×
Friday 30th of September 2022

Nuga Best Products Wholesale

ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம்


Aippasi Month Special in Tamil

ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி

🙏 ஐப்பசி மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக துலாக் காவேரி புராணம் கூறுகிறது.

🙏 ஐப்பசி மாதத்தில் குரு பகவான் துலா ராசியில் இருப்பதால், பிரம்ம கங்கை காவேரியில் கலக்கிறது என்பது ஐதீகம். ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு, வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள கொள்ளிடத்திலிருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள். ஐப்பசி மாதத்தில் மட்டும், ஸ்ரீரங்கம் கோவிலின் தென்பகுதியிலுள்ள காவேரி அம்மா மண்டபப் படித்துறையிலிருந்து தங்கக் குடங்களில் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் சேகரித்து, யானை மீது வைத்து வேதங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.

🙏 மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் வருடம் முழுவதும் பயன்படுத்திவரும் வெள்ளியிலான பூஜைப் பொருட்களை ஐப்பசி மாதத்தில் பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு மாற்றாக தங்கக் குடம், தங்கக் குடை, தங்கச் சாமரம், தங்கத் தடி என அனைத்தும் தங்கமயமானதாக இருக்கும். பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் பாதங்களை தங்கக் கவசத்தால் அலங்கரித்திருப்பார்கள். மேலும், பலநூறு ஆண்டுகளுக்கு முன் நேபாள மன்னர் கோவிலுக்கு அளித்த சாளக்கிராம மாலையை பெருமாளுக்கு அணிவித்திருப்பார்கள். முழுக்க முழுக்க தங்கத்தால் ஜொலிக்கும் பெருமாளை துலா மாதமான ஐப்பசியில் மட்டுமே தரிசிக்க முடியுமென்பது தனிச்சிறப்பாகும்.

🙏 ஸ்ரீரங்கம் ஆலயத்தின் தென்பகுதியில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் நீராடி பெருமாளை தரிசித்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுமென்று தர்மசாஸ்திரம் கூறுகிறது. காவேரிக் கரையோரத் திருத்தலங்களில், காவேரி உற்சவத்திற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் மயிலாடுதுறை. இங்குள்ள மயூரநாதர் கோவிலில் துலா உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

🙏 ஒருசமயம் சிவபெருமான் வேதங்களின் உட்பொருளை உபதேசித்துக்கொண்டிருக்கையில், பார்வதி தேவியானவள் அழகாக தோகை விரித்தாடிய மயிலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இதனால் கோபமுற்ற சிவபெருமான், “நீ மயிலாக பூலோகத்தில் அவதரிக்கக் கடவாய்” என்று சபித்தார். அதன்படி மண்ணுலகில் மயிலாக அவதரித்த பார்வதி, சிவபெருமானை ஒவ்வொரு தலமாக வழிபட்டு வந்தாள். இறுதியாக காவேரி நதி ஓடும் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை நினைத்து தவம் மேற்கொண்டாள்.

🙏 பார்வதியின் தவத்தினைப் போற்றிய சிவபெருமான் ஆண் மயிலாக வந்து, அவளது சாபத்திற்கு விமோசனம் அளித்தார். அதனால் இத்தலம் மாயூரம் என்று பெயர் பெற்றது. மயிலாக இருந்த பார்வதி சாப விமோசனம் பெற்றதால் இத்தலத்து இறைவன் மயூரநாதர் என்று பெயர் பெற்றார். பார்வதி அஞ்சல் நாயகி என்று பெயர் பெற்றாள். சாப விமோசனம் பெற்ற பார்வதி, பிரம்மன் நிறுவிய தீர்த்தத்தில் நீராடினாள். அந்த மாதம் துலா மாதமென்று புராணம் கூறுகிறது. இங்குள்ள தீர்த்தக் கட்டத்தை இடப தீர்த்தக்கட்டம் என்றும் சொல்வர்.

🙏 பார்வதி மயில் வடிவில் இருந்த காலத்தில், பரமன் பூவுலகைச் சுற்றிப் பார்க்க எண்ணி ரிஷபத்தில் ஏறிப் புறப்படும்போது, மற்ற தேவர்களும் தங்கள் வாகனங்களிலேறிப் பின்தொடர்ந்தார்கள். அனைவரையும் முந்திக் கொண்டு வேகமாகச் சென்று காவேரியின் நடுவில் நின்ற ரிஷபம், “சிவபெருமானைச் சுமக்கும் நான் தான் பெரிய வாகனம்” என்ற கர்வத்துடன் மற்ற வாகனங்களைப் பார்த்தது. இதை கவனித்த இறைவன் நந்தியின் கர்வத்தை அடக்க சிறிது அழுத்தம் தரவே, ரிஷபம் பாதாளத்தில் சென்று துன்பப்பட்டது. உடனே ரிஷபம் பரமனிடம் மன்னிப்புக் கேட்க, “நீ காவேரி நதியின் நடுவே மேற்கு முகமாய் இருந்து இங்கு நீராட வருபவர்களுக்கு வேண்டியதை அளிப்பாய்” என்று ஆசி தந்து ரிஷபம் மேலே வர அருளினார். இதனால் மயிலாடுதுறையிலுள்ள இத்துறை ரிஷபத்துறை என்று பெயர் பெற்றது.

🙏 ஒரு சமயம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூவரும் சந்தித்துக் கொண்டார்கள். அந்த மூவரும் கறுமை நிறத்துடன் பார்க்க அருவருப்பாகத் தோற்றமளித்தார்கள். அந்தத் தோற்றம் நீங்க பிரம்மனிடம் சென்று ஆலோசனை கேட்டார்கள். அவர், “உங்கள் மீது மக்கள் திணித்த பாவ மூட்டைகளின் விளைவால், நீங்கள் உருமாறி இருக்கிறீர்கள். நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர, ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மயிலாடுதுறை என்ற தலத்தில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதத்தில் நீராடுங்கள். அதிலும் ஐப்பசி அமாவாசை மிகவும் சிறப்பானது” என்று அருளினார். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் மயிலாடுதுறைக்கு வந்து காவேரியில் ரிஷப கட்டத்தில் நீராடி தங்கள் மீது மக்கள் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறார்கள் என்று புராணம் கூறுகிறது.

🙏 தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசையைப்போல் இத்தலத்தில் ஐப்பசி மாத அமாவாசை மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. அன்று புனித நீராடல், சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய நீர்க்கடன்களை அளித்து, தம் முன்னோர்களின் பாவங்களையும் போக்க சிறப்பு பூஜை செய்து புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள். ஐப்பசி அமாவாசையன்று இங்குள்ள காவேரி ரிஷபக் கட்டம் விழாக் கோலம் காணும். அன்று கங்கையை விட மிக உயர்ந்தவளாகக் காவேரி திகழ்கிறாள். மேலும் மயூர நாதர் கோவிலில் உற்சவமும் நடைபெறுவதால், சுற்று வட்டாரத்திலுள்ள கோவில்களிலிருந்து உற்சவமூர்த்திகள் ரிஷபக் கட்டத்திற்கு வந்து தீர்த்தவாரி காண்பார்கள்.

🙏 மயூரநாதர் கோவிலில் ஐப்பசி முதல் தேதி தீர்த்தவாரியுடன் உற்சவம் ஆரம்பமாகும். அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி முப்பதாம் தேதி துலா உற்சவமும், கடைமுகத் தீர்த்த வாரியும் மிகச்சிறப்பாக நடை பெறும். தீர்த்தவாரியை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்ப சுவாமி, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வர சுவாமி, மாயூரம் பரிமள ரங்கநாத சுவாமி ஆகிய பஞ்ச மூர்த்திகளும் காவேரி துலாக் கட்டத்தில் எழுந்தருளியதும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவேரியில் நீராடி புனிதம் பெறுகிறார்கள்.

🙏 மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நானம் மிகவும் விசேஷம். ஐப்பசி கடை முழுக்கு, கார்த்திகை முடவன் முழுக்கு ஆகிய நாட்களில் காவேரி நதியில் நீராடினால் அற்புதப் பலன்கள் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. ஐப்பசியில் காவேரியில் ஒருமுறை நீராடினால் காவேரியில் மூன்று முறை நீராடிய பலனும், யமுனையில் ஐந்து முறை நீராடிய பலனும் கிட்டும்.

முடவன் முழுக்கு

🙏 ஒரு சமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மாயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஒர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான். அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக நிதானமாக வந்து மாயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடம் வருந்தி பிரார்த்திக்கிறான்.

🙏 அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிரங்கி, “இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்” என்று அசரீரியாக அருளுகிறார். அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் “முடவன் முழுக்கு” என்ற பெயர் பெற்றது.

🙏 பாரதத்தில் உள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, தங்களிடம் மக்கள் கரைத்த பாவக்கறைகளைப் போக்கிக் கொள்வதால், காவேரியானவள் தன்னிடம் நதிகள், மக்கள் கரைத்த பாவச் சுமைகளை திருமங்கலக்குடி திருத்தலத்திலும் மாயூரத்திலும் உத்தரவாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்து) போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

🙏 இந்த ஐப்பசி மாதத்தில் பூவுலகில் உள்ள புனித நதிகளுக்கெல்லாம் பாப விமோசனம் அருள்கின்றாள் காவிரி. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்!. ”தண்ணீரும் காவிரியே!..” என்ற திருவாக்கின் படி – எல்லாம் கங்கையே!.. எங்கும் காவிரியே!. பரந்து விரிந்த பூவுலகில் – எங்கிருந்த போதும் சரி!. நீராடும் போது ஒரு சொம்பு நீரை எடுத்து, “ஸ்ரீ காவேரி நமஸ்துப்யம் நமோ நம” என்று சிந்தித்து வணங்கி நீராடினாலும் அன்னை காவேரி அருகிருந்து வாழ்த்துவாள்!!


 


Leave a Reply

Your email address will not be published.

you may also like

  • September 15, 2022
திருவாதிரை விரதம் & ஆருத்ரா தரிசனம்
  • August 22, 2022
உபநிஷத்துகள் உணர்த்தும் வாழ்க்கை நெறிமுறைகள்
  • July 18, 2022
ஆன்மிக ஒழுக்க நெறிமுறை பண்புகள் மட்டுமே இளைய தலைமுறையை பாதுகாக்கும்