×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

காளையார் கோவில் தேர் வரலாறு


உள்ளடக்கம்

Kalayar Kovil Ther History in Tamil

காளையார் கோவில் தேர் பவனியின் போது நடந்த நிகழ்வு:

┻❂━❂┻ ஒரு கோவிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோவில் காளையார்கோவிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் கோவில்.

┻❂━❂┻ இக்கோவிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மருது சகோதரர்களுக்கு எண்ணம் ஏற்பட்டது.

┻❂━❂┻ தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் சிற்பி.

┻❂━❂┻ புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

┻❂━❂┻ தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்துவிட்டது.

┻❂━❂┻ இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும்.

┻❂━❂┻ எனது தலைமையில் தேர் செய்யப்படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி விட்டார்.

┻❂━❂┻ தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது.

┻❂━❂┻ தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது.

┻❂━❂┻ தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு தைப்பூசத் திருநாளில் முதல் முதலாக தேர் ஓடத் தொடங்கியது.

┻❂━❂┻ தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்துவிட்டு வந்துவிட்டார்.

┻❂━❂┻ இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.

┻❂━❂┻ ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது தேர் அசைய மறுத்துவிட்டது.

┻❂━❂┻ அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது. தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார். இதன்பின் அவரை அழைத்தனர்.

┻❂━❂┻ பெரிய மருது, தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன் என்றார். அதற்கு சிற்பி, “உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள்” அவற்றை நான் அணிந்து கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும் என்றார்.

┻❂━❂┻ சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு, “சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார். தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்” என்று கூறிக்கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.

┻❂━❂┻ மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணிந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்துவிட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க, தேர் புறப்பட்டது. பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர்.

┻❂━❂┻ தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.

┻❂━❂┻ “பேராசைக்காரன் இறந்து விட்டான்” என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

┻❂━❂┻ அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது. அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.

┻❂━❂┻ “மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது, இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்”.

┻❂━❂┻ ஏராளமான கோவில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும்.

┻❂━❂┻ வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.

┻❂━❂┻ “எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மருது மன்னர்கள்” என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க என்று எழுதப்பட்டிருந்தது.

┻❂━❂┻ சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார்கோவிலுக்கு வெளியே, கோவிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.

┻❂━❂┻ அரசனை காப்பது குடியானவன் கடமையென்று உயிர் தியாகம் செய்த குப்பமுத்து ஆசாரி சாதாரண பிரஜைக்காக சொன்ன சொல்லை காத்து காளையார் கோவில் தேருக்காக பதவியை துறந்த மாமன்னர் மருது பாண்டியர்கள் இப்படிப்பட்ட தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 23, 2024
சுடர் டிரஸ்ட், திருச்சேறை
  • September 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
  • August 14, 2024
பக்தி