×
Sunday 13th of October 2024

Nuga Best Products Wholesale

சக்தி கவசம்


Sakthi Kavacham

🛕 சத்தி கவசம் என்னும் தமிழ்நூல் 12 பாடல்கள் கொண்டது. அதிவீரராம பாண்டியர் எழுதிய காசி காண்டம் என்னும் நூலின் 72ஆம் அத்தியாயம் வஜ்ஜிர பஞ்சர கவசம். இதனைச் சத்தி கவசம் என்றும் கூறுவர். நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.
துர்க்கன் என்னும் அரக்கனை அம்மை அழித்து நின்ற நிலையில் துர்க்கை எனப்பட்டாள். துர்க்கையை வணங்கிய முகுந்தன் முதலான தேவர்கள் இந்தக் கவசத்தைச் சொன்னார்களாம்.

🛕 துர்க்கையின் உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் இன்னின்ன அம்சம் என்று கூறி அது தன்னைக் காக்கவேண்டும் என்று கூறுவது சத்திகவசம்.

எடுத்துக்காட்டுப் பாடல்:

🛕 அங்கையிற் கரகம் தாங்கும் பிரமணி அருளி னோடும் துங்க என் சென்னி காக்க, வயிணவி துகள் இல் ஆகம் எங்கணும் காக்க; செய்ய ஏந்தெழில் உருத்தி ராணி தங்கும் எண் திசையும் அன்பு தழைத்திட இனிது காக்க. (முதல் பாடல்) 1865 முதல் காசி காண்டம் நூல் பலரால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. சத்தி கவசம் படித்தால் நோய் அண்டாது, திருமணம் ஆகும், வெற்றி கிட்டும் என்றெல்லாம் நம்பி இந்தக் கவசத்தை மனப்பாடம் செய்து பாடுவர்.

சக்தி வஜ்ஜிர பஞ்சர கவசம்

அங்கையிற் கரகந் தாங்கும் பிரமாணி யருளி னோடுந்
துங்கமென் சென்னி காக்க வயிணவி துகளி லாகம்
எங்கணுங் காக்க செய்ய வேந்தெழி லுருத்தி ராணி
தங்குமெண் டிசையு மன்பு தழைத்திட வினிது காக்க

கொன்னுனைச் சூலி சென்னி மயிரினைக் குறித்துக் காக்க
மன்னுவெண் பிறைதாழ் சென்னி வயங்கொளி நெற்றி காக்க
பன்மயிர்ப் புருவ நாளும் பரிவொடு முமையாள் காக்க
என்னையாண் முக்கணீசன் இறைவிகண் ணினைகள் காக்க

வயமிகு மிமய வல்லி மூக்கினை மகிழ்ந்து காக்க
செயையோடு விசயை மேல்கீ ழிதழினைச் சிறந்து காக்க
அயிலுடைச் சுருதி தூய அஞ்செவி காக்க தண்ணென்
பயின்மல குறையுஞ் செல்வி பல்வினையு வந்து காக்க

சண்டிமென் கபாலங் காக்க தவளநாண் மலரின் வைகும்
ஒண்டொடி நன்னாக் காக்க விசயைமங் கலைமற்றொவ்வாக்
கண்கவர் நாடி காக்க காத்தியா யனியெஞ் ஞான்றும்
முண்டக மலரிற் றூய முகத்தினைச் சிறந்து காக்க

காளமுண் டிருண்ட நீல கண்டிமென் கழுத்துக் காக்க
கேளில்பூ தார சத்தி சுவற்புறங் காக்க கூர்மி
நீளொளிச் சந்தி காக்க வயிந்திரி நெறியி னோடுத்
தோளினை காக்க பத்மை துணைமல ரங்கை காக்க

கமலைகை விரல்கள் காக்க விரசைகை யுகிர்கள் காக்க
திமிரமுண் டொருளிரும் வெய்யோன் மண்டலத்துறையுஞ் செல்வி
எமதிரு வாகு மூலங் காக்கவா னவர்க ளேத்த
அமிர்தல கரிநா ணாளு மகன்மணி மார்பங்காக்க

தரித்திரி யிதயங் காக்க தயித்தியர்ச் செகுப்போள் மிக்க
கருத்தொடு முலைகள் சகத்தினி லிறைமைபூ ண்டோள்
திருத்தகு வயிறு காக்க திகழ்தபோ கதிதன் னுள்ளத்
தருத்தி யினுந்தி காக்க அசைவளர் முதுகு காக்க

கருதரு விகடை காக்க கடிதடம் பாமை வாய்ந்த
குருமணிச் சகனங் காக்க குகாரணி குய்யங் காக்க
அருடர வரும பாய கந்தினி யபானங் காக்க
தெருளுடை விபுலை யென்றுஞ் சிறப்புடைக் குறங்கு காக்க

இலளிதைமென் முழந்தாள் காக்க வியற்சபை கணைக்கால் காக்க
களிதரு கோரை வாய்ந்த பரட்டினைக் காக்க மிக்க
அளிகொள்பா தலத்திற் செல்வோள் அணிகெழு புறந்தாள் காக்க
ஒளிர் நகம் விரல்கள் சந்த்ரி யுக்கிரி யுவந்து காக்க

தலத்துறை மடந்தை யுள்ளங் காலிணை காக்க தண்ணெண்
மலர்த்திரு மனையைக் காக்க வயங்குகேத் திரதை யோங்கி
உலப்பில்கேத் திரங்கள் காக்க ப்ரியகரை வொழிவ றாது
நலத்தகு மக்க டம்மை நன்குறக் காக்க வன்றே

உயர்சனா தனியெஞ் ஞான்று மொழிவறு மாயுள் காக்க
மயர்வறு சீர்த்தி யாவு மாதேவி காக்க மிக்க
செயிரறு தருமம் யாவுந் தனுத்திரி சிறந்து காக்க
இயல்புடைக் குலத்தை வாய்ந்த குலதேவி யினிது காக்க

சற்கதி பிரதை நல்லோர் இயைபினைத் தயாவிற் காக்க
விற்கொடும் போரி னீரில் வெளியினில் வனத்திற் சூதில்
இற்புற மதனி லொங்கு சர்வாணி காக்க வென்னாப்
பொற்றரு மலர்க டூவிப் புங்கவ ரேத்தி னோரே

🛕 இந்த வச்சிர பஞ்சரத்தை எவர் ஒதினாலும் அவர்களுடைய உடலிலுண்டாகிய வெப்பு நோயொழியும், எட்டுத்தரம் நீரில் அபிமந்திரித்து அதனை உட்கொண்டால் வயிற்றிலே பொருந்திய குன்மம், சூலை முதலிய நோயனைத்தும் நீங்கும். இரவில் வழி பிள்ளையைப் பெறமாட்டாமல் வருத்தப்படுகின்ற மாதருடைய அருகிலிருந்து ஒதினாலும் அல்லது நீரிலோதி உட்கொள்ளக் கொடுத்தாலும் விரைவிலே வருத்தம் நீங்கிப் பிள்ளைகளைப் பெறுவார்கள். போரிலே ஒதினால் பகைவர்கள் தோல்வியடைவார்கள். சிறு பிள்ளைகளுக்கு நீரிலோதி உட்கொள்ளக் கொடுத்தால் நோய்கள் நீங்கும். இதை எவரோதினாலும் அவர்களை உமாதேவியார் காப்பாற்றி அருளுவார்.

 

Also, read



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 13, 2024
திங்கள் சூடிய நாதனே பாடல் வரிகள்
  • August 13, 2024
அவனிதனிலே பிறந்து - திருப்புகழ் 110
  • July 21, 2024
ஸ்ரீ தேவி பாகவத புராணத்தின் சாராம்சம்