×
Friday 11th of October 2024

Nuga Best Products Wholesale

கொடுப்பவர் அல்ல, கொடுக்க வைப்பவர் கடவுள் – ஒரு நீதிக்குரிய கதை


Spiritual Story in Tamil

கொடுப்பவர் அல்ல கடவுள், கொடுக்க வைப்பவர் தான் கடவுள் – ஒரு நீதிக்குரிய கதை

🛕 முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்தபோதிலும் கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை!

🛕 ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையைப் பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்.

🛕 ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்! இன்னொருவன் அரசனின் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்!

🛕 அரசன் தனது சேவகர்களிடம் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்துவரும்படி ஆணையிட்டான், அவர்கள் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் அவைக்கு அழைத்துவந்தார்கள்.

🛕 அரசன் அவர்களிடம், “இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். ஒருவர் கடவுள் பெயரைச் சொல்லியும் இன்னொருவர் அரசின் பெயரைச் சொல்லியும் பிச்சை எடுத்த காரணம் என்ன?”, என்று கேட்டான்.

🛕 அதற்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன், “அரசே! இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன் தான்! இறைவனின் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும்! அதனால் தான் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன்!”, என்றான்.

🛕 மற்றொரு பிச்சைக்காரன், “அரசே! இறைவன் கண்ணுக்குத் தெரியாதவன்! ஆனால், கண்ணுக்குத் தெரிந்த விஷயம் அரசன் மட்டுமே! அரசனால் மட்டுமே ஒருவன் செல்வம் பெறமுடியும்! அதனால் தான் அரசன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன்!”, என்றான்.

🛕 அரசன் இருவரையும் அனுப்பிவிட்டு தன் அமைச்சரிடம் இதுபற்றி ஆலோசித்தான். அமைச்சர் அரசனிடம், “அரசே! முதல் பிச்சைக்காரன் சொன்னது தான் சரி! இறைவன் அருள் இருந்தால் தான் அந்த உதவியைப் பெறமுடியும்!”, என்றார்.

🛕 அரசனும், “இறைவன் அருளா? அல்லது அரசனின் அருளா?”, என்று சோதித்துப்பார்க்க தீர்மானித்தான்! சிலநாட்களில் அந்நாட்டிலுள்ள கோயிலில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அன்று அரசனும் குடிமக்களுக்கு சில பரிசுகள் அளிக்கப்போவதாக அறிவித்தான். பரிசினைப் பெற குடிமக்கள் அனைவரும் வந்தனர். அவர்களுடன் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் வந்தனர்.‌‌

🛕 அரசன் ஒவ்வொருவருக்கும் புதிய துணி ஒன்றையும் கூடவே பரங்கிக்காய் ஒன்றையும் பரிசளித்தான். அரசின் பெயரில் பிச்சை எடுப்பவனுக்கு மட்டும் பரங்கிக்காயினுள் தங்க, வைர நகைகளை வைத்து பரிசளித்தான்! கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவனுக்கு எல்லோரையும் போலவே துணியும் பரங்கிக்காய் மட்டும் பரிசளித்தான்!

🛕 சில நாட்கள் கழிந்தன. அரசன் ஒரு நாள் நகர்வலம் சென்றான். அப்போது அரசன் பெயரைச் சொல்லி பிச்சை எடுப்பவன், சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுப்பதை கண்ட அரசனுக்கு, “தான் பரங்கிக்காயின் உள்ளே தங்க, வைர நகைகள் வைத்து பரிசளித்தும் இவன் பிச்சை எடுக்கவேண்டிய காரணம் என்ன?”, என்று வியப்பு தோன்றியது.

🛕 உடனே அரசன் அந்த பிச்சைக்காரனிடம், “நான் அன்று உனக்கு பரிசுகள் அளித்தேனே, அதற்குப் பிறகும் நீ பிச்சை எடுக்கவேண்டிய அவசியம் என்ன?”, என்று கேட்டான்.

🛕 அந்த பிச்சைக்காரனும், “அரசே! நீங்கள் அன்று ஒரு பரங்கிக்காய் பரிசளித்தீர்கள். அதை நான் ஐந்து வெள்ளிக்காசுகளுக்கு ஒருவனுக்கு விற்றுவிட்டேன். அந்த ஐந்துவெள்ளிக்காசுகளை வைத்து எத்தனை நாட்கள்நான் உண்ணமுடியும் அதனால் மீண்டும் பிச்சை எடுக்க வந்துவிட்டேன்!”, என்றான்.

🛕 அதைக் கேட்ட அரசன் கோபமுற்று, “அடேய் மூடனே! நான் உனக்கு பரிசளித்த பரங்கிக்காயினுள் தங்க, வைர நகைகள் வைத்திருந்தேனே! நீ அதனை வெட்டிப் பார்த்திருந்தால் அறிந்திருப்பாயே!”, என்று அவனை திட்டிவிட்டு நகர்ந்தான்.

🛕 சற்று தூரத்தில் ஒரு செல்வந்தனை கண்டான். அவன் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவன்! என்பதையும் அரசன் அறிந்துகொண்டான்.

🛕 அரசன் அவனிடம் சென்று, “ஐயா! நீங்கள் முன்பு பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தீர்கள் அல்லவா! இப்போது எப்படி செல்வந்தனாகிவிட்டீர்கள்?”, என்று கேட்டான்.

🛕 அதற்கு அவனும், “அரசே! நான் என் தந்தை இறந்த தினத்தில் சிலருக்கு இறைவன் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்வேன். அன்று ஒருவனிடம் ஐந்து வெள்ளிக்காசு கொடுத்து ஒரு பரங்கிக்காய் வாங்கினேன். அதனை சமைப்பதற்காக வெட்டியபோது, அதனுள் தங்க, வைர நகைகள் இருப்பதைக் கண்டேன்! இறைவன் அருளால் இன்று நான் செல்வந்தன் ஆகிவிட்டேன்!”, என்று கூறினான்.

🛕 இறைவன் அருள் இல்லையென்றால் வாழும் வாழ்வில் எந்த வளமும் பெறமுடியாது என்பதை அவன் புரிந்து கொண்டான்! நாம் நல்லாட்சி செய்வதற்கும் இறைவன் அருளே என்று அரசன் அறிந்துகொண்டான்!

நல்லமனம் படைத்தவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள்புரிகிறான்

Also, read



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
  • August 14, 2024
பக்தி
  • August 6, 2024
குரு ராகவேந்திர சுப்ரபாதம் உள்ளடக்கங்கள்