- September 13, 2024
உள்ளடக்கம்
அதிலே ஸாக்ஷாத் ஜகத் பரிபாலகனான மஹா விஷ்ணுவைப் பற்றி ரொம்பவும் உயர்ந்த கருத்துக்களும், மனஸை உருக்கும் பாவமும், வாய்க்கு அம்ருதமாக இருக்கிற வாக்கும் கொண்டதான ‘ஷட்பதீ ஸ்தோத்ரம்’ என்பது ஒன்று. சின்ன ஸ்தோத்ரம் தான். அதை நன்றாக மனஸில் வாங்கிக்கொண்டு விட்டால் நாம் ஆசார்யாளையும் தெரிந்துகொண்டு விடலாம், மஹா விஷ்ணுவையும் தெரிந்துகொண்டு விடலாம், நம்மையும் தெரிந்துகொண்டு விடலாம். நம்மைத் தெரிந்து கொள்கிறபடி தெரிந்து கொள்வதுதான் அத்வைதம். அந்த உச்சாணி வரைக்கும் இந்த ஷட்பதீ நம்மை அழைத்துக்கொண்டு போய்விடும்.
அவினயமபனய விஷ்ணோ தமய மன
ஸமய விஷய ம்ருகத்ருஷ்ணாம் |
பூத தயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: || (1)
ஹே விஷ்ணோ! எனது பணிவின்மையைப் போக்கு! மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.
திவ்யதுனீ மகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே |
ஶ்ரீபதி பதாரவிந்தே பவபய கேதச்சிதே வந்தே || (2)
கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத்-சித்-ஆனந்தமாகியவற்றை வாசனையாகக் கொண்டதும், உலகில் சம்சார துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித் தாமரைகளை வணங்குகின்றேன்.
ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீநஸ்த்வம் |
ஸாமுத்ரோ ஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ ந தாரங்க: || (3)
ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே. தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டியது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!
உத்ருதநக நகபிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ரசசித்ருஷ்டே |
த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார: || (4)
கோவர்தன மலையை தூக்கியவரே! இந்திரனின் இளையவரே! அசுரக் கூட்டத்தை அழித்தவரே! சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே! உங்களுடைய கருணைக் கடைக்கண் பார்வை ஒருவனுக்கு கிடைக்குமானால் எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?
மத்ஸ்யாதிபி ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (5)
மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ! ஹே பெருமாளே
தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த
பவ ஜலதி மதனமந்தர பரமம் தரமபனயத்வம் மே (6)
தாமோதரனே! குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையொத்த முகம் கொண்டவனே! கோவிந்த! ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!
நாராயண கருணாய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ
இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜே ஸாதாவஸது (7)
ஹே நாராயண கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.
இதனைப் பாராயணம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும்.
🙏 பெரியவா கடாக்ஷம் 🙏