×
Monday 28th of November 2022

Nuga Best Products Wholesale

ஆன்மிகம் கேள்வி பதில்கள் & சந்தேகங்கள்


Aanmeegam Kelvi Pathil in Tamil

ஆன்மிக சந்தேகங்கள் & கேள்வி பதில்கள்

திருநீறு பூசும்போது எத்திசை நோக்கி இருந்தால் நல்லது?

காலையில் கிழக்கு நோக்கியும், மதியம் வடக்கு நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பூசிக் கொள்ள வேண்டும். இது அனுஷ்டானத்திற்கும், வீட்டில் இட்டுக் கொள்வதற்கும் பொதுவானது. கோவிலில் பிரசாதமாகப் பெறும் பொழுது சுவாமியைப் பார்த்துப் பூசிக் கொள்ள வேண்டும்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை இதில் முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த நாள் எது?

எல்லா அமாவாசைகளுமே முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்தவை தான். அன்று அவசியம் வழிபாடு செய்து தான் ஆகவேண்டும். ஒன்று சிறந்தது என்றால் கண்டிப்பாக மற்றதை விட்டு விட வேண்டிய சூழல் வரும். உத்தராயணத்தில் முதலில் வருவதால் தை அமாவாசையும், தக்ஷிணாயனத்தில் முதலில் வருவதால் ஆடி அமாவாசை என்பது அந்த அமாவாசைக்கு முன்னதான பிரதமையிலிருந்து விரதம் இருந்து, தர்ப்பணம் செய்ய வேண்டும். இது மற்ற திதிகளில் விடுபடும் பிதுர்க்களையும் திருப்திபடுத்த செய்யப்படுகிறது. எனவே அமாவாசை தர்ப்பணத்தைப் பொறுத்த வரை ஒன்று சிறந்தது. மற்றது தாழ்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை.

விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றது என்று கேள்விப்பட்டேன். அதற்கான விளக்கம் அளிக்கவும்?

அது தவறான தகவல். பூஜை விஷயங்களில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அது சமையலுக்கு மட்டும் தான்.

வாஸ்து சாஸ்திரத்தை ஆன்மிகம் ஏற்றுக் கொள்கிறதா? அதை எந்த அளவிற்குக் கடைப்பிடிப்பது என்பதைக் கூறுங்கள்.

சாஸ்திரம் என்று சொல்லிவிட்டாலே அது ஆன்மிகம் தானே. இறைவழிபாட்டிற்காக கூறப்பட்டுள்ள சாஸ்திரங்களில் ஒரு பிரிவு – சிற்பசாஸ்திரம். இதன் உட்பிரிவுகளில் ஒன்று வாஸ்து சாஸ்திரம். ஒருவீட்டைக் கட்டத் துவங்குவதற்கு முன் வாஸ்து சாஸ்திரத்தைக் கடைபிடிக்கலாம். கட்டி முடித்தபின் வீண் வதந்திகளை நம்பி குழப்பிக் கொண்டு வீட்டை இடிக்க வேண்டாம்.

பூஜை அறையில் கடவுள் திருஉருவப்படங்களை எத்திசை நோக்கி வைப்பது சிறந்தது?

கிழக்கு நோக்கி வைப்பது சிறந்தது. மேற்கு நோக்கியும் வைக்கலாம்.

இறந்த பெற்றோருக்கு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்கள் கொடுக்கும் சிரார்த்தம் ஏற்புடையதுதானா?

பெண்கள் நேரடியாக இதை செய்யக்கூடாது. யாராவது ஒரு ஆணிடம் தர்ப்பையைக் கொடுத்து அவர் மூலமாக செய்ய வைக்கலாம். திருமணமான பெண்கள் கணவன் வீட்டைச் சார்ந்து விடுவதால், பெற்றோருக்காக தர்ப்பை கொடுக்கக் கூட அதிகாரம் கிடையாது. பெற்றோரின் பங்காளிகளைச் செய்யச் சொல்லி பொருளுதவி மட்டும் செய்யலாம்.

விரதநாட்களில் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று சொல்கிறார்களே உண்மையா?

விரதம் என்ற சொல்லுக்கு “கஷ்டப்பட்டு இருத்தல்” என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால் தண்ணீர் கூட குடிக்காமல் பசித்திருந்து, சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக் கூறியுள்ளனர். “உபவாசம்” என்றால் “இறைவனுக்கு அருகில் இருத்தல்” என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தைக் கூறுங்கள்.

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை “சிருஷ்டி” (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை “பிரம்ம முகூர்த்தம்” என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

ஹோமம் நடத்தும் போது குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைத்திருந்தால் நல்லது என்று சொல்கிறார்களே?

ஹோமம் முடிந்து அதில் போட்ட எல்லா திரவியங்களும் சாம்பலாகும் வரை குண்டத்திலிருந்து எதையும் எடுக்கக்கூடாது. சில இடங்களில் ஹோமம் முடிந்து, யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பட்டவுடனேயே மக்கள் உள்ளே புகுந்து குண்டங்களை அணைத்தும், கலைத்தும் நாணயங்களையும் சாம்பல் பிரசாதமும் எடுக்கிறார்கள். இது மிகவும் பாவம். எல்லாம் சாம்பல் ஆன பிறகு நாணயங்களையும், சாம்பல் விபூதி பிரசாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இதை வீட்டில் வைத்துக் கொண்டால் லட்சுமி கடாட்சம் பெறுவதுடன், நோய் நொடியும் வராது.

குலதெய்வம் கோவிலுக்கு அகல் விளக்குகள் வாங்கிச் சென்ற பொழுது ஒரு சில உடைந்து விட்டன. இது நன்மையா கெடுதலா?

விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய்யும் பொழுது அதுவே தானாக விழுந்து உடைந்தால் தான் பரிகார தீபம் ஏற்ற வேண்டும். வாங்கிச் செல்லும் பொழுது கவனக்குறைவால் உடைந்ததற்கெல்லாம் பயப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே.

எங்கள் வீட்டில் துளசியுடன் வில்வமும் சேர்ந்து வளருகிறது. இரண்டையும் சேர்த்து வணங்கலாமா? அல்லது கோவிலில் நடலாமா?

இரண்டும் உங்கள் வீட்டில் நன்றாக வளருவதே பெரிய பாக்கியம். தினமும் விளக்கேற்றி நன்றாக வழிபடுங்கள். உங்கள் வீடு மங்கலகரமாக இருக்கும்.

வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறேன். அதனால் குறை ஏதுமில்லை. ஆனால், சிலை வழிபாடு கூடாது என்று சிலர் கூறுகின்றனர்?

வீட்டில் சாமி சிலைகளை ஆறு அங்குல உயரத்திற்கு மேல் இல்லாமல் வைத்து தாராளமாக பூஜை செய்யலாம்.

பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூடாதா?

பிறந்த நட்சத்திரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. கிழமை பார்க்க வேண்டாம். தீபாவளியன்று ஜென்மநட்சத்திரம் வந்தால் சும்மா இருந்து விடாதீர்கள் 🙂 அது விதிவிலக்கு.

பஞ்சாட்சர மந்திரம் (நமசிவாய, சிவாயநம) சொல்லித்தான் திருநீறு பூச வேண்டும் என்பது உண்மையா?

பஞ்சாட்சரம் (நமசிவாய) சொல்லி திருநீறும், அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய) சொல்லி திருமண்ணும் இட்டுக் கொள்வதைப் போன்ற புண்ணியச் செயல் இவ்வுலகில் வேறு கிடையாது.

கருவறையில் திரைபோடும் போது சந்நிதியை தரிசனம் செய்வதோ சுற்றி வலம் வருவதோ கூடாது என்கிறார்களே? உண்மைதானா?

உண்மைதான். ஒருவரை சந்திக்கச் செல்கிறோம். அவர் நம்மை சந்தித்துப்பேசும் நிலையில் விழித்துக் கொண்டிருந்தால் தானே சந்திப்பு என்பது நிகழும். அதுபோலத் தான் திரைப்போடப்பட்ட சந்நிதியும்! அப்போது தரிசிப்பது வலம் வருவது போன்றவை செய்யக்கூடாது. இது போன்ற சமயங்களில் விமான கோபுரங்கள் உள்ளன. அவற்றை தரிசித்தாலே சுவாமி தரிசன பலம் கிட்டும்.

கோவில்களில் கொடுத்த பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு போடுவது சரிதானா?

ஒருமுறை சுவாமிக்கு சாத்தப்பட்டு பிறகு எடுக்கப்படும் மாலைக்கு “நிர்மால்யம்’ என்று பெயர். நிர்மால்ய மாலைகளை வேறு தெய்வத்திற்குச் சாத்துதல் கூடாது.

பூஜை அறையில் சுவாமி படங்களுடன் மறைந்த பெரியவர்களின் படங்களை வைக்கலாமா?

சுவாமி படங்களுடன் சேர்த்து வைப்பது கூடாது. சற்று தள்ளி தனியாக வைத்து வழிபடலாம். மறைந்த பெரியவர்கள், பிதுர்கள் என்று அழைக்கப்படுவர். தெய்வநிலை வேறு. பிதுர்நிலை வேறு.

அசைவம் சாப்பிடும் நாட்களில் கோவிலுக்கு செல்வது தவறுதானா?

கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டிருக்கும் நீங்கள் அந்த கருமத்தை விட்டுவிடக்கூடாதா? உலகிலேயே அதிகமாக அசைவம் சாப்பிடும் சீனர்கள் கூட இன்று சைவத்திற்கு மாறி வருகிறார்கள். உலகிற்கே எடுத்துக்காட்டாக இருக்கும் இந்து தர்மம் புலால் சாப்பிடுவதை அனுமதிப்பதில்லை. எனவே இந்தக் கேள்வி தள்ளுபடி செய்யப்படுகிறது.

என் தாய் பூஜை செய்து வந்த விக்ரஹங்களுக்கு என்னால் சரிவர பூஜை செய்ய முடிவதில்லை பூ, பால் வைத்து வணங்கினால் போதுமா?

தாய் தந்தை விட்டுச் சென்ற மற்ற எல்லாவற்றையும் பராமரிக்கிறோம். பூஜை மட்டும் சரிவர செய்யமுடியவில்லை என்றால் எப்படிப் பொருந்தும்? நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே உங்கள் தாய் பூஜை செய்து வந்திருக்கிறார்கள். உங்கள் வாரிசுகளும் நன்றாக இருக்க, நீங்களும் முடிந்த வரை நன்றாகவே பூஜை செய்யுங்கள்.

வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்த என்னால் இயலவில்லை. இதனால் ஏதேனும் பாதிப்பு நேருமா?

வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்தவில்லையே என உங்கள் மனம் உறுத்துகிறது. இதுவே பெரிய பாதிப்பு தானே! சீக்கிரம் நிறைவேற்றிவிடுங்கள்.

திருமணம், காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னதாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்களே ஏன்?

திருமணம், காதுகுத்தல் போன்றவை நம் குலம் அபிவிருத்தியடைவதற்காகச் செய்யப்படும் சுபநிகழ்ச்சிகளாகும். இவை நல்ல முறையில் நடந்து நம் குலம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலில் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

இரண்டு மாத இடைவெளியில் இறந்த பெற்றோருக்கு ஒரே நாளில் திவசம் பண்ணலாமா?

தாயின் சிராத்தம் முறை வேறு. தந்தையின் சிராத்தம் முறை வேறு. இரண்டையும் அவரவர்கள் திதியில் செய்தால் தான் பித்ருக்கள் திருப்தியடைவார்கள். ஒன்றாக செய்யக் கூடாது.

திருமாங்கல்யத்தில் “சிவாயநம” என எழுதி வழங்கலாமா?

திருமாங்கல்யம் என்பது பரம்பரை பரம்பரையாக பழக்கத்தில் செய்து வருகிற ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதிரி அமைந்துள்ளது. நம் குடும்பத்துப் பெரியவர்கள் கூறும் முறைப்படி செய்வது தான் நல்லது. சுவாமி அம்பாள் உருவங்கள் பொறிப்பது தான் வழக்கம். எழுத்துக்கள் எழுதுவது இல்லை.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பயமுறுத்துகிறார்களே! விளக்கம் அளிக்கவும்.

நம் ஊர்க்காரர்கள் சொன்னால் சும்மா பயமுறுத்துகிறார்கள் என்பீர்கள். மேலை நாட்டார் எதைக் கூறினாலும் ஏற்றுக்கொள்வீர்கள். ஒரு அமெரிக்கர் இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்துள்ளார். ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். அப்படி பார்க்கும்போது, கண்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவதை விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிந்திருக்கிறார். இதற்காகவே நம் முன்னோர் அறிந்து “கண்ணூறு கழித்தல்” என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

வீட்டில் மருமகள் கர்ப்பிணியாக இருக்கும்போது புதுவீடு கட்டத் தொடங்கக்கூடாது என்கிறார்களே! விளக்கம் அளியுங்கள்.

கர்ப்பிணி பெண்கள் வசிக்கும் வீட்டை இடிக்கவோ, புதுப்பித்துக் கட்டவோ கூடாது. வேறு புது இடத்தில் புதுவீடு கட்டலாம். கிரகப்பிரவேசமும் செய்யலாம்.

கிரகப்பிரவேசம் செய்யும்போது முதலில் பசுவையும், கன்றையும் அழைத்து வந்து கோபூஜை செய்வதன் நோக்கம் என்ன?

பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். நான்கு வேதங்களும் நான்கு கால்களாக உள்ளன. கன்றுக்காக சுரக்கும் பாலை நமக்கும் கொடுக்கும் பசுவை “கோமாதா” என அழைக்கிறோம். இதன் காலடி பட்ட இடத்தில் மங்கலம் உண்டாகும். கன்றுடன் கூடிய பசுவை பூஜிப்பதால், லட்சுமியின் அருள்கடாட்சம் நிலைத்திருக்கும். கன்று இல்லாமல் பசுவை தனித்து அழைத்து செல்லவோ, பூஜை செய்யவோ கூடாது.

திருமணத்திற்கு சிலர் ஜாதகப் பொருத்தம் தான் தேவை என்றும், சிலர் கோவிலில் பூக்கட்டிப் பார்த்தால் போதும் என்றும் சொல்கின்றனர். எது சிறந்தவழி என்பதைச் சொல்லுங்கள்.

கோவையில் இருந்து மதுரைக்கு பழநி, திருச்சி வழியாகச் செல்லலாம். மதுரைக்குச் செல்வது தான் முக்கியமே தவிர, பாதையைப் பற்றி யோசிக்கக் கூடாது. ஜாதகம் பார்த்தல், தெய்வ உத்தரவு கேட்டல் இரண்டும் சிறந்தவை தான். மனம் எதில் திருப்திபடுகிறதோ, அதை தேர்வு செய்து திருமணத்தை இனிதாக நடத்துங்கள்.

அன்னபூரணி விக்ரஹத்தை வீட்டில் வைத்து பூஜிக்கும் முறையைச் சொல்லுங்கள்.

பூஜை முறைகள் எல்லா தெய்வங்களுக்கும் ஒரே மாதிரி தான். மந்திரங்களும், ஸ்லோகங்களும் தான் மாறுபடும். அன்னபூரணி அஷ்டகம் மிக உயர்ந்தது. இதனை பூஜையின் போது பாராயணம் செய்து வாருங்கள்.

காலையில் வாசலில் கோலம் போட என் மனைவி மறுக்கிறாள். இதை ஆண்கள் செய்வது சரியா தவறா?

மனைமங்கலமான கோலம் இடுதல், விளக்கேற்றுதல் போன்றவற்றைப் பெண்கள் செய்வது தான் முறை. இருந்தாலும், உங்கள் சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

வீட்டில் வில்வமரம் வளர்க்க நினைக்கிறேன். என் எண்ணம் சரியானதா?

சரியானதே. வில்வ மரத்தில் சிவபெருமானும், துளசியில் மகாவிஷ்ணுவும் வசிக்கின்றனர். எனவே, இவற்றை வளர்ப்பதால் நாம் அவர்களின் அருளைப் பெற்று மகிழலாம்.

எமனுக்கு இரக்க சிந்தனை கிடையாது தானே! பின் ஏன் எம தர்மன் என்று குறிப்பிடுகிறோம்?

எமனுக்கு இரக்கம் இல்லை என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. “யம” என்ற சொல்லுக்கு “கட்டுப்பாடு” என்று பொருள். நாம் கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமாக வாழ வேண்டும். இதைத் தான் “நியமம்” என்பார்கள். நியமத்துடன் வாழ்வதையே “அறநெறிப்பட்ட வாழ்க்கை” என்கிறோம். அறம் என்றால் தர்மம். கட்டுப்பாடும், தர்மமும் இணைந்தவர் தான் எமதர்மன். மனிதன் தர்மத்தை சரியான முறையில் கடைபிடிக்கிறானா என்பதைக் கண்காணிப்பது தான் எமனுடைய வேலை. ஆசிரியர் நன்றாகப் படித்தவனைத் தேர்ச்சி பெறச் செய்கிறார். அதே ஆசிரியர் படிக்காதவனை தோல்வி அடையச் செய்கிறார். அதற்காக அவரை இரக்கமற்றவர் என்று சொல்லலாமா?

செம்பருத்திப் பூவை பெருமாளுக்குச் சாத்தக்கூடாது என்பதற்கு சாஸ்திர சம்மதம் உண்டா?

செம்பருத்திப்பூ விநாயகர், முருகன், பார்வதி போன்ற தெய்வங்களுக்குச் சிறப்பானவை. பெருமாளுக்குப் பவழமல்லி, துளசி சிறப்பானவை.

“ஓம்” என்று சொல்வதற்குப் பதிலாக “ஸ்ரீ” என்று தான் மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது உண்மைதானா?

ஓம்” என்பதற்கும் “ஸ்ரீ” என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று அவர்களிடமே கேட்டிருக்கலாமே! இது போன்ற விஷயங்களைக் கேட்டு உங்களைப் போன்றவர்கள் குழம்பிக் கொண்டிருக்கும் வரையில் குழப்புபவர்களுக்குப் பஞ்சமிருக்காது.

பாதக ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே சனீஸ்வரரை வழிபடவேண்டும் என்பது உண்மையா?

கிரகங்கள் ஒன்பதும் கடவுளின் அடியவர்களே. அவரவர் பாவபுண்ணிய பலன்களை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். சனி ராசிக்கு 3, 6, 11 ஆகிய மூன்று ஸ்தானங்களில் சுப பலன்களை வாரி வழங்குவார். மற்ற ஸ்தானங்களில் நன்மையும் தீமையும் கலந்தே உண்டாகும். எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் சனியை அனைவரும் வழிபடலாம். ஒருவரின் வாழ்நாளை நிர்ணயிக்கும் ஆயுள்காரகர், தொழிலை நிர்ணயிக்கும் ஜீவனகாரகர் என்னும் இருபெரும் விஷயங்கள் சனீஸ்வரரின் கட்டுப்பாட்டில் உள்ளன. சனி மட்டுமல்ல! கிரகம் ஒன்பதையும் வணங்கவேண்டியது மிக அவசியம்.

கோவிலில் சிலர் பரிகாரம் என்ற பெயரில் சுண்டல், வாழைப்பழம் போன்றவைகளைத் தருகிறார்கள். அவற்றை பிரசாதமாக வாங்குவதா அல்லது தோஷம் என மறுப்பதா?

கோவிலில் கொடுக்கும் பொருள் எதுவானாலும், கடவுளின் அருட்பிரசாதமே. தயக்கமில்லாமல் வாங்கி, பக்தியுணர்வுடன் சாப்பிடுங்கள். நவக்கிரகத்தை பரிகாரமாக வழிபட்டு சுண்டல், பழம் கொடுத்தாலும் அதுவும் பிரசாதம் தான்.

வீட்டில் சுவாமிக்கு சாத்திய பூமாலைகளை எங்கு சேர்ப்பது என விளக்கம் தேவை?

சுவாமிக்கு சாத்திய மாலைக்கு “நிர்மால்யம்” என்று பெயர். ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் சேர்க்கவேண்டும். பொதுவாக, கால்மிதி படாத இடத்தில் பூமாலைகளைச் சேர்ப்பது நல்லது.

அமாவாசையை நாளில் சுபவிஷயம் கூடாது என்று சிலரும், சிலர் நிறைஅமாவாசை என்பதால் சுபம் நடத்தலாம் என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி?

முன்னோர் வழிபாட்டுக்கு மட்டுமே அமாவாசை உரியது. அமாவாசையில் சுபவிஷயம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அமாவாசை, பிரதமை நாட்களை விடுத்து துவிதியை திதியில் இருந்தே எடுத்துக் கொள்வர்.

ஈசானம், கன்னி மூலைகளில் எதில் பூஜை அறை அமைப்பது சிறப்பு?

வீட்டின் வடகிழக்கு (ஈசானம்), தென்மேற்கு (கன்னி) மூலைகள் இரண்டுமே தெய்வீகமானவையே. அவரவர் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக் கொள்ளலாம். கன்னிமூலையில் பணப்பெட்டியும் (பீரோ) வைக்கலாம்.

முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டு வாசலில் வைப்பதன் நோக்கம் என்ன?

மங்கல பொருட்களில் கண்ணாடியும் ஒன்று. அதனால், மங்கலகரமாக கண்ணாடியை வைப்பர். சிலர் கண்ணாடியை திருஷ்டிதோஷம் நீங்கவும் வாசலில் வைக்கிறார்கள்.

வாசலில் சிலர் கடவுளின் உருவத்தையே கோலமாக இட்டு வருகின்றனர். இது சரியான முறையா?

கோலம் என்றால் “அழகு”. இதனை வடமொழியில் “ரங்கவல்லி” என்பர். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்று வைத்துக் கொள்ளலாம். இதன் தரைப்பகுதியில் அழகுக்காக கொடிகள் போன்று வரையப்படுவது கோலமாகும். “வல்லீ” என்றால் கொடி. கொடிகளைப் போன்ற கோடுகளாலும், புள்ளிகளாலும் அழகாகப் போடப்பட வேண்டியவையே கோலங்கள். தெய்வங்களின் உருவங்கள் வீட்டு வாசலில் கோலமாகப் போடுவது, பிறகு அதன் மீது கால் பட நடப்பது இவற்றையெல்லாம் யோசிக்கவே கஷ்டமாகவே உள்ளது. எனவே இவற்றை நம் சகோதரிகளிடம் சொல்லி அழகான புள்ளி கோலங்கள், சிக்குக் கோலங்கள் முதலியவற்றின் மூலம் தங்களது கைவண்ணத்தை திறம்பட காண்பிக்குமாறு செய்ய வேண்டும்.

பிறந்த குழந்தையின் ஜாதகத்தை எந்த வயதில் கணிக்க வேண்டும்?

ஒரு வயது முடிந்த பிறகு கணிக்க வேண்டும். 12 வயது வரை பலன் கணிக்கக் கூடாது. பலரும் பலவிதமாகப் பலன் கூறுகிற இக்கால சூழ்நிலையில் சிறுவயதிலேயே குழந்தைகள் குழப்பமான மனநிலைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமாவாசை, திதி நாளில் வாசலில் கோலம் போடக் கூடாது என்பதற்கு காரணம் என்ன?

அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் “பிதுர் தினம்” என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து விட்டுத்தான் தெய்வ வழிபாடே செய்யப்பட வேண்டும். மங்கலகரமான விஷயங்களில் பிதுர்களுக்கு விருப்பம் கிடையாது. எனவே, முன்னோர் காரியங்களில் கோலம் போடக்கூடாது.

குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள். அது மிக அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம். இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி வந்துள்ளனர். நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான். குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், உங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் பெயர்களை விநாயகர் முதல் அனுமன் வரை சீட்டுகளில் எழுதுங்கள். அருகில் உள்ள கோவிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்த பிறகு எழுதி வைத்திருக்கும் சீட்டுகளை சுவாமி பாதத்தில் வைத்து, ஏதாவது ஒன்றினை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று வழிபாட்டைத் துவக்குங்கள்.

பிரதோஷம் என்பதன் பொருள் என்ன? அதன் சரியான கால அளவு எவ்வளவு?

“ப்ரளீயந்தே அஸ்வின் தோஷா” என்பது பிரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம். அதாவது அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள். பகல் முழுவதும் மனிதர்கள் எவ்வளவோ செயல்களைச் செய்கிறார்கள். அவற்றில் நல்லவை, கெட்டவை கலந்தே இருக்கின்றன. அறியாமல் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதலும், நல்ல செயல்களுக்கு இறைவன் அருள் செய்தலும் இந்த பிரதோஷ காலத்தில் தான். தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது. இதற்கு “நித்யபிரதோஷம்” என்று பெயர். வளர்பிறை திரயோதசிக்கு பக்ஷ பிரதோஷம், தேய்பிறை திரயோதசிக்கு மாத பிரதோஷம், தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம் என்று பெயர்.

வெள்ளிக்கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க மறுப்பது ஏன்? வீட்டு வேலை செய்பவர்களுக்கு, மறுநாள் சம்பளம் தருவதாகச் சொல்வது சரியா?

ஒரு சிலர் தான் இப்படிக் கூறி வருகிறார்கள். வேலை செய்பவர்களுக்குக் கூலி கொடுக்கும் பொழுது இப்படிக் கூறுவது மிகவும் தவறு. பஸ், மருத்துவமனை, காய்கறி வாங்குதல் போன்ற அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கு இப்படிக் கூற முடியுமா? வெள்ளிக்கிழமைகளில் பணப் பெட்டிக்கு பூஜை செய்பவர்கள் அன்றைய தினம் அதிலிருந்து பணம் எடுக்க மாட்டார்கள். முதல் நாளே எடுத்து வைத்து வெள்ளிக்கிழமை கொடுப்பதில் தவறில்லை.

முடிவெட்டுவதையும், எண்ணெய் ஸ்நானத்தையும் ஒரே நாளில் செய்யக்கூடாது என்கிறார்கள். உண்மைதானா?

உண்மை தான். வீட்டிலேயே சவரம் செய்தாலும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தவறு தான். அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும், செவ்வாய், சனிக்கிழமைகளிலும் முடி வெட்டுதல், சவரம் செய்தலைத் தவிர்க்க வேண்டும்.

மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி அம்மன் கோவில் என்று குறிப்பிடுகிறோம். சுவாமி பெயரால் வழங்கப்படாதது ஏன்?

திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கும் நம் பெண்ணைப் பார்க்கச் செல்கிறோம். அப்பொழுது “என் பெண் வீட்டிற்குச் செல்கிறேன்,” என்று தான் கூறுவோமே தவிர, “மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறேன்,” என்று கூறுவதில்லையே! மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மதுரையின் அரசியாக மகுடம் சூடி, திக்விஜயமாக கைலாயத்துக்கே சென்றவள் மீனாட்சி. அந்த வீரத்திருமகளை திருமணம் செய்தவர் சிவன். எனவே, அம்பாளுக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

சமீப காலமாக மக்கள் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மைதானா?

ஆன்மிக ஈடுபாடு என்பது மக்களிடம் எப்பொழுதுமே குறைந்ததில்லை. இடைக்காலத்தில் கோவில்களுக்குச் செல்வதில் சிறிய சரிவு ஏற்பட்டிருந்தது. காரணம் கடின உழைப்பு, குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர் அதிகநேரம் செலவிடுதல், “டிவி” வரவு என்று எத்தனையோ சொல்லலாம். இப்போது “டிவி” மீதான மக்களின் கவர்ச்சி குறைந்து விட்டது. எத்தனை நாள் தான் ஒரே அழுகை தொடர்களை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்! அரைத்த மாவையே அரைக்கும் வேலையைத் தானே “டிவி” செய்கிறது! எனவே, தங்கள் மன அமைதியைக் கெடுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கைவிட்டு, கோவில்களின் பக்கம் மக்கள் திரும்பியுள்ளனர்.

வீட்டில் உள்ள சுவாமி சிலைக்கு அபிஷேகம் செய்யாவிட்டால் தோஷம் உண்டாகுமா?

பூஜை செய்ய வேண்டும் என்று விரும்பி தானே, சிலை வைத்திருக்கிறீர்கள்! அப்படி என்றால் அதற்கான அபிஷேகம், நைவேத்யம் இவைகளைச் செய்வதில் என்ன யோசனை? தினமும் செய்ய முடியாத பட்சத்தில் வாரம் ஒரு முறையாவது அபிஷேகம் செய்யுங்கள். மற்ற நாட்களில் புஷ்பம் சாத்தி பூஜை செய்யுங்கள்.

மற்றவர் ஏற்றிய அகல் விளக்குகளில் நாம் தீபம் ஏற்றலாமா?

யார் ஏற்றினாலும் தீபம் ஒன்று தான். சுவாமி சந்நிதியில் தீபம் ஏற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால் கிடைக்கும் பலன் தானே தவிர எரிகிற விளக்கில் ஒன்றுமில்லை. ஒருவர் ஏற்றிய விளக்கில் நாம் மீண்டும் விளக்கேற்றினால் அவரது பாவம் நமக்கு வந்துவிடாது. நமது புண்ணியமும் அவருக்குப் போய் விடாது. சந்நிதியில் விளக்கேற்றுகிறோம் என்ற தூய சிந்தனையுடன் மட்டும் தீபம் ஏற்றுங்கள். அதிகமாக தீக்குச்சிகளை உபயோகிப்பதால் குச்சிகள் குவியும் தொந்தரவும் இருக்காது.

நவக்கிரக படங்களை வீட்டு பூஜையறையில் வைத்து வணங்கலாமா?

சுவாமி படங்கள் என்ற நிலையில் எல்லா படங்களையுமே வீட்டில் வைத்து பூஜிக்கலாம்.

சில வீடுகளில் வாஸ்து புருஷன் படத்தை வாசலில் திருஷ்டிக்காக கட்டி தொங்க விட்டுள்ளனர். சில வீடுகளில் பூஜையறையிலேயே வைத்துள்ளார்கள். இது எந்த அளவுக்கு சரி?

சுவாமி படங்களைத் தான் வீட்டில் வைக்கலாம். வாஸ்து புருஷன் ஒரு அரக்கன். அவனுக்காகத்தான் வீடு கட்டத் துவங்கும் முன், பூசணிக்காய் வெட்டி பலி கொடுக்கிறோம். அவனது படம் வைக்கக்கூடாது.

உற்சவர் புறப்பாட்டின் போது மூலவரை வணங்குவது சரிதானா?

மூலவரின் எழுந்தருளித் திருமேனி (விழாக்காலத்தில் பவனி வருபவர்) தான் உற்சவர். உற்சவமூர்த்தி புறப்பாடு என்பது மூலவருக்கு செய்யும் விழா. அந்நேரத்தில் நாமும் திருவீதியுலாவில் கலந்து கொண்டு தரிசிப்பது சிறப்பு. சில கோவில்களில் உற்சவர் புறப்பாடானதும், மூலவர் சந்நிதியை நடை சாத்தும் வழக்கமும் உண்டு.

எனக்கு 84 வயது, தரையில் உட்கார்ந்து சந்தியா வந்தனம் செய்ய இயலவில்லை. நாற்காலி, ஊஞ்சலில் அமர்ந்து செய்யலாமா?

இத்தனை வயதிலும் அனுஷ்டானங்களை விடாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களே! அதுவே, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையட்டும். நாற்காலி, பெஞ்சில் அமர்ந்து செய்யலாம். ஊஞ்சல் வேண்டாம். ஜபம் செய்யும் போது நாம் அமரும் ஆசனம் ஆடக்கூடாது.

நிஷ்டை என்பதன் பொருள் என்ன?

புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தியானத்தில் அமர்வதே நிஷ்டை. “ஷட்” என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருவதே இந்தச் சொல். “ஷ்ட கதி நிவ்ருத்தென” என்பது இலக்கணம். அதாவது “இயக்கத்தை நிறுத்திக் கொள்வது” என்று பொருள். கண், காது, மூக்கு, வாய் உடல் ஆகியன இயங்குவதற்கு தகுந்தாற் போல் நம் மனமும் செயல்படுகிறது. கண் பார்ப்பதை காது கேட்பதை, மூக்கு நுகர்வதை, வாய் சுவைப்பதை உடல் இயங்குவதைப் பின்பற்றியே மனமும் செல்கிறது. இவற்றின் இயக்கம் அதிகமாகும் போது, மனம் நிலையில்லாமல் அலை பாய்கிறது. அமைதி குறைகிறது. மன அழுத்தம் கூடுகிறது. இந்நிலையில் மனதில் இறைவனை நிலை நிறுத்தி அமர்வது சாத்தியமில்லை. எனவே தான் முனிவர்கள் நிஷ்டை எனும் அரிய வழியைக் கையாண்டார்கள். கண்களை மூடி மனதில் இறைவனை நிலை நிறுத்தி மற்றைய புலன்களில் இயக்கத்தையும் நிறுத்திப் பழகி விட்டால் “ஏகாக்ர சித்தம்” என்னும் ஒருநிலைப்பட்ட மன அமைதி ஏற்பட்டு விடும்.

இறைவனை எந்த வயதில் வழிபட்டால் மனம் பக்குவமடையும்?

இறைவழிபாட்டிற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம்? பிரகலாதன் கருப்பையிலேயே பகவான் நாமம் ஜபம் செய்யத் துவங்கிவிட்டான். திருஞானசம்பந்தர் மூன்று வயதில் தேவாரம் பாடத் துவங்கிவிட்டார். இக்காலத்தில் கூட ஒரு சிலர் இளம் வயதிலேயே இறைவனை வழிபட்டு பக்குவம் அடைந்திருக்கிறார்கள். இறைவனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பக்தியை உண்டுபண்ண வேண்டும். அந்த பக்தி அவர்களைப் பக்குவப்படுத்தி விடும்.

விநாயகருக்கு விடலைத் தேங்காய் உடைக்கிறார்கள். அதை எடுப்பது பாவமா?

விக்னம் போக்குபவர் விநாயகர். அவரை வழிபட்டால் காரியத்தடை நீங்கும். தொடங்கும் பணி குறைவின்றி நிறைவேற அவரை வேண்டி விடலை போடுவர். சுவாமிக்கு படைத்த பின் அதில் எப்படி பாவம் சேரும். தாராளமாக எடுத்து உண்ணலாம்.

வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது?

பிரம்ம முகூர்த்தம் என்னும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடத்துவது நல்லது. விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது இன்னும் சிறப்பு.

கிரகப்பிரவேசத்தின் போது முதலில் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?

பசு லட்சுமியின் அம்சம். தர்ம தேவதையின் அடையாளம். பால் தருவதால் “கோமாதா” என்று தாயாகப் போற்றுவர். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

பவுர்ணமி பூஜையை பகலில் செய்யலாமா?

பவுர்ணமியன்று வீட்டில் செய்யும் பூஜையை பகல் அல்லது மாலையிலும், கோவில்களில் இரவிலும் செய்வது சிறந்தது. பவுர்ணமி நிலவு உதயமான பிறகு கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வெளிபிரகாரத்தை வலம்வருவது ஆரோக்கியத்துக்கு நல்லது. மனதைரியமும் வளரும்.

திருநீறு இடுவதற்கு எந்த விரலைப் பயன்படுத்த வேண்டும்?

திருநீறு இடுவதற்கு வலக்கையில் ஆள்காட்டிவிரல், சுண்டுவிரலை கொம்பு போல நீட்டியபடி மற்ற மூன்று விரல்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு ரிஷப முத்திரை என்று பெயர். பூசும்போது ஓம் சிவாயநம, ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ போன்ற மந்திரங்களைச் ஜெபிக்க வேண்டும். சிந்தாமல் சற்று நிமிர்ந்தபடி பூச வேண்டும்.

பரிகாரத்திற்கு கட்டுப்படாத பாவம் இருக்கிறதா?

உடலில் நோய் ஏற்பட்டால் தான் மருந்து சாப்பிட வேண்டும். பரிகாரமும் அதுபோலத்தான். அறியாமையால் ஏற்படும் தவறுகளுக்கு, அதாவது தெரியாமல் செய்துவிட்ட பாவத்திற்கு பிராயச்சித்தம் தான் பரிகாரம். தெரிந்தே செய்யும் பாவங்களுக்கு பரிகாரம் செய்து பயனென்ன! பாவமே செய்யாமல் வாழ முயல்வது தான் சிறந்தது.

கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்?

ஒருவர் இறந்த பிறகு அவரது ஆவியின் பயணம் பற்றிக் கூறும் நூல் கருட புராணம். இறப்பதற்கு முன் செய்த பாவ புண்ணிய பலனை உயிர் அனுபவிப்பதை அது விளக்குகிறது. இறந்தவரின் பிள்ளைகள் செய்யும் கர்மாக்களினால் துன்பத்திலிருந்து விடுபட்டு பிதுர் உலகம் செல்வதையும் கூறுகிறது. இதனால் சாதாரண நாட்களில் இதனைப் படிக்க கூடாது என்பர். ஆனால், இந்நூலில் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டால் நம்மிடம் தவறுகள் குறையும். புத்தகம் என்பது மற்றவர் படிக்கத் தான். இறந்த வீட்டில் பத்து நாளுக்குள், இந்நூலை ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்பர். கோவில், மடங்களில் தகுதியான ஒருவர் படிக்க மற்றவர் கேட்கலாம்.

திருப்பாவையை மார்கழியில் மட்டும் தான் பாடவேண்டுமா?

ஆண்டாள் கொண்டிருந்த கிருஷ்ண பக்தியை வெளிப்படுத்தும் நூல் திருப்பாவை ஆகும். இதைப் பாடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும். நீங்காத செல்வம் கிடைக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் மணவாழ்வு கைகூடும். எந்த மாதத்திலும் படிக்கலாம்.

வீட்டில் ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் செய்ய நினைக்கிறேன். என் எண்ணம் சரியானது தானா?

மிக சரியானது. நீங்கள் கணபதி ஹோமம் செய்வதோடு பிறரையும் செய்யச் சொல்லுங்கள். ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல! உங்கள் ஊரையே காப்பாற்றும். இப்படி எல்லோரும் செய்து வந்தால் காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படும். நன்கு மழை பெய்யும். இயற்கை சீற்றம் ஏற்படாது. ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும்.

சனி பகவானின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

சனீஸ்வரரையும் ஈஸ்வர பட்டத்தோடு பகவான் என்று தான் குறிப்பிடுகிறோம். அவர் இறைவனின் பிரதிநிதியாக இருந்து நம் பாவபுண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை நமக்கு வழங்குகிறார். அவரைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. விரும்பினால், அனுகிரக சனீஸ்வரராக சாந்த கோலத்தில் வைத்து வழிபடுங்கள்.

மாலையில் தீபமேற்றி வழிபட்ட பின், கோவிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடலாமா?

சந்தேகமே வேண்டாம். தாராளமாக வீட்டில் தீபமேற்றிய பின் கோவிலிலும் தீபமேற்றி வழிபடுங்கள். அதனால், உங்களுக்குப் புண்ணியம் பன்மடங்கு சேரும்.

Original Source: http://neerkondar.blogspot.com/2013/12/blog-post_5412.html33 thoughts on "ஆன்மிகம் கேள்வி பதில்கள் & சந்தேகங்கள்"

 1. பார்கவி says:

  காஞ்சிபுரம் ஏகாம்பர ஈஸ்வரரை தரிசனம் செய்ய உள்ளுணர்வு உறுத்துகிறது ஆனால் போக வாய்ப்பு அமையவில்லை எதனால சாமி நான் இது வரை அத்தெய்வத்தை வழிபட்டதில்லை ஆனால் விருப்பப்பட்டிருக்கிறேன் . நீ வா உன்னை காண விரும்புகிறேன் என்று அடிக்கடி தோன்றுகிறது இது பிரமை யா என் ஆழ்ந்த நம்பிக்கையா இறைவன் எனக்கு எதை உணர்த்த விரும்புகிறான் சொல்லுங்கள் அய்யா

  1. ஆன்மிகம் says:

   உங்கள் ஆழ்ந்த நம்பிக்கையும் இறைவன் மீதுள்ள பற்றும்தான்! ஒருமுறை காஞ்சிபுரம் ஏகாம்பர நாதரை தரிசித்துவிட்டு வாருங்கள்!

 2. வணக்கம் , என் மாமியார் இப்போதெல்லாம் நிரைய youtube Videos பார்த்துவிட்டு அதில் சில பேர் சொல்கிறப்படி நிறைய விஷயங்களை, வழக்கங்களை மாற்றி கொள்கிறார்கள், அப்படி செய்யலாமா.

  1. ஆன்மிகம் says:

   அவர் நல்ல விஷயங்களை மற்றும் பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டால் நல்லது. மாறாக அவைகளை மாற்றிக்கொண்டால் அது சரியல்ல..

 3. ஓருவர் மற்ற ஒருவருக்கு ஒரு சத்தியம் பன்னி குடுத்து விட்டு , அதை காப்பாத்தலை என்றால் என்ன தடக்கும்

  1. ஆன்மிகம் says:

   சத்தியம் சாதாரணமல்ல. சகலவற்றிற்கும் சத்தியம் செய்வது சாத்தியமல்ல. அவசியமின்றி அனைத்திற்கும் சத்தியமுரைப்பது அறிவுடைமையல்ல. அவசியமான அசாதாரண தருணங்களில் செய்யப்படும் சத்தியத்தைக் காத்து கவனமாய் செயல்படுவது செம்மையானது. சத்தியத்தைச் சரியாக நிறைவேற்ற வேண்டும். புரியாமல் செய்த சத்தியத்தைப் புறக்கணிக்கலாம்; உணர்ந்து உறுதியாய்க் கூறிய சத்தியத்தை மீறுவது ஏற்புடையது அல்ல.

 4. Devaki Amathavelu says:

  Vanakam aiya🙏🏻. Pengal thirumanavargal manjal neeratti eera udaiyil ammanai sutri valam varalama? Athuvum maalai nerathil seiyalama?

  1. ஆன்மிகம் says:

   Vanakkam amma 🙏 Yethenum venduthal irupin, thirumanamaana pengal eera udaiyil ammanai valam varalam. Venduthal yethum illaiyenil, eera udaiyil ambalai valam varuvathai thavirkavum.

 5. பார்கவி says:

  அய்யா சமயபுரம் மாரியம்மன் வரலக்ஷ்மி நோன்பு அபிஷேகம் நேரலை நடந்தது நான் பார்த்துக்கொண்டு இருந்தேன் அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் போது மாரியாகவும் அபிஷேகம் நீர் முடியும் pothu நரசிம்மராகவும் தோன்றியது முடியும் வரை இப்படியே தான் தோன்றியது எதனால சாமி

  1. ஆன்மிகம் says:

   வணக்கம் அம்மா. நீங்கள் நரசிம்மரை அடிக்கடி மனதில் நினைத்துக்கொண்டிருந்தால் கூட இப்படியெல்லாம் தோன்றலாம்.

 6. maheshwari says:

  en veetil palli sound ketpathiillai ethunum kuraiya irrukkuma nan vadakai veetil than vasikkiren

  1. ஆன்மிகம் says:

   Palli sound illaiyendran oruu kuuraiyum illai. Bayapada thevai illai.

 7. Sir, in the month of December 2021 I bought southwest entrance Flat Now only I came to know it is not good. What should I do now. They have almost finished it.

  1. ஆன்மிகம் says:

   மக்கள் அனைவரும் தெற்கு பார்த்து அமைந்திருக்கும் வீட்டிற்கு குடி போக பயப்பட முக்கிய காரணமாக இருப்பது, அந்த திசை எமதர்மனுக்கு உரிய திசையாக இருப்பதால் தான். இந்த காரணத்தால் தான் அனைவரும் தெற்கு திசை பார்த்த வீட்டைப் பலரும் புனிதமில்லாததாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த வீடு சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை.

   பல பெரிய தொழிலதிபரின் வீடுகள், தொழிற்சாலைகள் தெற்கு திசை பார்த்தே மனைகள் அமைந்திருக்கிறது. இதற்கு காரணம் தெற்கு நோக்கிய வீடு சரியான வாஸ்து சாஸ்திரத்தில் அமைந்திருப்பது தான். தெற்கு பார்த்த மனையை ஐஸ்வர்ய மனை என்று சொல்வார்கள். ஐஸ்வர்யம் என்பது வற்றாத செல்வத்தை குறிப்பதாகும்.

   தெற்கு பார்த்த வீடு சாஸ்திரத்தில் சமையலறையை (தென்கிழக்கு, வடமேற்கு) வாஸ்து படியும், பூஜை அறையை (வடகிழக்கு, மேற்கு, கிழக்கு) வாஸ்து படியும், படுப்பதற்கான அறையை (தென்மேற்கு, தெற்கு, மேற்கு) பார்த்த வாஸ்து படியும், தண்ணீர் தொட்டியை வடகிழக்கு பாகத்திலும், கழிப்பறையை தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு பார்த்து அமைக்க வேண்டும்.

 8. Ram Viswakarma says:

  ஐயா, எனக்கு பெண் பார்க்க சென்று வரும் போது வழியில் உடும்பு வாகனத்தின் முன்னே சென்றது.. இது நல்ல சகுனம் இல்லை என்று சொல்கிறார்கள்…. உண்மையை விளக்குங்கள்

  1. ஆன்மிகம் says:

   எவ்வித தடங்களோ, தீய சகுனமோ கிடையாது – ஒரு காரியத்திற்கு செல்லும்போது கழுகு, கருடன், கீரி, உடும்பு, குரங்கு, நாய், அணில் இவைகள் முன்னே போனால் நல்ல சகுனம் என்று தான் சொல்வார்கள்.

 9. பார்கவி says:

  மிக்க நன்றி அய்யா நட்சத்திரம் தெரிவது இதன் அறிகுறி என்ன ayya

  1. ஆன்மிகம் says:

   என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சொல்கிறேன், நம் விழிகளுக்கு புதிதாக மற்றும் பிரகாசமாக தெரியும் நட்சத்திரங்கள் எல்லாம் சித்தர்கள். அவர்களால் எந்த பாதிப்பும் இருக்காது, கவலைவேண்டாம்.

 10. பார்கவி says:

  அய்யா எனக்கு விரைந்து பதில் அளியுங்களேன். பதற்றம் ஆக உள்ளது. நான் இறைவன் ஒருவனை பரிபூரணனாக நம்புகிறவள்.

  1. ஆன்மிகம் says:

   உங்கள் முன்வீட்டில் இருந்த நபர் உங்களுக்கு சொந்தம் அல்லாத பட்சத்தில் நீங்கள் பயப்பட தேவையில்லை. சில சமயங்களில் ஆவி உருவில் பயப்பட நேரிட்டால், மாலை வேளையில் இறைவனுக்கு கற்பூர ஆராதனை காட்டவேண்டும்.

 11. பார்கவி says:

  நான் 2 முறை தானாக விழிப்புணர்வு ஏற்பட்டு என் உள்ளுணர்வானது கிழக்கு திசை பார்க்க சொல்லி எழுப்பிவிட்டது நானும் parthen இரண்டு முறையும் ஒரு பிரகாசமான நட்சத்திரம் என் கண் எதிரே தெரிந்தது . முதல் முறை தெரிந்த போது எங்க காம்பௌண்ட் முன் வீட்டு அண்ணா அத்தருணமே மரணம் அடைந்து இருந்தார். மற்றொரு நாள் முதலில் போட்டோ எடுக்கும் போது ஆவி போன்று உருவம் தென்பட்டது பயத்தில் delete செய்து விட்டு மீண்டும் போட்டோ எடுத்தேன். இரு நட்சத்திரம் பிரகாசமாக தெரிந்தது குறிப்பு வானில் அப்போது எந்த வேறு நட்சத்திரம் தெரியவில்லை. இது எதற்கான அறிகுறி இது ஆன்மிகம் ஆ இல்ல வேறு என்ன அறிகுறி என்று சொல்லுங்க இந்த அமானுஸ்யம் எதனால ஏற்படுகிறது விளக்குங்கள்

 12. Bhagyalakshmi says:

  ஐயா , வைகாசி விசாகம் அன்று திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரதம் இருந்து வருகிறோம் . இந்நிலையில் வீட்டில் ஆசையாக வளர்த்த சேவல் திடிரென்று முடியாமல் இறந்துவிட்டது. இதற்கு என்ன அர்த்தம் , என்ன செய்வது.

  1. ஆன்மிகம் says:

   சேவல் இறந்துவிட்டதால் தடங்கல் என்று நினைத்து நீங்கள் விரதத்தை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். திருச்செந்தூர் முருகனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

 13. விஜய் says:

  கோபுரம் இல்லாத கோவிலில் திருமணம் செய்யலமா

  1. ஆன்மிகம் says:

   வெவ்வேறு வகையான கோவில்கள் உள்ளன. சுவரே இல்லாத கோவிலும் உண்டு. கூரை இல்லாத கோவில் உண்டு. நமக்காகத்தான் கோவில். கோவிலுக்காக நாம் இல்லை. நமக்கு எவ்வளவு வசதி இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி கோவிலில் திருமணம் செய்துகொள்ளலாம்! மரத்தடியில் ஒரு பிள்ளையாரை வைத்தால் அது கோவில்தானே..

 14. A.kalaiselvan says:

  ஐயா எனது மகள் பிறந்து 41/2மாதங்கள் ஆகிறது அவளுக்கு மொட்டை அடித்து காது குத்த வேண்டும் ஆனால் எனது அப்பா இறந்து 6மதங்களும் தம்பி இறந்து 1மாதாங்களும் ஆகிறது அவளுக்கு மொட்டை அடிக்கலாமா

  1. ஆன்மிகம் says:

   தங்களின் தம்பி பிரிந்து 1 மாதத்திற்கும் மேலாகிவிட்டபடியால், தாராளமாக தங்கள் மக்களுக்கு முடி இறக்கலாம்!

 15. நான் எனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறேன். என் வீட்டில் வீட்டு சாமி (மாரியம்மன்) வழிபடாமல் மாமனார் வீட்டில் வழிபாடு செய்யலாமா. அது அவர்களுக்கு ஏதாவது பாதிக்குமா.

  1. ஆன்மிகம் says:

   இறைவழிபாடு செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது!

 16. Rajendran says:

  அன்புடையீர்,
  வீட்டில் ஆமை வளர்க்கலாமா தயவுசெய்து விளக்கவும்….!!!

  1. ஆன்மிகம் says:

   ஆன்மிக ரீதியாக வீட்டில் ஆமை வளர்ப்பது நல்லதன்று!

 17. கோபாலகிருஷ்ணன் says:

  எங்கள் வீட்டில் விநாயகர் சிலை வைத்து தினமும் நெய்வேத்தியம் படைத்து பூஜை செய்து வருகிறோம்….. நேற்று எங்கள் தூரத்து பங்காளி ஒருவர் இறந்துவிட்டார்…….எல்லோரும், நாங்கள் பூஜை செய்யக்கூடாது எங்களுக்கு தீட்டு உள்ளது என்கிறார்கள்……. சாமிக்கு பூஜை செய்யாமல் இருக்க எங்களுக்கு மிகவும் சங்கடமாக உள்ளது……. நாங்கள் என்ன செய்யவேண்டும்……தயவு செய்து தெரிவிக்கவும்……

  1. ஆன்மிகம் says:

   பங்காளி முறையில் ஒருவர் இறந்துவிட்டால், காரியம் முடியும்வரை வீட்டில் பூஜை செய்யவேண்டாம்.

   சாமிக்கு பூஜை செய்யாமல் இருக்க உங்களுக்கு மிகவும் சங்கடமாக உள்ளது என்று கூறுகிறீர்கள்! அதனால் சில நாட்களுக்கு உங்கள் மனதில் மட்டும் பூஜை செய்வது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

 • November 16, 2022
ஸ்ரீ சமர்த்த ராமதாசர் வாழ்க்கை வரலாறு
 • October 9, 2022
ஆன்மிகப் பாதையிலிருந்து நம்மை விலகத் தூண்டும் எட்டு காரணிகள்
 • September 22, 2022
27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள்