- September 13, 2024
உள்ளடக்கம்
காப்பு
சண்முகக் கடவுள் போற்றி
சரவணத்துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி
கார்த்திகை பாலா போற்றி
தண்மலர்க் கடப்பமாலை
தாங்கிய தோளா போற்றி
விண்மதி வதன வள்ளி
வேலவா போற்றி போற்றி
நூல்
அப்பமுடன் அதிரசம் பொரிகடலை
துவரைவடை அமுதுசெய் இபமுகவனும்
ஆதி கேசவன் லட்சுமி திங்கள்
தினகரன் ஐராவதம் வாழ்கவே !
முப்பத்து முக்கோடி வானவர்கள்
இடர் தீர முழுது பொன்னுலகம் வாழ்க !
மூவரோடு கருட கந்தருவர் கிம்புருடரும்
முது மறைக்கிழவர் வாழ்க !
செப்பரிய இந்திரன் தேவி அயிராணிதன்
திரு மங்கலம் வாழ்கவே !
சித்தவித்யாதரர் கின்னரர்கள்
கனமான தேவதைகள் முழுதும் வாழ்க !
சப்த கலை விந்துக்கும் ஆதியாம் அதிரூப
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (1)
சித்தி சுந்தரி கௌரி அம்பிகை க்ருபாநிதி
சிதம்பரி சுதந்தரி பரசிற்பரி
சுமங்கலி நிதம்பரி விடம்பரி
சிலாசுத விலாஸ விமலி
கொத்து திரிசூலி திரிகோணத்தி
ஷட்கோண குமரி கங்காளி ருத்ரி
குலிச ஓம்காரி ரீம்காரி ஆங்காரி
ஊங்காரி, ரீங்காரி அம்பா
முத்தி காந்தாமணி முக்குண
துரந்தரி மூவர்க்கு முதல்வி
ஞான முதுமறைக் கலைவாணி அற்புத
புராதனி மூவுலகும் ஆன சோதி !
சத்தி சங்கரி நீலி கமலி பார்வதி தரும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (2)
[36 சக்தியின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சக்தியின் அருள் முழுதும் உண்டு]
மூரியுள முப்பத்து முக்கோடி
தேவரும் முனிவரோடும் அசுரர் கூடி
முழுமந்த்ர கிரி தன்னைமத்தாகவே
செய்து முற்கணத்து அமுது பெறவே
கோரமுள வாசுகியின் ஆயிரம்
பருவாயில் கொப்பளித்திடு விடங்கள்
கோளசையும் மண்டலங்கள் யாவையும்
எரித்திடும் கொடிய அரவினைப்பிடித்து
வீரமுடன் வாயினால் குத்தி
உதிரம் பரவ இரு தாளிலே மிதித்து
விரித்துக் கொழும் சிறகடித்தே எடுத்து உதறும்
விதமான தோகைமயில் சாரியாய்
தினமேறி விளையாடி வரும் முருக
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (3)
உக்ரமுள தாருகன் சிங்கமா சூரனும்
உன்னுதற்கு அரிய சூரன்
உத்தி கொளும் அக்னிமுகன் பானுகோபன்
முதல் உத்தண்ட அசுரர் முடிகள்
நெக்குவிட கரி புரவி தேர்கள்
வெள்ளம் கோடி நெடிய பாசங்கள் கோடி
நிறையிலா வஸ்திரம் வெகுகோடிகள்
குருதி நீரில் சுழன்று உலவவே
தொக்குத் தொகுத் திதி திதிமி டுண்டு டுடு
டகுகுடிகு துந்துமி தகு குதி திகுதை
தோத்திமி டங்கு குகு டிங்கு குகு
சங்குகென தொந்தக் கவந்தம் ஆட
சக்ரமொடு சக்திவிடு தணிகை சென்னியில் வாழும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (4)
அந்தியில் பேச்சி உறுமுனி காட்டேரி
அடங்காத பகல் இரிசியும்
அகோர கண்டம் கோர கண்ட சூன்யம்
பில்லி அஷ்ட மோஹினி பூதமும்
சந்தியான வசுக்குட்டி, சாத்தி
வேதாளமும் சாகினி இடாகினிகளும்
சாமுண்டி பகவதி ரத்தக்காட்டேரி
முதல் சஞ்சரித்திடு முனிகளும்
சிந்தை நொந்தலறி திரு வெண்ணீறுகாணவே
தீயிலிடும் மெழுகுபோல
தேகமெல்லாம் கருகி நீறாகவே நின்று
சென்னியிரு தணிகை மலையில்
சந்ததம் கலியாண சாயுஜ்ய பதம் அருளும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (5)
கண்டவிட பித்தமும் வெப்புத் தலைவலி
இருமல் காமாலை சூலை,
குஷ்டம், கண்ட மாலை,
தொடைவாழை வாய்ப்
புற்றினொடு கடினமாம் பெருவியாதி
அண்டொணாதச் சுரஞ் சீதவாதச்சுரம்
ஆறாத பிளவை குன்மம்
அடங்காத இரு பஃது மேகமுடன்நால்
உலகத்தி லெண்ணாயிரம் பேர்
கொண்டதொரு நோய்களும்
வேலென்றுரைத்திடக் கோவென ஓலமிட்டுக்
குலவுதினகரன்முன் மஞ்சுபோல்
நீங்கிடும் குருபரன் நீறணிந்து,
சண்டமாருத கால உத்தண்ட கெம்பீர
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (6)
மகமேரு உதயகிரி அஸ்திகிரியும்
சக்ரவாளகிரி நிடதவிந்தம்,
மா உக்ரதர நர சிம்மகிரி யத்திகிரி
மலைகளொடும் அதனை சுமவா
ஜெகமெடுத் திடும்புட்ப தந்தம்
அயிராவதம் சீர்புண்டரீகக் குமுதம்
செப்பு சாருவ பூமம் அஞ்சனம்
சுப்பிர தீபம் வாமனம் ஆதி வாசுகி
மகா பதுமன் ஆனந்த கார்க் கோடகன்
சொற் சங்கபாலன் குளிகன்
தூய தக்கன் பதும சேடனோடு
அரவெலாம் துடித்துப் பதைத்து அதிரவே
தகதகென நடனமிடு மயிலேறி விளையாடுஞ்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (7)
திங்கள் பிரமாதியரும் இந்திராதி
தேவரும் தினகரரும் முனிவரொடு
சித்திரா புத்திரர் மௌலி அகலாமல்
இருபாதஞ் சேவித்து நின்று தொழவும்
மங்கைதிரு வாணியும் அயிராணியோடு
சத்த மாதர் இருதாள் பணியவும்
மகதேவர் செவிகூறப் பிரணவம் உரைத்திட
மலர்ந்த செவ்வாய்கள் ஆறும்
கொங்கை களபம் புனுகு சவ்வாது
மணவள்ளி குமரி தெய்வானையுடனே
கோதண்டபாணியும் நான்முகனுமே
புகழ் குலவுதிருத்தணிகை மலைவாழ்,
சங்குசக்கர மணியும் பங்கயக்கரன் மருக
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (8)
மண்டலம் பதினாலு லோகமும்
அசைந்திட வாரிதி ஓரேழும் வறள
வலிய அசுரர் முடிகள் பொடிபடக்
கிரவுஞ்ச மாரியெழத் தூளியாகக்
கொண்டல்நிற மெனும் அசுரர் அண்டங்கள்
எங்குமே கூட்டமிட்டு ஏக
அன்னோர் குடல் கைகாலுடன் மூளை தலைகள்
வெவ்வேறாகக் குத்திப் பிளந்தெறிந்து
அண்டர்பணி கதிர்காமம் பழநி
சுப்பிரமணியம் ஆவினன் குடி ஏரகம்,
அருணாசலம், கயிலை தணிகைமலை
மீதிலுறை அறுமுகப் பரம குருவாம்,
சண்டமாருதக் கால சம்மார அதிதீர
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (9)
மச்சங் குதித்துநவமணி தழுவ
வந்தநதி வையாபுரிப் பொய்கையும்
மதியம் முத்தம் செய்யும் பொற்கோபுரத்து
ஒளியும் வான்மேவு கோயிலழகும்,
உச்சிதமதானதிரு ஆவினன் குடியில்
வாழ் உம்பரிட முடிநாயக,
உக்ரமயிலேறிவரும் முருக சரவணபவ !
ஓங்காரசிற் சொரூபவேல்,
அச்சுத க்ருபாகரன் ஆனைமுறை
செய்யவே ஆழியை விடுத்து ஆனையை,
அன்புடன் ரட்சித்த திருமால் முகுந்தன்
எனும் அரிகிருஷ்ண ராமன் மருகன்,
சச்சிதானந்த பரமானந்த சுரர் தந்த
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே! (10)
… சத்ரு சங்கார வேற் பதிகம் முற்றிற்று …
🛕 1. . . . . . . ஆச்சரியப்படத்தக்க முறையில் எல்லா தேவர்களையும் தெய்வங்களையும் முன்னிலைப்படுத்தி சரவணனது அடியார்களை எதிர்ப்போரை அடியோடு அழித்து இல்லாமல் செய்துவிடும் என்பதாகப் பொருள். எதிரிகள் என்பதை தீமை, வறுமை, நோய்கள் துயரங்கள் என்று கொள்வது சாலச்சிறந்தது!
🛕 பட்சணங்கள் அமுது செய்யும் வினாயகன் வாழ்க! திருமாலும் திருமகளும் வாழ்க! சந்திர சூரியரோடு அயிராவதம் எனும் தேவலோக யானையும் வாழ்க! முப்பத்து மூன்று கோடி வானவர்கள் உள்ள தேவலோகம் வாழ்க! பிரம்மா விஷ்ணு, மகேசன் ஆகிய மூவர் வாழ்க! கருடனும், கந்தர்வரும், முனிகளும் ரிஷிகளும் இந்திரனும் அவனது தேவி இந்திராணியும் வாழ்க! சித்தர்கள், வித்யாதரர்கள், இசைபாடி உலவும் கின்னரர்கள் இவர்களோடு மற்ற தேவதைகளும் வாழ்க! முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
🛕 2. . . . . . . முருகப்பிரானுக்கு ஞானமாகிய சக்தி வேலைத் தந்தவள் அன்னை பார்வதி! அவளைப் பலப்பல பெயர்கள் சொல்லி வணங்குவர். இதில் அன்னையைப் போற்றும் இந்த நாமங்கள்தான் சக்திவாய்ந்தவை. இந்தப்பதிகத்தை ஓதுவதால் அன்னை அருள் கிட்டும். அவள் தந்த வேலின் சக்தி எத்தகையது! முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
🛕 3. . . . . . . முன்னொருகாலத்தில் அழியாத்தன்மை பெற தேவரும் அசுரரும் மந்தரமலையை மத்தாக்கி வாசுகி எனும் பாம்பினைக் கயிறாக்கிப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வலிபொறாத நாகத்தின் வாயினின்றும் கொடியவிடம் கொப்பளித்து பெருகி, கிரகங்கள் சுழலும் இந்த மண்டலத்தை எரிக்கலாயிற்று. அந்த ஆலகாலத்தை சிவன் அமுதுசெய்து கண்டத்தில் நிறுத்தி நீலகண்டன் ஆனார். அந்த அரவினைப் பிடித்து, தன் அலகினால் குத்தி, இருகால்களால் மிதித்துத் தன் சிறகுகளை விரித்து எடுத்து உதறும் வல்லமை பெற்றது முருகனது வாகனமாகிய மயில்! முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
🛕 4. . . . . . . அன்னை தந்த வேலும் வலியது! முருகன் ஏறும் மயிலும் வலியது! அந்த முருகனது வல்லமை சொல்லிமுடியுமோ? ஆணவம் – கன்மம் – மாயையின் உருவான தாருகன், சிங்கமுகன், சூரபதுமன், அக்னிமுகன், பானுகோபன் ஆகிய அசுரர்களையும் அவர்களது அரக்கர் படைகளையும் பொடிப்பொடியாக்கினான் முருகன். அசுரரது முடிகள் சிதற, ரத்தவெள்ளத்தில் யானை, குதிரைகள், தேர்கள், அசுரரது அஸ்திரங்களும் ஆடைகளும் சுழன்று ஓடுகிறதாகச் சொல்கிறார் சுவாமிகள்! கோபாவேசத்தோடு குமரன் சக்திவேலைச் சுழற்ற, குதித்தும் எகிறியும் தலையற்ற உடல்கள் [கவந்தம்] ஜதியோசைபோல் ஆடுவது பயங்கரமாக இருந்ததை காட்டும் வரிகள். முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
🛕 5. . . . . . . முருகனது நெற்றியில் ஒளிவீசும் திரு வெண்ணீற்றினைக் கண்டதுமே தீய சக்திகள் என்று உலகத்தோர் அச்சப்படும் துர்த்தேவதைகள் எல்லாம் அனலில் இட்ட மெழுகுபோல் கருகிச் சாம்பலாகிவிடும். பேய்ச்சி, உறுமுனிக் காட்டேரி, இரிசி, அகோர கண்டம், கோரகண்ட சூனியம், பில்லி, மோஹினிப்பிசாசு, பூதம், குட்டிச்சாத்தான், வேதாளம், சாகினிகள், டாகினிகள், சாமுண்டி, பகவதி, ரத்தக்காட்டேரி, ஓடித் தொல்லைதரும் முனிகள் ஆகியவை இன்றும் கிராமப்புறங்களில் நடமாடுவதாகச் சொல்கின்றனர். இதற்கெல்லாம் முடிவு கட்ட கந்தன் திருநீறு அணிந்தால் போதும்! முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
🛕 6. . . . . . . இந்தப்பதிகம் உலகில் உள்ள 8000 வகையான நோய்களைப் பட்டியல் இட்டு, அனைத்துக்கும் சஞ்சீவினி மருந்து முருகனது திருநீறு என்று காட்டுகிறது. பகைவருக்குச் சண்டமாருதமெனும் புயலாகவரும் முருகன் நோய்களைத் தீர்ப்பான் என்று காட்டும் பதிகம். முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
🛕 7. . . . . . . மஹாமேரு, உதயகிரி, ஹஸ்திகிரி, சக்ரவாள மலை, நிஷாதம், விந்திய மலை, நரசிம்மகிரி, அத்திகிரி ஆகிய மலைகள் விளங்கும் இந்த உலகினை எட்டுத் திக்குகளிலும் அஷ்ட திக் கஜங்களான புஷ்பதந்தம், ஐராவதம், புண்டரீகம், குமுதம், சார்வபௌமம், சுப்ரதீபம், அஞ்சனம், வாமனம் ஆகிய எட்டு யானைகள் தாங்கி நிற்கின்றன. அதுபோல், அச்சுறுத்தக்கூடிய ஆதிசேடன், வாசுகி, மஹாபத்மன், கார்க்கோடகன், பாலகுளிகன், தக்கன், பதும சேஷன் போன்ற நாகங்களுமே, முருகன் ஏறிவரும் மயில் பறந்தாலே அஞ்சிநடுங்குமாம். அப்படியிருக்க அடியவர்களாகிய நமக்கு என்ன பயம்? முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
🛕 8. . . . . . . முருகனை யாரெல்லாம் வணங்குகிறார்கள் தெரியுமா? சந்திரன், பிரமன், இந்திரன், தேவர்கள், சூரியன், ரிஷிகள், பாவபுண்யக் கணக்கெழுதும் சித்திர குப்தன் – எல்லோரும் கரங்களை முடிமேல் குவித்து வணங்குகின்றனர். சரஸ்வதி, இந்திராணி, சப்தமாதர்கள், ஆகியோரும் வனங்குகின்றனர். தந்தைக்குப் பிரணவம் உரைத்த செவ்விதழ்களில் புன்னகையோடு அழகே உருவாக விளங்கும் முருகனது மேனியில், கந்தம், புனுகு, சவ்வாது ஆகிய வாசனைத் திரவியங்கள் பரிமளிக்க, வள்ளி தேவானையுடன் கூடி நின்ற அழகை விஷ்ணுவும் பிரமனும் புகழ்ந்து பாட, சங்கு சக்கரம் ஏந்திய கையன் திருமால் மருகன் சரவணனது அன்பர்களுக்கு வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை. முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
🛕 9. . . . . . . ஈரேழு பதினான்கு உலகும் குலுங்கியது! ஏழு கடல்களும் வற்றின! அரக்கர் தலைகள் சுக்கு நூறாக நொறுங்கின! கிரௌஞ்ச மலையாய் நின்ற சூரபதுமன் உடல் பொடிப்பொடியானது! கற்களாகச் சிதறி முருகன் காலடியில் தூசியாக ஆனது! அறுந்த உடல்கள் அங்குமிங்கும் ஓடின! உடலின் பாகங்கள் சிதறின. சூரனை அழித்தபின் முருகன் வெற்றிவீரனாக கதிர்காமம், பழனி, ஆவினன்குடி, அருணாசலம், கயிலை – இங்கெல்லாம் திக் விஜயம் செய்து சினம் தணிந்த பரமகுருவாக அமர்ந்த இடம் திருத்தணிகை! முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
🛕 10. . . . . . . முருகன் உறையும் கோயில்களும் அவற்றின் கோபுரங்களின் அழகும், தீர்த்தங்களின் சிறப்பும் எப்படி வர்ணிப்பது. மயிலேறிவரும் வடிவேலன் யாருடைய மருமகன்? ஒருமுறை யானை ஒன்று திருமாலைப் பூசிக்கத் தாமரை மலர் பறித்தபோது, முதலை ஒன்று காலைக் கவ்வ, ஆதிமூலமே எனக்கதறிய யானையைக் காப்பாற்றியவன் திருமால். திருமால் மருகன் முருகன். முருகனோ பரமேசுவரன் தந்த பரமானந்த சச்சிதானந்த ஸ்வரூபன். முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
… வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! …
Also, read