- September 13, 2024
உள்ளடக்கம்
காப்பு
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, செல்வம் பெருக, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்தக் கவசத்தை தினமும் பாராயணம் செய்யவும் .
ஸ்ரீ கண்ணபிரான் சர்வலோகரட்சகர். நம்பிக்கையோடு பின்பற்றுவோர்க்கு நல்ல துணைவன். அவன் ஆதார புருஷன், பரமாத்மா, திருவின் நாயகன், இகலோகத்துக்கும், பரலோகத்துக்கும் அவனே நாயகன் .
கடுமையான சோதனைகளுக்குப் பின்னர் மலையளவு புகழையும், பொருளையும் அவன் தருகிறான். யாருடைய ஆசைகளையும் அவன் தடுப்பதில்லை. ஆனால், அவற்றை ஒழுங்கு படுத்துகிறான் .
கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும். இந்த கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்.
அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் பரமாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே !
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம் !
அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே
தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளைவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்
உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!
பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்சஜன்யம் பக்தனை காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க
கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக ! துணையே தருக !
மாதர் கற்பும் மடவார் நோன்பும்
மாயோன் காக்க மலைபோல் வருக !
தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட
திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசைஇலதாக !
துருவத் துருவத் துருவத் துருவிடத்
தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
கர்மசன் யாசக் களமே வருக !
ஞானம் யோகம் நல்குவன் வருக !
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !
அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !
மதுசூதனனே மலரடி சரணம் !
இருடீகேசா இணையடி சரணம் !
கீதா சாரிய கிருஷ்ணா சரணம் !
வேதாச் சாரிய வேந்தே சரணம் !
தேவகி மைந்தா சிறியேன் சரணம் !
யசோத குமரா அடியேன் சரணம் !
உன்னை விட்டொரு உறவுக ளில்லை
என்னை விட்டொரு இனியவ னில்லை
நம்மை விட்டொரு நண்பர்க ளில்லை
நன்மையில் உன்போல் நாயக னில்லை
எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,
அங்கங்கே நீ அருள் செய வருக !
கோசலை ஈன்ற குமரா வருக !
கோதையின் மாலை கொண்டவன் வருக !
ரகுவம் சத்தின் நாயகன் வருக !
யதுவம் சத்தின் யாதவன் வருக !
மதுவை வென்ற மாதவன் வருக !
மலைக்குடி கொண்ட மாலவன் வருக !
திருப்பதி யாளும் திருமால் வருக !
திருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய் துன்பம்
‘இரா’வணம் எமக்கும் இன்னருள் புரிக
கம்சன் கொடுமை களைந்தோய் வருக !
காலனை வெல்லக் கைவலி தருக !
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
காதில் குண்டலம் கையில் வில்லொடு
தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக !
கௌரவர் தம்மை களத்தில் வென்றாய்
கெளரவம் காக்க கண்ணா வருக !
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக !
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி யணைத்தேன்
சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்;
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவனே நீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே யன்று !
உன்னால் தானே உலகம் இயக்கம் !
கண்ணனி லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனி லாமல் கடவுளுமில்லை
கண்ணனி லாமல் கவிதையுமில்லை
கண்ணனி லாமல் காலமுமில்லை
கண்ணனி லாவிடில் காற்றே இல்லை !
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்
சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிகளில்லை ; நீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு !
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு !
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க !
பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியுமில்லாமல்
தோற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக்காமல்
சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நலிய விடாமல்
என்றும் பதினா றிளமை வழங்கு !
இப்பணி தொடர அற்புதம் காட்டு !
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டு !
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு !
உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு !
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியென்று தலையை யசைக்க
பொலி பொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவென காசுகள் சேர
தளதள தளவெனத் தர்மம் தழைக்க
வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம் !
அடியேன் வாழ்வில் நீயே கவசம் !
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் !
வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம் !
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணையென அறிவோம் ! அறிவோம்!
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா …
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெயஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய…
ஜெய மங்கள ரூபா மலரடி சரணம்.
!!! சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து !!!
Also, read
What a poem. A poet with god- given talent only can write like this. We all are blessed for having lived as we also lived when he was living
வாழ்க கவியரசு புகழ்
goodcome
Hare Krishna. HE is the protector. HE takes care of us if you devotedly worship Him and chant his divine name with this kavasam every day. Thanks to our immortal poet Sri Kannadasan. How superbly he had written this poem. His legacy is ever living. S. Kumar. Chennai.
Super