- September 14, 2024
உள்ளடக்கம்
🛕 காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜர் திருக்கோவிலின் திருமண்டப மேற்கூரையில் “சந்திராதித்தன் உள்ளவரை” என்பதைக் குறிக்கும் சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களின் வடிவங்களையும், தங்கம், வெள்ளி நிறமுடைய இரண்டு பல்லிகளின் புடைப்புச் சிற்பங்களையும், அவற்றை பக்தர்கள் கரங்களால் தொட்டு வணங்கிச் செல்வதையும் காணலாம். மேலும் பல்லிகளின் புடைப்புச் சிற்பங்களை பெரும்பான்மையான ஸ்ரீ மகாவிஷ்ணு திருக்கோவில்களில் காணமுடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
🛕 அத்தகைய புடைப்புச் சிற்பங்களைப் பற்றிய தல வரலாறு மற்றும் அறிவியல் ஆன்மிக உண்மைகளைப் பற்றியும், தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ், சிற்பக் கலாநிதி, ஸ்தபதி வே.இராமன் ஆகியோர் தெரிவித்துள்ள செய்தியாவது,
🛕 முன்னொரு காலத்தில் கௌத்தமர் என்னும் முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு சீடர்கள் இருந்தனர். அம்முனிவர் தமது கமண்டலத்தில் நீர் நிரப்புவதற்கு புனித நீர் கொண்டு வரும்படி தமது சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அவரின் கட்டளைப்படி சீடர்கள் கொண்டு வந்த நீரில் பல்லி ஒன்று விழுந்து கிடப்பதை அறியாத சீடர்கள் அந்நீரை குருவின் முன் வைத்தனர். அதில் பல்லி கிடப்பதைக் கண்ட முனிவர், சினமடைந்து, தனது சீடர்கள் இருவரில் ஒருவரை தங்க நிறமுடைய பல்லியாகவும், மற்றொருவரை வெள்ளி நிறமுடைய பல்லியாகவும் உருமாறக் கடவதாக என சபித்தார்.
🛕 தங்களது குருவின் சாபத்தால் பல்லிகளாக உருமாறிய இருவரும் தங்களுக்கு சாப விமோசனம் வேண்டும் என வேண்டினர். நீங்கள் இருவரும் காஞ்சிபுரம் சென்று அங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வரதராஜர் பெருமாள் திருக்கோவிலில் தங்கம், வெள்ளி நிறமுடைய இரண்டு பல்லிகளாக பெருமாளை வணங்கி வழிபாடு செய்து வாழ்ந்து வாருங்கள். அன்னை சரஸ்வதி தேவியால் சபிக்கப்பட்ட இந்திரன் யானை உருவமாகவும் பெருமாளை வணங்கி வழிபட்டு வரும் ஒரு நாளில் அந்த யானையின் கால்களால் மிதிக்கப்பட்டு, சாபம் நீங்கப் பெறுவீர்கள் என்றார்.
🛕 முனிவர் கூறியவாறே ஒரு யானை பெருமாளை வணங்கி வழிபடுவதற்கு இடையூராகவும் பெருமாளின்; திருவுருவை எப்போதும் சுற்றி சுற்றி வலம் வந்த அவ்விரண்டு பல்லிகளையும் தன் கால்களால் மிதித்தது. யானையின் கால்களால் மிதிப்பட்ட பல்லிகள் இரண்டும் சாப விமோசனம் பெற்று மீண்டும் மானுடர்களாக உருவங்களாக மாறி அருள்மிகு வரதராஜர் திருக்கோவிலில் திருத்தொண்டு புரிந்து வாழ்ந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.
🛕 பல்லிகள், மானுடர் குடியிருக்கும் வீடுகளின் தரையிலும், சுவர்களிலும், மேற்கூரையிலும் கீழே விழுந்துவிடாமல் வேமாக ஓடக் கூடியவை. அவ்வாறு அவை விழுந்து விடாமல் இருப்பதற்கு அவற்றின் கால்களில் உள்ள ஒருவகையான ‘பசை’ உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
🛕 ‘பசை’ என்பதற்கு பக்தி, அன்பு. பற்று எனவும், பற்று என்பதற்கு புறப்பற்று, அகப்பற்று ஆகிய விருப்புகள் எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. புறப்பற்று என்பது ‘எனது’ என்னும் வெளிப்பற்றையும், அகப்பற்று என்பது ‘நான்’ என்னும் உளப்பற்று என்னும் மன விருப்பத்தையும் குறிப்பதாகும். மானுடர் மறுபிறப்பு எடுப்பதற்கு மூலக்காரணம் புறப்பற்றே என்பது குறிப்பிடத்தக்கது.
🛕 அப்புறப்பற்றால், மனிதப் பிறவி எடுத்து இன்ப துன்பங்களை மாறி மாறி அனுபவிக்க மானுடர் எவரும் விரும்புவதில்லை. அனைவரும் விரும்புவது இன்பமான வாழ்க்கையும், வீடுபேறு மட்டுமே ஆகும். அதற்கு புறப்பற்றிலிருந்து விடுபட்டு மனதை உளப்பற்று என்னும் அகப்பற்றுடன் இறைவனை நாடினால் மட்டுமே வீடுபேறு என்னும் பிறவா நிலையில் சந்திராதித்தன் உள்ளரை ஸ்ரீ வைகுண்டத்தில் இன்பமாக வாழ முடியும் என்பதை ஞானிகளாகிய யோகிகள் ஆராய்ந்தறிந்து அறிவித்துள்ளனர்.
🛕 அவ்வாறு அவர்கள் அறிந்தவற்றையே தமிழகச் சிற்பிகள் புடைப்புச் சிற்பங்களாக ஸ்ரீ பெருமாள் கோவில்களில் வடிவமைத்துக் காட்டியுள்ளதாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
Thanks: