவர் யார்? அவர் கஸ்யப முனிவரின் அம்சம். கஸ்யபரின் மனைவிகள் அதிதீ ஸிரஸா. அவர்கள் தான் தேவகீ ரோஹிணீயாகப் பிறக்கிறார்கள். வருணனின் சாபத்தால், கஸ்யபர் வஸுதேவராகப் பிறக்கிறார். கஸ்யபர் யாகம் செய்வதற்காக வருணனிடம் பசுவை இரவலாக வாங்கிச் சென்றார். யாகம் முடிந்த பின் திருப்பித் தர வேண்டுமல்லவா? வருணன் பலமுறைக் கேட்டும் கஸ்யபர் தரவில்லை. அதனால் கஸ்யபருக்கு “பசுபாலகனாய் பிறக்கக் கடவாய்” என்று வருணன் சாபம் தந்தார்.
3. ப்ராக் தம்பதீ சாதி,திகச்யபௌ ஹா!
ஸ்வகர்மதோஷேண, புனச்ச ஜாதௌ
தௌ தேவகீசுர,ஸுதௌ ஸ்வபுத்ர
நாசாதிபிர் துக்க,ம வாபதுச்ச
“தாயைப் பிரிந்த பசுக்களின் கண்ணீர் போல் அதிதியும் பூமியிலே தன் குழந்தைகள் சாவதைக் காண்பாள். சிறைவாசமும் துக்கமும் அடையட்டும்” என்றும் சாபம் கொடுத்தார். ப்ரம்மாவிடம் இதை வருணன் சொன்னபோது, ப்ரம்மாவும் “அம்சத்தால் நீ மனைவியுடன் பூமியில் யதுகுலத்தில் பிறந்து பசு பாலனம் செய்வாய்” என்று சாபம் தந்தார். இது பகவானின் பூபாரத்தைக் குறைக்க எடுக்கும் அவதாரத்திற்கு உதவி செய்வதாக ஆனது. இது தவிர அதிதியின் குமாரனான இந்திரன் திதியின் கர்பத்தில் இருந்த குழந்தைகளை 7 துண்டாகச் சிதைத்தார் அல்லவா? அதனால் அவளும் “உனக்கு 7 புத்திரர்கள் பிறந்து, பிறந்து அழியட்டும்” என்று சாபம் தந்தாள். இது பகவானின் பூபாரத்தைக் குறைக்க எடுக்கும் அவதாரத்திற்கு உதவி செய்வதாக ஆனது. இது தவிர அதிதியின் புத்திரர்கள் தேவர்கள். திதியின் புத்திரர்கள் அஸுரர்கள். அதிதியின் புத்திரனான இந்திரன் போல் தனக்கும் குழந்தை வேண்டும் என்று திதி ஆசைப்படுகிறாள். கர்பவதி ஆகிறாள். ஆனால் அதிதி, தன் மகனான இந்திரனிடம் சொல்ல அதனால் திதியின் கர்பத்தில் இருந்த குழந்தைகளை 7 துண்டாக இந்திரன் சிதைத்தார். அதனால் திதியும் “உனக்கு 7 புத்திரர்கள் பிறந்து, பிறந்து அழியட்டும்” என்று சாபம் தந்தாள். அந்த அதிதி தான் தேவகி. இவர்கள் எல்லோரும் நல்லவர்களே. இருப்பினும் பிறவிச் சுழலில் துரோக புத்தியுடன் காணப்படுகிறார்கள். பூபாரத்தைக் குறைக்க தேவர்களின் பிராஜாபதியான கஸ்யபர் வஸுதேவராகப் பிறக்கிறார் அவருக்கு ஆனகதுந்துபி என்றும் பெயர் உண்டு. விஷ்ணு அம்சாவதாரமாக, இவருக்கு பிள்ளையாகப் பிறக்கிறார். அன்னை, யசோதைக்கு மகளாகப் பிறக்கிறாள். தேவ காரியங்களை முடித்து வைக்கிறாள். தேவகியின் 7 ஆவது கர்பத்தை ரோஹிணியின் கர்பத்தில் மாற்றி விடுகிறாள். விஷ்ணுவை கோகுலம் சேர்க்கிறாள். இந்திரன் அம்சம் அர்ஜுனன். தர்ம தேவதை அம்சம் யுதிஷ்டிரன். வாயுவின் அம்சம் பீமன். நகுல சகாதேவர்கள் அஸ்வினீ குமாரர்கள் அம்சம். வசுவின் அம்சம் கங்கா புத்திரர் பீஷ்மர். இறுதியில் யாதவர்களும் ஒருவரோடொருவர் சண்டை செய்து இறந்து விடுகிறார்கள். பிராமண சாபத்தால் வம்சம் அழியும். அதே சாபத்தால் விஷ்ணுவும் தன் உடலை விடுவார். இப்படியாக அவரின் அவதாரம் முடிகிறது. யயாதிகளின் குமாரர்களாக யாதவர்கள் பிறக்கிறார்கள்.
4. த்வம் தேவகீ ஸப்த,மகர்பதோ வை
க்ருஹ்ர்ணந்த்ய – நந்தாம்,சசிசும் ஸ்வசக்த்யா
நிவேச்ய ரோஹிண்,யுதரே தரண்யாம்
மர்த்யோ பவே த்யச்,சுத மாதிசச்ச
ஆறு குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்பட்டன. 7 ஆவது கர்பத்தை ரோஹிணியின் கர்பத்திற்கு மாற்றி விடுகிறாள் தேவீ. அவர் ஆதிசேஷன் அம்சம்.
5. ப்ராக் கர்ம தோஷாத், ஸ ஸுஹ்ருன் மகோநஹ
க்ருத்தேன சப்தோ, ப்ருகுணா முராரிஹி
தயார்ஹஸம்ஸாரி,தசாம,வாப்ஸ்யன்
ஹா! தேவகீ கர்ப்பமதாSSவிவேச
விஷ்ணு இந்திரனின் நண்பன். தேவாசுரர்கள் யுத்தத்தில், விஷ்ணு தேவர்கள் பக்கம் இருக்கிறார். அஸுர குருவான சுக்ராச்சாரியார், தன் சிஷ்யர்கள் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் சிவனை வேண்டி தபஸ் இருக்கிறார். அந்த நேரத்தில் சுக்ராச்சாரியாரின் அன்னை (ப்ருகு மஹரிஷியின் மனைவி) அவர்களுக்கு குருவாக இருக்கிறாள். தேவர்கள் அசுரர்களிடம் சண்டையிட்ட போது அசுரர்கள் ஜெயிக்கிறார்கள். அப்பொழுது தேவர்கள், பதிவ்ரதையான ப்ருகு முனிவரின் பத்தினி இருக்கும் வரைத் தங்களால் ஜெயிக்கமுடியாது என்று நினைக்கிறார்கள். இந்திரன் விஷ்ணுவிடம் இதைச் சொல்ல, விஷ்ணு அவளைக் கொன்று விடுகிறார். உடனே ப்ருகு மஹரிஷி அங்கு வந்துத் தன் சக்தியால் மீண்டும் அவளுக்கு உயிர் கொடுக்கிறார். அவர் “நீ உயர்ந்த, தாழ்ந்த பல யோனிகளில் ஜனித்து (மச்ச.கூர்ம, வராக) ஸம்சார துக்கத்தை அனுபவிப்பாய். ராமாவதாரத்தில் மிகவும் துக்கப் படுவாய். பின் தேவகியின் கர்பத்தில் பிறப்பாய்” என்று சாபம் தந்தார். கர்ம பலனை யாராக இருந்தாலும் அனுபவிக்க வேண்டும். பகவானே ஆனாலும் இதற்கு விதிவிலக்கல்ல.
6. பூர்ணே து கர்பே, ஹரிரர்த்தராத்ரே
காராக்ருஹே தேவக நந்தனாயாஹா
யக்ஜே ஸுதேஷ்வஷ்ட,மதாமவாப்தஹ
சௌரிர் விமுக்தோ நிகடைச்ச பந்தாது
கர்பம் பூரணமானதும், விஷ்ணு காராக்ரஹத்தில், ஆவணி மாதம், அஷ்டமி திதியில், ரோஹிணி நக்ஷத்திரத்தில், நடு இரவில் அவதரித்தார். அக் குழந்தையைப் பார்த்து மனக் கலக்கத்துடன் கண்ணீர் விட்டு அழும் போது, கதவுகளின் சங்கிலிப் பூட்டுகள் தானாகவே திறக்கின்றன. இது எதை உணர்த்துகிறது? ஒருவன் பந்தப் படுவதும், அதிலிருந்து விடுதலை பெறுவதும் பகவான் சித்தம் என்பதைத் தான். பந்தம் என்றால் என்ன? ஸம்சார பந்தம். ஸம்சார பந்தத்தில் சிக்கினால் அதிலிருந்து விடுதலை பெற பகவான் அருள் இருந்தால் தான் முடியும்.
7. வ்யோமோத்த,வாக்யேன, தவைவ பாலம்
க்ருஹ்ணன்ன த்ருஷ்ட:, கலு கேஹபாலைஹி
நித்ராம் கதைஸ்த்வத், விவ்ருதேன சௌரிர்
த்வாரேண யாதோ, பஹிராத்ததோஷம்
அந்த நடுநிசியில், குழந்தை பிறந்ததும், ஒரு அசரீரி கேட்கிறது. “இந்தக் குழந்தையைக் கோகுலத்தில் நந்தகோபர் வீட்டில் விட்டு விடு. அங்கு பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்து விடு”. அசரீரியைக் கேட்ட வஸுதேவர், தன்னையும் அறியாமல், குழந்தையைக் கையில் எடுக்கிறார். கம்ஸன் பலத்த காவல் வைத்திருந்தும், கதவுப் பூட்டுகள் தானாகத் திறக்கிறது. தேவீ காவலாளிகளையும் நன்கு உறங்க வைக்கிறாள். வஸுதேவர் குழந்தையை எடுத்துக் கொண்டு நந்தகோபர் வீட்டிற்குச் செல்கிறார்.
8. த்வம் ஸ்வேச்சயா, கோபகுலே யசோதா
நந்தாத்மஜா ஸ்வாபிதஜீவஜாலே
அஜாயதா பக்தஜனார்த்திஹந்த்ரீ
ஸர்வம் நியந்த்ரீ, ஸகலார்த்ததாத்ரீ
தேவகிக்குக் குழந்தை பிறந்தவுடன், கோகுலத்தில் யசோதைக்கும் அன்னையின் அவதாரமாகப் பெண் குழந்தை பிறக்கிறது. விஷ்ணுத் தான் பெற்ற சாபத்தாலும், கர்ம பலனாலும் கிருஷ்ணனாக அவதரிக்கிறார். ஆனால் அன்னை அப்படியா? அவள் கர்ம பலன்களுக்கு அப்பாற்பட்டவள். அவள் நினைத்த காரியத்தை முடிப்பதற்காகத் தானே யசோதை வயிற்றில் அவதரிக்கிறாள்.
9. தவ ப்ரபாவத், வஸுதேவ ஏகோ
கச்சன்னபீதோ, யமுனாம் அயத்னம்
தீர்வா நதீம் கோகுலமாப, தத்ர
தாஸ்யா: கரே ஸ்வம், தனயம் ததௌ ச
வஸுதேவர் குழந்தையுடன் யமுனா நதி வழியே போக, பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்த வெள்ளம் இடுப்பளவு குறந்தது. நதியை எந்தக் கஷ்டமும் இல்லாமல் கடந்து, நந்தகோபர் வீடு செல்கிறார், அங்கு வாயிலில் நீட்டிய கையுடன் ஒரு பெண் நிற்கிறாள். வஸுதேவர் எதுவும் கேட்காமல், அவள் கையில் குழந்தையைக் கொடுக்கிறார். இது தேவியின் மகிமை. வஸுதேவருக்கு கால் சங்கிலி உடைந்தது, கதவு பூட்டு திறந்தது, யமுனையில் வெள்ளம் குறைந்தது, பெண்ணின் கையில் குழந்தையைத் தந்தது எதுவுமே அவருக்குத் தெரியவில்லை. எல்லாமே அவரின் சுய நினைவு இன்றியே நடந்தன.
10. தயைவ தத்தா,மத பாலிகாம் த்வாம்
ஆதாய சீக்ரம், ஸ ததோ நிவ்ருத்தஹ
காராக்ருஹம் ப்ராப்ய, ததௌ ப்ரியாயை
ஸ சாபவத் பூர்வ,வதேவ பத்தஹ
வஸுதேவர் தந்த ஆண் குழந்தையை, அந்தப் பெண் யசோதை அருகில் விட்டாள். அவள் தந்த குழந்தையை வாங்கிக் கொண்டு, சென்றது போலவே மீண்டும் யமுனையைக் கடந்து, மதுரா வருகிறார். சிறைச் சாலைக்கு வந்து, தேவகி அருகில் குழந்தையை விடுகிறார். மீண்டும் கால் சங்கிலியும், கதவுகளின் பூட்டுக்களும் முன் போலவே பூட்டிக் கொண்டன. அவருக்கு நடந்தது எதுவுமே நினைவில் இல்லை.
11. த்வத்ரோத,நோத்தா,பிதகேஹ பாலைர்
நிவேதிதோ போ,ஜபதி: ஸமேத்ய
த்வாம் பாதயுக்மக்ரஹணேன குர்வன்
அத: சிரஸ்காம், நிரகாத் க்ருஹாந்தாது
குழந்தை சத்தம் போட்டு ஓங்கி அழத் தொடங்கியது. அது அன்னையின் குரல் அல்லவா? அனைவரும் விழித்துக் கொண்டனர். காவலாளிகள் ஓடிச் சென்று கம்ஸனிடம் தேவகிக்குக் குழந்தை பிறந்த செய்தியைச் சொல்கின்றனர். கம்ஸன் உடனே சிறைச் சாலைக்குச் சென்று எங்கே அந்த 8 ஆவது குழந்தை? கொண்டுவா? என்றான். குழந்தையைப் பார்த்து இது பெண்ணாயிருக்கிறதே? அசரீரி வாக்கும் நாரதர் வாக்கும் பொய்யாகுமா? என்று ஆச்சர்யப்படுகிறான். அந்தக் குழந்தையை எந்த தயையும் இல்லாமல் கற்பாரையில் அடித்து மோத குழந்தையின் காலைப் பிடித்துத் தூக்கினான். யோகிகளாலும் பார்க்க முடியாத, அடைய முடியாத, அந்த தேவியின் பாத கமலத்தை, கம்ஸன் பிடித்தான் என்றால் அவன் செய்த புண்ணியம் தான் என்னே!
12. ஸ போதயாமாஸ, சிலாதலே த்வாம்
ஸத்ய: ஸமுத்பத்ய, கராதமுஷ்ய
திவி ஸ்திதா சங்க,கதாதிஹஸ்தா
ஸுரை: ஸ்துதா ஸ்மேர,முகீ த்வமாத்த
அந்தக் குழந்தையைப் பாறையில் அடித்து மோத, கையை ஓங்கினான் கம்ஸன். ஆனால் நடந்தது என்ன? குழந்தையின் தலைக் கல்லில் படவே இல்லை, அது அவன் கையிலிருந்து நழுவி ஆகாயத்திற்குச் செல்கிறது. கம்ஸன் உயரே பார்க்கிறான். அவன் கண்டது என்ன? அஷ்ட புஜங்களுடன் சிம்ஹ வாகனத்தில் தேவியைப் பார்க்கிறான். தேவியை நேரில் பார்க்கும் அவன் எத்தகைய பேறு பெற்றவன்?
13. “வதேன கிம் மே தவ கம்ஸ! ஜாதஹ
ஸ்தவாந்தக: க்வாப்ய விதூரதேசே
மா த்ருஹ்யதாம் ஸாதுஜனோ, ஹிதம் ஸ்வம்
விசிந்தயே” த்யுக்தவதீ திரோSபூஹு
ஆகாயத்தில் நின்ற அந்த தேவீ சொல்கிறாள் “ஏ கம்ஸா! என்னைக் கொல்வதற்கு முயற்சிக்கின்றாயே! உன்னால் என்னைக் கொல்ல முடியுமா? நானும் உன்னைக் கொல்லப் பிறந்தவள் அல்ல. உன்னைக் கொல்ல வேறு ஒருவன் இங்கு மிக அருகிலேயே பிறந்திருக்கிறான். தேவகீ வஸுதேவரைத் துன்புறுத்துவதால் எந்த பயனும் இல்லை. அவர்கள் உன்னைக் கொல்லப் போவதும் இல்லை. நீ விவேகியாக இருந்தால் இதுவரை நீ செய்த தீய செயல்கள் போதும். அதை நிறுத்திக் கொள். இனிவரும் வாழ்க்கையில் நல்லதையே நினை, நல்லதையே கேள், நல்லதையே செய்”. என்று சொல்லி மறைந்தாள். அன்னை கருணாமயி அல்லவா? அதனால் கம்ஸனுக்கும் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் தந்தாள்.
14. ஸ போஜராட் ஸ்வாநதகநாசனாய
ஸர்வான் சிசூன் ஹந்து மரம் பலிஷ்டான்
வத்ஸாக முக்யான் அஸுரான் நியுஜ்ய
க்ருதார்த்தம் ஆத்மானம் அமன்ய தோச்சைஹி
கம்ஸன் உடனே தன் மந்திரிகளான தேனுகன், கேசி, பிரலம்பன், வத்சகன் ஆகிய அஸுரர்களை அழைத்தான். “யாருக்கேனும் குழந்தை பிறந்திருந்தால் உடனே அதை என் பொருட்டு கொன்று விடுங்கள்” என்றான். எத்துணை கல் மனம் கொண்டவன் கம்ஸன். பிறருக்குத் துரோகம் செய்தால் அது நமக்கே தீமையாக முடியும். மரணம் என்பதை யாராலும் தவிற்க முடியாது. நாம் வாழும் வாழ்க்கையில், இயன்ற வரை நல்லதையே செய்ய வேண்டும். அதுவே தனக்கும் பிறருக்கும் நன்மை தரும். இதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு நல்ல ஸத்சங்கம் வேண்டும். அப்பொழுதான் நல்லவைகளை அறிந்து செயல்பட முடியும். கம்ஸனுக்குக் கிடைத்தது என்ன? துஷ்டர்களின் சகவாசம். அதனால் தான் அவன் துஷ்டன் ஆனான்.
15. கம்ஸோ Sஸ்தி மே, சேதஸி காமலோப-
– க்ரோதாதிமந்தரி,ப்ரவரை: ஸமேதஹ
ஸத்பாவஹந்தா, கலு நந்தபுத்ரி!
தம் நாசய; த்வச், சரணம் நமாமி
கம்ஸன் துவாபர யுகத்தில் கிருஷ்ணாவதாரத்தின் பொழுது பிறந்தான் என்று நாம் நினைக்கிறோம். அவன் அப்பொழுது பிறக்கவில்லை. எப்பொழுதும் இருக்கிறான். இப்பொழுதும் இருக்கிறான். எங்கு இருக்கிறான்? எல்லோர் மனதிலும் இருக்கிறான். அவன் என்ன செய்வான்? மனதில் இருக்கும் நல்ல எண்ணங்களை நசிக்கச் செய்வான். இந்தக் கவி நினைக்கிறார் என் மனதில் ஸத் சுபாவங்கள் வரவில்லை. அதனால் என் மனதில் கம்ஸன் இருக்கிறானோ என்று சந்தேகப் படுகிறேன் என்கிறார். கம்ஸனின் மந்திரிகள் போல் மனதில் தீய எண்ணங்களை வளர்க்கும் மந்திரிகள் யார்? காமம், க்ரோதம், லோபம் போன்றவைகள். இவைகள் நம்மிடம் அணுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தேவியை மனதில் நிறுத்த வேண்டும். அந்த லோகமாதா மனதில் இருந்து அனைவரையும் காப்பாற்றட்டும்.
இருபத்தி ஒன்றாம் தசகம் முடிந்தது
கிருஷ்ண கதை
1. ஸ்ரீ ய: பதிர், கோமலமூத்ரகந்திஹி
அஸ்தப்ரபோ கோப,குலே விஷண்ணஹ
க்ருஷ்ணாபிதோ வத்ஸ,பகாதிபீதஹ
ருதன் ஸதா தேவி! நினாய பால்யம்
ப்ருகு முனிவரின் சாபத்தாலும், கர்மவினைகளலும் அவதரித்த கிருஷ்ணன், கோகுலத்தில், பசுக்கள், கன்றுகள், அவைகளின் சாணம், மூத்திரம் இவைகளின் இடையில் வளர்கிறார். அவர் மனதில், வத்ஸாஸுரன் வருவானோ, பகன் வருவானோ அல்லது பூதகி வருவாளோ, யார் எந்த வேடத்தில் வருவார்களோ என்று பயத்தில் இருக்கிறார். அதனால் அவர் முகம் வெளுத்து தைரியம் குறைந்து காணப்படுகிறார். யார் தன்னைத் தூக்கினாலும் இது வத்ஸனோ, பூதனையோ என்று பயந்து காணப்படுகிறார். மனதில் பயம் வந்தால் தைரியம் போய் விடுகிறது.
2. ஹையம்கவீனம், மதிதம் பயச்ச
கோபீர் விலஜ்ஜஹ, ஸததம் யயாசே
ஸ சாம்பயா கோர,ஸசௌர்ய சுஞ்சுஹு
ருலூகலே பா,சவரேண பத்தஹ
கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் மிகவும் விஷமம் செய்கிறான். ஆனால் யாதவர் குலத்திலே எல்லோருக்கும், மாடு கறப்பதும், தயிர் கடைவதும், வெண்ணை எடுப்பதும், வியாபாரம் செய்யப் போவதும், என இதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. கிருஷ்ணனைக் கவனிக்க முடியவில்லை. அதனால் கிருஷ்ணன் கோபிகைகளின் வீட்டிற்குச் சென்று பால், வெண்ணை, தயிர் சாப்பிடக் கேட்கிறான். சில சமயம் திருடியும் சாப்பிடுகிறான். இதை அறிந்த யசோதைக்குக் கோபம் வருகிறது. அதனால் கிருஷ்ணனை இப்படிச் செய்யாதே என்று உரலில் கட்டிவிடுகிறாள். உலகத்தையே ரட்க்ஷிக்கும் விஷ்ணு இப்படி உரலில் கட்டப்பட வேண்டுமா? கர்ம பலனால் ஏற்படும் கஷ்டத்தை நாம் எப்படி உணர்ந்துகொள்வது? அதற்காகத்தான்.
3. வனேஷு பீமாத,பசுஷ்க காத்ரஹ
காச்சாரயன் கண்ட,க வித்தபாதஹ
வன்யாம்புபாயீ, பலமூல பக்ஷீ
தினே தினே க்ளானி,மவாப க்ருஷ்ணஹ
தன்னுடைய 5 ஆவது வயதிலே மாடு கன்றுகளை மேய்க்கும் வேலைகளைச் செய்கிறார். நல்ல வெய்யிலிலே, காலில் செருப்பு கூட இல்லாமல், கல்லும், முள்ளும் இருக்கும் பாதையிலே போவாராம். போகும் வழியிலே ஏதோ மரத்தில் கிடைக்கும் பழங்களைப் பசிக்குச் சாப்பிடுவாராம். அதனால் கிருஷ்ணன் மிகவும் சோர்ந்து போய் விட்டாராம்.
4. தைவேன முக்தஹ, ஸ ச கோபதாஸ்யாது
அக்ரூரநீதோ, மதுராம் ப்ரவிஷ்டஹ
கம்ஸம் நிஹத்யாபி ஹதாபிலாஷஹ
ஸ்தத்ரோக்ர ஸேனஸ்ய, பபூவ தாஸஹ
வஸுதேவரின் சகோதரரான அக்ரூரைக் கிருஷ்ணனை மதுராவிற்கு அழைத்து வரும்படி கம்ஸன் அனுப்பி வைக்கிறான். கம்ஸன் கிருஷ்ணனைக் கொல்ல பலவிதமாக முயற்சிகள் செய்தும் பலனில்லை.
5. த்ருஷ்ட்வா ஜராஸந்தசமூம் பயேன
ஸபந்துமித்ரோ, மதுராம் விஹாய
தாவன் கதஞ்சித், பஹுதுர்க்கமார்த்தஹ
ஸ த்வாரகா த்வீ,பபூரம் விவேச
மகத நாட்டு அரசனான ஜராசந்தன், தன் இரு பெண்களையும் கம்ஸனுக்குக் கல்யாணம் செய்து தருகிறார். உக்ரசேனனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார். கம்ஸனைக் கிருஷ்ணன் கொன்றதால் ஜராசந்தனுக்கு கிருஷ்ணன் பகை ஆகிறான். அதனால் மதுராவை ஆக்ரமித்து 17 நாள் போர் செய்கிறான். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. ஜராசந்தன் மிலேச்சியர்களின் அதிபதியான பலிஷ்டனான காலபவனை சண்டைக்கு அனுப்புகிறான். இவனுக்கு பயந்து கிருஷ்ணன், யாதவர்கள், பலராமன், உறவினர்கள் எல்லோருடனும் துவாரகைக்குச் சென்று விடுகிறார். பலத்த கோட்டைக் காவலில் அங்கு வசித்து வருகிறார்.
6. ஸ ருக்மிணீம் ஜாம்பவதீம் சபாமாம்
கன்யாஸ்ததா த்வ்யஷ்ட, ஸஹஸ்ரம் அமன்யாஹா
ஸமுத்வஹன், ஸஸ்மிதநர்மலாபஹ
க்ரீடாம்ருகோSபூத், ஸததம் வதூனாம்
கிருஷ்ணன் ருக்மிணி, ஜாம்பவதி, சத்யபாமை, மித்திரவிந்தை, காளிந்தீ, லக்ஷ்மணை, நாக்னஜிதி, பத்திரை ஆகிய 8 பேரையும் கல்யாணம் செய்து கொள்கிறார். ஜராசந்தன் சிறையில் அடைத்து வைத்திருந்த 16,000 கன்னிகைகளையும் மீட்டு, மணம் செய்து கொண்டு 16,008 பத்தினிகளுடன் சுகமாக ஆனந்தமாக இருந்தார். அந்தப் பெண்கள் கூடக் கிருஷ்ணனை மிகவும் ஆட்டி வைத்தார்களாம். பாவம் கிருஷ்ணன்.
7. ஸ தஸ்யுவ்ருத்தி,ஸ்த்ரி திவாஜ்ஜஹார
பாமாநியுக்தஹ, ஸீரபாரிஜாதம்;
ஸத்யா ச தம் கோ, வ்ருஷவத் ஸரோஷம்
பத்வா தரௌ துர்,வசஸாSப்யஷிஞ்சது
ஒரு நாள் சத்யபாமை, தனக்கு இப்பொழுதே பாரிஜாத மலர் வேண்டும் என்று அடம் பிடித்தாள். பத்தினிகளின் ஆசையைப் பூர்த்தி செய்வது கணவனின் கடமை அல்லவா? பாரிஜாத மரம் சொர்கத்தில் இருக்கிறது. கிருஷ்ணன் அங்கு சென்று, அந்த மரத்தைத் திருடிக் கொண்டு வரும் பொழுது, தேவர்களுடன் யுத்தம் செய்து, அந்த மரத்தை பாமாவின் இல்லத்தில் நட்டு வைத்தார். அதனால் சொர்கத்திலே கிருஷ்ணனுக்குக் கொள்ளைக்காரன் என்ற பெயர் வந்தது. மற்றொரு நாள் தான் சொல்வதைக் கேட்க வில்லை என்று திட்டுகிறாளாம். இப்படி ஒவ்வொரு வகையாக கிருஷ்ணன் அனுபவிக்கிறார்.
8. ஸ்ரீ நாரதாயாதி,தயே தயா ஸ
தத்தோத முக்தோ, முனினா ச நீதஹ
ததஸ்தயாஸ்மை கனகம் ப்ரதாய
புனர் க்ருஹீத,ஸ்த்ரபயாSS ப மௌனம்
ஒரு நாள் சத்யபாமா கோபித்துக் கொண்டு கிருஷ்ணனை மரத்தில் கட்டிவிட்டாள். அப்பொழுது நாரதர் அங்கு வந்தார். உடனே சத்யபாமா கோபத்தில் “நீங்கள் இந்தக் கிருஷ்ணனை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னாள். நாரதருக்குக் கசக்குமா? உடனே அவர் கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு அவருடைய வஸ்த்ரங்களையும் தான் அணிந்து கொள்கிறார். கிருஷ்ணனுடன் போகிறார். சத்யபாமாவிற்குக் கோபம் தணிந்து, நாரதர் பின்னால் ஓடுகிறாள். கிருஷ்ணனைத் திருப்பிக் கேட்கிறாள். பவுன் தந்தால் தான் திருப்பித் தருவேன் என்று நாரதர் சொல்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு மாட்டை மரத்தில் கட்டவோ அல்லது யாருக்கேனும் தானம் தரவோ மாட்டின் சம்மதத்தை யாரும் கேட்பதில்லை. கிருஷ்ணன் நிலையும் அதுபோலவே ஆனது.
9. ஸுதீக்ருஹாத் பீஷ்ம,கஜாஸுதே ஸ
ப்ரத்யுனநாம்னீச்வரி: சம்பரேண
ஹ்ருதே சிசௌ நிர்,மதிதாபிமான
உச்சைருதம்ஸ்த்வாம், சரணம் ப்ரபன்னஹ
சில காலம் சென்று ருக்மிணி தேவி ஒரு அழகான குழந்தையைப் பெற்றாள். அவன் தான் பிரத்யும்னன். கிருஷ்ணன் குழந்தையைப் பார்ப்பதற்கு முன், சம்பராசுரன் பிறந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டான். பிறந்த குழந்தையைக் காணவில்லையே என்று அனைவரும் கவலை கொண்டனர். கிருஷ்ணன் புத்திர துக்கத்தால் அழுகிறாராம். எப்படி நம் புத்திரனைக் கண்டுபிடிப்பது என நினைக்கும் போது தேவிதான் ஒரே வழியென்று அன்னையைத் துதிக்கிறார். அன்னையும் அவர் முன் தோன்றி ” கிருஷ்ணனே! இது உன் முன் ஜன்ம சாபத்தால் வந்தது. என் அனுக்ரஹத்தால் உன் மகன் சம்பராசுரனை வதம் செய்து, 16 ஆவது வயதில் உன்னிடம் வந்து சேர்வான்” என்று சொன்னாள். கிருஷ்ணனும் கவலை நீங்கியவராக இருந்தார்.
10. புத்ரார்த்தினீம் ஜாம்பவதீம் அபுத்ராம்
ஸ தோஷயிஷ்யன் உபமன்யுசிஷ்யஹ
முண்டீ ச தண்டீ ச சிவஸ்ய சைலே
மந்த்ரம் ஜபன் கோர, தபச்சகார
ஜாம்பவதிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை. அதனால் கிருஷ்ணர் அவளை சிவனை நினைத்துத் தவம் செய் என்று சொல்கிறார். அதனால் கிருஷ்ணன், ஜாம்பவதியுடன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, யோக தண்டத்துடன், ஒரு காலில் நின்று கொண்டு 6 மாதம் தவம் செய்கிறார். சிவனும் அவர்கள் முன் காட்சி தந்தார்.
11. வரேண பர்க்கஸ்ய தசாSத்மஜான் ஸா
ப்ராஸூத; ஸர்வா, தயிதாச்ச சௌரேஹே
ததைவ; லப்த்வா, ஸ ஸுதாயுதானி
ஸுகம் ந லேபே, நிஜகர்மதோஷாது
சிவன் காட்சி தந்ததும் ஸம்சாரத்தில் பெண் ரூபமான பாசத்தால் நான் கட்டப் பட்டிருக்கிறேன். மானிட ஜன்மம் எடுத்து நான் மிகவும் துக்கப்படுகிறேன். ஜாம்பவதிக்குக் குழந்தை பிறக்கவில்லையே என்று சொல்லி கிருஷ்ணன் அழுகிறார். சிவன் ஜாம்பவதிகுப் பத்து குழந்தைகள் பிறக்கும் என்று அருள் செய்கிறார். அவளுக்கு மட்டுமல்ல கிருஷணனின் எல்லா பத்னிகளுக்கும் ஆளுக்கு 10 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனாலும் கிருஷ்ணனுக்கு மனதில் சந்தோஷம் இல்லை. அதற்குக் காரணம் கர்மபலனே.
12. சாபாத்ருஷீணாம், த்ருதராஷ்ட்ர பத்ன்யாச்ச
அன்யோன்ய வைரேண, க்ருதாஹ வேஷு
ஸர்வே ஹ தா; ஹந்த! குலம் யதூனாம்
மஹத் ப்ரதக்தம், வனமக்னி நேவ
கிருஷ்ணனுக்கு நிறைய குமாரர்கள் இருந்தும் சுகம் இல்லை. ஒரு நாள் கிருஷ்ணனின் குமாரன் ஒருவன் நிறைமாத கர்பிணிப் போல வேடம் தரித்து, ஒரு மஹரிஷியிடம் சென்று வயிற்றில் இருப்பது என்ன குழந்தை? என்று கேட்கிறான். கோபம் அடைந்த மஹரிஷி உன்னால் உங்கள் வம்சமே அழியும் என்று சாபம் தருகிறார். மேலும் மஹாபாரத யுத்தம் முடிந்ததும், தன்னுடைய புதல்வர்கள் அனவரும் அழிந்ததால், காந்தாரி வருத்தப் படுகிறாள். அவள் கிருஷ்ணனிடம் “நீ நினைத்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாமே! ஆனால் நீ பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தாயே! அதனால் இன்று முதல் 36 வருடம் கழிந்து உன் புத்திரமார்களும் மற்றவர்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு மாண்டு போவார்கள்” என்று அவளும் சாபம் தந்தாள்.
13. வ்யாதேஷு வித்தோ, ம்ருதிமாப க்ருஷ்ணஹ
குசஸ்தலீ சாப்திஜலாளு தாSபூது
ஹா! ஜஹ்ரிரே தஸ்,யுபிரேன ஸாஷ்டா
வக்ரஸ்ய சாபேன, யதுஸ்த்ரியச்ச
ஒரு நாள் கிருஷ்ணன் அமர்ந்திருக்கும் பொழுது அவர் காலடியைக் கண்டு ஒரு மிருகம் அங்கு வருகிறது. மிருகத்தைக் கண்ட வேடன் அம்பை விடுகிறான். அது கிருஷ்ணனின் காலில் படுகிறது.
14. ஏவம் ஹரி: கர்ம,பலான்யபும்க்தஹ
ந கோபி முச்யேத, ச கர்ம பந்தாது
துக்கம் த்வ பக்தஸ்ய, ஸுதுஸ்ஸஹம் ஸ்யாது
பக்தஸ்ய தே தத்,ஸுஸஹம் பவேச்ச
விஷ்ணு மும் மூர்த்திகளில் ஒருவர். அதுவும் காக்கும் கடவுள். அவர் சாபத்தினால் மேலும் மேலும் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. அவர் தேவீ பக்தர். அதனால் எத்தனை கஷ்டம் வந்தாலும் அவரால் அதைத் தாங்கிச் சமாளிக்க முடிந்தது. தெய்வ பக்தியில்லாவிட்டால் கஷ்டங்களைத் தாங்க மனதில் திடம் இருக்காது. மலை போலக் கஷ்டம் வந்தாலும் அதைத் துரும்பு போல் சமாளிப்பதற்குத் தேவியின் அருள் வேண்டும்.
15. ஜானாஸ்யஹம் தே, பதயோர் அபக்தஹ
பக்தோ நு கிம் வேதி, ந சைவ ஜானே
த்வம் ஸர்வசக்தா, குரு மாம் ஸுசக்தம்
ஸர்வத்ர; பூயோபி, சிவே! நமஸ்தே
இந்த தேவீ நாராயணீயத்தை எழுதும் கவிக்கு திடீரென ஒரு சந்தேகம் வருகிறது. நான் பக்தனா? அபக்தனா? இது யாருக்குத் தெரியும்? எனக்குத் தெரியாது. தேவிக்குத் தான் தெரியும். நான் அபக்தனாக இருந்தால் எனக்கு பக்தியைத் தந்து என்னை ரக்ஷிக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.
இருபத்தி இரண்டாம் தசகம் முடிந்தது
மஹாலக்ஷ்மி அவதாரம்
மஹிஷாஸுரன் என்பவன் யார்? அவனுக்கு மஹிஷ ரூபம் எப்படி வந்தது?
பூமண்டலத்தில் தனு என்பவனுக்கு, ரம்பன் கரம்பன் என்று இரு பிள்ளைகள். அதில் கரம்பன் பஞ்சநதம் என்னும் தீர்த்தத்தில் மூழ்கியும், ரம்பன் அந்த மரத்தின் அடியில் பஞ்சாக்னியின் மத்தியில் நன் மக்கள் பேறு வேண்டி தவம் செய்து வந்தனர். இதை அறிந்த இந்திரன் முதலை ரூபம் எடுத்து கரம்பன் நதியில் குளிக்கும் போது, அவன் காலைப் பிடித்து நீரில் இழுத்தான். அதனால் அவன் மரணம் அடைந்தான். இதைப் பொறுக்க முடியாத ரம்பன், தன் சிரஸை வெட்டி அக்னியில் ஹோமம் செய்யத் தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, வாளால் வெட்டத் தொடங்கிய பொழுது, அக்னி பகவான் தோன்றினார். “சாவதால் என்ன பயன் ஏற்படப் போகிறது? உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்றார்.” தேவ, தைத்ய, மானிடர்களால் ஜெயிக்க முடியாத மிகவும் பராக்ரமசாலியான புத்திரன் வேண்டும்” என்றான். “அப்படியேஆகட்டும்’ என்று சொல்லி அக்னி தேவர் மறைந்தார். ஒரு நாள் ரம்பன் அழகான ஒரு எருமையைக் கண்டு, காமவெறி கொண்டு, அதன் அருகில் சென்று புணர்ந்தான். அதுவும் கர்பமானது. அதை ரம்பன் பாதாளத்தில் மற்ற கடா எருமைகள் அதை நெருங்காமல் பாதுகாத்து வந்தான். ஒரு நாள் ஒரு கடா எருமை அதன் மேல் வெறி கொண்டு துரத்த, ரம்பன் அதனுடன் மோதி, அந்த எருமை ரம்பனைக் கொன்றது. அந்தக் கடா மேலும் எருமையைத் துரத்த, அந்த எருமைத் தன் அருகில் அதை நெருங்கவிடாமல், மீண்டும் தான் முன்பு இருந்த ஆலமரத்தடிக்குச் சென்று யக்ஷர்களைச் சரணடைந்தது. தன்னை விடாமல் துரத்தி வரும் கடாவை, நெருங்கவிடாமல் வரும் எருமையைக் கண்ட அவர்கள் அதைக் காப்பதற்குக் கடாவைக் கொன்றனர். தன் கணவனான ரம்பனோடு தானும் அக்னியில் விழ அந்த எருமை முயற்சித்த போது, யக்ஷர்கள் தடுத்தும் பயனின்றி அது அக்னியில் விழுந்தது. அப்போது அதன் கர்பத்திலிருந்து ரக்தபீஜனாகிய மஹிஷன் வெளிப்பட்டான்.
1. ரம்பஸ்ய புத்ரோ, மஹிஷாஸுர: ப்ராகு
தீவ்ரைஸ்தபோபிர், த்ருஹிணாத் ப்ரஸன்னாது
அவத்யதாம் பும்பிரவாப்ய த்ருஷ்டோ
ந மே ம்ருதி: ஸ்யா, திதி ச வ்யசிந்தீது
மஹிஷன் அரசாண்டு வரும் காலத்தில் அஸுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் வந்தது. அதனால் மஹிஷன் மேரு மலைக்குச் சென்று, ப்ரம்மனை இருதய கமலத்தில் தியானித்து பதினாறாயிரம் வருடங்கள் தவம் செய்தான். பிரம்மனும் மகிழ்ச்சி கொண்டு ஹம்ஸ வாகனத்தில் காட்சி தந்து “என்ன வரம் வேண்டும் கேள்” என்றார். மஹிஷனும் “நான் மரணம் அடையாதிருக்கும் படி அனுக்ரஹம் செய்ய வேண்டும்” என்றான். ப்ரம்மன் சொன்னார் “ஜனனம் மரணம் இரண்டையும் யாராலும் மாற்ற முடியாது. நானும் அவ்விதிக்குக் காட்டுப்பட்டவனே. அதனால் இதை விட்டு வேறு வரம் கேள்” என்றார். மஹிஷன் சொன்னான் “எனக்கு தேவர்களாலோ, மனிதர்களாலோ, தைத்யர்களாலோ மற்றும் எந்த ஆணாலும் மரணம் வரக்கூடாது. அப்படியே மரணம் வந்தாலும், ஒரு பெண்ணால் வரட்டும்” என்றான். அவன் நினைத்தான் தானோ மிகவும் பலசாலி. அதனால் ஒரு பெண்ணால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று இப்படி வரம் கேட்டான். அவன் பெண்ணான அந்த பராசக்தியை மறந்து விட்டான்.
2. ஸ சிக்ஷுராத்யைர் அஸுரை: ஸமேதஹ
சக்ராதிதேவான், யுதி பத்மஜம் ச
ருத்ரம் ச விஷ்ணும் ச விஜித்ய நாகே
வஸன் பலாத், யக்ஞஹவிர் ஜஹார
மஹிஷன் சக்ஷுசுரன், மஹாவீரியன், மதோத்கடன், தனாத்யக்ஷன், தாம்பரன், அசிலோமன், உதர்க்கன், பிடலாக்கியன், பாஷ்கலன், த்ரிநேத்திரன், காலன், பந்தகன் ஆகியோரை சேனாதிபதிகளாகக் கொண்டு, உலகம் முழுவதையும் ஆக்ரமித்து, அதுமட்டும் இல்லாமல் தேவர்களையும் சொர்க்கலோகத்தில் இருந்து விரட்டி விடுகிறான். அவர்களுக்கான ஹவிர் பாகங்களையும் தானே எடுத்துக் கொள்கிறான். தேவர்களுக்கு இருக்க இடமும் இல்லை. சாப்பிட உணவும் இல்லை.
3. சிரம் ப்ருசம் தைத்ய, நிபீடிதாஸ்தே
தேவா: ஸமம் பத்மஜசங்கராப்யாம்
ஹரீம் ஸமேத்யாSSஸுரதௌஷ்ட்யம் ஊசூஹு
ஸத்வாம் ஸம்ஸ்மரன் தேவி! முராரிராஹ:
மஹிஷனின் சேனைகளால் எங்கு சென்றாலும் துன்பம் வர, தேவர்கள் ப்ரம்மாவிடம் சென்று உதவி கேட்கிறார்கள். சங்கரரையும், விஷ்ணுவையும் சந்தித்து, அதன் பின், நாம் யோசித்து முடிவு செய்ய வேண்டும். அதனால் கைலாஸம் போவோம் என்று அங்கு போனார்கள். பின் சிவனுடன் விஷ்ணுலோகம் போனார்கள். அதன் பின் அவர்கள் எல்லோரும் சேர்ந்துத் தேவியைச் சரண் அடைவோம் என்று அங்கு போனார்கள்.
4. ஸுரா வயம் தேந, ரணேSதிகோரே
பராஜிதா; தைத்ய,வரோ பலிஷ்டஹ
மத்தோ ப்ருசம் பும்பிர் அபத்யபாவாந்
ந ந: ஸ்த்ரியோ யுத்த விசக்ஷணாச்ச
இதற்கு முன்பே மும்முர்த்திகளும் தேவர்களுடன் சென்று, மஹிஷனுடன் சண்டை செய்து தோல்வியையேத் தழுவினர். காரணம் என்ன? அவன் பெற்ற வரமே. தேவர்கள், மனிதர்கள், தைத்யர்கள் யாரும், எந்த ஆணும் அவனை வெற்றி கொல்ல முடியாது. மும்மூர்த்திகளின் பத்னிகளுக்கோ தேவர்களின் பத்னிகளுக்கோ யுத்தம் செய்யத் தெரியாது. என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்.
5. தேஜோபிரேகா, பவதீஹ நச்சேது
ஸைவாஸுரான் பீமபலான் நிஹந்தா
யதா பவத்யேததரம் ததைவ
ஸம்ப்ரார்த்தயாமோS,வது நோ மஹேசீ
விஷ்ணு ஒரு முடிவு செய்கிறார். எல்லா தேவர்களுடைய சக்தியையும் நம் மூவரின் சக்தியையும் ஒன்று சேர்த்து ஒரு பெண் உருவானால் அவளால் தான் அந்த துஷ்டனை வதம் செய்ய முடியும். நம்மிடம் இருக்கும் சக்திகள் அந்த தேவிசக்திகள் தந்தது தானே. அதனால் நாம் எல்லோரும் அந்த பராசக்தியை வழிபடுவோம் என்று துதிக்க ஆரம்பித்தனர்.
6. ஏவம் ஹரௌ வக்தரி பத்மஜாதாது
தேஜோSபவத் ராஜஸ ரக்தவர்ணம்
சிவாதபூத் தாம,ஸரௌப்யவர்ணம்
நீலப்ரபம் ஸாத்விக,மச்யுதாச்ச
அவர்கள் தேவியின் ஸ்துதி பாட ஆரம்பித்தவுடன், ப்ரம்மாவிடமிருந்து தீப் பொறி போல் ஒரு தேஜஸ் வெளிப்பட்டது. அது காணக் கண் கூசும்படி பிரகாசித்தது. சிவப்பு வர்ணமாக உஷ்ணமும், குளிர்ச்சியும் கலந்து இருந்தது. அது ரஜோகுணப் பிரதானமான தேஜஸ். சிவனிடமிருந்து தமோகுணத் தேஜஸ் வெண்மை நிறமுடன் வெளிப்பட்டது. விஷ்ணுவிடமிருந்து நீல நிறத்தில் ஸத்வ குண தேஜஸ் வந்தது. ஆக ஸத்வ, ரஜோ, தமோ குண தேஜஸுகள் மும் மூர்த்திகளிடமிருந்து வந்தன.
7. தேஜாம்ஸ்ய பூவன், விவிதானி சக்ர-
-முகாமரேப்யோ, மிஷதோ கிலஸ்ய
ஸம்யோகதஸ்தான்,யசிரேண மாதஹ!
ஸ்த்ரீரூபமஷ்டாத,சஹஸ்தமாபுஹு
இந்திரன் முதலான மற்ற எல்லா தேவர்களிடமிருந்தும் தேஜஸ் வந்தபடி இருந்தது. அது மஹா அற்புதமாக இருந்தது. எல்லாம் ஒன்று சேர்ந்து 18 கைகள் உடைய ஒரு பெண் உருவம் தோன்றியது. முகம் சங்கரரின் தேஜஸ், சுருண்டமுடி யமனின் தேஜஸ், 3 கண்களும் அக்னியின் தேஜஸ், மூக்கு குபேரனின் தேஜஸ், 18 கைகளும் விஷ்ணுவின் தேஜஸ் இதுபோன்று எல்லோருடைய தேஜஸும் சேர்ந்து ஒரு பெண் உருவம் தோன்றியது. யார் இப்படி எல்லோருடைய தேஜஸையும் ஒன்று சேர்த்து பெண் உருவாக ஆக்கியது? அந்த பராசக்தி தான். இதைத்தானே விஷ்ணுவும் சொன்னார். அந்த பெண்ணின் உருவத்தைக் கண்டதும், அனைத்து தேவர்களும் இனி பயமில்லை என்று சிறிது கவலையை விட்டனர்.
8. தத் து த்வமாஸீ: சுபதே! மஹால-
க்ஷ்ம்யாக்யா, ஜகன்மோஹன மோஹனாங்கீ
த்வம் ஹ்யேவ பக்தா,பயதானதக்ஷா
பக்த த்ருஹாம் பீதிகரீதேவி!
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
லக்ஷ்மீம் க்ஷீர சமுத்ர ராஜ தனயாம் சீரங்க தாமேஸ்வரீம்
தாஸீ பூத ஸமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்க்ருபாம்
ஸ்ரீமன் மந்த கடாக்ஷ லப்த விபவாம் ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் தைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்த ப்ரியாம்
18 கைகளோடு தோன்றிய அந்த தேவி யார்? நினைத்த போது நினைக்கும் உருவம் எடுக்கக் கூடியவளல்லவா அன்னை? அந்த பகவதி தேவி தான் மஹாலக்ஷ்மியின் அவதாரம். பக்தர்களுக்கு அபயம் தர எடுத்த அவதாரம். பார்ப்பதற்கு மிக மிக சுந்தர ரூபம். பவழம் போன்ற உதடுகள், 18 கைகளிலும் ஆயுதங்கள், மூவர்ணக் கலர், சகலவிதமான ஆபரணங்கள், எல்லா தேவர்களும் அவரவர் ஆயுதங்களையும், ஆபரணங்களும், சிங்கவாஹனமும் கொடுத்தனர். இவைகளோடு பார்த்தால், பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் அதி சுந்தர உருவம். ஆனால் அஸுரர்களான துஷ்டர்களுக்குப் பயம் தரும் உருவம்.
9. ஸ்த்யஸ்த்வ முச்சைச்,ச க்ருஹே&ட்டஹாஸம்;
ஸுரா: ப்ரஹ்ருஷ்டா; வஸுதா சகம்பே;
சுக்ஷோப ஸிந்துர்; கிரயோ விசேலூர்;
தைத்யஸ்ய மத்தோ மஹிஷச்சு கோப
தேவியின் ரூபத்தைக் கண்ட தேவர்கள் நம்மைக் காப்பாற்ற தேவி வந்துவிட்டாள் என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். தாயே! நீயே சகல தேவர்களுக்கும் புகலிடம் என்று சொல்லி நமஸ்கரித்தனர். தேவியும் இனி நீங்கள் கவலையை விடுங்கள் என்று சொல்லி தான் அவதரித்த நோக்கத்தை நிறை வேற்ற அட்டகாஸமாகச் சிரித்தாள். சப்தம் கேட்டு எண்திசைகளும் நடுங்கின. இந்த அலறல் சப்தம் கேட்ட மஹிஷன் யார் இப்படி சிரிப்பது? என்று கோபம் கொண்டான்.
10. த்வாம் ஸுந்தரீம், சார முகாத் ஸ தைத்யோ
விஞ்ஞாய காமி, விஸஸர்ஜ தூதம்
ஸ சேச்வரீம் தைத்ய,குனான் ப்ரவக்தா
த்வாம் நேது காமோ, விபலோத்ய மோSபூது
அந்த சப்தம் கேட்ட மஹிஷன் உடனே தூதர்களை அழைத்து “யார் இப்படி சப்தம் செய்ததது? அவன் எங்கிருக்கிறான்? என்று பார்த்து வாருங்கள்” என்று அனுப்பி வைக்கிறான். சென்ற தூதர்கள் அங்கு தேவியைப் பார்த்து திக்பிரமையோடு ஓடி வந்து “ஐயா! கர்ஜனை செய்தது ஒரு பெண். அவள் வீரமும், சிருங்காரமும் ஒருங்கே இணைந்த அழகினை உடையவளாக இருக்கிறாள்” என்று சொன்னதும் மஹிஷனுக்கு காம உணர்வு எழுகிறது. அதனால் தூதுவனை மீண்டும் அனுப்பி என்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல் என்று அனுப்புகிறான். அவனும் தேவியிடம் சென்று மஹிஷன் மிகுந்த பலசாலி, தேவர்களை வெற்றி கண்டவன், மிகுந்த அழகுடையவன், மன்மத லீலைகளில் வல்லவன் என்று மஹிஷாசுரனைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து, அவன் உங்கள் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறான். அதனால் நீங்கள் என்னுடன் வந்து, அவனை மணக்க வேண்டும் என்று சொன்னான். ஆனால் தேவியிடம் ஒன்றும் எடுபடவில்லை. அவன் அதை மஹிஷனிடம் சொல்கிறான். இருந்தாலும் மஹிஷன் ஆசையை விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறான்.
11. ப்ரலோபநைஸீத்வாம், அமத தேவசக்தீம்
ஞ்யாதவாSபி வாக்யைர் அனு நேது காமஹ
ஏகைகச: ப்ரஷயதிஸ்ம தூதானு
த்வாம் காமினீம் கர்தும் இமே ந சேகுஹு
மஹிஷன் முயற்சியைக் கைவிடாமல் தாம்பிரன் என்னும் மந்திரியை அனுப்புகிறான். அன்னை சொல்கிறாள். “ஏ மஹிஷனே! நீ எனக்குச் சமமாக ஆகமுடியுமா? என் லட்க்ஷணம் எங்கே? உன் அவலக்ஷணம் எங்கே? இந்த ஆசையை விட்டுவிடு. இந்திரனுக்குரிய யக்ஞபாகத்தையும் சுவர்கத்தையும் அவனிடம் திருப்பிக் கொடு. நீ உன் அஸுரர் கூட்டத்துடன் பாதாளம் போய்விடு. இல்லாவிட்டால் நான் உன்னைக் கொல்வது நிச்சயம்’ தாம்பிரனே போய் உன் அரசனிடம் சொல் என்று கர்ஜனைக் குரலில் சொன்னாள். தாம்பிரன் மஹிஷனிடம் இதைச் சொல்கிறான். ஆனாலும் மஹிஷனுக்கு ஆசை விடவில்லை. இவ்வளவு அழகாக இருக்கிறாளே எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று முயற்சிக்கிறான். பல தூதர்களை அனுப்பிய படி இருக்கிறான். ஆனால் எந்த பலனும் இல்லை. தேவிக்கு அவனிடம் அன்போ பரிதாபமோ இல்லை. அதனால் பாஷ்கலன், துர்முகன், தாம்பிரன், சிக்ஷுரன் போன்றப் பல தூதர்களைத், துஷ்டர்களை வதம் செய்கிறாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
12. அவேஹி மாம் புச்ச, விஷாணஹீனம்
பாரம் வஹந்தம், மஹிஷம் த்விபாதம்
ஹிம்ஸந்தி மாம் ஸ்வார்த்தி ஜனா; ஸ்தவமேவ
ரக்ஷாகரீ மே, சுபதே! நமஸ்தே
இந்தக் கவி சொல்கிறார் மஹிஷன் என்பது ஒரு மிருகம் புத்தி இல்லாதது. பாரம் சுமக்கும். பாரம் சுமக்க முடியாவிட்டால் கசாப்புக் கடைக்கு அனுப்பி விடுவார்கள். அதற்கு இது நல்ல பாரம், இது கெட்ட பாரம் என்பதும் தெரியாது. அதற்கும் எனக்கும் ஒரு வித்யாசம் தான். அதற்கு வாலும் கொம்பும் இருக்கிறது. எனக்கு இல்லை. அதுவும் அடி வாங்கும். என்னையும் பலர் பல விததில் துன்புறுத்தி இருக்கிறார்கள். என்னை ரக்ஷிப்பதற்கு நீ மட்டும் தான் இருக்கிறாய். நீதான் என்னை க் காக்க வேண்டும் என்கிறார்.
இருபத்தி மூன்றாம் தசகம் முடிந்தது
மஹிஷாஸுரவதம், தேவீஸ்துதி
1. தேவி! த்வயா பாஷ்,களதுர்முகாதி
தைத்யேஷு, வீரேஷு, ரணே ஹதேஷு
ஸத்வாக்யதஸ்த்வாம், அனுநேது காமஹ
மோகப்ரயத்னோ, மஹிஷச்சுகோப
மீண்டும் மஹிஷன் அசிலோமன் பிடாலன் ஆகியோரை அனுப்புகிறான். அவர்களால் தேவியின் மனதை மாற்ற முடியுமா? முயற்சி செய்தார்கள். ஆனால் பலன் இன்றி தேவியுடன் யுத்தம் செய்து அவர்களும் மரணத்தையே தழுவினர். மஹிஷன், அனைவரும் மாண்டு போயினர் என்ற செய்தி கேட்டு கலக்கமடைந்து, ஒன்றும் புரியாமல் பிரமை பிடித்தவன் போல் இருந்தான். ஒரு முடிவுக்கு வருகிறான். தேவியைத் தன் வயப்படுத்துவதற்காக, ஒரு ஆணழகனாகத் தன்னை உருமாற்றிக் கொண்டு, மன்மதன் போல தனுர் பாணங்களையும் எடுத்துக் கொண்டு ரதத்தில் ஏறி தேவீ இருக்கும் இடம் சென்றான். அவன் சொன்னான் “தேவீ! விசாலாக்ஷி! உன் அழகில் நான் மயங்கி விட்டேன். உன் கட்டளைகளை நிறைவேற்ற நான் காத்திருக்கிறேன். நீ எனக்கு மஹிஷி ஆக வேண்டும்” என்று இது போல் காமவெறி வேகத்தில் பிதற்றினான். தேவீ சொன்னாள் “மஹிஷா! உன்னை நான் நன்கு அறிவேன். நான் ஸம்சார பந்தத்தில் சிக்கும் ஸம்சார சக்தி இல்லை. அந்த துக்கத்தை போக்குபவள். நீ என்னிடம் இனிமையான வார்த்தைகள் சொன்னதால் உன்னைக் கொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. தேவர்களிடம் த்வேஷத்தை விட்டு விட்டு பாதாளம் போய் சுகமாக இரு” என்றாள். மஹிஷன் சொன்னான்.
“மான்வியாழிளே! எந்த பெண்ணும் பர்த்தா இல்லாமல் சுகம் காண முடியாது. அதனால் என்னை விவாஹம் செய்து கொள்” என்று பிதற்றிய வண்ணம் இருந்தான். அன்னை சொன்னாள் ” நீ உயிருடன் இருக்க நினைத்தால் நான் சொன்னதைச் செய். இல்லையேல் என்னுடன் யுத்தம் செய்” என்றாள். தன் சொல்லுக்குச் செவி சாய்க்காமல் தேவீ இருப்பதைக் கண்டு, கோபத்துடன் யுத்தம் செய்யத் தொடங்கினான்.
2. த்வாம் காமரூப: குரபுச்ச,ச்ருங்கைர்ஹி
நாநாஸ்த்ர சஸ்த்ரைச்ச ப்ருசம் ப்ரஹர்த்தா
கர்ஜன், விநிந்தன், ப்ரஹஸன் தரித்ரீம்
ப்ரகம்பயம்ச்சா,ஸுரராட் யுயோத
மஹிஷன் மானிட ரூபம் விட்டு எருமையின் ரூபம் எடுக்கிறான். தேவியை வாலால் அடிக்கிறான். கொம்பால் குத்துகிறான். மனுஷ ரூபம் எடுக்கிறான். பாணங்களைப் பொழிகிறான். இப்படி இருவருக்கும் பயங்கர யுத்தம் நடக்கிறது. பூமியே இதனால் குலுங்குகிறதாம்.
3. ஜபாருணாக்ஷீ, மதுபானதுஷ்டா
த்வம் சாரிணாSரேர் மஹிஷஸ்ய கண்டம்
சித்வா சிரோ பூமிதலே நிபாத்ய
ரணாங்கணஸ்தா, விபுதை: ஸ்துதாபூஹூ
யுத்தம் உச்சகட்டத்திற்கு வருகிறது. அப்பொழுது தேவீ மது அருந்தினாளாம். கண்கள் செம்பருத்திப் பூ போலச் சிவந்து இருக்கின்றதாம். தன்னுடைய சக்ராயுதத்தால் மஹிஷனின் கழுத்தை அறுத்துக் கொன்று விடுகிறாள். தலையில்லாத உடல் பூமியில் விழுந்தது. அனைவரும் பரமானந்தம் அடைந்தனர். தேவர்கள் தேவியை நமஸ்கரித்து ஸ்துதி பாடினார்கள்.
4. மாதஸ்த்வயா நோ, விபதோ நிரஸ்தா
அசக்ய மன்யைர், இத மத்புதாங்கி!
ப்ரம்மாண்டஸர்க் க,ஸ்திதி நாசகர்த்ரீம்
கஸ்த்வாம் ஜயேத் கேன கதம் குதோ வா?
மஹிஷனின் வதத்தால் தேவர்கள் தங்கள் ஆபத்துக்கள் எல்லாம் நீங்கி ஸ்வர்கம் செல்கின்றனர். அவர்களின் யக்ஞ பாகத்தை மீண்டும் அடைகின்றனர். மஹிஷாஸுரனை யாராலும் ஜெயித்திருக்க முடியாது. அவன் இந்திராதி தேவர்களை வெற்றி கண்டவன். திரு மூர்த்திகளையும் ஜெயித்தவன். ஆனால் அம்பாளை அவனால் ஜெயிக்க முடியவில்லை. ஒரு பெண்ணால் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என நினைத்து வரத்தை வாங்கினான். ஆனால் பெண்ணான தேவியால் மரணம் அடைந்தான். அனேக கோடி பிரம்மாண்டங்களின் நாயகியை வெல்ல யாராலும் முடியாது. எந்த உபாயமும் தேவியிடம் செல்லுபடி ஆகாது. இங்கு ஒரு தத்துவம் ஒளிந்திருக்கிறது. எந்த தெய்வத்தைத் துதித்தாலும் முக்தி கிடைக்காது. ஏதேனும் ஒரு கெட்ட நினவு வந்து கொண்டே இருக்கும். கெட்ட எண்ணம் வந்தால் முக்தி நிச்சயம் இல்லை. மனத் தூய்மை இருக்கும் இடத்தில் தேவீ கட்டாயம் வருவாள்.
அதற்காக சந்யாசீ ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த காரியம் செய்தாலும் அன்னையை நினைக்க வேண்டும். கை வேலை செய்தாலும் மனம் தேவியிடம் இருக்க வேண்டும். நமது அவசர வேலைகள் முடிந்த பின்னாவது அன்னைக்கு பாலோ, பழமோ அல்லது உணவோ கட்டாயம் நிவேதனம் செய்ய வேண்டும். எதைச் செய்யும் போதும் அது அன்னைக்கே என்ற நினைவு, துர்முகன், பாஷ்கலன் போன்ற துர் எண்ணங்களை விரட்டிவிடும். அன்னையை பூஜிப்பதற்கும் நாம் நன்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அது நமக்காக அல்ல. தேவியை பூஜை செய்வதற்காக. அவரவர் சக்திக்கு ஏற்ப பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைப் போல் நாமும் செய்ய வேண்டும் என்ற நினைவுத் தேவை இல்லை. பகவானுக்குச் செய்கிறோம் என்ற நினைவுடன் நம்மால் முடிந்ததைச் செய்தால் அதுவே போதும்.
5. வித்யா ஸ்வரூபாSஸி மஹேசி! யஸ்மின்
ஸ வை பரேஷாம், ஸுகத: கவிச்ச;
த்வம் வர்த்தஸே யத்ர ஸதாப்யவித்யா-
-ஸ்வரூபிணீ ஸ த்வதம: பசு: ஸ்யாது
வித்யா ஸ்வரூபிணீயான தேவியை உபாஸிப்பவனுக்கு வித்தையில் எந்த குறைவும் வராது. அவனுக்கு ஞானம் கிடைக்கும். விபரீத புத்தி உள்ளவனிடம் தேவி அவித்யா ஸ்வரூபிணீ யாகத்தான் இருப்பாள். மஹிஷாசுரனிடத்தில் அப்படித்தான் இருந்தாள். எத்தனையோ நல்ல வழிகள் சொல்லியும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அல்லவா?
6. க்ருபாகடாக்ஷா,ஸ்தவ தேவி! யஸ்மின்
பதந்தி தஸ்யாSSத்,மஜ வித்ததாராஹா
யச்சந்தி சௌக்யம், ந, பதந்தி யஸ்மின்
த ஏவ து: கம்,தததேஸ்ய நூனம்
குடும்பத்தில் ஒருவன் பக்தியுடன் தேவியை உபாஸித்தால் அவன் மனைவி , குழந்தைகள் அனைவருக்கும் நல்லதே நடக்கும். தனம், தான்யம், சம்பத்துக்கள் இவைகளுக்குக் குறைவே வராது. தரித்ரம் என்பதே இருக்காது. தேவீயை பூஜிப்பது ஒருநாளும் வீணாகாது. அனைவருக்கும் நன்மையே ஏற்படும்.
7. பச்யாம நித்யம், தவ ரூபமேதது
கதாச்ச நாமானி, ச கீர்த்தயாம
நமாம மூர்த்னா பதங்கஜே தே
ஸ்மராம காருண்ய, மஹா ப்ரவாஹம்
தேவியை பக்தியுடன் ஸ்தோத்ரம் பண்ணவேண்டும். தேவர்கள் மஹிஷாஸுரமர்த்னியாகிய அம்பாளை பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்கின்றார்கள். நாங்கள் எப்போதும் உன்னை எங்கள் கண்ணால் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். நாங்கள் தினமும் மஹிஷாஸுரமர்த்தினியின் ஸ்தோத்ரம் பாடுவோம். உன்னுடைய கருணை எங்களுக்கு எப்போதும் வேண்டும் என்றார்கள் .
8. த்வமேவ மாதாSஸி, திவௌகஸாம் நோ
நான்யா த்விதீயா, ஹிததானதக்ஷா
அந்யே ஸுதா வா, தவ ஸந்தி நோவா;
ந ரக்ஷிதா நஸ்,த்வத்ருதே, மஹேசி!
தேவர்களுக்கு முன்னால் மஹிஷாஸுரமர்த்தினி நின்று கொண்டிருக்கிறாள். ஆனாலும் அவளுக்குப் பல வேலைகள் இருக்கிறதல்லவா? அவளை உபாஸிப்பவர்கள் எத்தனையோ பேர்கள். அவளுடைய குழந்தைகளுக்குக் கணக்கே இல்லையே? பல கோடிக் குழந்தைகள். அதனால் தேவர்கள் சொல்கிறார்கள் “அவர்களுக்கு யார் யாரோ இருக்கிறார்கள். ஆனால் நீ எங்களைவிட்டுப் போகாதே” என்கிறார்கள்.
9. க்வ த்வம்? வயம் க்வே தி, விசிந்த்ய ஸர்வம்
க்ஷமஸ்வ நோ தேவ்ய,பராதஜாலம்
யதா யதா நோ, விபதோ பவந்தி
ததா ததா பாலய பாலயாஸ்மான்
அஸுரர்களை ஜெயிப்பதற்காகத் தேவர்களும் ஆள்மாறாட்டம், திருட்டுத்தனம், கள்ளத்தனம் எல்லாம் செய்திருக்கிறார்கள். பிரகஸ்பதி சுக்ராச்சாரியார் போல் வேடம் பூண்டு, அஸுரர்களுக்கு தவறான வழிகளைச் சொல்லித் தருகிறார். இந்திரன், விருத்தாஸுரனிடம் அக்னியை சாட்சியாக வைத்து, நாம் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி, பின் அவனைக் கொல்கிறார். தேவர்கள் சொல்கிறார்கள் நாங்கள் இதுபோல் நிறையத் தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் நாங்கள் உன் குழந்தைகள் அல்லவா? இதை நீ மன்னிக்க வேண்டும் என்று சரணடைகிறார்கள்.
10. இதி ஸ்துவத்ஸு த்ரிதசேஷு ஸத்யஹ
க்ருபாச்ருநேத்ரைவ, திரோததாத
ததோ ஜகத் தேவி! விபூதிபூர்ணம்
பபூவ தர்மிஷ்ட,ஸமஸ்தஜீவம்
இப்படித் தேவர்கள் துதிக்கும் பொழுது அன்னை மறைந்துவிடுகிறாள். பூமியில் எல்லா இடங்களிலும் ராஜாக்கள் அன்னையின் கோவில்களைக் கட்டினார்கள். மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கு ஏற்ப மக்களும் தேவியை வழிபட்டனர். எங்கும் மழை, தனம், தான்யம் பெருகியது. சுகமே நிலவியது. செல்வம் கொழித்தது. மக்கள் நிம்மதியாக ஆனந்தமாக இருந்தனர். மதுகைடபர் வதத்தில் தமோகுண ப்ரதானியாக அவதாரம் செய்தாள். மஹிஷ வதத்தில் ரஜோகுண ப்ரதானியாக மஹாலக்ஷ்மியாக அவதாரம் செய்தாள்.
11. த்வாம் ஸம்ஸ்மரேயம், ந ச வா ஸ்மரேயம்
விப்தஸு; மா விஸ்,மர மாம் விமூடம்
ருதன் பிடாலார்,ப கவன்ன கிஞ்சிது
சக்னோமி கர்தும்;, சுபதே! நமஸ்தே
அன்னையின் அனுக்ரஹம் இருந்தால் தான் ஆபத்துக் காலங்களில் கூட, நாம் அன்னையை பூஜை செய்ய முடியும். அதற்கு பாக்யம் வேண்டும். புண்ணியம் வேண்டும். அதனால் இந்தக் கவி சொல்கிறார் நான் உன்னை பூஜை செய்தாலும், செய்யாவிட்டாலும் நீ என்னை நினைக்க வேண்டும். பூனைக்கு அழத்தான் தெரியும். அதைப் போல கஷ்டம் வந்தால் எனக்கு அழத்தான் தெரியும். நான் மஹானில்லை. சில சமயம் சந்தர்ப்ப வசத்தால் நான் உன்னை மறந்திருக்கிறேன். மகன் தாயை மறந்தாலும், தாய் மகனை மறக்கக் கூடாது என்கிறார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்றால் சிலகாலம் அவர் தன் குல தேவியை மறந்திருந்தார். அதனால் பல கஷ்டங்களைச் சந்தித்தார். சௌகர்யமாக இருந்த போது பேரும் புகழும் வந்த போது அன்னையை மறந்தார். கடைசீ காலத்தில் தேவியிடம் முறையிட்டார். கஷ்டம் வந்த போது அழுதார். அவர் பரம பக்தர். அன்னை நல்ல மரணம் தந்து அவரைக் காப்பாற்றினாள். அவர் ஒரு நைஷ்டிக பிரம்மசாரி.
2008 ல் தான் இந்த ஸ்தோத்திரம் எழுதினார். 1976 ல் புட்டபர்த்தியில் நடந்த சண்டி ஹோமத்தில் அவர்தான் தேவீ பாகவத பாராயணம் செய்தார். வீட்டில் தினமும் தேவீ பூஜை செய்தார். அப்பொழுதான் அவருக்கு இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நாமும் இந்த பெருமைவாய்ந்த தேவியை பூஜை செய்து சகல நன்மையையும் பெறுவோமாக!
இருபத்தி நான்காம் தசகம் முடிந்தது
மஹாஸரஸ்வதி அவதாரம் ( ஸும்பாதிவதம் )
1. அதாமரா; சத்ரு,விநாச த்ருப்தாஹா
ச்சிராய பக்த்யா, பவதீம் பஜந்தஹ
மந்தீபவத் பக்திஹ்ருத: க்ரமேண
புனச்ச தைத்யாபிபவம் ஸ்மீயுஹு
மகிஷன் மறைந்தவுடன் தேவர்கள் சூர்ய குல மன்னனான சத்ருக்னனை மகிஷனின் சிம்மாசனத்தில் அமர்த்திவிட்டு, தேவர்கள் தத்தம் இருப்பிடம் சென்றனர். அந்த ராஜ்யத்தில் உரிய காலத்தில் மழை பெய்தது. எல்லோரும் சுகமாக சந்தோஷமாக இருந்தனர். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தேவியை மறக்கத் தொடங்கினார்கள். அதனால் அசுரர்கள் மீண்டும் வளரத் தொடங்கினார்கள்.
2. ஸும்போ நிஸும்பச்ச, ஸஹோதரௌ ஸ்வைஹி
ப்ராஸாதிதாத் பத்ம,பவாத் தபோபிஹி
ஸ்த்ரீமாத்ர வத்யத்த்வம், அவாப்ய தேவானு
ஜித்வா ரணேS த்யூ,ஷது ரைந்த்ரலோகம்
சும்பன் நிசும்பன் என்ற இரு அசுரர்கள் பாதாளத்திலிருந்து பூமண்டலத்திற்கு வந்தார்கள். பிரம்மாவைக் குறித்துக் கடும் தவம் செய்தார்கள். பிரம்மா அவர்கள் முன் தோன்றினார். பிரம்மனிடம் அவர்கள் சாகாவரம் கேட்டனர். பிறந்தவன் இறக்க வேண்டும் என்பது உலக நியதி என்று பிரம்மா சொல்ல, சும்ப நிசும்பர்கள் தேவர்கள், மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் ஆகிய எந்த ஆணினத்தாலும் தங்களுக்கு மரணம் வரக்கூடாது என்று கேட்க அவரும் “அப்படியே ஆகட்டும்” என்று வரத்தைத் தந்து விட்டுத் தன்னிடம் சென்றார். மூ உலகிலும் தங்களை வெல்லக்கூடிய பலம் கொண்ட பெண் இல்லை என்று இறுமாப்பு கொண்டனர். அவர்களுடன் சண்டன் முண்டன் தாம்ரன் ரக்தபீஜன் அனைவரும் சேர்ந்து கொண்டனர். அவர்கள் ஸ்வர்கம் சென்று இந்த்ராதி தேவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டு சுகமாக இருந்தனர். தேவர்கள் இருக்க இடம் இன்றி மலைகளிலும் குகைகளிலும் யக்ஜம், பூஜை, அமிர்தபானம் இன்றி கஷ்டப்பட்டு வந்தார்கள்.
3. ப்ரஷ்டச்ரியஸ்தே து, குரூபதேசாது
ஹிமாத்ரிமாப்தா, நுநுவு: ஸுராஸ்த்வாம்
தேஷாம் புரச்சாத்ரி,ஸுதாSSவிராஸீது
ஸ்நாதும் கதா ஸா, கில தேவநத்யாம்
100 அஸ்வமேத யாகம் செய்த இந்திரன் கூட கஷ்டப்பட வேண்டிய காலத்தில் கஷ்டத்தைத்தான் அனுபவிக்க வேண்டியுள்ளது. இதை யாரால் மாற்ற முடியும்? இப்படி 1000 வருடம் துன்பப்பட்ட தேவர்கள், தங்கள் குருவான பிரகஸ்பதியிடம் போகின்றனர். எங்களின் துக்கம் தீரவும் சுவர்க்கலோகம் மீண்டும் கிடைக்கவும் வழி சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள். பிரகஸ்பதி சொன்னார் “நாம் இப்பொழுது இந்த நேரத்திற்கும், காலத்திற்கும், எந்த உபாயம் பலன் தருமோ, அதைச் . காலம் என்னும் தெய்வத்துக்கு மேல் காலதீதமாகிய தெய்வம் ஒன்று இருக்கிறது. உங்களுடைய வேண்டுகையின் படி, முன்பு மகிஷனை எந்த தெய்வம் வதம் செய்ததோ, அதுவே அந்த தெய்வம். அந்த தேவி இப்போது இமயமலையில் இருக்கிறாள். அங்கு சென்று அந்த தேவியை பீஜ மந்திரங்களுடன் ஸ்தோத்திரம் செய்யுங்கள். உங்கள் காரியும் சித்தியாகும்” என்றார். இந்திராதி தேவர்கள் இமயமலைச் சென்று தேவியைத் துதித்தனர். தேவியும் அவர்களுக்குக் காட்சி தந்தாள். எந்த ரூபத்தில் காட்சி தந்தாள்? கங்கைக்குக் குளிக்கச் செல்லும் ஒரு பெண் போல பார்வதி தேவி வந்தாள்.
4. தத்தேஹகோசாத், த்வமஜா ப்ரஜாதா
யத: ப்ரஸித்தா கலு கௌசிகீதி
மஹாஸரஸ்வத்ய,பிதாம் ததாநா
த்வம் ராஜ்யஸீ சக்திரிதிர்யஸே ச
யா குந் தேந்து துஷாரஹார தவளா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர தண்ட மண்டிதகரா
யா ச்வேத பத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிஹி
தேவஸ் ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ
நிச்சேஷ ஜாட்யாபஹா
தேவி கேட்டாள் “தேவர்களே! நீங்கள் யாரைத் துதிக்கிறிர்கள்? ஏன் கவலையோடு இருக்கிறிர்கள்? உங்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும்? என்று கேட்டாள். தேவர்கள் கொழுப்பேறிய சும்ப நிசும்பர்களின் அட்டகாசத்தையும், அதனால் தேவர்களும் இந்த உலகமும் படும் கஷ்டத்தைச் சொல்கிறார்கள். தேவியின் உடலிலிருந்து கௌசிகீ என்னும் அம்பிகை தோன்றினாள் . அவளின் மற்றொரு பெயர் சரஸ்வதி. கருமை நிறத்துடன் பயங்கர ரூபம் கொண்டபடியால் காளி என்றும் பெயர் கொண்டாள். பயங்கர உருவம் இருத்தாலும் ஸர்வாலங்கார பூஷணையாக, பக்தர்களுக்கு வேண்டியதைத் தரும் க்ருபாவதியாக இருந்தாள்.
5. ஹிமாத்ரிச்ருங்கேஷு, மனோஹராங்கி
ஸிம்ஹாதிரூடா, ம்ருதுகானலோலா
ச்ரோத்ராணி நேத்ராண்யபி தேஹபாஜாம்
சகர்ஷிதாஷ்டா,தச பாஹு யுக்தா
“தேவர்களே! நீங்கள் பயப்பட வேண்டாம் நான் சும்ப நிசும்பர்களை அழிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, 18 கைகளை உடைய அந்த தேவி சிம்ம வாகனத்தில் ஏறிக் கொண்டு, இமயமலையின் உச்சியில் அமர்ந்து, மிக ரம்யமான கானத்தை இசைத்துக் கொண்டிருந்தாள். அந்த தேவியின் அழகு பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் சௌந்தர்யமாம். தேவியின் கானத்தைக் கேட்ட பறவைகளும், மிருகங்களும் மோஹம் கொண்டனவாம். தேவர்கள் பரமானந்தம் அடைந்தார்கள்.
6. விஞ்ஞாய ஸும்ப:, கில தூதவாக்யாது
த்வாம் மோஹனாங்கீம் தயிதாம் சிகீர்ஷஹ
த்வ தந்திகே ப்ரேஷயதிஸ்ம தூதான்
ஏகைகச: ஸ்நிக்த,வசோவிலாஸானு
அந்த சமயத்தில் சும்பனின் சேவகர்களான சண்டனும், முண்டனும் அங்கு வருகிறார்கள். பாடிக்கொண்டிருக்கும் தேவியைப் பார்த்தனர். ஆச்சர்யத்துடன் சும்பனிடம் சென்று சொல்கின்றனர். ” ராஜாவே! ஒரு அழகிய சுந்தரி சிம்ம வாகனத்தில் இமாசலத்திலிருந்து வந்திருக்கிறாள். அவள் ஒரு பேரழகியாக இருக்கிறாள். அவளின் கானம் கேட்டு பறவைகளும் மயங்கிக் கிடக்கின்றன. அவளை நீ உன் மனைவியாக ஆக்கிக்கொள். உன்னிடம் இல்லாத பொருள் ஏதும் உண்டா? இந்திரனின் ஐராவதம், பாரிஜாதகம், ஏழுமுகமுடைய குதிரை, குபேரனின் பத்மா நிதி, வருணனின் வெண்குடை, சமுத்ரராஜனின் வாடாத தாமரை மலர், யமனின் பாசம் இது போன்று சகலமும் உன்னிடம் இருக்கின்றன. இவைகள் எல்லாம் தேவர்களிடமிருந்து உன்னால் கவரப்பட்டவைகள். ஆனால் மூ உலகிலும் கிடைக்காத ஸ்த்ரீ ரத்தினம் அந்தப் பெண். கிடைப்பதற்கரிய பொருள்கள் அனைத்தையும் உடைய நீ அந்த ஸ்த்ரீ ரத்தினத்தையும் உன் பத்னி ஆக்கிக்கொள்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட சும்பன் உடனே சுக்ரீவனிடம் “நீ போய் நல்லவார்த்தைகள் பேசி அந்தப் பெண்ணை இங்கு அழைத்து வா” என்று சொன்னான்.
7. த்வாம் ப்ராப்ய தே காளி,கயா ஸமேதா
மேகைகச: ஸும்ப,குணான் ப்ரபாஷ்ய
பத்னீபவாஸ்யே தி, க்ருதோ பதேசாஹா
ஸதத் ப்ராதிகூல்யாத், குபிதா பபூவுஹு
சுக்ரீவன் சொன்னான் “அழகிய பெண்ணே! சும்பன் மூஉலக நாயகன். அவன் உன்னிடம் ஆசை வைத்திருக்கிறான். அவன் சாகும் வரை உன் கட்டளைப் படி நடப்பான். நீ அவனை மணந்து கொண்டால் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம்” என்றான். தேவி சொன்னாள் ”அவன் வீரத்தையும், பலத்தையும், அழகையும் நான் அறிவேன். ஆனால் எனக்கு ஒரு விரதம் உள்ளது என்னோடு யுத்தம் செய்து என்னை வெற்றி கொள்பவனையே நான் மணப்பேன். அப்படியில்லாமல் என் சூலத்திற்கு பயந்தால், தேவர்களுடைய சுவர்க்கத்தை அவர்களிடம் தந்து விட்டு, பாதாளம் சென்று சுகமாக வாழுங்கள்” என்றாள். சுக்ரீவன் இதைச் சும்பனிடம் போய்ச் சொல்கிறான்
8. ஸும்பா ஞயா தூம்ரவிலோசனாக்யோ
ரணோத்யத: காளிகயா ஹதோSபூது
சண்டம் ச முண்டம் ச, நிஹத்ய காளீ
த்வத் பாலஜா தத், உதிரம் பபைள ச
சும்பன் தூம்ரலோசனனை அனுப்புகிறான். அவனும் முதலில் நல்லவிதமாகவேப் பேசுகிறான். தேவியை சும்பனிடம் கொண்டு போக வேண்டுமல்லவா? ஆனால் தேவி ஒரு பெண் யானை கழுதையை மணக்குமா? ஒரு பெண் சிங்கம் குள்ள நரியைத் திருமணம் செய்து கொள்ளுமா? என்றாள். தூம்ரலோசனனுக்குக் கோபம் வருகிறது. முடிவில் தேவியுடன் யுத்தம் செய்கிறான். தேவியுடன் யுத்தம் செய்தால் என்ன நடக்கும்? தூம்ரலோசனன் வதம் செய்யப்பட்டான். தூம்ரலோசனன் என்பது நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் தான். இது சரியல்ல என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அதை தலை தூக்க விடாமல் ஆரம்பத்திலேயே களைந்து விட வேண்டும். அந்த கெட்ட எண்ணத்தைப் போல் தலை தூக்கிய தூம்ரலோசனனை காளிகா தேவி அழித்தாள்.
அதன் பின் சண்ட முண்டர்கள் போகிறார்கள். யுத்தம் நடக்கிறது. சண்டிகை கோபம் கொண்டு தன நெற்றிக்கண்ணிலிருந்து புலித்தோல் அணிந்தவளும், யானைத்தோலை உத்தரீயகமாக போர்த்தியவளும், பிரம்ம விஷ்ணுவின் தலைகளை மாலையாக தரித்தவளும், வாள் பாசம் போன்ற ஆயுதங்களுடன், பரந்த முகமும் விசாலமான நிதம்பத்துடன், கோபம் கொண்ட முகத்துடனும், காலராத்ரி போல் நிறத்துடனும் காளி என்னும் சக்தியாகத் தோன்றினாள். சண்டனையும் முண்டனையும் பாசக் கயிற்றினால் கட்டினாள். பின் அவர்களின் தலையைக் கொய்து, ரத்த பானம் செய்தாள். அது முதல் கௌசிகீ ‘சாமுண்டீ” என்று அழைக்கப்பட்டாள்.
9. சாமுண்டிகேதி, ப்ரதிதா தத: ஸா:
த்வாம் ரக்தபீஜோ,Sத யுயுத்ஸுராப,
யத்ரக்த பிந்தூத்,பவரக்த பீஜ-
ஸம்கைர் ஜகத்வ்யாப்தம் அபூதசேஷம்
அதன் பின் ரக்தபீஜன் வருகிறான். தேவிக்கும் அவனுக்கும் யுத்தம் உக்ரகமாக நடக்கிறது . அவன் உடலிலிருந்து பெருகும் ரத்த வெள்ளத்திலிருந்து பல அசுரர்கள் தோன்றியவண்ணம் இருந்தார்கள்.
10. ப்ரம்மேந்த்ர பாச்யா,திக தேவ சக்தி-
கோட்யோ ரணம் சக்ரு,ரராதிஸம்கைஹி
தத் ஸங்கரம் வர்ண,யிதும் ந சக்தஹ
ஸஹஸ்ரஜிஹ்வோபி; புன: கிமன்யே!
இதைக் கண்ட பிரம்மாதி தேவர்கள் தங்களின் சக்திகளை ஆயுதங்களுடன் அனுப்பி வைத்தனர். பிரம்ம சக்தி ப்ராம்ணி, வைஷ்ணவி, சிவக்தியான சாங்கரீ, காத்திகேய ரூபிணீ கௌமாரீ, இந்த்ராணி, வாராஹீ, யமசக்தி, வாருணி ஆகிய அனைவரும் வந்து சேர்ந்தனர் . அசுரர்கள் ரத்தம் பெருகப் பெருக மேலும் மேலும் அசுரர்கள் தோன்றினர் . மனதில் தீய எண்ணம் இருந்தால் அதுவும் இப்படித்தான் வளர்ந்து கொண்டே வரும் என்பதை இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதை அழிப்பதற்கு தேவியின் அருள் வேண்டும். அதனால் தேவியை மனதில் நினைக்க வேண்டும்
11. ரணேSதிகோரே, விவ்ருதானனா ஸா
காளீ ஸ்வஜிஹ்வாம், கலு சாலயந்தீ
த்வச்சஸ்த்ர க்ருத்தா,கில ரக்தபீஜ-
ரக்தம் பபௌ, கர்ஜனபீததைத்யா
அப்பொழுது தேவி சொன்னாள் “சாமுண்டே! நீ வாயை நன்கு திறந்து வைத்துக் கொள் .அவர்கள் உடலிலிருந்து வரும் உதிரத்தை ஒரு துளி கூட கீழே விழாமல் பானம் செய்” என்றாள் ,அதன்படி அவனை அடித்து கத்தியால் குத்தி அவனது ரத்தத்தைப் பருகினார்கள். மேலும் மேலும் ரக்தபீஜர்கள் உண்டாவது தடுக்கப்பட்டதால் தேவியுடன் யுத்தம் செய்ய சக்தி இல்லாமல் அவனும் மாண்டுபோனான். தெய்வ சிந்தனை மனதைவிட்டு அகலும் போது கெட்ட திய சிந்தனைகள் தலை தூக்கும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
12. த்வயா நிஸும்பஸ்ய, சிரோ நிக்ருத்தம்
ஸும்பஸ்ய தத் காளி, கயாSபி சாந்தே
அந்யேSஸுராஸ்த்வாம், சிரஸா ப்ரணம்ய
பாதாளமா புஹு,ஸ்த்வதனுக்ரஹேண
அதன் பின் நிசும்பன் வருகிறான் கௌசிகீ அவனை வதம் செய்கிறாள் அதன் பிறகு சும்பன் வருகிறான். காளிகாதேவி அவனை வதம் செய்கிறாள். சும்பனும் அழிந்த பின் மற்ற அசுரர்கள் தேவியிடம் சரணாகதி அடைகிறார்கள். அவர்களை பாதாள லோகத்திற்கு அனுப்பிவைக்கிறாள் . அங்கு அவர்கள் சுகமாக இருக்கிறார்கள். தேவர்களுக்குச் சுவர்க்கலோகம், மனிதர்களுக்கு பூலோகம், அசுரர்களுக்கு பாதாளலோகம் இப்படி அவரவர்களுக்குத் தனி லோகமே தேவியால் தரப்பட்டிருக்கிறது. அதனால் தனது தகுதிக்கு மீறி எதையும் ஆசைபடுவது தவறு என்பதை நாம் இதன் மூலம் அறிந்துகொள்ள வேண்டும்.
13. ஹதேஷு தேவா, ரிபுஷு ப்ரணம்ய
த்வாம் துஷ்டுவு: ஸ்வர்க்க,மகு: புனச்ச
தே பூர்வவத் யஜ்ஞ்னஹவிர் ஹரந்தோ
பூமாவவர்ஷன்;, ஜஹ்ருஷுச்ச மர்த்யாஹா
அசுரர்கள் அழிந்த பிறகு தேவர்கள் சந்தோஷத்தால் தேவியை துதிக்கின்றனர். அவர்கள் சுவர்க்கத்தை மீண்டும் அடைந்தார்கள் .யக்ஜம் ஹவிர் பாகங்களை மீண்டும் பெற்றனர் .பூமியிலும் சகல ஸுபிக்ஷமும் ஏற்படுகிறது அதனால் சகல ஜீவராசிகளும் மனிதர் உள்பட சந்தோஷமாக இருக்கின்றனர்.
14. மாதர் மதீயே ஹ்ருதி ஸந்தி தம்ப-
தர்பாவிமானாத்,யஸுரா பலிஷ்டாஹா
நிஹத்ய தான் தேஹ்ய,பயம் ஸுகம் ச
த்வமேவ மாதா மம; தே நமோஸ்து
தம்பம் (தற்பெருமை), தர்பம், (கர்வம்), அபிமானம் (எல்லாவற்றிற்கும் தானே காரணம் என நினைப்பது), க்ரோதம் (பழிவாங்கும் எண்ணம்), பாருஷ்யம் (கடுமையான பேச்சு) இவைகள் எல்லாம் அஹங்காரத்தின் அங்கங்கள். இவைகள் அசுர சம்பத்துக்கள். இது பகவத் கீதையில் (16/5) சொலப்பட்டிருக்கிறது. இவைகள் இல்லாமல் இருக்க வேண்டுமானால் அந்த தேவியின் கருணை வேண்டும். இந்த தேவீ நாராயணீயத்தின் ஆசிரியர் சொல்கிறார் “தாயே! இந்த அசுர சம்பத்துக்களைக் களைந்து, பகவானை அடைவதற்கான சாதனைகளான நல்ல பண்புகளும் நல்ல நடத்தையும் ஆகிய தெய்வ சம்பத்துக்கள் என்னிடம் வளர நீயே எனக்கு கருணை காட்ட வேண்டும் என்று வேண்டுகிறார்.
இருபத்தி ஐந்தாம் தசகம் முடிந்தது
ஸுரதகதை
1. ராஜா புராஸீத், ஸுரதாபிதானஹ
ஸ்வாரோசிஷே சைத்ர,குலாவதம்ஸஹ
மன்வந்தரே ஸத்ய,ரதோ வதான்யஹ
ஸம்யக்ப்ரஜாபாலன மாத்ரநிஷ்டஹ
ஒரு குறிப்பிட்ட காலத்தின் அளவு, மன்வந்தரம் என்று சொல்லப்படுகிறது. அதுபோல 14 மன்வந்திரங்கள் உண்டு. ப்ரம்மாவின் ஒரு பகல் கல்பம் எனப்படும். 1000 சதுர் யுகமும் 14 மன்வந்திரமும் சமமான கால அளவைக் குறிக்கிறது. ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு மனு உண்டு. அந்த மனுவின் பெயரால் அந்த மன்வந்திரம் அழைக்கப்படும். முதல் மனு ஸ்வாயம்புவன். அந்த மன்வந்திரம் ஸ்வாயம்புவ மன்வந்திரம் எனப்படும். இரண்டாவது மனு ஸ்வாரோசிஷன். அந்த மன்வந்திரம் ஸ்வாரோசிஷ மன்வந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது மன்வந்திரத்தில் நடந்த ஒருகதை இந்த தசகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. சைத்ர வம்சத்தில் ஜனங்களை நன்கு காப்பவனும், விரோதிகள் இல்லாதவனும், தனுர்வேதத்தை அறிந்தவனும், பிராமணர்களை பூஜிப்பவனும், தான தர்மங்கள் செய்பவனும், ஸத்கர்மங்களில் ப்ரீதி உடையவனும் ஆகிய ஸுரதன் என்னும் ஒரு நல்ல ராஜா இருந்தான்.
2. வீரோSபி தைவாத், ஸமரே ஸ கோலா
வித்வம்ஸிபி: சத்ருபலைர் ஜித: ஸன்
த்யக்த்வா ஸ்வராஜ்யம், வனமேத்ய சாந்தம்
ஸுமேதஸம் ப்ராப முனிம் சரண்யம்
கோலங்கள் என்றால் பன்றிகள். இதை அடித்துச் சாப்பிடுபவர்கள் கோலாவித்வம்ஸிகள் எனப்படுவர். இவர்கள் தங்களிடம் பலம் இருக்கிறது என்று நினைத்து, மதத்தினால், ஸுரதன் ஆளும் ராஜ்யத்தைத் தன் வசம் ஆக்கிக்கொள்ளத் திட்டமிட்டனர். அதனால் ஸுரதனின் நகரை அடைந்து, அவனுடன் யுத்தம் செய்தனர். யுத்தத்தில் ஸுரதன் தோல்வி அடைந்தான். ராஜா ஸுரதன் மிலேஸ்ஸியர்களை விட பலத்தில் குறைந்தவன் அல்ல. ஆனாலும் தோல்வி அடைந்தது தெய்வத்தின் செயலே ஆகும். ஸுரதன் மிகுந்த வருத்தத்துடன் காட்டிற்குச் சென்று அங்கு சுமேதஸ் என்னும் ஒரு ரிஷியைச் சரண் அடைந்தான்.
3. தபோவனம் நிர்பயமாவஸன் த்ரு-
-ச்சாயாச்ரித: சீதளவாதப்ருத்தஹ
ஸ ஏகதா ராஜ்ய,க்ருஹாதிசிந்தா
பர்யாகுல: கம்,சிதபச்யதார்த்தம்
அந்த ஆஸ்ரமத்தில் முனிவரின் சீடர்கள் வேதாத்யயனம் செய்யும் சப்தம் கேட்டு மிக மகிழ்ச்சியுடன் அங்கு இருந்தான். பயமும் கவலையும் இல்லாமல் இருந்தான். அந்த வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு நாள் அவன் ஒரு மர நிழலில் அமர்ந்து கொண்டு இருந்தான். குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் அவன் மனமோ தன்னுடைய ராஜ்யம், மனைவி, மக்கள், உறவினர்கள், தன்னுடைய செல்வம் இவைகளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவைகளிடம் அவனுக்கு அத்துணை பற்று. அவன் மனம் இவைகளின் நிலையை நினைத்துப் பதறியது. அப்பொழுது அங்கு ஒருவன் வந்தான். அவனும் துக்கத்தில் இருந்தான்.
4. ராஜா தமூசே ஸுரதோஸ்மி நாம்நா
ஜிதோSரிபிர் ப்ரஷ்ட,விபூதிஜாலஹ
க்ருஹாதி சிந்தா,மதிதாந்த ரங்கஹ
குதோSஸி, கஸ்த்வம், வத மாம் ஸமஸ்தம்
வந்தவன் துக்கத்தில் இருக்கிறான் என்பதைச் ஸுரதன் புரிந்து கொண்டான். அவனிடம் சென்றுத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, எல்லா விபரமும் கேட்டான்.
5. ச்ருத்வேதி ஸ ப்ரத்யவதத் – “ஸமாதி
நாமாஸ்மி வைச்யோ, ஹ்ருதஸர்வ வித்தஹ
பத்னீஸுதாத்யை:, ஸ்வ க்ருஹான்னிரஸ்த
ஸ்ததாSபி ஸோத்கண்ட மிமான் ஸ்மராமி”
வந்தவன் ஒரு வைசியன். அவன் பெயர் சமாதி. வியாபாரம் செய்பவன். வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதித்தான். மனைவியும், மகன்களும் செல்வத்தை அபஹரித்துக் கொண்டு அவனை வீட்டிலிருந்து விரட்டி விட்டனர். அவர்கள் தன்னை விரட்டினாலும் அவர் மனம் அவர்களையே நினைத்துக் கவலைப் பட்டது. ஸுரதனும் சமாதியும் ஒரே நினைவுடன் கூடிய மன அவஸ்தையில் தான் இருந்தார்கள்.
6. அநேந ஸாகம், ஸுரதோ விநீதோ
முனிம் ப்ரணம் யாSS ஹ, ஸமாதிநாமா
க்ருஹாந்நிரஸ்தோSபி, க்ருஹாதி சிந்தாம்
கரோதி ஸோத் கண்ட,மயம் மஹர்ஷே!
ஸுரதன் சமாதியை சுமேதஸ் முனிவரிடம் அழைத்துச் சென்றான். அவருக்கு அவனை அறிமுகப் படுத்தினான். “இவர் பெயர் சமாதி. வியாபாரம் செய்பவர். வியாபாரத்தில் சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் பிடுங்கிக் கொண்டு, அவன் மனைவியும் மக்களும் இவரை விரட்டி விட்டனர். ஆனாலும் இவர் அவர்களிடம் அன்பும், பாசமும் கொண்டு அவர்களை நினைத்துக் கவலைப்படுகிறார் என்று சொன்னான். முனிவரை மஹர்ஷே! என்று அழைக்கிறான். மஹரிஷி என்றால் முன்னும் பின்னும் அதாவது நடந்தது நடக்கப்போவது எல்லாம் அறிந்தவர்கள் என்று பொருள் .
7. ப்ரம்மைவ ஸத்யம், பரமத்விதீயம்
மித்யா ஜகத் ஸர்வ,மிதம் ச ஜானே
ததாSபி மாம் பாத,த ஏவ ராஜ்ய
க்ருஹாதிசிந்தா, வத தஸ்ய ஹேதும்
மஹரிஷியே! சாமதியின் நிலையினை உங்களுக்குச் சொன்னேன். ஆனால் என் நிலையும் அதுதான். இந்த உலகம் கனவைப் போல் பொய் என்று தெரியும். இந்த ராஜ்யம், வீடு அனைத்தும் மித்தை என்பதையும் நான் அறிவேன். ஆனால் இந்த ஞானம் சமாதிக்கு இல்லை. அவருக்கு மோஹம் இருந்தால் ஆச்சர்யம் இல்லை. ஆனால் எல்லாம் தெரிந்த நானும் மோஹம் அடைகின்றேனே? இதற்குக் காரணம் என்ன? என்று கேட்டான். இங்கு நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் குழந்தைகள் எல்லாம் மரணம் அடைய, மனம் மிகவும் வருந்தித் தானும் தற்கொலைச் செய்து கொள்ள தண்ணீரில் குதிக்க முயற்சிக்கிறான். அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? ஆத்மீகத்தில் உயர்ந்தவனா? அல்லது தாழ்ந்தவனா? உயர்ந்தவன் என்றால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும். தற்கொலை என்ற சிந்தனையே வரக்கூடாது. அப்படி வந்தால் அவர் ஒரு சாதாரண மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி ஒருவர் இருந்தார்i. ஆனால் அவர் யார் தெரியுமா? அவர் தான் மஹானான வஸிஷ்ட முனிவர். அவருக்கு ஞானம் இருந்தாலும் பற்று போகவில்லை. அவருடைய அடுத்த ஜன்மத்தில் ஸுரதனாகப் பிறந்தார். அதனால் தான் எல்லாம் தெரிந்த நானும் ஏன் இப்படி என்று கேட்க்கிறார். ராஜ்ய பரிபாலனம் செய்து ஆனந்தம் அனுபவித்த பின் தான் முக்தி என்று தேவி அவருக்கு பின்னால் அனுக்ரஹம் செய்யப் போகிறாள். ஏன் என்றால் ஆசை மிச்சம் இருந்தால் மீண்டும் பிறக்க வேண்டும் என்பதே நியதி.
8. ஊசே தபஸ்வீ – ச்ருணு; பூப! மாயா
ஸர்வஸ்ய ஹேது; ஸகுணா குணா ஸா;
பந்தம் ச மோக்ஷம், ச கரோதி ஸைவ
ஸர்வேSபி மாயா,வசகா: பவந்தி
எல்லா உயிர்களின் பந்தத்திற்கும், மோக்ஷத்திற்கும் காரணம் மாயைதான். அந்த மாயா அகுணை. அம்பாள் நிர்குணை. அம்பாளின் காளி, லக்ஷ்மி அவதாரங்கள் ஸகுணை. ஒருவனுக்கு மனைவி, மக்கள், செல்வம் இவைகளில் ஏற்படும் ஆசைதான் பந்தம். இந்த மமதையையும் (மோஹம்), பந்தத்தையும் ஏற்படுத்துவது யார்? தேவிதான். இதிலிருந்து விடுதலை தருவதான அந்த மோக்ஷத்தைத் தருவது யார்? அதுவும் அந்த தேவிதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மூன்று உலகத்திலும் இந்த மாயையின் வசப்படாதவர்கள் யாரும் இல்லை.
9. ஞானம் ஹரேரஸ்தி, விதேச்ச, கிந்து
க்வசித் கதாசின், மிளிதௌ மிதஸ்தௌ
விமோஹிதௌ கஸ்த்வமரே! நு கஸ்த்வம்
ஏவம் விவாதம், கில சக்ரது: ஸ்ம
ப்ரம்மம் மட்டுமே ஸத்யம். இந்த உலகம் மாயை. இது ஸுரதனுக்கு நன்கு தெரியும். ஆனாலும் எனக்கு ஏன் மமதை வந்தது என்று கேட்கிறான். சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் நன்கு அறிந்து கொள்ளக்கூடிய ஞானத்தால் மட்டும் மாயா மோஹத்திலிருந்து விடுபட முடியாது. ப்ரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் ப்ரம்மமே ஸத்யம், மற்றதெல்லாம் மாயை என்கிற ஞானம் உண்டு. ஆனாலும் அவர்கள் இருவரும் ஒருமுறை சந்தித்த பொழுது, தங்களில் யார் பெரியவர்? என்ற சர்ச்சை ஏற்பட்டது. ப்ரம்மா சொன்னார் “நானே இந்த உலகைப் படைக்கும் கர்த்தா. அதனால் நானே பெரியவன்” என்றார். உனக்கு ஆபத்து வரும் காலங்களில் உன்னைக் காப்பாற்றியது யார்? நான் தானே! அதனால் நானே பெரியவன் என்றார் விஷ்ணு. அப்பொழுது அங்கு ஒரு சிவலிங்கம் தோன்றியது. உடனே ஒரு அசரீரியும் கேட்டது. “இந்த சிவலிங்கத்தின் அடியையோ அல்லது முடியையோ யார் காண்கின்றாரோ அவரே பெரியவர்” என்றது. உடனே விஷ்ணு அடியைக்காண பாதளம் நோக்கியும், ப்ரம்மா முடியைக் காண ஆகாயம் நோக்கியும் சென்றனர். விஷ்ணு தன்னால் முடியாமல் திரும்பி வந்துவிட்டார்.
பிரம்மா சிவனின் தலையிலிருந்து விழுகின்ற ஒரு தாழம் பூவைப் பார்த்து, அதனுடன் பேசி, அதைத் தான் சிவனின் முடியைக் கண்டதற்கானச் சாட்சியாகக் கொண்டு வந்தார். விஷ்ணு அந்த தாழம்பூவிடம் கேட்க, அதுவும் ப்ரம்மா தன்னைச் சிவனின் முடியிலிருந்தே கொண்டு வந்தார் என்று பொய் சாட்சி சொல்லியது. இதில் நம்பிக்கை இன்றி விஷ்ணு சிவனைத் த்யானித்தார். சிவனும் அங்கு வந்தார். ஏ தாழம்பூவே! நீ பொய் சொன்னதால் இனி என் பூஜைக்கு அருகதை ஆகமாட்டாய் என்று சிவன் சொன்னார். ப்ரம்மா வெட்கித் தலை குனிந்தார். சிவன் தாழம்பூவை நிராகரிப்பதற்கும், நம்மில் யார் பெரியவர் என்று ஞானம் மிகுந்த ப்ரம்மாவும் விஷ்ணுவும் விவாதம் செய்வற்கும் காரணம் என்ன? மாயைதான். எந்த நேரத்தில் இந்த மாயையில் அகப்படுவோம் என்று யாருக்கும் தெரியாது. இதில் அகப்படாமல் இருக்க ஒரேவழி தான் உண்டு. அந்த ஞானஸ்வரூபிணியான பராசக்தியை வணங்க வேண்டும். இந்த மோஹத்திலிருந்து காப்பாற்ற அவளால் மட்டுமே முடியும்.
10. ஞானம் த்விதைகம், த்வப்ரோக்ஷ, மன்யது
பரோக்ஷமப்யேத தவேஹி ராஜன்!
ஆத்யம் மஹேச்யா: க்ருபயா விரக்த்யா
பக்த்யா மஹத் ஸங்கமதச்ச லப்யம்
தனக்கு ஏன் இப்படி வீடு, மனைவி, ராஜ்யம் என்ற மோஹம் வந்தது என்ற ஸுரதனின் கேள்விக்குப் பதில் சொல்கிறார். இந்த புத்தி மோஹம் என்பது எந்த ஞானிக்கும் வரலாம். இதற்காகத்தான் ப்ரம்மா விஷ்ணுவின் கதையைச் சொன்னார். அதன் பின் ஞானத்தின் ரூபத்தையும் விளக்குகிறார். ஞானம் என்பது இரண்டு விதம். அபரோக்ஷ ஞானம், பரோக்ஷ ஞானம். அபரோக்ஷ ஞானம் ஒருவனை பந்த விமுக்தன் ஆக்கும். அது தேவி பக்தியாலும் மஹாத்மாக்களின் அனுக்ரஹாத்தாலும் மட்டுமே கிடைக்கும். போக விரக்தி வரவேண்டும். இது தேவியின் க்ருபை இருந்தால் தான் இது முடியும்.
11. ய ஏததாப்னோதி, ஸ ஸர்வமுக்தோ;
த்வேஷச்ச ராகச்ச, ந தஸ்ய பூப!;
ஞானம் த்விதீயம் கலு சாஸ்த்ரவாக்ய-
விசாரதோ புத்திமதைவ லப்யம்
அபரோக்ஷ ஞானம் உள்ளவனுக்கு ராகம், த்வேஷம் இல்லை. ப்ரம்மமே ஸத்யமானது. இந்த உலகம் மாயை. காண்பது, கேட்பது, அறிவது எல்லாமே ப்ரம்மம் தான் என்பதை உணர்வான். எல்லாம் ஒன்றுதான் என்றால் ராகம் ஏது? த்வேஷம் ஏது? ப்ரம்மத்தைத் தவிர வேறு பலதும் உண்டு என்றால் தான் ராக த்வேஷத்திற்கு இடம் உண்டு. ஒன்றிடமும் அவனுக்குப் பற்று இல்லை. அவன் பந்த விமுக்தன். ப்ரம்மம் மட்டும் ஸத்யம். இந்த உலகம் மாயை என்று அறிய, வேதாந்த சாஸ்திரங்கள் படித்தால் போதும். புத்தி உள்ளவனால் மட்டுமே இதைப் படிக்க முடியும். ஆனாலும் படித்தது எல்லாம் அனுபவத்தில் வரவேண்டும் என்ற அவஸ்யம் இல்லை. இது பரோக்ஷ ஞானம். சாஸ்திரங்கள் படித்தவன் பந்த விமுக்தன் என்று சொல்ல முடியாது. அவன் மனதில் ராகமும், த்வேஷமும் விலக வேண்டும். ஸுரதன் சாஸ்திரம் தெரிந்தவன் ஆனாலும் தான் ராஜா என்ற அபிமானம் அவனிடம் இன்னும் இருக்கிறது. பந்தம் விலகாததற்கு இதுதான் காரணம் என்று பதில் சொன்னார்.
12. சமாதிஹீணோ ந ச சாஸ்த்ரவாக்ய
விசாரமாத்ரேண, விமுக்திமேதி
தேவ்யா: கடாக்ஷைர், லபதே ச புத்திம்
முக்திம் ச ஸா கே,வல பக்திகம்யா
மஹாவாக்யங்களைப் படிப்பதால் சாஸ்திரங்களையும் சித்தாந்தங்களையும் தெரிந்து கொள்ளலாம். அது பரோட்க்ஷ ஞானம். சாதனைகளை நடைமுறையில் கொண்டு வந்தால் தான் அபரோக்ஷ ஞானம் வரும். அப்பொழுது தான் பந்தத்திலிருந்து முக்தி கிடைக்கும். ஸமம், தமம், திதிச்ச, உபரதி, ச்ரத்தா, சமாதானம் இவைகள் ஞான சாதனைகளின் வழிகள். விஷய போக சக்திகள் தோஷம் தான் தரும். மனதை போக விஷயங்களிலிருந்து விலக்கி கட்டுப் படுத்த வேண்டும். அதுதான் ஸமம். இந்திரியங்களை அதனதன் போக்கில் அலைய விடாமல் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அது தமம். எந்த துக்கத்தையும் சகித்துக் கொள்ளப் பழக வேண்டும். இது திதிக்க்ஷா. மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்த்தாலும் நினைத்தாலும் பகவான் சிந்தனையுடன் இருக்கப் பழக வேண்டும். இது உபரதி. சாஸ்த்திரத்திலும் குருவிடமும் நம்பிக்கை வேண்டும். இது சிரத்தை. புத்தி ப்ரம்மத்திலேயே லயிப்பது. இது ஸமாதானம். இவைகளை நிரந்தரமாக அனுஷ்டித்தால் உள்மனதிற்குச் சக்தி கிடைக்கும். இப்படியாக பரோக்க்ஷ ஞானத்தை அபரோக்க்ஷ ஞானமாக மாற்றிக் கொள்ளலாம். ஸுரதன் தான் எல்லாம் அறிந்தவன் என்று சொன்னாலும் அவன் அபரோக்க்ஷ ஞானம் உடையவனாக மாட்டான்.
13. ஸம்பூஜ்ய தாம் ஸாக,மனேன துர்க்காம்
க்ருத்வா ப்ரஸன்னாம், ஸ்வஹிதம் லபஸ்வ
ச்ருத்வா முனேர் வாக்ய, முபௌ மஹேசி!
த்வாம் பூஜயாமா, ஸதுரித்தபக்த்யா
மஹரிஷி சொன்ன விபரங்களை ஸுரதனும், சமாதியும் கேட்டார்கள். மாயா பகவதியைப் பூஜித்து, அன்னையின் அனுக்ரஹம் பெற்றுவிட்டால், மாயை அருகில் வரமுடியாது. புத்தியும், முக்தியும் கிடைக்கும் என்று மஹரிஷி சொன்னதைக் கேட்டு, இருவரும் தேவி பூஜையைத் தொடங்கினார்கள்.
14. வர்ஷத்வயாந்தே, பவதீம் ஸ மீஷ்ய
ஸ்வப்னே ஸதோஷா,வபி தாவத்ருப்தௌ
தித்ருக்ஷ ய ஜாக்ரதி சாபி பக்தா-
வாசேரதுர் த்வௌ, கடின வ்ரதானி
பக்தியுடன் தேவியை இரண்டு வருட காலம் பூஜை செய்தார்கள். ஒருநாள் கனவில் தேவியைக் கண்டார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனாலும் பூரண திருப்தி வராமல் தூங்காமல் விழித்திருக்கும் பொழுதும் தேவியைக் காண வேண்டும் என்று நினைத்துக், கடுமையான விரதம் இருந்தார்கள். ஒரு வருடம் ஓடியது. ஆனாலும் தேவி காட்சி தரவில்லை. தேவியைப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் மரணம் அடைய வேண்டும் என்று தீர்மானித்துத், தங்கள் உடலிலிருந்துச் சதையை வெட்டி மாமிசம், இரத்தம் இவைகளால் ஹோமம் செய்யத் தொடங்கினார்கள்.
15. வர்ஷத்ரயாந்தே, ஸுமுகீம் ப்ரஸன்னாம்
த்வாம் வீக்ஷ்ய தௌ துஷ்டுவது: ப்ரஹ் ருஷ்டௌ
தைவாத் ஸமாதிஸ் த்வதனு க்ரஹே ண
லப்த்வா பரம் ஞான, மவாப முக்தீம்
16. போகா விரக்த: ஸு ரதஸ்து சீக்ரம்
நிஷ் கண் டகம் ராஜ்யமவாப பூயஹ
மந்வந்தரே பூபதிரஷ்டமே ஸ
ஸாவர்ணி நாமா, ச மனுர் பபூவ
அவர்கள் மாமிசம் இரத்தம் இவைகளால் ஹோமம் செய்ய ஆரம்பித்ததும், தேவி அவர்கள் முன் காட்சி தந்தாள். இருவரும் தேவியை நமஸ்கரித்தனர். “வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றாள்” ஸுரதன் “சத்ரு பலத்தை அழித்து, என் அரசு மீண்டும் எனக்குக் கிடைக்க அருள் செய்ய வேண்டும்” என்று கேட்டான். தேவி ” உன் சத்ருவை நீ வெற்றி கொள்வாய். அதன் பின் ஆயிரம் ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து, உடல் வீழ்ந்த பின், சூர்யனிடம் பிறவி அடைந்து மனுவாக விளங்குவாய்” என்று வரம் தந்தாள். ஆனால் சமாதி ” தளைகளைப் போக்கக் கூடியதும் மோக்க்ஷத்தைத் தரக் கூடியதுமான ஞானம் வேண்டும்” என்று கேட்டான். அன்னை அவரவர் விருப்பப்படி வரம் தந்தாள். இருவருக்கும் தேவி ஒன்றாகத்தான் காட்சி தந்தாள். சமாதி விமுக்தன். ஸுரதன் போகா ஸக்தன். மந்திரிகளுடன் சென்று ஸுரதன் ராஜ்ய சுகம் அனுபவித்தான். இரண்டாவது மன்வந்திரத்தில் பிறந்த ஸுரதன் தேவி த்யானத்தால், அடுத்த பிறவியில் 8 ஆவது மன்வந்திரத்தில் ஸாவர்ணி என்னும் பெயருடன் பிறந்தான்.
17. த்வம் புக்திகாமாய, ததாஸி போகம்
மு முக்ஷவே ஸம்,ஸ்ருதிமோசனம் ச
கிஞ்சின்ன ப்ருச்சாமி, பரம் விமூடஹ
நமாமி தே பாத,ஸரோஜயுக்மம்
தேவி சக்திமயமானவள் கேட்டதைத் தரக் கூடிய கருணை உள்ளம் கொண்டவள். ஸுரதனுக்கும், சமாதிக்கும் அவரவர் விருப்பம் என்னவோ அதைத் தந்தாள். தேவியிடம் நான் என்ன கேட்பது? பக்தியா?புக்தியா? முக்தியா? நான் போக விமுக்தன் அல்ல. அதனால் முக்தி கேட்க முடியாது. மூடனான நான் அன்னையை வணங்க மட்டுமே முடியும் என்று இதன் ஆசிரியர் கூறுகிறார்.
இருபத்தி ஆறாம் தசகம் முடிந்தது
சதாக்ஷி அவதாரம்
அம்பாள் சாகம்பரியாகவும், சதாக்ஷியாகவும் அவதாரம் செய்த கதையை இந்த தசகத்தில் அறிந்து கொள்ளப் போகிறோம். துவஷ்டாவின் புத்திரனான மஹா பலசாலியான வ்ருத்தாஸுரன் இந்திரனால் கொல்லப்பட்டான். ஆனால் சூதர் வ்ருத்தாஸுர வதம் தேவியால் தான் நடந்தது என்று சொல்லியிருக்கிறார். வியாஸரும் இதைச் சொல்லியிருக்கிறார்.
மஹா தபஸ்வியும் பிரஜாபதியும் ஆன துவஷ்டா என்று ஒருவர் இருந்தார். துவஷ்டா பிராம்ணர்களை விரும்புபவர். தேவ காரியங்களைச் செய்வதில் கெட்டிக்காரர். அவருக்கு இந்திரனிடம் பகை. அதனால் மூன்று தலைகளை உடைய ஒரு மகனைத் தோற்றுவித்தார். ஒரு முகத்தால் வேத அத்தியயனம் செய்தும், ஒரு முகத்தால் மது அருந்தியும், ஒரு முகத்தால் எல்லா உலகத்தையும் ஒரே சமயத்தில் காணக்கூடியவனாகவும் இருந்தான். அவன் பெயர் திரிசிரஸ். அவன் போகங்களைத் துறந்து, செய்வதற்கரிய தவம் செய்தான். தவத்தால் அவன் தர்மத்தைக் கைக்கொண்டவனாகவும், இந்திரியங்களை அடக்கியவனாகவும் மென்மையான இயல்பை உடையவனாகவும் இருந்தான். அவன் கடுமையான தவம் செய்வதைக் கண்ட இந்திரன், பயந்து இதை இப்படியே விடக்கூடாது என்று, அவனைக் கொன்று விடுவது என்று முடிவு செய்து, வஜ்ராயுதத்தை அவன் மேல் பிரயோகித்தான். அந்த தபஸ்வி உயிரிழந்து மலைச் சிகரம் போல் சாய்ந்தான். தன் மகன் கொல்லப்பட்டதைக் கேட்டு துவஷ்டா மிக்வும் கோபம் கொண்டு “ஒரு பாபமும் செய்யாத முனிவனான என் மகனைக் கொன்றவனை அழிக்க இன்னொரு புத்திரனைத் தோற்றுவிப்பேன். என் வீரியத்தையும், தவத்தின் வலிமையையும் தேவர்கள் பார்க்கட்டும்” என்று சொல்லி, அதர்வண மந்திரங்களால் அக்னியில் 6 நாட்கள் ஹோமம் செய்த பின், அதிலிருந்து அக்னி போல் ஒரு புருஷன் தோன்றினான்.
அந்தப் புத்திரனைக் கண்ட துவஷ்டா “நீ இந்திரனுக்குப் பகைவனாக ஆவாய்” என்று சொன்னார். துன்பத்திலிருந்து காப்பதற்கு நீசக்தி உள்ள்வனாக இருப்பதால் இனி நீ ‘வ்ருத்ரன்’ என்று பிரசித்தமாவாய். உன் சகோதரன் திரிசிரன் பெருமை உடையவனாகவும், தவவலிமை உடையவனாகவும் இருந்தான். அவனுக்கு மூன்று தலைகள் இருந்தன. ஒரு தவறும் செய்யாத, அவனது தலைகளை, இந்திரன் வஜ்ராயுதத்தால் வெட்டினான். பாவச் செயல் செய்தவனும், மானங்கெட்டவனும், கெடுபுத்தி உடையவனும், கொடியவனும், பாவியும், பிரும்மஹத்தியால் பீடிக்கப்பட்டவனுமான அந்த இந்திரனை நீ கொல்ல வேண்டும்” என்று சொன்னார். இந்திரனை வதைப்பதற்குச் சக்தியுடைய தெய்வீக ஆயுதங்களைச் சிருஷ்டி செய்து கொடுத்தார். மஹா பல சாலியான விருத்ரன் தேரில் ஏறிக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். மானஸோத்ரம் என்னும் பர்வதத்திற்கு வந்து அஸுரர்களுடன் கூடி, வருணன், யமன், அக்னி, அனைவரையும் பின் வாங்கச் செய்தான். தந்தையிடம் சந்தோஷமாக இதைச் சொன்ன போது, துவஷ்டா “நீ பிரும்மாவை ஆராதித்து சிறந்த வரம் பெற்று அந்த இந்திரனையும் கொன்றுவிடு” என்று சொன்னார்.
100 வருடம் தவம் செய்தபின் பிரும்மன் ஹம்ஸ வாகத்தில் காட்சி தந்தார். அவரிடமிருந்து, இரும்பு போன்ற உலோகங்களினாலும், மரக்கட்டை, மூங்கில், போன்ற ஈரமாகவோ அல்லது உலர்ந்தோ இருக்கக் கூடிய எந்த ஆயுதத்தாலும் மரணம் வரக்கூடாது. தேவர்களாலும் அவர்களது சேனைகளாலும் வெல்ல முடியாத வீரியம் என்னிடம் விருத்தி அடைய வேண்டும்” என்று வரம் கேட்டான். அவரும் கேட்ட வரத்தைத் தந்தார். ஒரு பக்கம் தேவர்களும், மறுபக்கம் துவஷ்டாவின் புத்திரனும் போருக்குக் கூடினர். விருத்ரனின் வரத்தால் தேவர்கள் தோல்வியைத் தழுவி, யாக பாகங்களை இழந்து, மலைகளிலும், குகைகளிலும் வசித்தனர். தேவர்கள் விஷ்ணுலோகம் சென்று ஹரியை புருஷஸுக்தத்தால் துதித்தனர். லக்ஷ்மீபதியான அந்த ஜகந்நாதர் அவர்கள் முன் தோன்றினார். “நீங்கள் பயப்பட வேண்டாம். அந்த பகவதியை ஸ்தோத்தரித்துச் சரணடையுங்கள். அவள் உங்களுக்கு உதவி செய்வாள். அந்த தேவியையே நான் எப்பொழுதும் பூஜிக்கிறேன்” என்றார். தேவர்களும் தனிமையான இடத்தில் தியானமும், ஜபமும், தவமும் செய்தனர்.
அந்த தேவி ஸர்வாபரண அலங்காரங்களுடன், கையில் பாசம், அங்குசம், வரம், அபயம் என்ற முத்திரைகளுடன், சலங்கை ஒலிக்கும் ஒட்யாணத்துடன், கழுத்தில் அட்டிகை, கையில் கங்கணம், காலில் கொலுசு, தலையில் கிரீடம் ஆகியவைகளுடன், முகத்தில் சிரிப்புத் தவழ, மூன்று கண்களுடன், கருணைக் கடலாய், ஸச்சிதானந்த ரூபிணியாய் காட்சி தந்தாள். தேவர்கள் நமஸ்கரித்தனர். விருத்தாஸுரனைக் கொல்லும் உபாயத்தை தேவர்கள் வேண்டினர். அன்னை தன் சக்தியை அவர்களுக்குக் கொடுத்தாள். சந்தர்ப்பத்திற்காக இந்திரன் காத்திருந்தான். ஒருநாள் கடற்கரையில் அந்திப் பொழுதில், ஹரியை நினைத்தான். ஹரி வஜ்ராயுதத்தின் நடுவில் புகுந்தார். அப்பொழுது ஸமுத்திரத்தில் நீரின் நுரை, மலை போல் எழுந்தது. அது ஈரமும் இல்லை. காய்ந்ததும் இல்லை. ஆயுதமும் இல்லை. அந்த நுரையைக் கையில் எடுத்தான். பராசக்தியை வேண்டினான். சக்தி தன் அம்சத்தை அதில் புகுத்தினாள். ஹரி புகுந்திருக்கும் வஜ்ராயுதத்தை நுரையால் மறைத்தான். அதை விருத்ரன் மேல் எறிந்தான். அவன் மலை போல் வீழ்ந்தான். தேவியை அனைவரும் பூஜித்தனர். தேவி விருத்ரனைக் கொன்றதால் “வ்ருத்ர நிஹந்த்ரீ’ என்று மூ உலகத்தாலும் போற்றப் படுகிறாள்.. இந்திரனால் கொல்லப்பட்டதால் இந்திரனும் விருத்ரனைக் கொன்றான் என்று சொல்லப் படுகிறான்.
இனி சதாக்ஷி அவதாரத்தைப் பார்ப்போம்.
1. தைத்ய: புரா கச்,சன துர்க்கமாக்யஹ
ப்ராஸாதிதாத் பத்ம,பவாத் தபோபிஹி
அவைதிகம் வைதிகமப்ய க்ருஷ்ணான்-
மந்த்ரம் ஸமஸ்தம், திவிஷஜ்ஜயைஷீ
ஹிரண்யாட்க்ஷனின் வம்சத்தில் ருரு என்பவனுக்கு துர்கமன் என்னும் அஸுரன் பிறந்தான். துர்கமன், தேவர்களுக்குப் பலம் தருவது வேதம் தான். அதை எப்படியாவது அபஹரித்து, தேவர்களை ஜெயிக்க வேண்டும் என்று, ப்ரம்மவை நினைத்து, அன்ன ஆகாரம் இன்றி ஆயிரம் வருடம் தவம் செய்தான். ப்ரம்மா காட்சி தந்தார். ‘மூன்று உலகத்திலும் அந்தணர்கள், தேவர்கள் இவர்களிடம் இருக்கும் வேத மந்திரங்கள் எனக்குச் சொந்தமாக வேண்டும். தேவர்களை எல்லாம் வெற்றி கொள்ளும் ஆற்றல் வேண்டும்” என்று அஸுரன் வேண்டினான். ப்ரம்மாவும் தந்தார்.
2. வேதே க்ருஹீதே, திதிஜேன விப்ராஹா
ச்ருதிஸ்திரா விஸ்ம்ருத வேதமந்த்ராஹா
ஸாந்த்யானி கர்மாண்,யபி நைவ சக்ருஹு
க்ஷிதி ஸ்த்வ வேதா, த்யயனா பபூவ
பிராமணர்கள் வேதங்களைச் சொல்வது வழக்கம். அஸுரன் சாமர்த்தியமாக வேத மந்திரங்களை ப்ரம்மாவிடமிருந்து வாங்கி விட்டான். அதனால் பிராமணர்கள் வேத மந்திரங்களை மறந்து போனார்கள். அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஔபாசனம், சிரார்த்தம், ஹோமம், ஜபம், யக்ஜம் போன்றவைகளை அனுஷ்டிக்க முடியவில்லை. சந்யாவந்தன ஜபம் கூட இல்லாமல் போனது. உலகில் வேத மந்திர சப்தமே இல்லை. வேதம் சொல்லித் தருவதும் கற்றுக் கொள்வதும் இல்லாமல் போனது.
3. ஹ்ருதேஷீ மந்த்ரேஷ்,வகிலேஷு பூஜா
யஜ்ஞாதி பூமௌ, ந க்ருதம் மனுஷ்யைஹி
ஸுரா அசக்தா,ஸ்ததலாபகின்னா
தைத்யேன யுத்தே, பலினா ஜிதாச்ச
எல்லா மந்திரங்களும் அஸுரன் கையில் அகப்பட்டு விட்டது. மனிதன் மந்திரங்களை மறந்து போனான். பூஜை யக்ஞம் போன்ற கர்மங்கள் மனிதனால் செய்ய முடியாமல் போனது. மனிதர்கள் செய்யும் யக்ஞமும் பூஜையும் தேவர்களைப் புஷ்டியாக்கும். பூஜையும் யக்ஞமும் இல்லாததால் தேவர்கள் பலம் இழந்து போனார்கள். மூப்பற்றவர்களான தேவர்கள் வயோதிகர்கள் ஆனார்கள். அந்த நேரத்தில் துர்கமன் ஸ்வர்க்கலோகத்தை ஆக்ரமித்தான். பல நாட்கள் யுத்தம் நடந்தது. தேவர்கள் தோல்வியைத் தழுவினர்
4. த்யக்த்வா திவம் தே, கிரிகஹ்வரேஷு
நிலீய வர்ஷாணி பஹூ னி நின்யுஹு
வ்ருஷ்டேரபாவாத், தரணீ ச சுஷ்க
ஜலாசயா தர்ஷநிபீடிதாபூது
அஸுரன் தன் சகாக்களுடன் ஸ்வர்க்கலோகம் வந்தான். தேவர்களை அங்கிருந்து விரட்டினான். அதனால் அவர்கள் பர்வத குகைகளில் மறைந்திருந்தார்கள். பூமிக்கு மழை தருபவன் யார். இந்திரன். இந்திராதி தேவர்கள் ஸ்வர்க்கத்தில் இல்லாததால் மழை இல்லாமல் போனது. ஆறு, குளம் எல்லாம் வற்றிப் போனது. ஜீவராசிகள் தாகத்தால் தவித்தன. பஞ்சத்தால் இறக்கும் ஜீவன்களின் எண்ணிக்கை அதிகமானது.
5. ஸர்வே த்ருஷார்த்தாச்ச, ஹிமாத்ரிமேத்ய
த்வாம் த்யானபூஜா,நுதிபிர் பஜந்தஹ
ப்ரஸாதயாமா,ஸுரநேககோடி
ப்ரம்மாண்ட க்ர்த்ரீம், அகிலார்த்தஹந்த்ரீம்
இப்படி அனர்த்தங்கள் அதிகமானதால் எல்லோரும் இமாலய மலைக்குச் சென்று தேவியைத் துதித்தார்கள். சிலர் த்யானம் செய்தார்கள். ப்ரம்மாண்ட கோடி சிருஷ்டிக்கும் காரணமான தேவிக்கு இவர்களின் துன்பம் தீர்ப்பது ஒரு சிரமமா? அது அவளால் மட்டும் தானே முடியும்? அவர்களின் த்யானமும், பூஜையும், ஸ்துதியும் தேவியைச் சந்தோஷப்படுத்தியது.
6. த்ருஷ்டா தயார்த்ராக்ஷி, சதா த்வமேபிஹி
க்ருபாச்ரு வர்ஷைர், நவராத்ரமுர்வ்யாம்
ஜலாசயான் பூர்ண,ஜலாம்ச்ச கர்த்த
ஜனா: சதாக்ஷீத்,யபிதாம் ததுஸ்தே
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணீ நமோஸ்துதே (இரண்டு முறைச் சொல்ல வேண்டும்)
நூறு கண்களுடன் தேவி அவர்களுக்குக் காட்சி தந்தாள். அதனால் தான் அவளுக்கு சதாக்ஷி என்று பெயர். ஒன்பது நாட்கள் அன்னையின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. இந்த க்ருபா வர்ஷத்தால் பூமியில் ஆறு குளங்கள் நிரம்பி வழிந்தன.
7. க்ஷுத்பீடிதானாம் ச, சராசராணாம்
ஸர்வத்ர நாநாவித மன்னமிஷ்டம்
ஸ்வாதூநி மூலானி, பலானி சாதாஹா
சாகம்பரீதி ப்ரதிதா ததோSபூஹு
எல்லோரும் தண்ணீர் இன்றி கஷ்டப்பட்டார்கள் அல்லவா? சதாக்ஷி தேவியின் அருளால் துக்கம் தீர்ந்தது. தண்ணீர் கிடைத்தாலும் பசி தீர வேண்டுமே? உணவு வேண்டுமல்லவா? அதனால் அனைவருக்கும் அன்னமும் தந்தாள். அனைவருக்கும் வேண்டிய பழங்களையும் தந்தாள். அதனால் சாகம்பரி என்றும் அழைக்கப்பட்டாள். சாகம் என்றால் ஸத்யம் அல்லது செடி, பழங்கள், காய்கரிகள் என்று பொருள். அதைத் தந்தவள் சாகம்பரி.
8. தைத்யஸ்து விஜ்ஞாய, ஸமஸ்தமஸ்த்ர
சஸ்த்ரை: ஸஸைந்ய:, ப்ரஹரன் வபுஸ்தே
ரணாங்கணே ஸாய,கவித்த காத்ரஹ
ஸசப்த முர்வ்யாம், த்ருவத் பபாத
வேதத்தைக் கையில் வைத்திருந்த அஸுரர்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லை. மூவுலகத்திலும் அனைத்து ஜீவன்களும் படும் கஷ்டத்தைக் கண்டு ஸந்தோஷமடைந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராமல் திடீரென மழை பொழிந்தது. அதன் காரணமாக எல்லோருடைய பசியும் தாகமும் தீர்ந்தது. துர்கமாஸுரன் இதைப் பார்த்தான். ஆச்சர்யமடைந்தான். இதற்குக் காரணம் தேவிதான் என்று புரிந்து கொண்டான். உடனே தேவியுடன் யுத்தத்திற்குத் தயாரானான். தனது அஸுர சைன்யத்துடன் தேவியுடன் மோதினான். கோரமான யுத்தம் நடந்தது. தேவியுடன் மோதினால் ஜெயிக்கவா முடியும்? அன்னையின் பாணங்களுக்கு இறையானான். பூமியில் சாய்ந்தான். அவன் உடலிலிருந்து ஒரு ஒளி தோன்றி தேவியின் திரு மேனியில் மறைந்தது.
9. ஸ சாஸுராத்மா, கலு வேதமந்த்ரான்
சிரம் படம்ஸ்த்வாம் அபி வீக்ஷமாணஹ
கதாயுராவிச்ய, பராத்மனி த்வயி
அவாப முக்திம், மிஷதாம் ஸுராணாம்
தேவர்களை வெற்றி கொள்வதற்காகத் தானே துர்கமாஸுரன் வேதத்தைத் தன் கையில் வைத்துக் கொண்டான். அப்பொழுதாவது அவன் அந்த வேதத்தைப் படித்திருக்கலாமல்லவா? அப்படி அவன் படித்திருந்தால் விசுத்தி கிடைத்திருக்கலாம். ஆனால் அவன் அதைப் படிக்காமல் தானே வைத்திருந்தான். வேத மந்திரத்தின் சக்தியை அவன் ப்ரம்மாவிடமிருந்து பெற்றதால் அதன் பயனாக தேவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே, தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அவன் ஸாயுஜ்ய முக்தியும் அடைந்தான்.
10. வேதான் ஹ்ருதான ப்ஜ, பவாந நே த்வம்
புனச்ச நிக்ஷிப்ய, ஜகத்ஸு ரக்ஷாம்
க்ருத்வா நுதா தேவ,கணைர் நரைச்ச
துஷ்டா திரோSபூ: கருணார்த்ர நேத்ரா
அஸுரனிடமிருந்து காப்பாற்றிய வேதத்தை மீண்டும் ப்ரம்மாவிடம் தந்தாள். இந்த உலகத்தைப் பசி, தாகம், பஞ்சம் போன்ற பெரிய கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றினாள். தேவர்களும் மனிதர்களும் அனைவரும் தேவியை பக்தியுடன் வணங்கினார்கள். தேவி சந்தோஷத்துடன் எல்லோரையும் “துர்க்கை, சதாக்ஷி என்ற என் நாமங்களை எவன் ஜபிக்கிறானோ, அவன் மாயையைக் கடப்பான்” என்று சொல்லி அனுக்ரஹம் செய்து மறைந்து போனாள்.
11. பக்தஸ்ய வை துர்க்கதி நாசினீ த்வம்
ஸுகப்ரதா துர்க்க,மஹந்த்ரி! மாதஹ
துர்க்கேதி நாம்நா, விதிதா ச லோகே;
விசித்ரரூபா,ஸ்தவ தேவி! லீலாஹா
அம்பாள் பக்தர்களின் கஷ்டத்தைத் தீர்ப்பவள் என்பதுப் பல கதைகளில் சொல்லப்பட்டது. துர்கமன் என்னும் அஸுரனையும் வதம் செய்தாள். யதார்த்தமாகப் பார்த்தால் தேவர்களை விட அஸுரர்களுக்குத்தான் அனுக்ரஹம் செய்திருக்கிறாள். துர்கமனுக்கு ஸாயுஜ்ய முக்தியும் தந்தாள். தேவர்கள் மீண்டும் மீண்டும் சுக துக்கங்களில் மூழ்கி மூழ்கி எழுந்திருக்க வேண்டும். அஸுரனால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்தன. துர்கமனை வதைத்ததும் ஒரு அனுக்ரஹமே. துர்கமனை வதைத்ததால் தேவி துர்கை என்று அழைக்கப் படுகிறாள். பக்தர்களின் துர்கதித் தீர்ப்பவள் யாரோ அவளே துர்கா எனப்படுபவள்.
12. கோப்யஸ்தி சித்தே, மம துர்க்கமோSயம்
ஞாதஸ்த்வயா, நைவ, மயா து தேவி!
ய: ஸந்ததம் த்ருஹ்யதி மே தமாசு
ஸம்ஹ்ருத்ய மாம் ரக்ஷ, நமோ நமஸ்தே
துர்கமாஸுரனை அழிக்க தேவி சதாக்ஷி ஆனாள். என் மனதிலும் ஒரு துர்கமாஸுரன் இருக்கிறான். அவன் வேதத்தை அபஹரிக்கிறான். அதாவது தனக்கும் தேவையான அளவு வேத ஞானம் இல்லை என்று சொல்கிறார். அந்த அஸுரனை வதம் செய்து வேத ஞானத்தைத் தர வேண்டும் என்று ஆசிரியர் தேவியிடம் யாசிக்கிறார்.
இருபத்தி ஏழாம் தசகம் முடிந்தது
சக்த்யவமானதோஷம்
சக்தியை அசட்டை செய்த ஹரிஹரரின் கதையை இங்கு பார்க்கப் போகிறோம்.
1. ஹாலாஹலாக்யான,சுரான் புரா து
நிஜக்னதுர் விஷ்ணு,ஹரௌ ரணாநதே
ஸ்வேனைவ வீர்யேண, ஜயோSயமேவம்
தௌ மோஹிதௌ, தர்ப்பம் அவாப துச்ச
ஒரு சமயம் ஹாலாஹலர் என்ற அஸுரக் கூட்டம், ப்ரம்ம தேவரிடம் வரத்தைப் பெற்று மூஉலகத்தையும் தங்கள் பராக்ரமத்தால் கைப்பற்றினர். ருத்திரரும், விஷ்ணுவும் அவர்களுடன் 60,000 வருடங்கள் பெரும் போர் புரிந்து அஸுரர்களைக் கொன்றனர். வெற்றிக்குக் காரணம் தங்களின் பராக்ரமமே என்று, தங்களின் மனைவிகளான கௌரி மஹாலக்ஷ்மி ஆகிய சக்திகளை மறந்தார்கள். அவர்கள் கர்வம் கொண்டனர். அவர்களின் கர்வத்தைக் கண்டு தேவிகள் சிரித்தனர். தங்களின் சொந்த சக்திகளை மதிக்காமல், மாயா மோகத்தால் தகாத வார்த்தைகளையும் சொல்ல சக்திகள் அவர்களிடமிருந்து பிரிய, அவர்கள் சலனமற்றவர்கள் ஆனார்கள்.
2. ததோ விதிஸ்தௌ, தருவத்விசேஷ்டௌ
தேஜோ விஹீனாவ,பிவீக்ஷ்ய பீதஹ
நிமீலிதாக்ஷ: ஸகலம் விசிந்த்ய
ஜானன் ஸுதான் தக்ஷ,முகானுவாச
பிரம்மா, விஷ்ணுவும் ருத்ரரும் சக்தியின்றி சலனமில்லாமல் இருப்பதைப் பார்த்தார். மிகவும் கவலையில் ஆழ்ந்தார். ஏன் இப்படி நடந்தது? என்று யோசித்தார். இது பராசக்தியின் கோபத்தின் விளைவு என்பதை அறிந்தார். சில காலம் வரை, தன் சக்தியின் பிரபாவத்தால் அவர்களுடையத் தொழிலைச் செய்தார்? எவ்வளவு காலம் இப்படிச் செய்ய முடியும்? அதனால் தன் புத்திரர்களான தக்ஷன், மனு முதலியவர்களையும், ஸனகாதிகளையும் அழைத்தார்.
3. புத்ரா ஹரிம் பச்,யத துர்ஜடிம் ச
யௌ நஷ்டசக்தீ, கலு சக்திகோபாது
ததோ ஜகத் பார,யுதோSஸ்மி; யூயம்
சக்திம் தபோபி:, குருத ப்ரஸன்னாம்
ப்ரம்மா சொன்னார் ” புத்திரர்களே! பராசக்தியின் கோபத்தால் ஹரிஹரர்கள் சக்தியின்றி மரம் போல் அசையாமல் நிற்கிறார்கள் . நான் எவ்வளவு நாட்கள் அவர்களின் ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகியவற்றைச் செய்ய முடியும்? அதனால் என்னால் தவம் செய்து பராசக்தியை சந்தோஷப் படுத்த முடியவில்லை. தவமே ஒருவரின் சக்தியை பலப்படுத்தும். முன் போல் அவர்கள் சக்தி உடையவர்களாக ஆக வேண்டும். அதனால் நாம் எல்லோரும் தவம் செய்து அந்த பராசக்தியைச் சந்தோஷப் படுத்த வேண்டும்” என்றார்.
4. சக்தே: ப்ரஸாதேன ஹி பூர்வவத் தௌ
ஸ்யாதாம்; யசோவ்ருத்திரனேன வவ: ஸ்யாது
சக்திச்ச யத்ரா,வதரத்ய மோகம்
ஏதத் குலம், யாதி, க்ருதார்த்ததாம் ச
பரம பக்தியுடன் கூடிய தவத்தை நீங்கள் செய்ய வேண்டும். அப்பொழுதான் தேவீ அனுக்ரஹம் செய்து, அவர்கள் மீண்டும் சக்தியைப் பெறுவார்கள் . சக்தி ப்ரஸாதித்தால் எல்லோருக்கும் நன்மை உண்டாகும் என்று ப்ரம்மா சொன்னார். எந்தக் குலத்தில் அன்னை அவதரிக்கிறாளோ, அந்தக் குலம் கீர்த்தியும், புகழும் அடையும்.
5. சக்தே: கடாக்ஷைர், ஜகதோஸ்து பத்ரம்
ஏவம் நிசம்யாSSசு, ஹிமாத்ரிமேத்ய
தக்ஷாதயோ த்யான,ஜபாதிபிஸ்த்வாம்
ஆராத்ய பக்த்யாSப்த,சதானி நின்யுஹு
சக்தி ப்ரஸாதித்தால் உலகத்திற்கே நன்மை வரும். இதைகேட்டவுடன் தக்ஷன் முதலானோர் உடனே கிளம்பி, இமயமலைச்சாரலை அடைந்து, த்யானம், தவம் செய்தார்கள். 100 வருடங்கள் கடந்தன.
6. த்ருஷ்டா புரஸ்தைஸ்து, நுதா த்வமாத்த
பீத்யாSலமார்த்யா ச, ஹிதம் ததாமி;
கௌரீ ச லக்ஷ்மீச்ச மமைவ சக்தீ;
தே சம்பவே ப்ராக், ஹரயே ச தத்தே
ஸச்சிதானந்த ஸ்வரூபிணீயாகிய அம்பாள், பாசம், அங்குசம், அபயம், வரத முத்திரைகளுடன், மூன்று கண்களுடன், கருணையுடன் பிரஸன்னமானாள். தக்ஷப்ரஜாபதிகள் வேதாந்த வாக்யத்தால் துதித்தார்கள். அம்பாள் வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்று சொன்னாள். அவர்கள் ஹரிஹரர்களின் சரீரத்திற்குச் சாந்தியும், அவர்கள் விட்டுப் பிரிந்தச் சக்திகளை மீண்டும் பெற வேண்டும் என்று வேண்டினார்கள். என் குலத்தில் தாங்கள் அவதரிக்க வேண்டும் என்றும் தக்ஷன் பிரார்த்தித்தான். அம்பாள் சொன்னாள் “ஏன் விஷ்ணுவும், சிவனும் சலனமற்றவர்கள் ஆனார்கள்? சிருஷ்டிக்கு முன் சிவனுக்கு, சக்தி என்ற சக்தியையும், விஷ்ணுவிற்கு லக்ஷ்மி என்ற சக்தியையும் தந்திருந்தேன் ( 10 ஆவ்து தசகத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது).
7. தௌ சக்தி சாஹாய்,யத ஏவ தைத்யான்
நிஜக்னது: ஸத்ய,மிதம் து தாப்யாம்
ஹா! விஸ்ம்ருதம்; சத்த்ய,யவமான தோஷாது
வினஷ்ட சக்தீ, கலு தாவ பூதாம்
ஹாலாஹலர்களுடன் யுத்தம் செய்து ஜெயித்தது, அவர்களுடைய சக்தியால் அல்ல. அவர்களிடமிருந்த சக்திகளின் சக்தியால் தான். ஆனால் அவர்கள் தாங்கள் தான் வெற்றிக்குக் காரணம் என்று அஹங்காரம் கொண்டார்கள். புவனேஸ்வரி, சக்திகளை அவர்களிடம் தரும் பொழுதே சக்திகளை ஆதரவுடன் நடத்த வேண்டும் , அலக்ஷ்சியம் செய்தால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொல்லியிருந்தாள். அன்று சொன்னது இன்று நடந்தது. சிவனும் விஷ்ணுவும் சக்திகளைத் துச்சமாக நினைத்ததால் சலனமற்றவர்கள் ஆனார்கள்.
8. தௌ பூர்வ,வத் ஸ்தா,மிஹ; சக்திரேகா
ஜாயேத தக்ஷஸ்ய, குலே மதீயா
க்ஷீராப்திதோன்யா ச;, புராரிராத்யாம்
க்ருஷ்ணாது; பச்சாதி,தராம் ச விஷ்ணுஹு
அம்பாள் சொன்னாள் ” இனி ஒரு பொழதும் இப்படிப்பட்ட அபராதம் எனக்கு நிகழாமல் இருக்க வேண்டும். இப்பொழுது என்னைப் பிரார்தித்த படியால், ஒரு சக்தி தக்ஷனது க்ரஹத்திலும் ஒரு சக்தி பாற்கடலிலும் தோன்றுவார்கள். என்னுடைய கருணையால் அவர்களைச் சிவனும் விஷ்ணுவும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அதற்குக் கால தாமதம் ஆகும். அதுவரை அவர்கள் சலனமில்லாமல் இருக்க வேண்டாம். இப்பொழுது அவர்களின் தொழிலைச் செய்ய என் கருணையால் அவர்களிடம் சக்தி உண்டாகும். இது தற்காலிகமே. இனிமேல் சக்தியை அவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னாள். தக்ஷனது ஆசையையும் பூர்த்தி செய்தாள்.
9. ஸர்வே ஸ்வசக்திம், பரிபூஜ்ய மாயா-
-பீஜாதிமந்த்ரான், விதிவஜ்ஜ பந்தஹ
விராட் ஸ்வரூபம் மம, ரூபமேதத்,
ஸச்சித்ஸ்வரூபம், ச ஸதா ஸ்மரேத
அம்பாள் மேலும் சொன்னாள் எல்லோரும் தன் சக்தியை ஆதரிக்க வேண்டும். என்னுடைய மூன்று ரூபத்தையும் சதா த்யானம் செய்ய வேண்டும். 1. விராட் ரூபம். அண்ட சராசரங்களிலும் சக்தியாக இருப்பது விராட் ரூபம். சக்தி இல்லாவிட்டால் எதுவும் ஜடம் தான். (மின்சாரம், ஃபன், பல்பு) ப்ரக்ருதிக்குச் சக்தி தருபவள் அம்பாள்தான். (ஸர்வ வ்யாபி). 2. இப்பொழுது காணும் ரூபம். சுந்தரியான பெண் ரூபம். அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். 3. சச்சிதானந்த ஸ்வரூபம். பரமானந்த ஸ்வரூபம். தண்ணீரில் அலை வந்தாலும் நுரை வந்தாலும் ஆதாரம் தண்ணீர் தான். அதுபோல இந்த உலகில் இருப்பது எல்லாமே சச்சிதானந்தம் தான். எல்லாம் ஒரே தேவி மயம் தான். பலவாக நினைப்பது பிரமைதான்.
10. ப்ரயாத துஷ்டா;, ஜகதாம் சுபம் ஸ்யா
தேவம் த்வமாபாஷ்ய, திரோததாத;
காருண்ய தஸ்தே, கிரிசோ ஹரிச் ச
சக்தாவபூதாம், நிஜகர்ம கர்த்தும்
இப்படிச் சொல்லி விட்டு மணித்வீப வாஸியான அம்பள் மறைந்தாள். சிவனும் விஷ்ணுவும் தத்தம் செயல்களைச் செய்யத் தொடங்கினார்கள். இப்படியாக உலகத்தில் சக்திகள் தக்ஷனுக்கும், ஸமுத்ரராஜனுக்கும் மகளாக அவதாரம் செய்யும் வரை தற்காலிகமாகப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தாள் தேவி.
11. மாதஹ! கடாக்ஷா, மயி தே பதந்து;
மா மாSஸ்து மே சக்த்ய,வமானபாபம்
ஸர்வான் ஸ்வதர்மான், கரவாண்யபீதஹ
பத்ரம் மம ஸ்யாத், ஸததம் நமஸ்தே.
சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் சக்தியை அலக்ஷியம் செய்த தோஷம் வந்தது. தனக்கு அப்படி ஏதும் வந்துவிடக் கூடாது, தான் எப்பொழுதும் தனக்குரிய தர்மங்களைச் செய்து கொண்டு வாழவேண்டும் என்று இதன் ஆசிரியர் தேவியிடம் பிரார்த்தனைச் செய்கிறார்.
தசகம் இருபத்தி எட்டு முடிந்தது
தேவீ பீடோத்பதி
1. அதைகதாSத்ருச்யத தக்ஷகேஹே
சாக்தம் மஹஸ்தச்ச, பபூவ பாலா
விஜ்ஞாய தே சக்திம் இமாம் ஜகத்ஸு
ஸர்வேSபி ஹ்ருஷ்டா, அபவத் க்ஷணச்ச
28 ஆவது தசகத்தில், தக்ஷன் சிவா விஷ்ணுவிற்குச் சக்தியை வேண்டினான். சலனமில்லாமல் இருந்த அவர்களுக்குத் தேவி அவர்ககளின் தொழிலைச் செய்வதற்குச் சக்தியைத் தந்தாள். தனது கிரஹத்தில் அன்னையின் அவதாரம் வேண்டும் என்று பிரார்த்தனைச் செய்தான் அல்லவா? அதனால் சில காலம் சென்ற பின் தக்ஷன் வீட்டில் ஒரு நாள் சக்தி சம்பந்தமான தேஜஸ் அவதாரம் செய்தது. தக்ஷன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அது ஒரு அழகானப் பெண் குழந்தையாக மாறியது. அதை ஒரு பெரிய விழாவாகவே கொண்டாடினார்கள். அது சக்தியின் அம்சம் என்பதை அறிந்த தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தனர். சூரியன் பிரகாஸமாக ஒளிர்ந்தான். ஆறுகள் சந்தோஷத்தில் பெருக்கெடுத்து ஓடின.
2. தக்ஷ: ஸ்வகேஹா,பதிதாம் சகார
நாம்நா ஸதீம், போஷ,யதி ஸ்ம தாம் ஸஹ
ஸ்மரன் வசஸ்தே, கிரிசாய காலே
ப்ரதாய தாம் த்வௌ, ஸமதோஷயச்ச
அம்பாளின் சக்தி தனது கிருஹத்தில் அவதரிக்கும் என்று முன்பு அம்பாள் சொன்னது தக்ஷனுக்கு நினைவிற்கு வந்தது. இந்தக்குழந்தை அம்பாளின் சக்திதான் என்பதைத் தக்ஷன் புரிந்து கொண்டான். அந்தக் குழந்தைக்கு “ஸதீ” என்று பெயர் வைத்தான். ஸதீ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து யுவதி ஆனாள். இந்த சத்தியைச் சிவன் ஏற்றுக்கொள்ளட்டும் என்று அம்பாள் சொன்னாள் அல்லவா? (28.8) அதனால் ஸதியைச் சிவனுக்கே மணம் முடித்தான் தக்ஷன். சிவனும் சக்தியும் இணைந்தார்கள்.
3. ஏவம் சிவ: சக்தியுத: புனச்ச
பபூவ; கச்சத்ஸு தினேஷு தக்ஷஹ
தைவாத் சிவத்வேஷம் அவாப, தேஹம்
தத்போஷிதம் ஸ்வம், விஜஹொ ஸதீ ச
அவர்களுடைய வாழ்க்கைக் குறுகியக் காலமாகத்தான் இருந்தது. ஒருசமயம் துர்வாஸ முனிவர் ஜாம்பூநதேஸ்வரீ என்னும் தேவியை மாயா பீஜத்தால் ஜபித்தார். மகிழ்ச்சியுடன் அவள் ஒரு பூமாலையைத் தந்து அனுக்ரஹம் செய்தாள். தக்ஷன் அந்த மாலையை விரும்பிக் கேட்க, துர்வாஸர் அதை அவனுக்குத் தந்தார். அதை அவன் தூய்மையான இடத்தில் வைக்காமல் தனது படுக்கை அறையில் அலங்காரமாக வைத்தான். மாலையின் நறுமணத்தால் காமவேட்கைக் கொண்டு மனைவியுடன் இணைந்தான். பூஜிக்கப்பட வேண்டிய அந்த பூமாலையைப் படுக்கை அறையில் வைக்கலாமா? அதனால் அதன் பரிசுத்தத்திற்குக் களங்கம் வந்ததால், அவனுக்குத் தோஷம் வந்தது. சிவனிடம் துவேஷம் வர ஆரம்பித்தது. ஸதி இதைக் கண்டு மனம் வருந்தினாள். சிவ த்வேஷியான தக்ஷனால் வளர்க்கப் பட்ட இந்த ஸரீரம் தனக்கு வேண்டாம் என்று யோகாக்னியில் ப்ரவேசித்தாள். இது தக்ஷனின் தலை எழுத்து.
4. துக்கேன கோபேன ச ஹா ஸதீ தி
முஹுர் வதன்னுத்,ருததாரதேஹஹ
பப்ராம ஸர்வத்ர, ஹர: ஸுரேஷு
பச்யத்ஸு சார்ங்கீ, சிவமன்வசாரீத்
சிவன் மிகவும் துக்கமடைந்தார். ஸதியின் ஸரீரத்தைத் தன் தோளில் சுமந்து கொண்டு, சித்தப் பிரமை அடைந்தவர் போல் தாண்டவம் ஆடினார். அவரின் கோபாக்னியைக் கண்டு யாரும் அவரிடம் நெருங்கவே பயந்தனர். அப்பொழுது விஷ்ணு வில்லும் அம்புமாக சிவனிடம் சென்றார்.
5. ருத்ராம்ஸவின்யஸ்த,ஸதீசரீரம்
விஷ்ணு: சரௌகைர், பஹுசச்ச கர்த்த;
ஏகைகச: பேதுர,முஷ்ய கண்டா
பூமௌ சிவே! ஸாஷ்டசதம் ஸ்தலேஷு
சிவன் ஒரு பயித்தியக்காரன் போல் ஸதியின் ஸரீரத்தைத் தோளின் மீது வைத்துக் கொண்டு உலகம் சுற்றினார். அருகில் செல்ல எல்லோரும் பயந்தனர். அப்போது விஷ்ணு சிவனின் அருகில் சென்று ” எம்பெருமானே! தாங்கள் சுமந்திருக்கும் ஸதியின் ஸரீரம் சித்கலா ரூபம். அக்கலைகளைத் தனித் தனியாக உலகமெங்கும் பீடமாக இருக்கச் செய்து, தாங்களும் அதில் வீற்றிருக்க வேண்டும்” என்று வேண்ட, சிவனும் “அப்படியே ஆகட்டும்” என்று அருள் செய்தார். விஷ்ணு ஸார்த்தம் என்னும் தன்னுடைய வில்லால் ஸதியின் ஸரீரத்தைத் துண்டாக்கினார். அது பூஉலகத்தில் 108 இடங்களில் விழுந்தது. இந்த விஷ்ணுவிற்கு இதைச் செய்ய அனுக்ரஹித்தவளே அம்பாள் தான். ஸ்லோகத்தில் இதன் ஆசிரயர் “சிவே” என்று சொல்கிறார். உலகத்தில் மங்களம் பொங்கவே தேவீ இப்படிச் செய்தாள்.
6. யதோ யத: பேதுரிமே ஸ்தலானி
ஸர்வாணி தானி, ப்ரதிதானி லோகே
இமானி பூதானி பவானி! தேவீ-
பீடானி ஸர்வாக, ஹராணி பாந்தி
தேவியின் சரீரம் விழுந்த இடங்கள் எல்லாம் தேவியின் க்ஷேத்ரமாக விளங்கியது. அந்த 108 துர்கா க்ஷேத்ரங்களும் மிகவும் பிரசித்தமானவை. இந்த பீடங்களில் தேவியை பூஜிப்பவர்களுக்கு உலகத்தில் கிடைத்தற்கரிய பொருள் ஏதும் இல்லை. இந்த க்ஷேத்ரங்களில் மாயாபீஜ மந்திரத்தை ஜபிப்பவனுக்கு, அம்மந்திரத்தின் சக்தி சித்தியாகும் என்று சொல்லப் படுகிறது. தேவியின் முகம் விழுந்த இடத்திற்கு 1. வாரணாசியில் விசாலாக்ஷி என்று பெயர். 2. நைமிசாரணியத்தில் லிங்கதாரிணி. 3. பிரயாகையில் லலிதா 4. துவாரகையில் ருக்மிணி 5. பிருந்தாவனத்தில் ராதா. 6. மதுராவில் தேவகீ 7. சித்ரகூடத்தில் சீதா 8. குஜரத்தில் அம்பாதேவீ. 9. பெங்களூரில் நிமிஷாதேவி.10. உத்ரகிரியில் ஔஷதை. இதுபோல் 108 இடங்களில் பாபங்களைத் தீர்ப்பதற்காக ஏற்பட்டது
7. த்வமேகமேவா,த்வயமத்ர பின்ன –
– நாமானி த்ருத்வா, கலு மந்த்ரதந்த்ரைஹி
ஸம்பூஜ்யமானா, சரணாகதானாம்
புக்திம் ச முக்திம், ச ததாஸி மாதஹ!
அம்பாள் ஒன்றுதான். இரண்டு இல்லை. ஆனாலும் 108 பீடங்களிலும் 108 ரூபங்களுடனும், நாமத்துடனும் இருக்கிறாள். தக்ஷன் சிவனை அவமதித்ததால் அம்பாள் தனக்கு நிகரான சாயா ஸதியைச் சிருஷ்டித்து, அவள்தான் யாகத்தீயில் குதித்தாள் என்று தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பித்ரு ஹத்தி என்ற பாபம் வரக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்தாள். உண்மையான ஸதீ அக்னியில் குதித்திருந்தால், தக்ஷனையும் கொன்று விடுவார்களல்லவா? அப்பொழுதுத் தந்தையைக் கொன்ற பாபம் வருமல்லவா? அதனால் அப்படிச் செய்தாள். இந்த 108 க்ஷேத்ரங்களும் சக்தி பீடங்கள். அந்த இடங்களில் சிவனும் பல மூர்த்தி வடிவத்தில் நிலை பெற்றிருக்கிறார்.
8. நிர்விண்ண சித்த: ஸ, ஸதீவியோகாது
சிவ: ஸ்மரம்ஸ்த்வாம், குஹ சின்னிஷண்ணஹ
ஸமாதிமக்னோS பவதேஷ லோகஹ
சக்திம் வினா ஹா! விரஸோலஸச்ச
ஸதியின் பிரிவு சிவனுக்குத் துக்கத்தைத் தந்தது. அம்பாளை நினைத்து ஓரிடத்தில் ஸ்திரமாய் அமர்ந்தார். அப்படியே ஸமாதி நிலையில் ஆழ்ந்து போனார். பிரபஞ்சத்தின் நினைவு இல்லாமல், தேவியின் ஸ்வரூபத்தை த்யானித்துக் கொண்டு, காலத்தைக் கழித்தார். சக்தி இல்லாத உலகம் சக்தியை இழந்து சராசரப் பிரபஞ்சம் முழவதும் சௌபாக்யம் இன்றி இருந்தது. யாருக்கும் எந்த சுறு சுறுப்பும் இல்லை.
9. சிந்தாகுலா மோஹ,தியோ விசீர்ண்ண
தோஷா மஹாரோத,நிபீடிதாச்ச
சௌபாக்யஹீனா, விஹதாபிலாஷாஹா
ஸர்வே ஸதோத்விக்ன, ஹ்ருதோ பபூவுஹு
எல்லோருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. புத்தியும் மங்கிப் போயிற்று. அனைவருக்கும் இருதயம் உலர்ந்து, ஆனந்தம் வற்றிப் போனது. கவலை கொண்ட சித்தத்துடன் இருந்தனர். ரோகமும் வந்தது. தேவீ பாகவதத்தில் இது விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
10. சிவோSபி சக்த்யா ஸஹித: கரோதி
ஸர்வம், வியுக்தச்ச தயா ஜட: ஸ்யாது
மா மாஸ்து மே சக்தி, வியோக ஏஷ
தாஸோSஸ்மி; பூயோ, வரதே: நமஸ்தே
ஸதி பிரிந்ததும் சிவனும் சுறு சுறுபில்லாதவர் ஆனார். அப்படி ஒரு பிரிவுத் தனக்கு வந்து விடக்கூடாது என்று இதன் ஆசிரியர் நினக்கிறார். அதனால் அம்பாள் முன் இதைக் கூறி, மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார். அம்பாள் ஸர்வ வரதாயினி அல்லவா?
தசகம் இருபத்தி ஒன்பது முடிந்தது
ஸ்ரீ பார்வதி அவதாரம்
1. ஸமாதிமக்னே, கிரிசே விரிஞ்சாது
தப: ப்ரஸ்ஸன்னாத், கில தாரகாக்யஹ
தைத்யோவரம் ப்ராப்ய, விஜித்ய தேவானு
ஸபாந்தவ: ஸ்வர்க்க,ஸுகான்ய பும்க்த
ஸதியைப் பிரிந்த சிவன் ஆழ்ந்த த்யானத்தில் ஆழ்ந்தார். அவருக்கு உலகத்தின் சிந்தனையே இல்லை. இந்த நேரத்தில் தாரகன் என்னும் ஒரு கொடிய அஸுரன் ப்ரம்மாவைக் குறித்துத் தவம் செய்து, வரத்தைப் பெற்று, ஸ்வர்கலோகத்தையும் ஆக்ரமித்து தேவர்களை அங்கிருந்து ஓடச் செய்தான். அஸுர பந்துக்களுடன் ஸ்வர்கலோகம் வந்து அங்கேயே சுகமாக வாழத் தொடங்கினான்.
2. வரை: ஸ பர்கௌரஸபுத்ரமாத்ர
வத்யத்வம் ஆப்தோSஸ்ய, ச பத்ன்யபாவாது
ஸர்வாதிபத்யம், ஸ்வபலம் ச மோஹானு –
மத்தோ ப்ருசம் சாச்,வதமேவ மேனே
“சிவனது புத்திரனால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்படவேண்டும்” என்று தாரகாஸுரன் ப்ரம்மனிடம் வரம் பெற்றான். ஸதியைப் பிரிந்து துக்கத்தில் இருக்கும் சிவன் வேறு கல்யாணம் செய் கொள்ள மாட்டார், அதனால் சிவனுக்குப் புத்திரன் பிறக்க மாட்டான். தன்னைக் கொல்ல யாராலும் முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், தன் சுகபோகமும் ஸ்வர்க்கலோகவாசமும் சாஸ்வதம் என்று நினைத்தான்.
3. நஷ்ட்டாகிலா: ஸ்ரீ, ஹரயே ஸீராஸ்தே
நிவேதயாமா,ஸுரசேஷ துக்கம்
ஸ சாSSஹ தேவா, அனயேன நூனம்
உபேக்ஷதே நோ, ஜனனீ க்ருபார்த்ரா
தாரகாஸுரனின் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் ஸ்வர்க்கத்தை விட்டுச் சென்ற தேவர்கள், தாரகாஸுரன் ப்ரம்மனிடம் பெற்ற வரத்தைத் தெரிந்து கொண்டார்கள். தேவி இல்லாத பொழுது, சிவனுக்கு எப்படிப் புத்திரன் பிறப்பான்? பாக்ய ஹீனர்களான நம்முடைய காரியம் என்ன ஆகப் போகிறதோ? என்று மிகவும் கவலையில் ஆழ்ந்து, விஷ்ணுவைப் பார்க்க வைகுண்டம் சென்றார்கள். “நாரயண மூர்த்தியே! எங்கள் கவலைத் தீர உபாயம் சொல்லுங்கள்” என வேண்டினர். விஷ்ணு சொன்னார் “தேவர்களே! கவலையை விடுங்கள். கேட்டதைத் தரும் கற்பக விருட்ஷம் போல், இந்த உலகத்தை ஆளும், மணித்வீப வாசியான தேவி இருக்கக் கவலை ஏன்? ஆனால் தேவியின் கருணைக் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லை. அதனால் அந்த தேவி இப்பொழுது நம்மைப் பாராதவள் போல் இருக்கிறாள். தேவிக்குக் கருணை உண்டு. ஆனால் நாம்தான் அதற்கு உகந்தவர்களாக இல்லை”.
4. தத்விஸ்ம்ருதேர், ஜாத,மிதம்! கரேண
யஷ்ட்யா ச யா தாட,யதி ஸ்வபுத்ரம்
தாமேவ பால: ஸ, நிஜேஷ்டதாத்ரீம்
ஸாஸ்ரம் ருதன் மாதரமப்யுன்பைதி
விஷ்ணு மேலும் சொன்னார் “நாம் கருணை மயமான அந்த அன்னையை மறந்து விட்டோம். அதனால் தான் நமக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்கிறது. தாய் தன் குழந்தையை நேர்வழியில் நடத்த அடிப்பாள். அடித்தாலும் குழந்தை அம்மா! என்று தானே அழும்? தனக்கு வேண்டியதைத் தருபவள் அம்மாதான் என்று குழந்தைக்குத் தெரியும். தான் குறும்பு செய்ததால் தான் தாய் அடித்தாள் என்பதும் தெரியும். குழந்தைக்குத் தாயின்றி வேறு யாரும் இல்லை. அதுபோல் நாம் எல்லோரும் குழந்தைகள். அந்த தேவியே நமக்குத் தாய்”.
5. மாதா ஹி ந: சக்தி,ரிமாம் ப்ரஸ்ஸன்னாம்
குர்யாம பக்த்யா, தபஸா ச சீக்ரம்;
ஸர்வாபத: ஸைவ, ஹரிஷ்யதீ தீ
ச்ருத்வாSமராஸ்த்வாம், நுனுவுர் மஹேசி!
விஷ்ணு தொடர்ந்து சொன்னார் ” நாம் பக்தியுடன் தவம் செய்து அன்னையைச் சந்தோஷப்படுத்த வேண்டும். அம்பாள் நமது கஷ்டத்தை எல்லாம் நீக்குவாள்” என்றார். அம்பாளின் கருணையை அனுபவத்தில் அவர்கள் உணர்ந்தவர்கள். அதனால் விஷ்ணு சொன்னதே சரி என்று நினைத்தார்கள். வேதாந்த வாக்யங்களால் தேவியைத் துதித்தார்கள்.
6. நிசம்ய தேஷாம், ச்ருதிவாக்யகர்ப-
– ஸ்துதிம் ப்ரஸன்னா, விபுதாம்ஸ்த்வமாத்த
அலம் விஷாதேன, ஸுரா:! ஸமஸ்தம்
ஜானே; ஹரிஷ்யாமி, பயம் த்ருதம் வஹ
விஷ்ணு தன் பத்னியுடனும், இந்திராதி தேவர்களுடனும், இமயமலைக்குச் சென்று, பல வருடங்கள் தேவியைத் துதித்தனர். அன்னை அவர்கள் முன் தோன்றி, “உங்களின் பயத்தைப் போக்குகிறேன்” என்று வாக்குக் கொடுத்தாள்.
7. ஹிமாத்ரிபுத்ரீ, விபுதாஸ்த தர்த்தம்
ஜாயேத கௌரீ, மம சக்திரேகா;
ஸா ச ப்ரதேயா, வ்ருஷபத் வஜாய;
தயோ: ஸுதஸ்தம், திதிஜம் ச ஹன்யாது
அம்பாள் எப்படி பயத்தைப் போக்குவாள்? அதையும் தேவியே சொன்னாள். “பர்வதராஜன் என்னை இருதய கமலத்தில் வைத்துப் பக்தியுடன் உபாஸிக்கிறான். என்னுடைய சக்தியான கௌரி இமயமலையில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறப்பாள். அவளைச் சிவன் திருமணம் செய்ய வேண்டும். அவர்களுக்குப் பிறக்கும் மகன் தாரகாஸுரனை வதம் செய்வான்” என்றாள். சிவனும் விஷ்ணுவும் தங்களதுச் சக்திகளை மதிக்காததால் தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டதை முன்பு பார்த்தோம். அதற்குப் பரிகாரமாகத் தேவர்கள் தேவியைத் துதித்தார்கள். தேவீ அவர்கள் முன் தோன்றி “தக்ஷனது இல்லத்தில் தான் பிறப்பேன்” என்றாள். அப்படியே செய்தாள். இப்பொழுது ஹிமவானுக்கு மகளாகப் பிறப்பேன் என்று சொன்னாள். ஹிமவானுக்குக் கேட்காமலே கிடைத்த வரம் இது.
8. இத்தம் நிசம்யாஸ்த, பயேஷு தேவேஷு
அப்யர்த்திதா தேவி! ஹிமாசலேன
த்வம் வர்ணயந்தீ, நிஜதத்வமேப்யஹ
ப்ரதர்சயாமா,ஸித விச்வரூபம்
அம்மே நாராயணா, தேவீ நாராயணா
லக்ஷ்மி நாராயணா, பத்ரே நாராயணா
தேவீ தனக்கு மகளாகப் பிறக்கப் போகிறாள் என்பதை அறிந்த ஹிமவான் ஆவலுடன் காத்திருந்தான். தந்தையாகிய நான் எனது புத்ரியிடம் எனது மகள் என்ற உரிமையை எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படிச் செய்தால் அது தவறாகுமா? அம்பாளின் பரம ரகஸ்யம் என்ன என்று அறிந்து கொண்டால் ஜாக்கிரதையாக இருக்கலாமே? என்று நினைத்தான். தேவர்கள் எல்லோரும் கேட்க தேவீ தத்வ உபதேஸம் செய்தாள். இது தேவீ பாகவதத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு தேவி கீதை என்று பெயர். அம்பாளின் ஆதார தத்வம், ஸர்வவ்யாபித்வம் இவைகளை எல்லாம் கேட்ட தேவர்கள், அம்பாளின் விஸ்வரூபத்தைக் காண ஆவல் கொண்டார்கள்.
9. ஸஹஸ்ரசீர்ஷம் ச, ஸஹஸ்ரவகத்ரம்
ஸகஸ்ரகர்ணம் ச, ஸஹஸ்ரநேத்ரம்
ஸஹஸ்ரஹஸ்தம் ச, ஸஹஸ்ரபாதம்
அநேகவித்யுத் ப்ரபமுஜ்வலம் ச
சூரியன் என்பது ஒன்றுதான். ஆனால் அது ஆறு, குளம் குட்டை, கிணறு போன்ற பல நீர்நிலைகளில் பிரதிபலிக்கும் பொழுது பலவாகத் தோன்றுகிறது. பல சூரியன் இருப்பது போல் தோன்றுகிறது. அதுபோல அனைத்து ஜீவராசிகளிலும் இருப்பவள் அம்பாள் தான். அனைத்துச் சரீரங்களும் அம்பாள் சரீரம் தான். அனைத்துக் கை, கால்களும் அம்பாள் கை கால்கள். அதுபோல் தலைகள், கண்கள் எல்லாமே அம்பாள் தான். அதனால் தான் விஸ்வரூபத்தில் கணக்கிடமுடியாத தலைகள் கைகள், கால்கள், கண்கள் என்று, கோடி சூர்யப் பிரகாஸமாயும், கோடி மின்னல் மின்னுவதைப் போன்ற ஒளியும் பார்க்கவே கண்ணைக் கூசும்படி இருந்தது.
10. த்ருஷ்ட்வேதம் ஈச்வர்ய,கிலைர் பியோக்தா
த்வம் சோபஸம்ஹ்ருத்ய, விராட்ஸ்வரூபம்
க்ருபாவதீ ஸ்மேர, முகீ புனச்ச
நிவ்ருத்திமார்க்கம், கிரயே ந்யகாதீஹீ
கண்ணால் பார்க்கக் கூட முடியாத அந்த பயங்கர விஸ்வரூபத்தைக் கண்டு அனைவரும் பயந்தார்கள். தாயே! இந்த ரூபம் வேண்டாம், அழகிய சுந்தர மேனியாய்க் காட்சி தர வேண்டும் என்று வேண்டினார்கள். பகவத்கீதையில் கிருஷ்ணனின் விஸ்வரூபம் கண்ட அர்ஜுனனும் இப்படித்தான் சொன்னான். தேவி அழகிய சுந்தரியாகக் காட்சி தந்தாள். ஞானம், கர்மம், யோகம், பக்தி, ப்ரம்மத்யானம், பிரதிமா பூஜை ஆகியவைகளை விபரமாகச் சொன்னாள்.
11. உக்த்வாSகிலம் ஸம்,ஸ்ருதிமுக்திமார்க்கம்
ஸுரேஷு பச்யத்ஸு, திரோததாதஹ
ச்ருத்வாத்ரிமுக்யா,ஸ்தவ கீதமுச்சைர்ஹீ
தேவா ஜபத்யான அபரா பபூவுஹு
ஸம்சாரத்திலிருந்து முக்தி அடையக் கூடிய வழிகளை விரிவாகச் சொன்னாள். அதன் பின் தேவீ மறைந்தாள்.
12. அதைகதா ப்ரா,துரபூத் ஹி மாத்ரௌ
சாக்தம் மஹோ தக்ஷ கிருஹே யதா ப்ராகு
க்ரமேண தத் தேவி! பபூவ கன்யா;
ஸா பார்வதீதி ப்ரதிதா ஜகத்ஸு
ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணீ நமோஸ்துதே.
தக்ஷனது இல்லத்தில் தோன்றிய தேஜஸ் எப்படிக் குழந்தையாக மாறியதோ, அப்படியே இமாலயத்தில் இமவான் இல்லத்தில் தோன்றிய தேஜஸும் ஒரு கன்னிகையாகி ” பார்வதீ” என்னும் பெயருடன் பிரசித்தி பெற்றது.
13. ஹி மாத்ரிணைஷா, ச ஹராய தத்தா:
தயோர்: ஸு த: ஸ் கந்த, இதி ப்ரஸித்தஹ
ஸ தாரகாக்யம், திதிஜம் நிஹத்ய
ரரக்ஷ லோகாந் அகிலான் மஹே சி!
சிவன் பார்வதியை மணந்து கொண்டார். அவர்களுக்குக் ஸ்கந்தன் பிறந்தான். ஸ்கந்தரால் தாரகாஸுரன் வதம் செய்யப்பட்டான். ஸதியின் பிரிவால்வருந்திய சிவன் மீண்டும் பார்வதியை மணந்ததும் தேவியின் அருள் தான்.
14. துர்வாஸ ஸ: சாப,பலேன சக்ரோ
நஷ்ட்டாகிலஸ்ரீர், வசனேன விஷ்ணோஹோ
க்ஷீராததிம் ஸா,ஸு ரதேவஸங்கஹ
மமந்த; தஸ் மா,து தபுச்ச லக்ஷ்மீஹீ
ஒரு சமயம் விஷ்ணுவின் பாதத்தில் சிவன் புஷ்பத்தால் அர்ச்சனைச் செய்தார். அதில் ஒரு பூ துர்வாஸருக்குக் கிடைத்தது. அவர் அதை இந்திரனுக்குத் தந்தார். இந்திரன் அதை ஐராவதத்தின் தலையில் வைத்தான். அதனால் ஐராவதம் இந்திரனை விட்டுப் பிரிந்தது. துர்வாஸர் கோபத்தால் சாபம் தர, ஸ்வர்க்கலோக செல்வங்கள் நசித்தன. தேவர்களின் ஐஸ்வர்யம் நசித்து, இந்திரன் ப்ரம்மா, விஷ்ணுவிடம் செல்ல, விஷ்ணு பாற்கடலைக் கடைந்தால் லக்ஷ்மி உயர்ந்து வருவாள் என்றார். தேவர்கள் அஸுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைய லக்ஷ்மி தோன்றினாள்.
15. யா பூஜிதேந்த்ரேண, ரமா தவைகா
சக்தி: ஸ் வரைச்வர்ய, புன: ப்ரதாநாது
சாபான் முனேர், தேவகணான் விமோச்ய
கடாக்ஷ தஸ்தே ஹரிமாப பூயஹ
லக்ஷ்மியை இந்திரன் முறைப்படி பூஜை செய்தான். சந்தோஷமடைந்த லக்ஷ்மி சகல ஐஸ்வர்யங்களையும் தேவர்களுக்குத் தந்தாள். துர்வாஸர் சாபத்திலிருந்து தேவர்கள் விடுபட்டார்கள். தேவர்கள் சந்தோஷமடைந்தனர். விஷ்ணுவை பிரிந்த சக்தி மீண்டும் கிடைத்தது. (தசகம் 28 ல் சொல்லப்பட்டிருக்கிறது)
16. த்வம் ஸர்வசக்திர், ந ஜிதாஸி கேனாபி
அந்யான் ஜயஸ்யே,வ ஸதா சரண்யா
மாதேவ பத்னீ,வ ஸுதேவ வா த்வம்
விபாஸி பக்தஸ்ய;, நமோ நமஸ்தே
சகல சக்தியும் உடையவள் அம்பாள். அவள் யாரிடமும் தோல்வி அடையமாட்டாள். அவள் வெற்றித் திருமகள். அந்த அம்பாளைத்தான் பக்தன் சரண் அடைய வேண்டும். அவள் எந்த ரூபத்திலும் வருவாள். இமவானுக்குப் புத்ரி, சிவனுக்குப் பத்னீ, விஷ்ணுவிற்குப் பத்னீ. ஆனால் அம்மா, புத்ரீ பத்னீ என்ற பந்தத்தில் சிக்க மாட்டாள். அவள் எப்போதும் சுதந்திரமானவள். அந்த தேவியை நான் நமஸ்கரிக்கிறேன்
முப்பதாம் தசகம் முடிந்தது.
Also, read