×
Monday 29th of May 2023

Nuga Best Products Wholesale

வடிவுடை மாணிக்க மாலை


Vadivudai Manikka Malai

திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது

சென்னை மாநகரின் வடகோடி எல்லையில் அருளாட்சி செய்து வருகிறார்கள் வடிவுடை அம்மை உடனாய தியாகராஜ தம்பதியினர். அவர்களின் அருளால் வாழ்வாங்கு வாழ்ந்து, புகழ் பெற்ற அருளாளர்களுள், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த, வள்ளலார் என அன்புடன் அழைக்கப்பட்ட, திரு இராமலிங்க அடிகள், இயற்றியது வடிவுடை மாணிக்க மாலை. இது நூறு பாடல்கள் கொண்ட ஒரு பாமாலை. மிக எளிமையான தமிழில் உள்ள இதனை ஓதி அனைவரும் பலன் அடையலாம்.

அன்னையின் தரிசனம் பெற்று, அவள் கரங்களாலேயே உணவு ஊட்டப்பட்ட பாக்கியம் பெற்றவர். ஜோதி வழிபாட்டினை முன் நிறுத்தி, “அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை” என்று அனைத்து உயிர்களையும் இறைவனின் உருவமாகப் பார்த்து வாழ்ந்தவர்.

Thiruvarutpa Agaval in Tamil with Meaning

1. காப்பு

1. சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யானிடம் சேர்ந்தமணி
வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத்
தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே
ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே.

குறிப்பு:
வார்-கச்சு
தமியன்-அடியேன்
ஏர்-அழகிய

சீர் மிகுந்த திருவொற்றியூர். அதில் பேர் பெற்ற ராஜன் தியாக ராஜன். அவனது இடப் பாகத்து அமர்ந்து நல்லருள் தருகிறாள் அன்னை வடிவாம்பிகை. அவளது எழிலார்ந்த மார்புகள் மீது மணிமாலைகள் தவழும். அவளது தாமரை மலர்த் தாள்களுக்கு ஒப்ப, தானும் ஒரு பாமாலை சூட்ட விரும்புவதாகவும், அதற்கு, அனைத்து குண நலன்களும் நிறைந்த விநாயகப் பெருமான் துணை நிற்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

2. கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே
உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே
அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
அடல்-வெற்றி

அன்னை பாற்கடலில் பிறந்த அமுதம். தீஞ்சுவை மிகு சிவப்புக் கரும்பு. வேண்டிய அனைத்தும் தரும் கற்பக மரத்தின் பழம். நம் உடலுக்குள் உள்ள உயிர். அந்த உயிருக்குள் உறையும் உணர்வு. அந்த உணர்வுகளின் ஒளிப் பிழம்பு. இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவனாரின் இடப் பாகம் அமர்ந்தவள். கிடைத்தற்கு அரிய மா மருந்து. முழுதும் மலர்ந்த ஞான மலர். அவள் தாளினை போற்றுவோம்.

3. அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.

அவள் அணிகளுக்கு அழகினை அளிப்பவள். அழகர் தியாகேசரின் அன்பிற்கு இனியாள். அனைத்து நற்குணங்களும் கூடிய குணவதி. மலை அரசன் தவப் பயனாய் மகவாகப் பிறந்தவள். தேவர்கள் எப்பிழை செய்யினும் அதை நினையாது, நின்னைப் பணியாது இருப்பினும், அதனை பொருட் படுத்தாது, அவர்களை தடுத்து ஆட்கொண்ட சிந்தாமணி. நம் கண்ணின் கருமணி போன்றவள். வடிவுடை நாயகி. அவள் தாள் பணிவோம்.

4. மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே
தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
ஏர்-ஒத்த
மான்-பெருமை
கான்-நறுமணம்
அளகம்-பெண்ணின் கூந்தல்

மானினை நிகர்த்த விழிகள் கொண்டவளே, மலையரசன் மகளாக மான் போல் வந்தவளே, எம் சிவபிரானின் இடப்பாகம் வாழும் மயிலே, நல் மணம் கமழும் பசுந்கூந்தற் குயிலே, அருள் பெருகும் கண் படைத்த கரும்பே, தேன் போலும் இனிய குணவதியே, ஒற்றியூரில் வாழும் சிவசக்தியே, வான் மழையே, கருணையின் இருப்பிடமே, வடிவுடை மாணிக்கமே.

5. பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண்
அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும்
தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே
மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
தெருள்-தெளிவு
ஏதம்-துன்பம்
மருள்-மயக்கம்

ஒரே ஒரு மெய்த் தன்மை உடைய பொருளே. [ உலகில் அனைத்தும் மாயா உருவங்களே என்பது கோட்பாடு ] பாதம் பணிவார்க்கு புகலிடம் அளிப்பவளே. ஒற்றியூர் முழுமுதலின் குளிர்ந்த அருளே, எம் உயிர்க்கு ஆதாரமானவளே, உண்மையான ஞானத்தின் உருவே, வேதங்களின் சிகரமாய் விளங்கும் ஜோதியே. அறியாமையினால் யாம் செய்யும் குற்றங்களை களையும் அருள் ஒளியே. வடிவாம்பிகையே, உன் தாள் சரணம்.

6. திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை
மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
மால்-மயக்கம்
உழக்க-வருத்த
பெம்மான்-பெருமான்,கடவுள்

முன் ஒருநாள் திருமாலும், பிரம்மனும் அடிமுடி காண முயற்சித்து, இயலாமல் மயங்கி நின்ற போது தீ உருவாக ஓங்கி உயர்ந்து நின்றவன் எம் சிவபிரான். ஒற்றியூரில் அமர்ந்தருளும் பெருமான் அவன். அந்தப் பித்தன் தன் கையில் ஒரு மானைத் தாங்கி இருக்கிறான் . மலை அரசனின் மருமகனான, அவனது இடப் பாகத்தினையே கவர்ந்து விளங்கும் வடிவாம்பிகையே உன்னை வணங்குகிறேன்.

7. உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
ஏர்-அழகு
அம்-அழகு
மன்-தலைவர்
ஏர்-ஒத்த

மாற்று அறிய மாட்டாத பொன்னே, அப் பொன்னின் அற்புத ஒளியே, தாமரை மலர் மீது விளங்கும் திருமகளால் துதிக்கப் படுபவளே, எம் உயிருக்கு உயிராக விளங்குபவளே, திருவொற்றியூரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சிவபிரானின் இடப் பாகம் அமர்ந்த மின்னொளியே, வடிவுடை நாயகியே, உன்னைப் போல் அருள் தரும் தெய்வம் வேறு யாரையும் நான் கனவிலும் காண்கிலேன். உன் திருவடியே சரணம்.

8. கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
வாமம்-இடப்பக்கம்

எம் கண் போன்றவளே, அக் கண்ணின் கருவிழியே, அவ்விழியின் ஒளியானவளே, தியாகேசனின் இடப் பாகம் அமர்ந்தவளே, மலையரசன் பெற்ற பெண்ணே, தெய்வ மாதர்களின் அமுத நிகர் தலைவியே, மூவாசைகளையும் துறந்த தூயோருக்கு, உரிய வாழ்வளிக்கும் பெருந்தகையே., வடிவுக்கரசியே, வணக்கம்.

9. மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்
சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
மத்து-முத்து

அன்னை மலையரசனின் தவப் புதல்வி, அவர் பெற்ற முத்து. ஒற்றியூரில் வாழும் பொன் மலையான சிவனார் மணந்த, நறுமணம் வீசும் சுகந்த மலர். அலைகடல் வாசன். அரங்கநாதன் வணங்கும் அரிய அமுதம். வலைவீசும் மீனவர் குலத் தோன்றல். எங்கள் திரிபுர சுந்தரி.

10. காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்
சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே
தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்
வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
சேமம்-இன்பம்
தாமம்-மாலை
வாமம்-இடப்பக்கம்

அம்பிகை, தூய மனத்தவர்களுக்கே காட்சி தருவாள். வஞ்ச மனம் கொண்ட காமுகர்களுக்கு கனவினிலும் காணக் கிடைக்காதவள். நல்வினைகளை அருளும் பொன் அவள். ருசியான நன்கு கனிந்த பழம். ஒற்றியூரில் தனிமலை போல் விளங்கும் சிவபிரானின் இடப் பக்கம் படர்ந்து உள்ள பசிய கொடி போன்றவள்.

[ தை வந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரர்க்குக்
கைவந்த தீயும் தலைவந்த வாறுங் கலந்தெங்கே
மெய்வந்த நெஞ்சினல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சிற் புகவறியா மடப் பூங்குயிலே – அபிராமி அந்தாதி ]

11. கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
கோடுதல்-நெறி வழுவுதல்
பீடார்-பெருமை பொருந்திய
பெம்மான்-பெருமான்

நன்னெறி தவறாத கருணை மலை அவள். சிவ பரம்பொருளை வணங்காத மனங்களை உடையாரை புறந் தள்ளுபவள். அவரை வணங்குவார்க்கு ஆனந்தம் அளிப்பவள். மெய்யன்பர்கள் விரும்பும் இன்பம். பெருமை உடைய ஒற்றியூர் பிரானின் இடப் பாகம் அமர்ந்து பெரும் தவம் இயற்றுபவள். வாடாத மலர்க் கொடி. நிகரில் அழகி.

12. நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
அந்தம்-பகுதி
இன்னம்-இன்னும்
பகர-சொல்ல

நான்மறைகளும் உன்னை காணும் பொருட்டு இன்னும் என்னைப் போலவே வருந்துகின்றன. ஞானவெளியில் ஒளிப் பிழம்பாய் விளங்கும் எம்பிரான், எம் அண்ணல், அவர் தம் பக்கத்தில் அருள் வடிவாய் நின்றிருக்கும் வடிவாம்பிகையே, உன்னைத் தன் தங்கையாகப் பெற்ற திருமால் என்ன தவம் செய்தாரோ ! அவர் தேவர்களின் இடையே தவத்தால் சிறந்து விளங்குகிறார். [அன்னையின் அருளாலேயே அவர் சிறப்பு பெறுகிறார்]

13. கங்கைகொண் டோன்ஒற்றி யூர்அண்ணல் வாமம் கலந்தருள்செய்
நங்கைஎல் லாஉல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத்
தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை
மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
வாமம்-இடப்பக்கம்
கோ-சொல்
கோமளம்-அழகு
சொல்-புகழ்

தியாகேசப் பெருமான் தன் தலையில் கங்கை நதியை தாங்குகிறார். அவரது இடப் பாகம் இருந்து அருள் செய்யும் வடிவுடை அம்மையே, அனைத்து உலகையும் படைத்த உன்னை, அந்த நாராயணனுக்கு தங்கை என்று சொல்வதா, அல்லது தாய் என்று போற்றுவதா? பெருமை பெற்ற மலையரசனின் மகளே, அழகிய மானே. நின் பாதம் பணிகிறேன்.

[எல்லா உலகங்களையும் படைத்து, அனைத்து உயிர்களையும் உண்டாக்கிய பெருமை அன்னையுடையது. அப்படியானால், திருமாலையும் அவளே படைத்தவள். எனவே அவளை தாய் என்பதே சரி என்பது கருத்து.]

14. சோலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டரன்பின்
வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே.

சோலைகளும் வயல்களும் நிறைந்த ஒற்றியூரை புறந்தள்ளி, தனது அடியவர் ஏதேனும் வேலை சொன்னால், அன்பினால் அதனை உடனடியாக செய்து முடிக்கும் பித்தன் சிவபிரான். மேலும் தன் உடலில் யானையின் தோலை அணிந்து கொண்டு நடனமாடுபவன். அத்தகு மனநிலை உடையவனை, முன்னாளில் நீ துணிந்து மாலை இட்டு கணவனாகப் ஏற்றாய். இந்த உன் செயலை என்னவென்று சொல்வது. [மன நிலை சரியில்லாதவரை மணத்தல் மிகுந்த கருணை அல்லவா.]

15. தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே

வடிவுடை அரசியே, சிவபிரான் தன்னை ஆள்பவர் எவருமின்றி இருப்பவர். மற்றோர் அனைவரையும் ஆள்பவர். அவரின் திரு உள்ளப்படி, உயிர்களின் மலங்களை நீக்கி அவர்களுக்கு மெய்யுணர்வை ஊட்டி, நல் வழிப் படுத்துபவள் நீ அன்றோ. எனவே அச்சிவனின் மனைவியாக நீ இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

16. பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர்
கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
கொன்-அச்சம்
மன்-அரசன்
மொய்-மிக்க

திருவொற்றியூரில் வாழும் மயிலே, வடிவுடை மாணிக்கமே!. உலகில் பெண்கள் அனைவருக்கும் தமது கடைசி மகவின் மீது பாசம் அதிகம் இருக்கும் என்பர். ஆனால் உனக்கோ முதற் பிள்ளை மீது அன்பு அதிகம் போல் தோன்றுகிறது. இல்லையெனில், பல்லாயிரம் அசுரர்கள் கூடி உள்ள போர் களத்திற்கு, உன் பச்சிளம் பிள்ளையை அனுப்பி இருப்பாயா? உன் செயல் வியப்பாக உள்ளது.

17. பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச்
செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ
கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
பை-படம் எடுத்தாடும் பாம்பு
அல்குல்-பெண்குறி
சுரர் மடவார்-தேவ மாதர்கள்
செய்யாள்-இலக்குமி
வெண் ணிற மெய்யாள்-சரசுவதி
மெய்-உடல்

பாம்பின் படத்தைப் போன்ற அல்குல்களை உடைய தேவ மகளிரிடையே, சிவந்த நிறத்தாளான திருமகளும், வெண்ணிற கலைமகளும் சிறந்து விளங்குகின்றனர். இதற்கு காரணம் நீ அவர்களை உனது திருவடிக்கு குற்றேவல் செய்யப் பணித்தமை தான் என்று எண்ணுகிறேன். மை அணிந்த கரு விழிகள் உடைய வடிவாம்பிகையே, ஒற்றியூர் நாயகியே. இதுவன்றி அவர்கள் வேறு தவம் செய்வதற்கு தேவையிருக்கவில்லை என்பது என் துணிபு.

18. இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய்
நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

மலையரசன் இமவானுக்கு மகளாகத் தோன்றி அவனது பிள்ளைக் கலியை தீர்த்த, ஒற்றியூர் வடிவாம்பிகையே, வடிவுடை மாணிக்கமே, இல்லற தர்மங்கள் அனைத்தையும் செய்விக்கும் உன்னருளால் தான் அனைத்து மங்கையரும், நீ உன் மலர் அனைய காலால் இடும் பணியைத் தம் தலைகளால் செய்து முடிக்கின்றனர். ஆயினும், உன் திருவருளால், ஜீவன் முக்தி அடைந்தவர்களிடம் இருந்து விலகியே நிற்பதால், திருமகளை நீ உன்னருகே வர விடுவதில்லை போல் தோன்றுகிறது. அவ்வாறு செய்யாது அவளை ஒதுக்க வேண்டாம் தாயே.

19. கலைமக ளோநின் பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள்
அலைமக ளோஅன் பொடுபிடித் தாள்எற் கறைதிகண்டாய்
தலைமக ளேஅருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன்
மலைமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
எற்கு-எனக்கு
அறைதி-கூறுக

திருவொற்றியூர் வாழும் தாயே, அன்பான வடிவாம்பிகையே, அனைவருக்கும் தலைவியே, அருளமுதே, செந்நிற உதடுகளும், கார் மேகம் போலும் கூந்தலும், பொன்னை ஒத்த மலை அரசன் மகளே. நீ இட்ட பணியை கலைமகள் உவந்து செய்து முடிக்கிறாள், அலை மகளோ, அன்போடும் உறுதியோடும் செயல் படுகிறாள். என்னிடம் என்ன குறை கண்டாய் தாயே. என்னை உய்விக்க நான் என்ன செய்ய வேண்டும். ( ஆணையிடு தாயே )

20. பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி
தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.

மன்னனான சிவபெருமானுடன் அழகிய ஒற்றியூரில் வாழும் வடிவம்மையே, எனக்கு ஒரு சந்தேகம். அலை மகளும், கலைமகளும் தங்களை நாடுவோர்க்கு, செல்வமும், கல்வியும் கொடுக்கும் வல்லமை படைத்தது, அவர்கள் உனக்கு பணி செய்யத் தொடங்கிய பின்னரா அல்லது முன்னரா? அதனைத் தாங்கள் தெளிவு படுத்த வேண்டும. (பின்னரே என்பது கருத்து).

21. காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி
யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்
நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ
மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
கா-சோலை
மா-சிறந்த
மட்டு-தேன்
அலர்-மலர்

மனம் நிறைந்த தேனைச் சொரியும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய, அம்பிகையே, மலர் வனங்கள் நிறைந்த திருவொற்றியுரின் நாயகனாம் நின் கணவனோ இடுப்பில் கந்தையைச் சுற்றிக் கொண்டு அரைகுறை ஆடையுடன் நிற்கிறார். ஆனால், நீயோ, அதனை பொருட்படுத்தாது, பட்டாடை உடுத்தி உள்ளாய். நீ உன் கணவரிடம் வைத்துள்ள அன்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஏமட்டரை = ஏம் + அட்ட + அரை – அரையினை மறைக்கும் உடை. இங்கு உடுக்கப்படாத அரை.

22. வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால்
ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே
மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
வீறு-தனிச்சிறப்பு

மாறா இயல்புடைய வடிவுடை மாணிக்கமே! ஒப்பற்ற நின் மணநாளன்று மலரினும் நுண்ணிய நின் திருவடிகளை, அய்யன் கருங்கல் அம்மியின் மீது தூக்கி வைத்ததை உன் தமையன் திருமால் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்? அனிச்ச மலர் பட்டாலும் துவளும் நின் திருவடி வருந்தாதோ? விடையேறும் எம் ஒற்றியூர் எம்மான், தம் கழுத்தில் கறுப்புக் கறை படிய இருப்பது சரியே எனத் தோன்றுகிறது. ஏனெனில் மனதில் சிறிதும் இரக்கமே இல்லாதவர் தான் இவ்வாறு செய்ய முடியும். [நீலகண்டம் கடின நெஞ்சை குறிப்பதாகக் கூறுகிறார்.]

23. பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய்
மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
பொருப்பு-மலை
மருப்பு-யானையின் தந்தம்

யானைத் தந்தம் போன்ற மார்பகங்கள் அமைந்த, மயிலின் சாயலை ஒத்த எம் அம்பிகையே, உன்னை மலை வாழ் நீலி என்று சிலர் கூறுகின்றனர். அது உண்மை என்றே தோன்றுகிறது. ஏனெனில். திருவொற்றியூர் தியாகேசனை நீ கொஞ்சமும் அஞ்சாமல் விரும்பி மணந்துள்ளாய். அவரோ அனைவரும் அஞ்சும்படி, பாம்பினை ஆபரணமாக அணிந்துள்ளார். வெண்மையான மண்டை ஓடுகளை கோர்த்துத் தலை மாலையாக பூண்டுள்ளார். கையிலோ தீச் சட்டியை ஏந்தி உள்ளார். அவர் உடலோ அனல் மேனியாக உள்ளது. இந்நிலையில் நீ மணந்தது வியப்பே. உன் மனத்திண்மையை எவ்வாறு புகழ்வது.

24. அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித்
தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே
தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல்
மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.

வடிவுடை அம்மையே, அன்னப் பறவை மீது அமரும் நான்முகன் புகழும் உன் கணவன், அழகான குமிழி போன்ற தனங்களைக் கொண்ட ஒரு மங்கையை, உனக்கு போட்டியாக, தனது சடைமுடியில் வைத்து இருக்கிறார். இருந்தும் நீ சற்றும் கோபம் கொள்ளாமல், எம் ஒற்றியூர் பெருமானுடன் இணக்கமாகப் பிரியாது இருக்கின்றாய். உன்னைப் போன்ற பொறுமை உடைய மங்கையர் யார் உளர் இல்லை.

25. ஒருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண்
சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.

மார்க் கச்சினால், மூடி உள்ள மார்பகங்களை உடைய வடிவாம்பிகையே, திருவொற்றியூர் நாயகனான உன் கணவன், உன்னைத் தன்னுடனே இணைத்து ஓருருவாய் நிற்கின்றார். எனினும், நீ அறியா வண்ணம், சீரிய இளமை பொருந்திய கங்கை எனும் மங்கையை, உனக்கு மாற்றாளாக, தனது சடைமுடியில் நீர் உருவாக சுமந்து திரிகிறார். அதனை நீ சற்றும் பொருட் படுத்துவதில்லை. [இது உன் பெருந்தன்மையைக் காட்டுகிறது]

26. சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு
கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று
தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்ஒண்
வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.

காதளவோடிய கண்ணினாய். ஒளி மிகுந்த காதணி அணிந்தவளே, வடிவுடை நாயகியே. திருவொற்றியூரில் வாழும் நின் தலைவரான சிவபிரான், உன்னை பாகம் பிரியாளாக அடைந்த பின்னும், கங்கை என்னும் மாதை விரும்பி தன்னிடம் வைத்துள்ளார். ஆயினும், நீ அறிந்தால் சினம் கொள்வாய் எனப் பயந்து, அவளை தனது சடைமுடிக்குள் மறைத்து வைத்துள்ளார். இதனை நீ அறியாயோ!

27. நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப்
பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும்
தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத
வாயேர் சவுந்தர35 மானே வடிவுடை மாணிக்கமே.

அம்மையே! வடிவுடை மாணிக்கமே! என்னை ஈன்று புரந்தருளும் தாயே. கருணைக் கடலே. திருவொற்றியூரில் இருக்கும் குமுத மலர் போன்ற வாய் படைத்த இளமான் போன்றவளே. நீயே என்னுடைய பிழைகளை பொறுக்காவிடில், ஏழை நான் எங்கு செல்வேன். [ எனக்கு வேறு புகல் ஏதுமில்லையே ]

28. முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.

மை தீட்டிய மலர் போலும் கண்களை உடையவளே, மான் விழியாளே, வடிவுடை அம்மையே !. அடியவர்கள் மூன்று வேளைகளிலும் வந்து வணங்கும், திருவொற்றியூர் ஈசன், எம் தலைவன். அவரது மனதுக்கு இனியவளே, அவரின் மகிழ்ச்சிக்கு ஆதாரமே! ஒப்பில்லா மலை மன்னன் பெற்ற பெண் அமுதே. இவ்வாறெல்லாம் நாள் முழுதும் உன்னைப் பாடிப் பரவ எனக்கு அருள் செய்யவேண்டும். அப்போது நான் எவ்விதத் துயரும் இன்றி வாழ்வேன்.

29. மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப்
பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம்
பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள்
மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

மேலுலகில் உள்ளவர்களில் உன்னை வணங்காதவர் யாருமில்லை. நடு உலகமாம், பூதலத்திலும் உன்னைப் போற்றாதவர் இல்லை. கீழுள்ள பாதாள உலகிலும் உன்னைப் பணியாதார் எவருமில்லை. இப் பூவுலகில் பெருமை மிகு திருவோற்றியுரின் தலைமகளே, வடிவுடை மாணிக்கமே. (நானும் உன் தாள் பணிகிறேன்)

மீதலம் : தேவலோகம்; பூதலம் – புவி. நம் உலகம்; பாதலம் – பாதாள லோகம். [ மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதருஞ் சேவடிக் கோமளமே – அபிராமி அந்தாதி ]

30. சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந்
நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின்
தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர்
வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.

[ பொறுத்தேடா – பொறுத்து + ஏடா ; தேய்க்குற்ற மாற்றும் – தேய் + குற்றம் + ஆற்றும் ]

திருவொற்றியூர் ஈசன், சந்திரன் செய்த பிழைகளை மன்னித்து, அவனது களங்கத்தை நீக்கி, பிறைமதியாகத் தனது முடி மீது சூடிக் கொண்டவர்.

பெற்ற தாயானவள் தன் மகவு செய்யும் தவறுகளை பொருட்படுத்தாமல், கண்ணா, இங்கே வா, நீ செய்தது தவறு என்று கூறி, அன்புடன் திருத்துவாள்.

அன்பர்களின் சொற்குற்றங்களை பொறுத்தருளும், மயிலனய வடிவுடை அரசியே, நீ என் குற்றங்களையும் மன்னித்து, எனக்கு நல்வாழ்வு அருள வேண்டும்.

( சந்திரன், தக்ஷனின் -27- பெண்களையும் மணந்து கொண்டான். ஆயினும் ரோகிணியிடம் மிக்க அன்புடன் இருந்தவன், மற்றவர்களை ஒதுக்கியதால், தக்ஷனால் ஒளி இழந்து போவாய் என்று சபிக்கப் பட்டான். தன் தவறுக்கு வருந்தி சிவனாரிடம் வேண்ட, அவர் அவனுக்கு ஒளி தேய்ந்தும், வளர்ந்தும் வரும் படியான வரம் தந்தார். அவனின் கீற்றினை தன் முடியிலும் அணிந்தார். )

31. செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர்
சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத்
துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை
மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
பொன்-அழகிய
நாண்-தாலி கயிறு
திரு-இலக்குமி
மிடறு-கழுத்து
துங்கம்-உயர்ச்சி,பெருமை

செந்தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனின் தேவியான கலைமகளின் மங்கல நாணும், திருமகள் முதலாய தேவ மங்கையர்கள் அணிந்துள்ள மங்கல நாண்களும், தலை குனிந்து வெட்கப் படும்படியாக, தியாகேசன் அணிவித்த மங்கல நாண் பூண்டவளே, வடிவுடை மாணிக்கமே.

32. சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க
ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க
வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த
வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
சேடு-பெருமை
ஆர்-நிறைந்த
இயல்-இயற்கை
செயல்-செயற்கை
ஏடு-இதழ்கள் உடைய மலர்கள்
பொழில-சோலை
அண்ணல்-பெருமையில் சிறந்தவர்
உவக்க-மகிழ
வீடா-நீங்காத
முகில்-மேகம்
பின்னிட்டு-தோற்று
வெருவ-அஞ்ச
குழல்-கூந்தல்

வடிவுடை அன்னையின் கருணையால், ஒற்றியூரில் ஞான மணம் எப்போதும் வீசுகிறது. அந்த ஞான மணத்தோடு, அன்னை அணிந்துள்ள மலர்களின் மணமும் சேர்ந்து கொள்கிறது. இவ்விரண்டு மணங்களும் கூடி இறையனாரின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. கருத்த வானமும், மழை மேகமும் இடைவெளி இல்லாது இருப்பதை விஞ்சும் வண்ணம், அன்னையின் மலர்க் கூந்தல், வாடா மலர்களால் அழகாக விளங்குகிறது.

[சேடு – இளமை, அழகு ; வீடா – இடைவெளி அற்ற]

33. புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
கரநோக்கி36 நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ
தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
புரம்-மூன்று கோட்டைகள்
தேக்கிய-மிகும்படி செய்த
களம்-கழுத்து
கரம்–விடம்

திருவொற்றியூர் பெம்மான், தனது ஒரு பார்வையாலேயே திரிபுரத்தையே எரித்து பொடியாக்கியவர். அவரது கழுத்து வரை இறங்கிய நஞ்சினை,உன் ஒரு கருணைப் பார்வையாலேயே அமுதமாக்கினவள் நீயன்றோ. உன்னைப் பணிவோர்களுக்கு, அவர்களது அறியாமையை நீக்கி, மெய்ஞ்ஞானம் அருளி, சிவ போகம் தரும் கருணை வடிவம் நீ. அத்தகைய கருணை விழிகள் உனதாகும். [அவ்விழிகளை எம்மீதும் செலுத்துவாய். நாங்களும் உய்வோம்]

34. உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில்
துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை
என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின்
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
உன்னும்-நினைக்கும்
உவப்ப-மகிழ
எழில்-அழகிய
துன்னும்-பொருந்திய
மன்னும்-நிலைத்து இருக்கின்ற

மயில் போன்ற வடிவுடை மாணிக்க அம்மை, அனைவரும் பணியும் திருவொற்றியூர் த்யாகேசனின் மனம் குளிர வேண்டி, அனைத்து உயிர்களும் தழைக்கச் செய்கிறாள். உயிர்களாகிய பயிர்கள் வளர்வதற்காக, தனது திருவருள் எனும் அமுத நீரினை, இடை விடாது பெய்து வருகிறாள். எம் உள்ளத்தில் வீற்றிருந்து தன் கடைக்கண்ணால் எம்மையும் பயிர் செய்வாள்.

35. வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
தெள்ளம்-தெளிவு
வள்ளம்–கிண்ணம்

ஒற்றியூர் அண்ணல், தன் சடை முடியில் தாங்கிய கங்கை நீரால் குளிர்ந்து உள்ளவர். அன்னை, தன் சிவந்த குமுத மலர் போன்ற அதரங்களினால் தரும் முத்தம் மூலம் அவரை மேலும் குளிர்விக்கிறாள். அவரை உடல் சிலிர்க்கவும், உள்ளம் பூரிக்கவும், இன்பக் கடலில் மூழ்கவும் செய்கிறாள்.

[அவளது கருணையால் நாமும் இன்ப வாழ்வு வாழ்வோம்]

36. மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்
றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும்
வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
மா-பெரிய,சிறந்த; நந்தம்-சங்கு; ஆர்-பொருந்திய ; காழி-சீர்காழி;
அணங்கு-அழகு; கா-சோலை; அன்று + ஆனந்த ; நந்த-பெருக;
எழில்–அழகிய

பசுஞ் சோலைகள் நிறைந்த திருவொற்றியூரில் வீற்றிற்றுக்கும் இறைவரது உள்ளம் களிக்கும் படியான, எழிலுடை இடையழகியே, இளமானே, வடிவுடை அம்பிகையே! பெரிய சங்குகள் மேய்கின்ற வயல்கள் நிறைந்த சீர்காழிப் பதியில், அந்தணர் குல மாமணியாய் தோன்றிய, திருஞான சம்பந்தருக்கு அந்நாளில், ஞானமாகிய உன் திரு முலைப் பாலை, அளித்தருளிய தெய்வம் நீ அன்றோ..

37. வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே
லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால்
யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே
மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு: வாரிசம்-தாமரை; இருநிதி-பெருஞ்செல்வம்; வாள்–ஒளி

நாடுவோர்க்கு, ஈடற்ற நிதியான, மானின் விழிகளையும், மயில்களின் சாயலையும் கொண்ட ஒற்றியூர் அம்பிகையே, வடிவுடை மாணிக்கமே!

உன்னை தேவர்கள் தேடுகிறார்கள். நான்கு வேதங்களும் தேடுகின்றன. முன்னொருநாள் திருமாலும். தாமரை வாசன் பிரம்மனும் தேடினர். மிகப் பெரிய தவ சீலர்கள் உன்னைத் தேடினர். என் பால் உனக்கு அன்பில்லை என்று எண்ணி, நானும் உன்னைத் தேடினேன். உன் அளப்பருங் கருணையால் அடியேனை ஆட்கொள்ள, நீ இங்கு எழுந்தருளி, என்னை நின்னுடன் இணைத்துக் கொண்டாய்.

38. முத்தேவர் விண்ணன் முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்
செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா
மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
விண்ணன்-தேவலோகத்தில் இருக்கும் இந்திரன் ; தாமம்-மாலை;
வாமம்–இடப்பாகம்

திருவொற்றிப் பதியில், மணமிகு மாலை அணிந்த, சிவபெருமானின், இடப் பாகம் அமர்ந்த, மயிலனையாளே, வடிவாம்பிகையே! நான்முகன், திருமால், உருத்திரன் முதலான முத்தேவரும், இந்திரன் முதலிய தேவர்களும், மற்றும் எண்ணிறந்த சித்தர்களும் முனிவர்களும் உன் சேவடி பணிந்து, பிறவா நிலை அடைந்தனர். உன் திருவடி நினையாதாரோ, மீண்டும் மீண்டும் பிறந்தும் மடிந்தும் துன்புறுகின்றனர்.

39. திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்தியநாள்
கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ்
மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
மரு-வாசனை: நாள்-புதிய; கருநாள்-ஆகாத நாட்கள்

திருவொற்றியூரில் வீற்றிருந்து அருள் பாலிக்கும், நறுமணம் கமழும் மலர்கள் அணிந்த கருங்கூந்தல் மானே, வடிவுடை அம்மையே! உன்னைப் பணியும் நாட்கள் நன்கு கழித்த நாட்கள் என்றும், உன்னை நினையாத நாட்கள் வீணான நாட்களே என்றும் வேதங்கள் கூறுகின்றன. அதனை உணர்ந்த உன் மெய் அடியார்கள் உன்னை எப்போதும் நினைத்து வாழ்கின்றனர்.

40. வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
வாணாள்-வாழ்நாள்; கண்ணுதல்-நெற்றிக்கண்ணுடைய சிவ பெருமான்.
மாண்-மாண்பு,சிறப்பு; ஆர்வம்-அன்பு; பூண்-நகை; போதம்-அறிவு;
புன்மை-சிறுமை,இழிவு

திருவொற்றியூர் நாயகன், நெற்றிக்கண் படைத்த, சிவபிரானின் மீது மிகுந்த காதல் கொண்ட, மயிலனைய வடிவுடை அம்மையே ! உன் திருநாமத்தை மறவாமல் எண்ணுபவர், பெரும் பாக்கியசாலிகள். அவர்களுக்கு நீண்ட வாழ்நாளும், வறுமை இல்லா வாழ்க்கையும், நல்ல மனைவியும் மக்களும் அமைவர். பொன்னோடு பொருளும், அணிகலன்களும், ஏவலர்களும், வீடு, மனை, புகழ், ஞானம், அனைத்தும் அவர்களுக்கு கிடைப்பது உறுதி. அவர் என்றும் கீழ்மை அடைய மாட்டார்.

40. வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
வார்-கச்சு; பூண்-ஆபரணம்.

தாயே ! வடிவுடை மாணிக்கமே, நீ அணிகலன்களால் விளங்கும் கச்சினால் கட்டப்பட்ட, மார்பகங்கள் மிளிர, மான் போல் நிற்கின்றாய். உன் மணாளன் ஒற்றியூர் அண்ணலை, தம் சீரிய அறிவினால் அவரது அடியார்கள் அறிகிறார்கள். நீயோ அந்த அறிவுக்கும் அப்பால் நிற்கின்றாய், ஆதலால் உன்னை யாரே அறிய முடியும். அவ்வாறு இருக்கும் போது நாயேன் நான் உன்னை அறிய முயற்சிப்பது நகைப்பிற்கு உரியதன்றோ! [ அன்னை அனுமதித்தால் மட்டுமே அவளை அறிய முடியும் என்பது கருத்து. ]

42. போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய்
வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர்
மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
வீற்று-தனி; ஏறு-இடபம்; இலங்கும்-விளங்கும்; மாற்று-பொன்

இடப வாகனமும் கொடியும் கொண்ட, திருவொற்றியூர் நாயகரின் இடப் பக்கத்தில் விளங்கும் மாற்றறியா பசும் பொன் நிகர்தவளே, வடிவுடை அழகியே ! நீ ஒப்பற்ற சிவஞான விளக்கு. மரகதம் போலும் பச்சை நிற மென் கரும்பு. உன்னை போற்றுபவர்களின் ஆயிரக் கணக்கான பிழைகளையும் பொருத்து அருள் செய்யக் கூடியவள். ( எமது குறைகளையும் மன்னித்து அருளவேண்டும்.)

43. ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள்
பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
மாசையுள் 38 ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
தேசு-பெருமை; மாசை-பொன்; ஆசை-திசை (ஆசை உள்ளார் – எட்டுத் திசையில் இருக்கும் அட்டதிக்குப் பாலகர்கள்); அயன்-பிரமன்;
மால்-திருமால்; ஆதி-முதல்வர்.

தமக்கென ஒளியையும் புகழையும் நாடாதவரும், திருவொற்றியூரில் இருப்பவருமான சிவபிரானின் இடப் பக்கம் அமர்ந்துள்ள பெண் மயிலே, வடிவுடை அரசியே, மன மாசு அற்ற, எந்த விதமான தவறுகளையும் செய்ய நினைக்காத தவ சீலர்களின் பூசனையையும், போற்றுதலையும் நீ ஏற்கிறாய்.

நான்முகன், திருமால் முதலிய கடவுளரும், மற்றைய தேவர்களும் உன் திருவடியையே பூசிக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் செய்ய வில்லையாயின் அவர்களால் உலகத்து மானுடர் அவர்களுக்குச் செய்யும் பூசனைகளை ஏற்றுக் கொள்ள இயலாதன்றோ. [ தேவியின் அருள் இன்றேல் அந்த மூவரும் தேவரும் சக்தி இல்லாதவர்கள் ஆகின்றனர். ]

44. அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில்
பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பதம்
கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர்
வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
அண்டார்-பகைவர்; பண்-சீர்மை,பெருமை; பத்தர்-பக்தர்;
கண்துதல்-நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான்; வண்-வளம்;
தார்-மாலை; ஐ-அழகு

திருவொற்றிப் பெருமான், முக்கண்ணனின் இடப்பக்கம் அமர்ந்த வேல் விழி மானே, வடிவுடை நாயகியே ! பகைவர்களை வென்று, உலகாண்டு, மெய்ஞ்ஞானம் பெற்று, வானில் விண்மீன்கள் சூழ விளங்கும் சந்திரனைப் போன்று விளங்குபவர்கள் எல்லாம், உன் திருவடியைத் தொழுது அருள் பெற்ற மெய்யன்பர்களை கண்டு அவர் தம் ஆசியைப் பெற்றவர்களே. [ அன்னையின் அடியார்களின் ஆசியே, வணங்குவார்களை வாழ்விக்கும் தன்மை உடையது ]

45. அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக்
கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால்
வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
அடிப்பொடி-திருவடித்துகள்; முகுந்தன்-திருமால்; சந்தம்-அழகு;
கடி-வாசனை; ஆர்-நிறைந்த; அயன்-பிரமன்; தென்-அழகிய;
செம்பால்-சரிபாதியான பகுதி; வடியா-துறையா

அழகுடை திருவொற்றியூர் அண்ணலின் சரி பாதியாய் உள்ள, வற்றாத அருட் கடலே, வடிவுடை மாணிக்கமே ! அடியார்கள் இடைவிடாது துதிக்கும் உன் திருவடி தூசியே (மண்ணே) அதனை தரிப்பவர்களுக்கு எல்லா நலன்களும் கொடுக்க வல்லது. அதனை அணிந்தே, திருமாலும் பிரம்மனும் மற்றைய தேவர்களும் முன் நாளில் பெருமை பெற்றனர் அன்றோ.

46. ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில்
ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ
காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
பொன்-அழகு; பாவாய்-பெண்ணே; காமர்-அழகிய;

வல்லி-வல்லிக்கொடி; ஒவாது-இடை விடாமல்; அயன்-பிரமன்;
உறழ்ந்து-பெருகி; பொறா-தாங்க முடியாத;

ஆற்றுங்கொலோ-பொறுக்குமோ; காவாய்-காத்தருள்வாய்.

இமயமலையில் பிறந்த பொற்பாவையே, வடிவுடை அம்பிகையே, அருள் வளம் மிகும் திருவொற்றியூர் உறையும் அழகிய கொடியே, நின்னை வாழ்த்தி வணங்குவோர்க்கு வாழ்வின் ஆதாரமாக விளங்குபவளே. நான்முகனும் நாரணனும் முதலான தேவர்கள் தொடர்ந்து உன் திருவடிகளில் வீழ்வதால், உன் பாதங்கள் நோகாதோ. அவை அனிச்ச மலரினும் மென்மை ஆனதன்றோ.!

47. இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும்
எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த
மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
மறை-வேதம்; சற்றம்-சற்றும்; போது-மலர்; ஆர்-பொருந்திய;
எம்மான்-என் தந்தை; மட்டு-தேன்; குழல்-கூந்தல்; மட-மென்மை

தாயே, நீ முடித்துக் கட்டப்பட்ட சடைமுடியார், ஒற்றியூர் அண்ணலின் மன அரியணையில் வீற்றிருப்பவள். தேன் மிகு மலர்களைச் சூடிய கருங்குழல் மான். அடியார்கள் ஓதும் மறைகளும், உபநிடதங்களும், ஆகமங்களும் விளங்க ஒட்டாத, அவற்றிக்கு அப்பால் நிலை கொண்டவளே. உன் பொன்னடியைத் தாங்க எளியேன் என் தலையால் இயலுமோ. யான் அறியேன். [ நீயே அறிவாய், இது உன் கருணையாலேயே முடியும் ]

48. வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார்
எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி
மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
மெய்-உடல், பரிமளியா-மணம் வீசிக்கொண்டு
மருவே-மணமுடைய தேவி

திருவொற்றியூர் பெருமான், எளியார்க்கெல்லாம் எளியவர். நீயோ நறுமணம் கமழும் அவரின் சரி பாதி. வடிவுடை மாணிக்கமே. பஞ்ச பூதங்களான, நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் அனைத்திலும் நீ உள்ளாய். மேலும் இவற்றிக்கு இடையே உள்ள வெற்றிடமும் நீ தான். எங்கும் நிறை சிவமாகவும், அதனில் கலந்த ஒளியாகவும், அந்த ஒளிக்குள் விளங்கும் அருள் ஒளியாகவும் நீயே விளங்குகிறாய். அனைத்தும் கடந்த “ பரை “ எனும் சக்தியான உனக்கு ஒப்பானவரும் இல்லை, மிக்காரும் இல்லை.

49. விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர்உன்
மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
விணம்-விண்ணுலகத்து வாழ்வு; புலம்-ஊடல்; பிரான்-இறைவன்;
வானன்-வாழ்பவனை; மெய்-உடம்பு; பரிமளம்-நறுமணம்;
கூறு-ஒரு பகுதி

வடிவுடை அன்னையே, ஒற்றியூர் அண்ணல் உன் அளப்பரிய ஞான மணத்தை விரும்பியே தனது உடலில் ஒரு பாகம் தந்தான். மேலும் , விண்ணக வாழ்வை ( மோக்ஷம் விழைவோர் ) விரும்புவோர், அதனை அடையவேண்டி நின்னிடம் உண்மை அன்பு செலுத்துபவர். அவர்களுக்கு அருளுவதற்காகவே அண்ணல் உன்னை விரும்பினார் என்பதே உண்மை. இல்லாவிடில் எவர்க்கும் தலை வணங்கா ஈசன், இவ்வாறு செய்ய வாய்ப்பே இல்லை.

50. பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும்உன்னை
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
பன்னும்-பலமுறை சொல்லுகின்ற; துன்னும்-நெருங்கி இருக்கும்;
சரம்-அசையும் பொருள்கள்; அசரம்-அசையாப் பொருள்கள்;
மன்னும்-நிலைபெற்ற.

வடிவுடை மாணிக்கமே ! எவ்வுயிர்க்கும் பொருந்திய சுக ஆனந்தம் அளிப்பவளே. வேதங்களும் புராணங்களும் காட்டும் பல்வேறு அண்டங்களும் அந்தப் பரப்புகளில் உரையும் உயிரினங்கள் அனைத்தையும் நீயே ஈன்று புரந்தருள்கிறாய். இதனை நன்கு அறிந்தும் உன்னை இளமை கெடாத கன்னி என்று பேரறிவாளர்களும் ஞானிகளும் சொல்கின்றனர். இதன் காரணம் தான் என்ன. நீயே விளக்கிடுவாய்.

[அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே …………….. மலை ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலைவளர் காதலிப் பெண் உமையே. – தாயுமானவர்,]

51. சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
மற்றை-பிற

அக மற்றும் புறப் பற்றுகளை கடந்த பெரியோர்கள் தினம் தினம் பணியும் ஒற்றியூர் அண்ணலின் இடப் பாகம் அமர்ந்த பொன்னே, வடிவுடை அன்னையே ! அமுதம் போன்றவளே. கானும் கடலும் கடந்த திருமால் புகழும் மானே. நீ சினம் என்னும் குற்றம் கடந்த தூயவரின் நெஞ்சங்களில் செழித்து நிற்கிறாய். மேலும் அவர்கள் தங்களது ஐம்பொறிகளைக் கடந்து, மனங்கள் அடங்கி, பேசுவதும் நின்ற நிலையில், மறைபொருளாம் நீ நிற்கின்றாய்.

52. வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல்
எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல்
இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய்
மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
புல்-கீழ்; மல்-வளம்; ஆர்-பொருந்திய.

உனது அருளன்றி, எவர் எத்தன்மை உடையவரானாலும், எதுவும் செய்ய வல்லார் இல்லை. அவர் பலம் உள்ளவராக இருப்பினும், எளியவர் ஆக இருப்பினும், சாமானிய மனிதர் என்றாலும், அனைவருக்கும் நீயே செயல் ஆற்றலாக விளங்குகிறாய். அவ்வாறு இருக்க, பேதை நான் வறுமையின் காரணமாக செய்யும் குற்றங்களுக்கு எவ்வாறு பொறுப்பாவேன்? வளம் நிறை வயல்கள் நிறைந்த ஒற்றியூர் எழுந்தருளும் அம்பிகையே. வடிவுடை அன்னையே. [ கூர்ந்து நோக்கின் என் செயல்களும் உன்னுடையவை அல்லவா ]

53. எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே
தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே
செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே
வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
சித்-உண்மை; வார்-நீண்ட; மான்-தலைவன்

அன்னை வடிவுடை நாயகியே ! நீ தூரிகைகளால் வடிக்காத, அழகிய உயிரோவியம். இனிய இசையினது பயன். நின்னை வணங்கி பாடியும் ஆடியும் மகிழும் இதயங்களில் நிலவும் பேரானந்தம். அறிவின் உருவான பெருங்கடல். மாறாத தருமங்கள் உரைக்கும் வேதங்களின் மெய்ப்பொருள். மணமிக்க மலர்ச் சோலைகள் சூழ், திருஒற்றியூர் அண்ணலின் வாழ்க்கைத் துணைவி.

54. தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்
தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த
இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம்
மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
தெருள்-தெளிவு; உறும்-பொருந்தப் பெற்ற; தனம்-மார்பு,செல்வம்;
இரும்-பெரிய; எந்தை-என் தந்தை

அருட் பசியோடு உன்னை நோக்கும், ஐங்கரனாம் வினாயகருக்கும், என்றும் இளமை நீங்கா நின் இளைய மகன் குமரனுக்கும், ஞானப் பால் கொடுத்த, பெருமை மிகு மார்பகங்களை உடையவளே. என்னுடைய இருண்ட அறியாமை நிறைந்த மனத்துள் ஏற்றப்பட்ட ஞான விளக்கே. எம் தந்தையாம் திரு ஒற்றியூர் சிவபிரானின் மனத்துக்கு இதம் தருமாறு நடை பழகும் மயிலே. வடிவுடை அம்பிகையே, நின் தாள் பணிகிறேன். (பசியோடு அன்னையைத் தேடிய ஞான சம்பந்தப் பெருமானை குறிப்பதாகவும் பொருள் கொள்ளப் படுகிறது.)

55. அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க்
கயிலேந்39 தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த
மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
அயில்-வேல்; ஐயர்-பெரியவர்; குயின்-மேகம்; குழல்-கூந்தல்;
பிடி-பெண் யானை; கோன்-அரசன்; பயந்த-பெற்ற.

வேலைக் கையில் ஏந்தும் முருகப் பெருமானின் அன்னையே. ஒற்றியூர் சிவ பெருமான் தன் மலர்க் கைகளில் ஏந்தும் விலை மதிப்பற்ற முத்தே. இசையில் பழுத்த குயிலின் தன்மையளே. மேகம் போன்ற கூந்தல் உடைய பெண் மானே. இமயவான் பெற்ற கோமளமே. சந்திர முகத்தாளே. வடிவுடை அன்னையே. உன்னை வணங்குகிறேன்.

{ குறிப்பு: பிடி என்பதற்கு, பொதுவாக பெண் யானை என்றே பொருள் கொள்ளப் படுகிறது. தமிழ் அகராதியில் பிடி என்பதற்கு, ஒட்டகம், கவரி, யானை இவற்றின் பெண்ணினம் என்றும் சொல்லப் பட்டுள்ளது. குயின் என்பது மேகம் என்று பொருள் படும். எனவே, மேகம் போன்ற கூந்தல் உள்ள மான் என்பதே பொருத்தம் என்று நினைக்கிறேன்.]

56. செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான்
மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர்
கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
செய்–வயல்

செழிப்பான வயல்கள் சூழ்ந்த திருவொற்றியூர். அங்கு அருளாட்சி செய்யும் சிவபிரான். அவர் உடலின் இடப்பாகம் கொண்ட அன்பு மனைவி. வடிவுடை அம்மையே ! நீ உன்னிடம் பக்தி பூண்டோரின் கைகளில் உள்ள சுவை மிகு கனி. ஈடில்லாத மெய் இன்பம் அடைய உள்ள ஒரே உண்மை வழி. வையகத்து மாந்தர்களை வருத்தும் நோய்களுக்கு சரியான மருந்து. உன்னை வணங்குகிறேன்.

57. தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங்
கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே
இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே
வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
இரும்-பெரிய

சிவபெருமான் திருவொற்றியூரில் விளங்கி அருளாட்சி செய்கிறார். அவரின் இடப் பக்கம் அமர்ந்த வடிவுடை அம்மனே ! உன் மாண்பை என் சொல்வது. நீயோ பசுமையான கரும்பைப் போலும், சுவை மிகு கற்கண்டைப் போலும், நன்கு கனிந்த பழங்களின் ரசத்தைப் போலும் இனிமையே உருவானவள். இரும்பு போன்ற கல் நெஞ்சை உடையவர்களை அருகே சேர ஒட்டாத இளங்கிளி. உன் பாதம் பணிகிறேன்.

58. சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம்
பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி
மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார்
மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
ஏர்-அழகு; பனுவல்-நூல்; வித்தகனார்-பேரறிஞர்; மால்-மயக்கம்

வடிவுடை அன்னையே. சேல் மீன் போன்ற கண்கள் உடையவளே. அருள் மழை பொழியும் தேனே. அடியவரின் உள்ளம் ஆனந்தமுரும் சுவை மிகு பாலே. இனிய வெல்லப் பாகே. உயர்ந்த வேதங்களின் உச்சியில் விளங்கும் ஒளி விளக்கே. தன்னை பணிவோர்களுக்கு தவறாது அருள் செய்யும் ஒற்றியூர் ஈசனையும் மயக்கும் மான் போன்றவளே. எனக்கு அருள் புரிய வேண்டும்.

59. எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச்
செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
கதலி-வாழை; வம்பு-கச்சு; முல்லை-முலை;வெம்-கொடிய;
செம்-வளமை; மேவா-பொருந்தாத; பைம்-பசுமை,புதிய

அடியவர்களான எங்கள் மீது கொண்ட கருணையால், ஈசன் எங்களை உய்விக்க திருவொற்றியூரில் கோயில் கொண்டார். அவரின் சிறந்த இடப் பாதியில் கலந்து நீ விளங்குகிறாய். வடிவுடை அம்பிகையே. நீ தேன் போல் இனிமையானவள். நன்கு கனிந்த வாழைப் பழம் போல் இனிப்பவள். கொடிய பாலைவனம் போல் அன்பினை அறியாத நெஞ்சங்களில், நின் மலரடிகளை என்றும் வைக்காதவள். கச்சை அணிந்த அழகிய மார்பகங்களை உடையவள். எம்மை காப்பாயாக.

60. ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
ஏமம்-இன்பம்; உய்ப்போர்-அனுபவிப்பவர்;
சேமவைப்பு-சேமித்து வைக்கப்பட்ட பொருள்; தாமம்-மாலை;
கார்-மேகம்; பிடி-பெண் யானை; வாமம்-அழகிய; திரவியம்-செல்வம்

அழகிய சீர் மிகு திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள பெண்மானே, வடிவுடை அன்னையே. நீ, பிற்காலத்தே ஏற்படக் கூடிய வறுமை நிலையை, செல்வம் குறை நிலையினை எதிர்பார்த்து, இன்று தேடி வைக்கும், சேம நிதி போன்றவள். மெய்யன்பர் தேடும் ஞானமாம் பெருஞ் செல்வம். கார் கால நறுமலர்கள் கொண்டு கட்டிய மலர் மாலையினைச் சூடிய கூந்தலை உடையவள். மான் போன்ற அழகு நடையினள். (இங்கும் பிடி என்பதற்கு பெண் மான் என்றே பொருள் கொண்டு இருக்கிறேன்)

61. மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ
அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம்
முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
மன்-நிலையான; ஏர்-அழகிய; மனை-மனைவி; திரு-சிறந்த
முன்னும்-நினைக்கும்; வல்-சொக்கட்டான்காய்; நேர்-ஒப்பான

வனப்பான இளம் மார்பகங்களைக் கொண்ட, மின்னல் கொடி போன்ற வடிவுடை அழகியே. ஒற்றியூர் அரசியே. மன்னர்களிற் சிறந்த மலைஅரசனும். மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சன மாலையும், உன் திரு வாயால் “தந்தையே” “அன்னையே” என அழைக்கப் பட என்ன தவம் செய்தனரோ. யான் அறியேன்.

62. கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே
குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன்
பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ
மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
பணம்-பாம்பு படம்

படம் எடுத்த பாம்பினை மாலையாய் அணிந்துள்ள சிவபிரான் இடப் பாகம் அமர்ந்த, தெய்வ மணம் கமழும் பச்சை நிறக்கொடியே. வடிவுடை அம்மையே. நான் கவலை என்னும் கடலில் மூழ்கி வருந்துகிறேன். ஒரு கணமேனும் அமைதியை அறியாதவன். நினது உள்ளக் குறிப்பு யாது என்று அறிய மாட்டாதவன். என்ன செய்வது என்று அறியாமல் விழிக்கிறேன்.. நீ தான் அருள வேண்டும்.

63. கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக்
குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும்அந்தத்
திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத் தந்த
மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
மரு-வாசனை; மருவு-பொருந்திய

நறுமணம் பொருந்திய மலரே. திருமகளுக்கு வரம் தந்து பணி செய்ய வைத்த பெருநிதியே. அருள் மனமே. வடிவுடை அ,ம்பிகையே. என் பிறவி வினை நோய் தீரும் வண்ணம், உன் கணவனும் என் மனத்து அமர்ந்த குருநாதனும் ஆன த்யாகேசனுடன் இனிதே அமர்ந்து இருக்கும் காட்சியைத் தந்தருள்வாய். எம் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அருள் தர வேண்டும்.

64. எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்
பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால்
மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
எழில்-அழகு; போது-மலர்; மண்ணிய-மாண்புடன் விளங்கும்;
பரிமளம்-நறுமணம்.

எழில் ஒற்றியூர் பூரணர் சிவபிரானின் அருகே, பசிய நிற பூரணி நீ அழகாக வீற்றிருக்கிறாய். புண்ணியம் நிறைந்த, வெளியிலும் உள்ளேயும் சிறந்த வண்ணமும் மணமும் கொண்ட மல்லிகை மலர்க் கொத்து போன்றவளே. வடிவுடை அம்பிகையே. யான் வேண்டியன யாவற்றையும், விரும்பும் அனைத்தையும், பெறும் படி எனக்கு அருள் புரிய திருவுள்ளம் கொள்வாயாக.

65. தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று
வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன்
ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ
மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
மாது-அழகு; குழல்-கூந்தல்; மதி-அறிவு.

திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள பூமாதே. மலர்களால் அலங்கரிக்கப் பட்ட நீண்ட கூந்தல் அழகியே, வடிவுடை அரசியே. நான் எக்குற்றம் செய்யினும் அதனைப் பொறுப்பது உன் கடன் ஆகும். தீயவை செய்தாலும், உன் அடியவர்கள் முன் போய், திமிரோடு சண்டையிட்டு நின்றாலும், உன்னை மறந்து விட்டாலும், அவை அனைத்துக்கும் என் அறியாமை தான் காரணம் என்பதை நீ மறக்கக் கூடாது. தெரியாமல் செய்த குற்றங்களை மன்னிப்பதே உன் தகைமை அன்றோ ! (சேய் குற்றம் பொறுக்காத தாய் உண்டோ)

66. மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
நீர்மை-தன்மை; மன்-அரசன்

நின் கணவன் ஒற்றியூர் இறைவன் சிவபிரானோ, அமுதம் நிகர்த்தவர். நீயோ, மெய்ஞ்ஞானம் அடைந்த அன்பர்களால் துதிக்கப் படும் பரா சக்தி. உங்கள் இருவர் சந்நிதியிலும், எளியேன் நான் உங்கள் அருளை வேண்டி நிற்கிறேன். ஆயினும் நீ சற்றும் இரங்காதது கண்டு வருந்தி வாடுகிறேன். இது உனக்குத் தகுமா? இது முறையா? விரைந்து அருள் புரிவாய் வடிவுடை மாணிக்கமே. ( உன்னையன்றி யார் துணை?)

67. என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

மண்ணுலகில் பெருமை பெற்ற திருவொற்றியூரில் வாழும் வடிவுடை மாணிக்க அன்னையே. இப் பூமியில் என்னைப் போல் இழி குணம் கொண்டவர் எவரும் இல்லை. என்றும், எப்போதும், எவ்வுலகிலும் உன்னைப் போல் எளியோர்க்கு அருள்பவரும் இல்லை. அத்தகு கருணை வடிவமான அன்னையே, இந்தக் கடையேனுக்கும் உன் திருவருள் எனும் பொன் தருக. உன் அருளை யாசிக்கிறேன்.

68. துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க்
கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
போத-ஞான

அழகிய திருவொற்றியூர் வாழும் எம் தந்தை சிவபிரானின் உயிரே. அவரின் அன்பினுக்கு இனியாளே. வடிவுடை மாணிக்கமே. உண்மைச் சிவநேசர்களின் அறிவாக இருப்பவளே.. சிவ பக்தி இல்லாதவரிடம் சற்றும் நெருங்காதவளே. உண்மை ஞானத்தின் முழு உருவே. துன்பமே நிறைந்த என் நெஞ்சில் எழுந்து அருளி, என்னை கடைத் தேற்றுவது எந்நாளோ. சீக்கிரமே அருள்வாய்.

69. சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின்
பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய்
சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம்
மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே.

சொல்லும் பொருளும் நன்கு அறிந்த புலவர் பெருமக்கள் போற்றும் திருவொற்றியூர் எம்பிரானின் திண் தோள்களைத் தழுவி நிற்கும் வடிவுடை அழகியே. என் மனது எல்லையற்ற துன்பக்கடலில் வீழ்ந்து வருந்துகின்றது. அதினின்று ஒரு சிறு பொழுதேனும் விலக்கு அளிக்கும் வண்ணம், உன் மலர்த் தாள்களைத் துதிக்கும் வரம் தர வேண்டுகிறேன். நீ கருணையோடு உன் திரு உள்ளம் இரங்க வேண்டும். தாயே உன்னை வேண்டுகிறேன்.

70. சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ
நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால்
வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
சந்தோடம்-மகிழ்ச்சி; தோடம்-குற்றம்; நந்து-கெட்ட; திரு-அழகிய;
நான்முகன்-பிரமன்; மால்-திருமால்; தமியேன்-தனியேன்.

“எங்களின் குற்றங்களை நீக்கி அருளிய மங்கையே” என்று, திருமாலும் பிரம்மனும் பரவும் ஒற்றியூரில் அருளும் மயில் அனைய அன்னையே ! என்னைச் சுற்றிலும் அனைவரும் மகிழ்ச்சியோடு இனிதே இருக்கின்றனர். நான் மட்டும் வாடி வருந்துகிறேன். இது நியாயமா ? உனது மாண்புக்கு இது தகுதி அல்லவே. உடனே அருள் செய்து என் துயர் தீர்ப்பாய்.

71. அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச்
செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக்
கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே
வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
மிசை-மேல்; மறை-வேதம்; கோமளம்-இளமை; வடி-கூர்மை;
ஏர்-அழகு; அயில்-வேல்; செடி-தீமை; சீர்-பெருமை; ஏதம்-குற்றம்.

கூரிய வேல் போன்ற கண்ணினாய். வடிவுடை அழகியே ! ஞான ஒளி பொருந்திய, தெய்வ வேதங்களின் உருவமான மென்கொடியே. பசுமையான கொம்பே. திருவொற்றியூரில் வீற்றிருக்கும் கோமளமே. அடியேனிடம் எந்தக் குறை இருப்பினும், அதனை பொருட் படுத்தாது, மன்னித்து, எனது அனைத்துத் துன்பங்களையும் விலக்கி நல்லருள் செய்ய மனம் கொள்ள வேண்டும். நீயே புகல்.

72. கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே
எண்ணப் படாஎழில் ஓவிய மேஎமை ஏன்றுகொண்ட
வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
ஏத்து-போற்றி; மங்கலம்-திருமணம்; நண்-பொலிவு பொருந்தும்;
அப்பர்-தந்தை; பரம்-மேலான; நறவு-தேன்; எழில்-அழகு;
ஏன்று-ஏற்று.

வடிவுடை அம்பிகையே ! நீ திருவொற்றியூரில் எழுந்தருளி, உன்னை வணங்குவோர்க் கெல்லாம் அனைத்து நலமும் தருகின்றாய். கண்ணப்ப நாயனார் வணங்கிய காளத்தி நாதர் அணிவித்த மங்கல நாணை அணிந்து, மங்கள வடிவாக காட்சி அளிக்கிறாய். நீ சிவானந்தமான இனிய தேன், தனித் தன்மை பொருந்திய அழகு ஓவியம். எங்களை அன்புடன் ஏற்று அருளும் பசும் பொன் வடிவம். எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.

73. கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த
பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே
சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே
மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
விகற்பம்-மன வேறுபாடு; பொற்பு-பொலிவு; போதம்-ஞானம்;
சுயஞ்சுடர்-இயற்கை ஒளி; மல்-பெருமை; கடியும்-ஒழிக்கும்.

வளம் நிறைந்த திருவொற்றியூரில் விளங்கும் வடிவுடை அன்னையே ! நிறை கற்பின் வடிவமே ! குற்றங்கள் ஏதும் இல்லா தனிப் பொருளே ! எம் கண்களும் உள்ளமும் நிறைக்கும் அழகே ! உண்மை ஞானத்தினால் விளையும் இன்பமே. ஞானிகளின் மனத்தில் விளங்கும் அறிவொளியே. தொண்டர்களின் தவப் பயனே. எல்லை இல்லா பெரும் ஞானச் சுடரே. பணிகிறேன். எமக்கு அருள் செய்க.

74. மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள்
தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற
மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.

வடிவுடை அம்பிகையே ! என் அருமை அன்னையே ! திருவொற்றியூரில் அமர்ந்து, அனைத்து உயிர்களையும் தான் பெற்ற குழந்தைகளாகக் கருதி, அவற்றைக் கண் போல் பாது காப்பவளே. அகில சராசரங்களில் உள்ள உயிர்களுக்கு இன்ப வாழ்வு தருபவளே. என்னை மட்டும் துன்பக் கடலில் மூழ்கி வருந்த விடுவது, அருள் வடிவான உனக்குத் தகுதி அல்லவே? என்னை கரை ஏற்றுவாய்.

75. வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப்
பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண
பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய்
வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.

நீயே, நான்கு வேதங்கள். நீயே சிவபிரானின் திருவருள். நீயே ஐம் பூதங்கள். நீயே அனைத்து பொருள்களும் ஆனவள். எல்லாப் புலன்களும் நீயே. அனைத்து உயிர்களும் நீயே. இவ்வாறு எங்கும் எதிலும் விளங்கும் உன்னை, அற்பன் நான் என்னுடைய வாதங்களாலும் கேள்விகளாலும் எவ்வாறு அறிய முடியும். ஒற்றியூர் மேவும், வடிவுடை அன்னையே நீயே சொல்.

76. மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே
கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால்
வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே.

திருவொற்றி நகரைக் காவல் செய்து அருளும் சிவபிரானுடைய இடப் பாகம் உறையும் இளம் மான் போன்ற அம்பிகையே ! அறிவு வடிவானவளே. சந்திரன் போன்ற முகம் படைத்தவளே. அன்பர் மனத்தே பொருந்தி அமர்ந்த ஞானச் செல்வமே. அருளின் பூரணமே. சிவானந்தம் என்னும் நீண்ட அனுபவமே. அனைத்து உயிர்களுக்கும் முடிந்த முடிவாய் உள்ள ஈஸ்வரியே. சிவகதிக்கு வழி காட்டும் ஞானக் கண்ணே. பணிகிறேன். அருள்வாய்.

77. ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே
கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன்
தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ்
மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.

திரு ஒற்றி நாதர் உள்ளம் மகிழ அருள் மழை பொழியும் அன்னையே ! உன் திருவருளைப் பெறுவது உண்மை ஞானம் இல்லாத சிறியோர்க்கு அரிது என்பது அறிஞர் வாக்கு. சிறியேன் எனக்கோ, “ நீ அஞ்சாதே, நான் இருக்கிறேன் “ என்று நீ இதுவரை சொல்லாததே பெருங்குறை. பெரிய வருத்தம். உன் திரு உள்ளம் நான் அறிய மாட்டேன். உன் எண்ணம் எதுவோ. என்னைக் காப்பாய்.

78. எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
உயங்கும்-வாடும்

வடிவுடை மாணிக்க அம்மையே ! வளம் பொருந்திய திரு ஒற்றியூருக்கு நலம் சேர்க்கும் நாயகியே. சொற்சுவை நிறைந்த வேதங்கள் வடிவான மலர்க் கொம்பே. உண்மை ஞானத்தின் ஒளி மிகு சுடரே. என் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதே. நீ அறியாயோ? ஒரு ஆதரவும் இன்றி நான் வருந்துவதைக் கண்டும், என் பால் கருணை கொள்ளாதது ஏன்? நான் என்ன செய்தல் வேண்டும். நீயே வழி சொல்வாய்.

79. செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக்
கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண்
தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
தெவ்-பகைவர்
வேலை-கடல்
வவ்-கவரும்
ஏலம்-வாசனை கலந்த மயிர்ச் சாந்து
வார்-நீண்ட
குழல்-கூந்தல்

பகைவர்கள் கூட்டம் எனும் கடலினை வற்றச் செய்யும் சக்தி படைத்த வேலினை, உன் மகன் முருகனுக்கு அளித்து, ஒற்றியூர் நாதன் சிவபிரானின் மனம் கவர்ந்த வடிவுடை அன்னையே ! மணம் கூட்டப் பெற்ற தைலம் தடவிய, அழகு படுத்தப் பெற்ற நீண்ட கூந்தல் அழகியே. சிவந்த வேலைப் பழிக்கும் மின்னல் போன்ற ஒளிவீசும் கண்களை உடையவளே. நீ மனம் கனிந்து ஏது பணி தந்தாலும், அதனை நன்கு செய்து முடிப்பேன் என்னை ஆட்கொள்வாய்.

80. தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.

எம் திருஒற்றிப் பதியில் வாழ் மயிலனைய அம்மையே. வடிவுடை மாணிக்கமே. உலகில் அன்புக்கு இருப்பிடமே தாய் தான் என்பர். அவ்வாறு இருக்க, உன் மகனான நான் படும் துன்பம் களைய நீ ஏனோ திரு உள்ளம் கொள்ளவில்லை. நாயேன் இதுவரையில் செய்த குற்றங்களை மன்னித்தும், இனி தவறு ஏதும் செய்யாத படியும் , எனக்கு வரம் அருள்வாய். உன்னை அன்றி இதனை யாரும் செய்தல் ஆகாது.

81. நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ
தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர்
தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே
வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
வாணர்-வாழ்பவர்
மல்-வளமை
ஆர்-பொருந்திய

வடிவுடை அன்னையே ! இன்சுவை தேனே. வேதங்களின் உண்மைப் பொருளே. சிவகதிக்கு நல் வழி காட்டும் தேவியே. வானளாவிய சோலைகள் சூழ்ந்த ஒற்றியூரில் அமர்ந்து அருள் புரியும் மானே. நான் செய்த குற்றங்களை ஆராய்ந்து என்னை நீ கைவிட்டு விட்டால், எனக்கு வேறு யாரும் புகல் இல்லை. ஆதரிப்பார் யாரும் இல்லை. எனக்கு நீயே கதி. ( எம் குற்றம் பொறுத்து அருள் செய்வாய் )

82. கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர்
நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ
வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு
மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
வாண்-ஒளி
வார்-நீண்ட
கந்தரம்-கரிய மேகம்
பூவை-நாகணவாய்ப் பறவை
அந்தரம்-அளவு
மந்தரம்-மந்தர மலை

வல்லவர் எல்லாரையும் விட வல்லவர் திருவொற்றி நாதர். வளமை மிக்க அந்நகரில் வாழும் ஈஸ்வரியே. வடிவுடை அன்னையே. கல்வி அறிவில்லாதவர்களிடம் சென்று என் வறுமையைக் கூறி நிற்காத நிலை எனக்கு வேண்டும். “அந்த நல்ல நிலைமையை எனக்குத் தர உனக்கு வல்லமை உண்டு,” என்று நான் கூறினால் தான் எனக்கு அருள்வாயோ? நான் கேட்காமலேயே நீ அவ்வரம் தந்து அருள் புரிய வேண்டும்.

83. சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய்
கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய்
அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
பத்தர்-பக்தர்
மேவும்-வாழ்கின்ற
திரு-சிறந்த,அழகிய
பரம்-மேலான
பரை-பரதேவதையே
சித்-அறிவு
எற்கு-எனக்கு
நின்மலர்-தூயவர்
உன் மத்தர்-பித்தர்
வாமம்-இடப்பக்கம்

அழகிய முகமும், மயிலின் சாயலும் உடைய மங்கையே. வேதங்கள் கூறும் பசும் கிளி போன்றவளே. மழை மேகம் போன்ற கூந்தல் அழகியே. கடைக்கண் பார்வையால் காப்பவளே. சீர் மெல்லிடையாளே. மலைகள் போன்ற மார்பகங்கள் கொண்டவளே. திருவொற்றியூர் அண்ணலின் மகிழ்விற்கு காரணமான தேவியே. (உன் பாதம் பணிகிறேன்.)

84. பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
குழல்-கூந்தல்
அயன்-பிரமன்
கா-சோலை
மா-திருமகள்

அன்பர்களின் இதயக் கோவிலில் இருந்து அருளும் பரா சக்தியே. பராபரையே. சுத்த மெய்ஞ் ஞான ஒளி விளக்கே. சித்ததில் நிலை பெரும் பேரானந்தமே. திரு ஒற்றியூர் நாதர்; நிர்மலமானவர்; கையில் கபாலம் தாங்கும் உன்மத்தர். அச் சிவனாரின் இடப் பாகம் அமர்ந்த பொன்னே. வடிவுடை அன்னையே. எப்போதும் என் மனம் உன்னிடம் இருக்குமாறும், உன் புகழையே என் நாவு துதிக்குமாறும் அருள் தருவாய்.( **எமக்கருள்வாய் என்று இருக்கலாமோ – என்னிடம் உள்ள பதிவில் “எற்” என்றே உள்ளது. சரியாகப் படவில்லை.)

85. பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப்
பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்
காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர்
மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
ஆர்-பொருந்திய
புல்லர்-அற்பர்
மாதாகம்-பெருவிருப்பம்
வைகும் கொலோ-தங்குமோ

அழகிய திருவொற்றியூரில் வாழும் அன்னையே, வடிவுடை அம்பிகையே. நறு மலர்கள் அணிந்த கூந்தல் அழகியே. உண்மை அடியார்கள் இயற்றும் தமிழ்ப் பாடல்களின் அடி நாதமே. இனிய தேன் போன்ற மொழியாளே. “என்னைக் காப்பாற்று” என்று, பிரமனும், இந்திரனும், நாரணனும் தொழும் மலரடியாளே. எம்மையும் காத்து அருள்வாய்.

86. தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
குளம்-நெற்றி
கோமான்-தலைவன்
உற-பொருந்த
களம்-குற்றம்
கடையவன்-கீழ் மக்கள்

வாத நடனம் செய்யும் திருவொற்றி ஈசரின் இடப் பாகம் அமர்ந்து அருளும் அம்பிகையே, வடிவுடை அன்னையே. அழகிய செவிகளையும் நீண்ட கண்களையும் கொண்ட நீ கரும்பினைப் போல் இனிப்பவள் சற்றேனும் ஈகை குணம் இல்லாதவரிடம் சென்று, “ எனக்கு உணவும் உடையும் தருவாய் ” என்று பேராசையுடன் கை ஏந்துபவர்கள் மனதில் உன் திருவடி ஒரு கணமேனும் நிற்குமோ? நிற்காது. ( உன் அன்பர்கள் மனத்தில் மட்டுமே நீ பொருந்துவாய்).

87. களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன்
உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
ஆரணம்-வேதம்
கோமளம்-இளமை
அந்தரி-அந்தரலோகத்தில் இருப்பவள்
எழில்-அழகிய
சத்-உண்மை
சிவை-சிவன் என்பதின் பெண்பால்
பார்ப்பதி-பார்வதி
வாரணம்-யானை
தனம்-மார்பு

வளமை நிறைந்த திருவொற்றியூரில் இமையாத நெற்றிக் கண்ணுடைய சிவபிரான் தொண்டர்கள் புடை சூழ எழுந்து அருளுகிறார். அவருடன் பாகம் பிரியாளாக காட்சி அளிக்கும் வடிவாம்பிகையே. குற்றம் நிறைந்த அடியேனை ஆண்டருள இன்னும் உன் சித்தம் இரங்கவில்லை. நான் துன்பக் கடலில் விழுந்து அலைகிறேன். உன் கடைக்கண் பார்வை பெற நான் என்ன செய்யவேண்டும் கூறுவாய்.

88. ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந்
தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற்
காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும்
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
திரு-திருமகள்
வல்லி-வல்லிக்கொடி
ஏத்தும்-போற்றும்
அபிடேக-அபிஷேக
சென்னி-தலை
ஒண்-ஒளி
கருணாம்பகம்-கருணை பொழியும் கண்கள்
மரு-மணம்
மறை-வேதம்

தாயே, நீ வேதங்கள் மலர்களாக பூத்துள்ள பூங்கொடி. வானுகிலும் நிலை பெற்றவள். மலர் மாலைகளாலும், மரம் செடி கொடிகளாலும் அலங்கரிக்கப் பட்ட தோரண வாயிலை உடைய ஒற்றியூர் வாழ் சிவத்தின் மகிழ்ச்சிக்கு ஆதாரமான சிவகாமி நீ. நீயே பார்வதி. எங்கள் அன்பிற்குரிய, (கௌரி எனும்) யானையின் மத்தகங்கள் போன்ற மார்பகங்களை உடைய நின் பாதம் பணிகின்றேன்.

89. திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை
வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎம்
கருவல்லி நீக்கும் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி
மருவல்லி என்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
ஒண்-ஒளி
உவக்கும்-மகிழும்
ஏர்-அழகு
அன்ன-போன்ற
நாயகமே-தலைவியே
மடை-மதகு
மன்னு-நிறைந்து

வடிவுடை மாணிக்கமே ! நீ திருமகள் மகிழ்வுடன் துதிக்கும் அபிஷேகவல்லி. அன்பர்கள் தலை மீது, அருள் கூர்ந்து, வந்து அமர்ந்து, ஞான மணம் தரும் கற்பகம். மிகுந்த ஒளியுடை மரகதக் கல். எங்கள் பிறவியாம் கொடியை அறுத்து எங்களை உய்விக்கும் அருட் கொடியும் நீயே. உன்னை வணங்குகிறேன்.

90. உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள
நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே
மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
அப்புறம்-அப்பால்
மல்-வளமை
கஞ்சமலர்-தாமரை மலர்

மடை வழி ஓடும் நீர் வளம் நிறை திருவொற்றியூரில் வாழ்பவர்க்கு அனைத்து வளமும் நல்கும் வடிவாம்பிகையே. புலித் தோலைத் தன் உடையாகக் கொண்ட ஈசரின் மனம் கவர் அன்ன நடை அழகியே. திருமகள் முதலாய தேவியரின் தலைவியே. வேல் போன்ற நீள் விழியையும், மின்னலை ஒத்த இடையையும் கொண்ட பசிய இளங் கிளியே. உன் பதம் போற்றுகிறேன்.

91. கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப்
பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே
சொற்பத மாய்அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே
மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
எம்மான்-எங்கள் இறைவன்
மன்-நிலபெற்ற
மறை-வேதம்

வளமை வாய்ந்த திருவொற்றியூரில் வாழ்பவர்க்கு முதல்வியான வடிவுடை அம்பிகையே. சொற்களையும் மொழிகளையும் கடந்து, அனைத்துமாய் நிற்கும் பரஞ்சுடரே. நல்ல நூல்களைக் கற்பதும், சீரிய முறைகளைக் கேட்பதும், உன் தரிசனம் பெற வேண்டியே என்பது, சான்றோரின் வாக்கு. அத்தகு சிவ புண்ணியர்களின் வழியே நானும் உன்னடி நாடி வர எனக்கு அருள்வாயாக.

92. நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
ம்ன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
மன்-அரசர்
ஏர்-போற்றும்
எழில்-அழகு
ஏவல்-தொண்டு

முன் ஒரு நாள், சனகாதி முனிகள் நால்வருக்கும் ஞான வழி காட்டிய சிவனாரின், கண் விழி போன்றவளே. நான் மறைகளுக்கும் முடிவாய், பொருளாய் விளங்குபவளே. வடிவுடை அன்னையே. உன் கருணையால் எனக்கு எல்லா நலங்களும் அமைந்து உள்ளன. ஆயின், உன்னை அடைந்த என்னால் உனக்கு ஏதும் பயன் உண்டோ? என்னை ஈன்ற தாயே. உன் திருவடியே சரணம்.

93. நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து
நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ
தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
மன்-அரசர்
ஏர்-போற்றும்
எழில்-அழகு
ஏவல்-தொண்டு

நடராஜரின் நாட்டிய சபையினால் சிறப்பு பெரும் திருவொற்றியுரின் வாழ்வே. நன்மை தரும் சிவநெறியைக் கைக்கொண்டு வாழும் உன் அடியார்களுக்கு, இயன்ற சேவைகளைச் செய்து, அவர் வழி சென்று, வாழ எண்ணுகிறேன். அவ்வாறு செய்வதனை உனக்குச் செய்யும் சிறிய சேவை எனக் கருதுகிறேன். எனது இவ் விருப்பம் எப்போது நிறைவேறுமோ? உடனே கைகூடுவதாயின் நான் மகிழ்வேன். அருள் தா..

94. அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
அத்தன்-தந்தை
முத்தன்-மோட்சத்திற்குக் காரணமானவன்
ஒண்-ஒளி
மத்தன்-புத்தி மயங்கியவன்

வடிவாம்பிகையே ! தலைவனான எம் கடவுளும், திருவொற்றியூர் இறைவனும், அம்பலத்தே நடம் ஆடும் முத்தனுமான, சிவனாரிடம், சேர்ந்து விளங்கும் ஒளி பொருந்திய முத்தே. சந்திர அமுத முகத்தாளே. வரையறை இல்லாத அளவில் குற்றங்கள் இழைத்திடும் இந்த பைத்தியக் காரனை, உனது அடியானாகக் கொள்ளல் முறையோ? சொல்வாய். (ஆயினும் நீ எம்மைத் தள்ளத் தகாது )

95. கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என்
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில்
ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
புறம்-பக்கம்

திருவொற்றியூரில் அருள் புரியும் தியாகேசனாரின் இடப் புறம் நீக்கமற அமர்ந்திருக்கும் வடிவுடை அன்னையே ! எனது வாழ்வின் சிறுமைகளை விளக்கிக் கூறத் தெரியாத எளியேனின் கோரிக்கைகள் உன் செவியில் விழாத காரணம் தான் என்ன? நான் அறிய மாட்டேன். நீயே உரைப்பாய்.

96. ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல்
ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய்
சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே
மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
எழில்-அழகு
தற்பரை-மேலானவள்
மாயா-கெடாத

கேடற்ற திருவருள் பொழியும் தாயே. வடிவாம்பிகையே ! திருவொற்றியூரில் எழுந்தருளும் பரா சக்தியே. அழிவற்ற நன்மைகள் தரும் வாழ்வின் ஆதாரமே. நீ உன் அடியவர்களுக்குச் செய்யும் உதவிகள் போல், அளவின்றிக் கொடுக்காவிடினும், மிகவும் வருந்தும் எனக்கு, மனம் இரங்கி சிறிதேனும் அருள் செய்ய வேண்டுகிறேன்.

97. பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்
துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
முக்கனி-வாழை,மா,பலா
நறவு-தேன்
புணை-தெப்பம்

கரும்பைப் போன்றவளே. அருளாம் கடலே. முக்கனிகளின் தீஞ்சுவைச் சாறே. பேரருள் சூழ்ந்த திருவொற்றியூரின் வாழ்வே. அன்னை வடிவாம்பிகையே ! அறிவற்ற பேதையான நான், எப்போதும் துயரக் கடல் அலைகளால் தாக்கப் பட்ட சிறு துரும்பு போல கலங்குகிறேன். உன் திருவடிகள் அல்லால் இக் கடலினின்று கறை ஏறுவதற்கு எனக்கு வேறு வழியே இல்லை. நீயே எம்மைக் காப்பாற்றக் கூடிய தெப்பம் ஆவாய்.

98. காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
காதரவு-தீவினைத் தொடர்பு
சீதரன்-லக்ஷ்மியை மார்பில் கொண்ட திருமால்
ஏத்தும்-போற்றும்
எழில்-அழகு

தாயே ! வடிவுடை அம்பிகையே ! நான் என் தீவினைகளைக் கண்டு பயந்து, மனம் கலங்கி நின்ற போது, உன் அருட் பார்வை பட்டதால், நிலை தெளிந்து மகிழ்ந்தேன். இனி எந்நாளும் நான் உன் அடிமை. உன் திருவடிகளே இனி புகலிடம். திருமால் வணங்கித் துதிக்கும் திருவொற்றியூர் எம்பிரானின் தேவி. அழகு மகளிர்களுக்கு எல்லாம் அரசியே. ஒற்றியூர் வாழ் மக்களின் ஆதாரமே. என்னை ஆதரிப்பது உன் கடன் ஆகும்.

99. பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார்
என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே
மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
மன்-தலைவன்
துன்-பொருந்திய

தாயே ! மின்னல் போன்ற ஒளி உடையவளே. மின்னல் கொடி போலும் மெல்லிய இடையாளே. திருவொற்றியூர் முக்கண் அண்ணலைத் தலைவராகக் கொண்டவளே. என்னை உன் அடிமையாக ஏற்றவளே. வடிவுடை அரசியே ! இந்த உலகில் செல்வம் பெற்றவர்களே உயர்த்திப் பேசப் படுகின்றனர். அனைவராலும் துதிக்கப் படும் கல்வியை குறைவறக் கற்றார்க்கு அதுபோல் மதிப்பில்லை. “அவர்களிடம் என்ன உள்ளது“ என்று இகழ்சியாகப் பேசுகின்றனர். ஏன் இந்த முரண்? இது சரியல்லவே.

100. பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம்
கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே
மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே
மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே.

கரும்பினைப் போல் இனிக்கும் என் தாயே ! மெய்ஞ் ஞானிகளின் உள்ளத்தே விளையும் இன்பமே. திருவொற்றியூரில் எழுந்தருளும் அருள் வடிவே. எப்போதும் கண் மை தீட்டப் பட்ட, அழகு மான் விழியாளே. வடிவாம்பிகையே. இன்னும் என்னை விட்டுப் பொய்மை முழுதும் நீங்க வில்லை. அது கொண்டு, நீ என்னைக் கை விடுவது ஆகாது. இப்போதும், எப்போதும், எந்த நிலையிலும், என்னை காப்பது உன் கடனே. எனக்கு வேறு புகல் இல்லை. காப்பாய்..

101. நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில்
ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு
நேயம்-அன்பு
தனயன்-மகன்
அனுகூலம்-துணையாதல்

சிவந்த திரு வாயால் அமுத மழை பொழியும் ஒற்றியூர் ஞானாம்பிகையே. வடிவுடை அழகியே ! அருள் வடிவே. எல்லையில்லா அன்பும் நலிந்தோர்க்கு துணை புரியும் பண்பும் மிக்கவளே. நீ எனது தாயாகில், நான் உன் சேயாவேன் அல்லவா? அப்படியெனில் என் துயரங்கள் எல்லாம் எனை விட்டு அகல வேண்டும். நீ எப்போதும் என் மனத்தில் நின்று அருளவேண்டும். இந்த வரம் எமக்குத் தருவாய்.

102. வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ
வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

குறிப்பு:
பூம்-அழகிய
வாரிசம்கள்-தாமரை மலர்கள்
தண்-குளிர்ந்த
தாண்-தாள்,பாதம்
அளி-கருணை
மகிழ்தர்-கணவர்
சீர்-பெருமை

அன்னையே ! நீ வாழ்க. உன் திருவடிகள் வெல்க. உன் திருவடித் தாமரைகள் வாழ்க. உன் திருத் தாள் மலர்கள் போற்றி. அடியார்க்கு அருளும் உன் கருணை விழிகள் போற்றி. உன் பல்வகைப் பட்ட புகழ் வாழ்க. என்றும் நீயும் உன் மணாளரும் என் மனத்தே இனிதே வாழ்க. என் உயிரின் உயிரே. என் வாழ்வின் ஆதாரமே, ஒற்றி அன்னையே, வடிவாம்பிகையே உன்னை வணங்குகிறேன். (எந்தநாளும் எம்மைக் காப்பாய்.)

? வள்ளலாரின் வடிவுடை மாணிக்க மாலை நிறைவு பெறுகிறது. ?

 

Also, readLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • May 29, 2023
பாம்பாட்டி சித்தர் பாடல்கள்
  • May 26, 2023
சேவல் விருத்தம் – அருணகிரிநாதர் அருளியது
  • May 24, 2023
மயில் விருத்தம் – அருணகிரிநாதர் அருளியது