- September 24, 2024
உள்ளடக்கம்
நான்காம் திருமுறை 11 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர்: திருநாவுக்கரசு சுவாமிகள்
தருமசேனர் என்ற பெயருடன் தங்களுக்கு குருவாக இருந்து வழிகாட்டி வந்தவர் சைவ சமயத்திற்கு மாறினார் என்பதை அறிந்த சமணர்கள் தங்களுக்கு பல்லவ மன்னனிடம் இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி, நாவுக்கரசுப் பெருமானை கொல்வதற்கு பல வகையிலும் சூழ்ச்சிகள் செய்தனர். நீற்றறையில் இடுதல், நஞ்சு கலந்த சோறு அளித்தல், என்ற பல சூழ்ச்சிகள் பயன் தராத நிலையில், பட்டத்து யானையைக் கொண்டு அவரது தலையை இடறச் செய்ய ஏற்பாடு செய்தனர்.
திருநாவுக்கரசர் மீது ஏவப்பட்ட யானை அவரை வலம் வந்து அவரை வணங்கியது; யானைப்பாகன் யானையை மறுபடியும் நாவுக்கரசர் மீது ஏவியபோது, யானை பாகனை வீசி எறிந்ததும் அல்லாமல் அருகிலிருந்த சமணர்களையும் துரத்திக் கொண்டு ஓடியது. தப்பிச் சென்ற சில சமணர்கள் மன்னனிடம் சென்று, நாவுக்கரசரைக் கொன்றால் தான், யானையிடமிருந்து அவர் தப்பியதால் மன்னனுக்கு நேர்ந்த அபகீர்த்தி மறையும் என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள் கல்லோடு பிணைத்து நாவுக்கரசரை கடலில் போட்டுவிடலாம் என்றும் ஆலோசனை கூறினார்கள். மன்னனின் கட்டளையை அவனது காவலாளர்கள் நிறைவேற்ற, நாவுக்கரசர் தான் எந்த நிலையிலும் சிவபிரானை புகழ்ந்து பாடுவேன் என்று அருளிய பதிகம் தான் இந்தப் பதிகம்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே.
விளக்கம்: புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும்.
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
விளக்கம்: பூக்களுக்குள் விலைமதிப்பரிய ஆபரணம் இதழ்கள் மிக்க தாமரையாகும். பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் சிவபெருமான் அபிடேகத்துக்குப் பஞ்சகவ்வியம் உதவுதல். அரசனுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதாம். நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும்.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகத்தில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.
விளக்கம்: ஆகாயம் வரை மிகவும் உயரமாக கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியல் ஆயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்துப் பற்றிக்கொண்டால் அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவது போல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும் அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்து நமச்சிவாய என்னும் திருநாமம்.
இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற
நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே.
விளக்கம்: எந்த வகையான இடுக்கண் தன்னை எதிர் நோக்கினும். அந்த இடுக்கண்களிலிருந்து நீர் என்னை விடுவிக்க வேண்டும் என்று எவரையும் இறைஞ்சும் நிலையில் நான் இல்லை. அருளின் வயமாகிய சிவபிரானின் நாமமாகிய நமச்சிவாய மந்திரம், மலையின் கீழ் மாட்டிக் கொண்டு எழமாட்டாத நிலையில் இருந்தாலும், அதனால் எனக்கு ஏற்படும் நடுக்கத்தை கெடுத்து காப்பாற்றும்.
வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
விளக்கம்: விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும். நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும். பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும்.
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்
குலமிலன் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே.
விளக்கம்: அனைவருக்கு ஒரே தன்மையாக காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான்.
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே.
விளக்கம்: வீடுபேறு அடையும் நோக்கத்துடன், உலகப் பற்றினை விட்டொழிந்த சிறந்த தொண்டர்கள் ஒன்று கூடி சிவநெறியைச் சிந்தித்தனர். நானும் அவர்களைப் பின்பற்றிச் சென்று அவர்கள் கூறிய அஞ்செழுத்து மந்திரத்தைப் பற்றினேன்; அந்த நமச்சிவாய மந்திரமும் என்னைப் பற்றிக்கொண்டு பல நன்மைகள் புரிந்தது.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.
விளக்கம்: வீட்டில் உள்ள விளக்கு அங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய், ஒளியுடையதாய், பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே.
முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே.
விளக்கம்: முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபிரானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும்.
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.
விளக்கம்: மான் கன்றினை இடது கையில் ஏந்தியும், இடது பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டும் காட்சி அளிக்கும் சிவபிரானின் திருவடிகளை, அனைவரும் மலர்கள் தூவி வழிபடுவதால் எப்போதும் பூக்களுடன் இணைபிரியாது இருக்கும் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகத்தினை பிணைத்து சிவபிரானை புகழ்ந்து பாட வல்லவர்களுக்கு எத்தைகைய துயரங்களும் ஏற்படாது.
வாழ்வில் எத்தனைத் துன்பம் வந்தாலும் அவற்றை வெற்றி கொண்டு மீளவும், பயணம் மேற்கொள்ளும்போது நன்மை தரும் வழித் துணைகள் அமையவும், பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் நாம் ஓத வேண்டிய பதிகம் என்று பெரியோர்களால் கருதப்படுகின்றது.
🕉️🌹Om Namashivaya 💐🕉️